சமூகம் என்பது மக்களைத்தான் குறிக்கும். ஆனால், சமூக உருவாக்கம் என்பது வெறும் மக்கள் தொகையைப் பெருக்குவதைக் குறிப்பதாக அமையாது நல்ல மக்களின் உருவாக்கத்தைத்தான் அது குறிக்கும். நல்ல தனி மனிதர்களை உருவாக்குவதன் மூலம்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல தனி மனிதர்களை நல்ல குடும்பங்கள்தான் உருவாக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களாக இருப்பவர்கள் கணவன்-மனைவியரே! கணவன்-மனைவியரினூடாகத்தான் நல்ல குடும்பங்கள் உருவாக்கப்படும். நல்ல பல குடும்பங்கள் உருவாகும் போது நல்ல கிராமமும் நல்ல சமூகமும் உருவாக முடியும். எனவே, எழுச்சிமிக்க சமூக மாற்றத்தின் அத்திவாரங்களாக கணவன்-மனைவியர்கள்; திகழ்வார்கள் என்றால் மிகையாகாது.
மனித இன உருவாக்கம்:
மனித இனத்தின் உருவாக்கம் பற்றி அல் குர்ஆன் கூறும் போது, ஆதம் எனும் கணவன் ஹவ்வா எனும் மனைவி இருவரின் இணைப்பில்தான் மானிட சமூகமே உருவானது எனக் குறிப்பிடுகின்றது.
‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து, அவையிரண்டிலிருந்தும் அதிகமான ஆண்களை யும் பெண்களையும் பரவச்செய்தான்’ (4:1)
‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்து, நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிக பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், நுட்பமானவன். ‘ (49:13)
மனித இனத்தின் உருவாக்கத்திற்கு கணவன்-மனைவிதான் அடிப்படை என்பதால் சமூக உருவாக்கத்திற்கும் அதுதான் அடிப்படையாக அமையும் என்பதைப் புரியலாம்.
நல்ல குடும்பம்:
நல்ல சமூகத்தை உருவாக்க நல்ல குடும்பம் தேவை. நல்ல குடும்பம் உருவாக நல்ல ஆணும் பெண்ணும் இல்லற பந்தத்தில் இணைய வேண்டும்.
இன்றைய இளசுகள் அந்நிய மதத்தினருடன் இணைந்து இல்லறம் நடாத்துகின்றனர். இது இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் அழிக்கும் நிகழ்வாகும்.
‘இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை மணமுடிக்காதீர்கள். முஃமினான அடிமைப்பெண், உங்களைக் கவரக்கூடிய இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவளாவாள். இன்னும், இணைவைக்கும் ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (உங்கள் பெண்களுக்கு) மணமுடித்து வைக்காதீர்கள். உங்களைக் கவரக்கூடிய இணைவைக்கும் ஆணை விட, முஃமினான அடிமை மேலானவனாவான். அவர்கள் நரகத்தின் பால் அழைக்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ தனது நாட்டப்படி மன்னிப்பின்பாலும் சுவர்க்கத்தின்பாலும் அழைக்கின்றான். இன்னும் மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு தனது வசனங்களை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்துகின்றான். ‘ (2:221)
இஸ்லாத்தில் இல்லாத அழகான, சுதந்திரமான ஆண்-பெண்ணை விட இஸ்லாத்தில் உள்ள அழகற்ற அடிமை மேல் எனக் குர்ஆன் கூறுகின்றது.
வெறும் அழகுக்கும் நிறத்திற்குமாக மார்க்கத்தையும் சமூகத்தையும் குடும்ப கண்ணியத்தையும் சிதைத்து விட்டு மதம் மாறி திருமணம் முடிப்பவர்கள், தமது உலக வாழ்வை அழித்துக் கொள்வதுடன் மறுமை வாழ்வையும் அழித்துக் கொள்கின்றனர்.
முஸ்லிமான ஆணோ அல்லது பெண்ணோ முஸ்லிமைத்தான் மணமுடிக்க வேண்டும். அதுவும்; மார்க்கத்தில் பேணுதல் உள்ள முஸ்லிமைத்தான் மணக்க வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகின்றது, வலியுறுத்துகின்றது.
