கட்டுரை ஆசிரியர் சகோதரி ஹுர்ரா, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் புதல்வியாவர்.
தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு
எம்.ஐ. ஹுர்ரா
(கல்-எலிய மகளிர் அரபுக் கல்லூரி)
‘மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் உயரமாகக் கட்டியிருப்பவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்’ என தேனீக்கு உமது இரட்சகன் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.’ (16:68)
அல்குர்ஆனில் அல்லாஹ்-வினால் நினைவு கூரப்பட்ட அற்புதப் படைப்புக்களில் தேனீயும் ஒன்றாகும்.
ஆரம்ப காலங்களில் தேனீயானது பூவிலிருந்து தேனைக் கொண்டு வரும். பூச்சி என்ற நம்பிக்கையில் ‘தேனைக் கொண்டு வரக் கூடிய பிராணி’ எனும் பொருளைக் கொண்ட விஞ்ஞானப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டினாலும் 1758 இல் விஞ்ஞானிகளால் “APIS MELLIFERA” (தேனைச் சுமந்து கொள்ளும், உருவாக்கிக் கொள்ளும் பிராணி) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கான காரணியாக 1750ஆம் ஆண்டின் பிற்பாடுகளில் பூக்களில் உள்ள சர்க்கரையைக் குடிக்கும் தேனீயின் வயிற்றில் அச்சாறானது சிறிது காலம் தங்கி பின்னர் அதன் வாய் வழியாக வாந்தியாக தேன் அமைப்பில் வெளியாகின்றது.
இத்தேன் தேனீயின் வயிற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதாலே இப்பெயர் 1758இல் மாற்றப்பட்டது. ஆனால், அல்லாஹ் அல்குர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன்பே இதைச் சொல்லிவிட்டான்.
‘பின்னர் ஒவ்வொரு கனியிலிருந்தும் சாப்பிடு. உன் இரட்சகனின் வழிகளில் எளிதாக நுழைந்து செல் (என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.) அவற்றின் வயிறுகளிலிருந்து பல்வேறு நிறங்களையுடைய பானம் வெளியேறுகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணம் இருக்கின்றது. நிச்சயமாக இதில் சிந்திக்கும் சமூகத்திற்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.’ (16:69)
இவ்விடத்தில் பல்வேறு நிறங்களையுடைய பானம் எனக் கூறப்படுவதற்கான காரணம் தேனானது கடும் கபிலம், மென்கபிலம், ஊதா மற்றும் வெள்ளை நிறங்களிலும் இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற பல சுவைகளிலும் காணப்படுவதனால் ஆகும். மேலும், தேன் மனிதர்களுக்கு சிறந்ததொரு நோய் நிவாரணியாகக் காணப்படுகின்றது. மனிதனைத் தேன் கொட்டுவதனால் ஆபத்துக்கள் ஏற்படுவதாக நினைக்கின்றனர். ஆனால், தேன் கொட்டுவதால் மனித உடலினுள் அதனால் செலுத்தப்படுகின்ற விஷத்தினால் மலச்சிக்கல் மற்றும் இரைப்பை நோய்கள் போன்றவை குணமாகின்றன. ஆனால், அதிக தேன் கொட்டுதல் ஆபத்தானது.
‘அதில் மனிதர்களுக்கு நிவாரணம் இருக்கின்றது. நிச்சயமாக சிந்திக்கும் சமூகத்திற்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது’ அல்லாஹ் அல் குர்ஆனில் அனைத்தையும் ஆண்பாலில் சொல்லும் போது தேனீக்கள் விடயத்தை பெண்பாலில் சொல்லுவதற்கான காரணமும் உண்டு.
‘மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் உயரமாகக் கட்டியிருப்பவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்’ என தேனீக்கு உமது இரட்சகன் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.’
‘பின்னர் ஒவ்வொரு கனியிலிருந்தும் சாப்பிடு. உன் இரட்சகனின் வழிகளில் எளிதாக நுழைந்து செல் (என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.) அவற்றின் வயிறுகளிலிருந்து பல்வேறு நிறங்களையுடைய பானம் வெளியேறுகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணம் இருக்கின்றது. நிச்சயமாக இதில் சிந்திக்கும் சமூகத்திற்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.’ (16:68-69)
தேனீக்கள் சாம்ராஜ்யத்தில் மிகவும் சக்திவாய்ந்தது பெண் (இராணி)த் தேனீயாகும். ஆண் தேனீக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவை சோம்பேறித் தேனீக்கள் எனும் வகையினுள்ளே அடங்கும். இவற்றிற்கு உணர் கொம்புகளோ ஏனைய சில அம்சங்களோ காணப்படுவதில்லை.
இராணித் தேனீயே கூட்டை ஆள்வதாகவும் இனப் பெருக்கம் செய்வதாகவும் தனது படையின் தலைமையாகவும் காணப்படுகின்றது. இதனாலேயே அல்குர்ஆனில் இதனை பெண் பாலில் அல்லாஹ்கூறுகின்றான்.
‘அல்லாஹ் படைத்தவற்றில் எதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல்கள் வலமாகவும் இடமாகவும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு சுஜூது செய்பவைகளாக சாய்கின்றன.’ (16:48)
அல் குர்ஆனில் நிறையவே அத்தாட்சிகள் காணப்படுகின்றன. ஆதனை ஆராய்ந்து பார்க்குமாறு அல்லாஹ் கூறுகின்றான். எமது முஸ்லிம் சமூகத்தில் அல்-குர்ஆனை ஆராய்ந்து பார்க்கின்றவர்கள் மிக மிகச் சொற்பமாகவே இருக்கின்றனர். ஆனால், அந்நிய சமூகத்தினர் விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் உச்ச நிலையை அடைந்து கொண்டிருக்கின்றனர்.
எமது சமூகத்தினர் வீட்டிற்குள் முடங்கிக் கொண்டு அவர்களைக் பாராட்டியும், பெருமைப்படுத்தியும் சிறுமையாகிக் கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்வினால் எமக்காக வழங்கப்பட்ட அருளை எம்மால் ஏன் அனுபவிக்க முடியாதுள்ளது? அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் சொற்பமே என்றால் யாராலும் மறுக்க முடியாது! அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட உண்மை வேதமாகிய அல் குர்ஆனுக்கு சொந்தக்காரர்களான எம்மைப் பார்த்து அல்லாஹ், ‘இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன அவற்றை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?’ என்று கேட்டு விட்டு, ‘அவர்களின் உள்ளங்களில் பூட்டுக்களா போடப்பட்டுள்ளன?’ என்று கேட்கின்றான்.
எனவே, எமக்கு வழங்கப்பட்டுள்ள அருட்பாக்கியங்களை நல்ல முறையில் அடைந்து கொள்வதுடன் அவற்றின் மூலம் படிப்பினைகளையும் பயன்களையும் பெற்று ஈருலகிலும் வெற்றி பெற முயல்வோமாக!