‘ஒருவருடைய மார்க்கப் பேணுதலும், பண்பாடும் திருப்திகரமாக அமைந்தால் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் பூமியில் பித்னாவும் பஸாதும் அதிகரித்துவிடும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ர)
நூல்: இப்னு மாஜா- 1967
பணத்தையும் பதவியையும் வைத்து மணமகன் தெரிவு செய்யக் கூடாது. மார்க்கத்தையும் நல்ல பண்பாட்டையும் வைத்தே மணமகன் தேர்வு இருக்க வேண்டும். இல்லையென்றால் பித்னாவும் பஸாதும் உண்டாகும் என நபி(ச) அவர்கள் வலியுறுத்துகின்றார்கள். இது சமூகத்தின் அழிவுக்கான அடையாளமாகும்.
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளுடைய செல்வத்திற்காக
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளுடைய அழகிற்காக
4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.
எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!’ என அபூ ஹுரைரா(வ) அவர்கள் அறிவித்தார்.’ (புகாரி: 5090)
பணத்துக்காகவும் அழகுக்காகவும், குடும்ப கௌரவத்திற்காகவும் மணப் பெண்ணைத் தேர்வு செய்வது அழிவுக்கான வழி என இந்த ஹதீஸ் எச்சரிக்கின்றது.
மார்க்கத்தில் பேணுதலும் நல்ல பயன்பாடுகளும் உள்ள ஆணும், பெண்ணும் இல்லற பந்தத்தில் இணைவதுதான் நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாகும். மார்க்கம் இல்லாத மணமக்களால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியாது.
நல்ல சந்ததிகளை உருவாக்குதல்:
இல்லற பந்தத்தில் இணைந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தில் ஆசை இருக்கும். ஆனால், நல்ல சாலிஹான குழந்தைகள் வேண்டும் என்ற ஆர்வம் ஒரு சிலருக்கு மட்டுமே இருப்பதைக் காணலாம்.
ஸகரிய்யா நபியவர்கள் முதுமை வரை குழந்தைப் பாக்கியமற்றிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கூட எனக்கு ஒரு குழந்தை இருந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஒரு நல்ல சந்ததி வேண்டும் என்றே பிரார்த்தித்தார்கள்.
‘அங்கேதான் ஸகரிய்யா தன் இரட்சகனிடம் பிரார்த்தித்து ‘என் இரட்சகனே! உன்னிடமிருந்து எனக்கு ஒரு பரிசுத்தமான சந்ததியைத் தந்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியுறுபவனாவாய்’ எனக் கூறினார்.’ (3:38)
எனவே, நல்ல சந்ததிகள் வேண்டும் என்ற எண்ணமும் ஏக்கமும் பெற்றோரிடம் இருக்க வேண்டும்.
முன்மாதிரி தேவை!:
நல்ல சந்ததிகளை உருவாக்க பெற்றோர்கள் சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழ வேண்டும். பிள்ளைகளுக்கு வெறும் போதனை பயனளிக்காது. முன்மாதிரியான வாழ்க்கை முறையே முறையான வழிகாட்டலாக அமையும். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்வது கட்டாயமாகும்.
தந்தை புகை பிடிப்பவராக இருந்தால் பிள்ளைகளிடமும் இது போன்ற பழக்கங்கள் ஏற்படலாம். தாயிடம் காணப்படும் கெட்ட குணங்கள் பெண் பிள்ளைகளிடமும் குடிகொள்ள ஆரம்பிக்கும். எனவே, பெற்றோர் பிள்ளைகளுக்காக தம்மைத் தாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.
கணவன்-மனைவி முரண்பாடுகள்:
கணவன்-மனைவிக்கிடையில் முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள், தலாக் போன்றவை நல்ல சமூக உருவாக்கத்திற்கு பெரும் தடைக் கற்களாக அமைகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த வகையில் கணவன்-மனைவி இருவரும் இஸ்லாமிய இல்லறம் தொடர்பான தெளிவைப் பெற்றிருக்க வேண்டும்.
பெண்ணின் இயல்பு, குணாம்சங்கள், மனைவிக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள், அவளது உரிமைகள், உணர்வுகள் என்பன பற்றிய பூரண தெளிவு கணவனுக்குத் தேவை.
இவ்வாறே கணவனின் நலன்களிலும், அவனது உரிமைகள், அவனுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள், அவனது இயல்பு, குணாம்சங்கள், அவனுக்காகச் செய்ய வேண்டிய தியாகங்கள், விட்டுக் கொடுப்புக்கள்… பற்றிய தெளிவும் மனைவிக்கு இருக்க வேண்டும்.
இவைகள் இல்லாத போது கணவன்-மனைவிக்கிடையில் முரண்பாடுகள் எழும். அந்த முரண்பாடுகள் பிள்ளைகளிடம் தாக்கம் செலுத்தும். பிள்ளைகளின் உளவியலில் பாதிப்பை உண்டு பண்ணும். அவர்களும் கோபம் கொள்பவர்களாகவும் அடுத்தவர்களுடன் இணங்கிப் போகாமல் முரண்பாடு கொள்பவர்களாகவும் மாறுவர். இது நல்ல சமூக உருவாக்கத்திற்குத் தடையாக அமையும்.
பிரிந்து வாழும் கணவன்-மனைவி:
கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ்வதே இல்லறமாகும். அதுவே நல்லறமுமாகும்.
‘உங்கள் மனைவியர் உங்களது ஆடையாவார். அவர்களுக்கு நீங்கள் ஆடையாவீர்கள்’ (2:187)
இல்லற வாழ்வை இஸ்லாம் ஆடைக்கு ஒப்பிடுகின்றது. கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ்வதன் அவசியத்தை இது உணர்த்துகின்றது. இன்று எமது ஆண்கள், பெண்களில் பலரும் வெளிநாட்டில் காலத்தைக் கடத்துகின்றனர். நல்ல சமூக உருவாக்கத் திற்கு இது பெரிதும் தடையாக அமைகின்றது.
ஒரு தாய் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அவளது பிள்ளைகள் முதலில் தாய்ப் பாசத்தை இழக்கின்றனர். மூத்த பெண்பிள்ளை படிப்பை இழக்கின்றது. குழந்தைகளுக்கு உணவு, உடை கிடைத்தாலும் உண்மையான அன்போ அரவணைப்போ, பாசமோ பரிவோ சரியான பராமரிப்போ கிடைப்பதில்லை. மூத்த ஆண் பிள்ளை வீட்டில் இருப்பதை விட வெளியில் இருக்கவும், கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகவும் ஆரம்பிக்கின்றான். தந்தைக்கும் மூத்த ஆண் மகனுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுகின்றன. இள வயதுத் திருமணங்கள் அதிகரிக்கின்றன, தந்தை மகளையும் அண்ணன் தங்கையையும் கற்பழிக்கும் கேடுகெட்ட கலாசாரம் கூட தற்போது அதிகரித்து வருகின்றன. இப்படி இப்படி ஏராளமான சமூக சீர்கேடுகளை நாம் அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
இவ்வாறே கணவன் நீண்ட காலத்தை வெளிநாட்டில் கழிக்கும் போதும் பிள்ளைகளின் நடத்தைகளிலும், பழக்க வழக்கங்களிலும் பாரிய மாற்றமும் வீழ்ச்சியும் ஏற்படுகின்றன. எனவே, முடிந்த வரை கணவன்-மனைவி இருவரும் நீண்ட காலம் பிரிந்து வாழ்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்-தந்தையுடைய பாசத்திற்கும் கண்டிப்புக்கும் மத்தியில் பிள்ளைகள் வளரும் போதுதான் நல்ல சந்ததியும் சமூகமும் உருப்பெறும்.
மார்க்க உணர்வை ஊட்டி வளர்த்தல்:
குழந்தைகளுக்கு உணவையும், உடையையும் கொடுப்பது மட்டுமல்ல பெற்றோரின் கடமை. அவர்களுக்கு நல்ல அறிவைக் கொடுப்பதே மிக முக்கியமான கடமையாகும். இதைக் கூட சில பெற்றோர்கள் செய்கின்றார்கள். ஆனால், மார்க்க அறிவையும், உணர்வையும் ஊட்டி வளர்க்கத் தவறிவிடுகின்றனர். இதனால் மார்க்க விரோத செயற்பாடுகளில் மிக சர்வ சாதாரணமாகவே ஈடுபடுகின்ற இளம் தலைமுறையினர் உருவாகி வருகின்றனர். முறையான கல்வி இல்லாததால் வீதியோரங்களில் காலத்தை விரையமாக்கும் இளைஞர்கள் உருவாகின்றனர். நிச்சயமாக உலகக் கல்வி மாத்திரம் நல்ல வளர்ப்புக்கு கைகொடுக்காது. மாறாக அதனுடன் சேர்த்து மார்க்கக் கல்வியும் புகட்டப்படுவது கட்டாயக் கடமையாகும்.
எனவே, பெற்றோர் குழந்தைப் பருவத்தில் இருந்து பிள்ளைகளுக்கு மார்க்க உணர்வை ஊட்ட வேண்டும். நல்ல அறிவு வழங்க வேண்டும். குர்ஆன் சுன்னாவை அதன் தூய வடிவில் போதிக்கும் இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்களுடன், பள்ளிகளுடன் பிள்ளைகளைத் தொடர்பு படுத்த வேண்டும்.
இஸ்லாமிய வகுப்புக்கள், தர்பியா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். நல்ல வாசிப்புத் திறன்களை வளர்த்துவிட வேண்டும். நல்ல மார்க்க உணர்வும், அறிவும், இறையச்சமும் அவர்களிடம் குடி கொண்டால் எந்த ஷைத்தானிய சூழலில் இருந்தாலும் அதன் பாதிப்புக்களிலிருந்து அவர்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
துஆச் செய்யுங்கள்:
எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல சந்ததிகள் அமைய பெற்றோரின் பிரார்த்தனை மிக முக்கியமானதாகும்.
‘யா அல்லாஹ்! என்னையும் என் சந்ததிகளையும் சிலை வணக்கத்தை விட்டும் பாதுகாத்து விடு’ என இப்றாஹீம் நபி பிரார்த்தித்துள்ளார்கள்.
இவ்வாறே, ‘யா அல்லாஹ்! என்னையும் என் சந்ததிகளையும் தொழுகையை நிலை நாட்டுபவர்களாக ஆக்கிவிடு!’ (14:40) என்றும் பிரார்த்தித்துள்ளார்கள்.
மரியம்(அ) அவர்களது தாயார், மர்யம் (அ) அவர்களைப் பெற்றதன் பின் மர்யம் அவர்களுக்காகவும் அவரது சந்ததிக்காகவும் இப்படிப் பிரார்த்தித்துள்ளார்கள்.
‘அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்த போது, ‘என் இரட்சகனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்து விட்டேன்’ என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும், ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். ‘அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்’ (என்றார்.)’ (3:36)
ரஹ்மானின் அடியார்கள் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது அவர்கள் தமது பிள்ளைகளுக்காக பின்வருமாறு பிரார்த்திப்பார்கள் என்று குறிப்பிடுகின்றான்.
‘ மேலும் அவர்கள் ‘எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியர் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் கண் குளிர்ச்சியை எமக்கு வழங்குவாயாக! எம்மை பயபக்தியாளர்களுக்கு முன்மாதிரிமிக்கவர்களாகவும் ஆக்குவாயாக! என்றும் (பிரார்த்துக்) கூறுவார்கள். ‘ (25:74)
எனவே, நல்ல சந்ததியும் நல்ல சமூகமும் உருவாகப் பெற்றோரின் பிரார்த்தனை அவசியமாகும். எனவே, கணவன்-மனைவி இருவரும் குழந்தைகளை அறிவும் ஆரோக்கியமும் நல்ல மார்க்க உணர்வும் உள்ளவர்களாக வளர்த்தெடுப்பதுடன் அவர்களுக்காக அனுதினமும் பிரார்த்திக்க வேண்டும். இதனூடாக நல்ல சந்ததியையும் சமூகத்தையும் உருவாக்க முடியும்.
நல்ல குடும்பங்களினூடாக நல்ல சமூகத்தை உருவாக்கும் உண்ணத பணியில் உணர்வுபூர்வமாக ஈடுபட அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் செய்தருள்வானாக!