ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படா விட்டாலும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் தேர்தல் காய் நகர்த்தல்களில் முழு மூச்சுடன் கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் நடந்த தேர்தல்கள் குறிப்பாக, ஊவா தேர்தல் அரசின் வாக்கு வங்கி சரிந்து வருவதைத் தெளிவாக உணர்த்தியது. இதனால் திடீரென ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
இதே வேளை, ஊவா தேர்தல் பிரதான எதிர்க்கட்சிக்குப் பெரும் உற்சாகத்தையூட்டியுள்ளது. முயற்சித்தால் கூட்டணி அமைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்ற பெறலாம் என்ற எண்ண அலைகளை அவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. அதற்காகப் பொது வேட்பாளரைக் களமிறக்கவும் பெருமளவில் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஆளும் கட்சியின் செல்வாக்குச் சற்று சரிந்து எதிர்க்கட்சிகளின் பலம் சற்று ஓங்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல அரசியல் மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சி ஓரளவாவது நீதி நியாயத்துடன் நிதானமாகப் பயணிக்க வேண்டுமாயின் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படுவது தவிர்க்கப்பட வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் பலமாக இருக்க வேண்டும். அரசியல் சமநிலை இருந்தால்தான் ஆளும் கட்சி ஜனநாயக உணர்வுகளை மதித்து நடக்க முற்படும்.
இந்த வகையில் அண்மைக் காலம் வரை ஆளும் கட்சியினரின் அரசியல் செல்வாக்கு மிகவும் ஓங்கியிருந்ததால் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவு அதற்கு இருந்ததால் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு அதற்கு அவசியமற்றுப் போனது. சிறுபான்மை சமூகங்களின் ஆதரவு இல்லாமலேயே பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுடன் மட்டும் ஆட்சியமைக்கும் அளவுக்கு அமோக ஆதரவு இருந்ததால் சிறுபான்மை சமூகங்கள் புறக்கணிக்கப்படும் நிலை இருந்தது.
ஆனால், அரசின் வாக்கு வங்கி சரிந்து, எதிர்க்கட்சி ஓரளவு பலம் பெற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் ஒன்றிணையும் போது சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறப் போகின்றது. இது அரசியலில் ஏற்பட்ட நல்ல மாற்றமாகும்.
அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக, கிங் மேக்கர்களாக சிறுபான்மை சமூகங்கள் இருக்கும் நிலைதான் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள், நலன்களுக்குப் பாதுகாப்பான நிலையாகும்.
மீண்டும் இலங்கை அரசியல் நிலவரம் இந்நிலைக்கு மாறுவது சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டுமன்றி நாட்டின் அமைதிக்கும் சுபீட்சமான, சுமூகமான வாழ்வுக்கும், சகவாழ்வுக்கும் இன்றியமையாததாகும்.
கடந்த காலங்களில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத, மதவாதப் பிரச்சாரங்கள், வன்முறைகள், அடக்குமுறைகள் நிச்சயமாக இத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இனவாத சக்திகளைக் கட்டுப்படுத்தி அவர்களின் இனவாதப் பிரச்சாரங்களை தடுக்கக் கூடிய, சகல சமூகங்களையும் சமமாக மதித்து, இன நல்லுணர்வை வளர்க்கக் கூடிய அரசே இன்றைய தேவை என்பதுதான் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாசையாக இத்தேர்தலில் அமையப் போகின்றது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொருத்தவரையில் அரசியல் ரீதியான நலன்களில் அதிக நாட்டமில்லாத சமூகமாகும். அரசாங்கத்தின் இலவசங்கள் மீது அதிகம் நம்பிக்கை வைக்காமல் தனது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து வாழும் சமூகமாக உள்ளன. அதிகமாக அரசியல் உத்தியோகங்களை கூட நாடாமை, அரசினால் கிடைக்கும் மருத்துவம் போன்ற இலவசங்களை அதிகம் அனுபவிப்பதற்கு ஆசைப்படாதவர்களாக உள்ளனர்.
அவர்களின் தேவையெல்லாம் நாமுண்டு… நம் பாடுண்டு.. என்று தனித்துவமாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதேயாகும்.
இலங்கை முஸ்லிம்கள் பிரச்சினையில்லாமல் வாழ ஆசைப்படுபவர்கள். பிற சமூகங்களுடன் நட்புறவுடனும் நல்லுணர்வுடனும் வாழ வேண்டும் என்ற மனநிலையை உடையவர்கள்.
இந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் பெரும்பாலானவர்கள் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டாத அதற்கு ஒத்துழைப்பு வழங்காத, இனவாத, மதவாத செயற்பாடுகளைத் தடுக்கக் கூடிய ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்றே இத்தேர்தலைச் சந்திக்கப் போகின்றார்கள்.
எனவே, இதற்கு யார் உத்தரவாதமளிக்கின்றார்களோ அவர்களுக்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இனவாதமும், மதவாதமும் இல்லாத சமாதான சமத்துவ இலங்கையை நோக்கி இலங்கை அரசியலின் திசையை மாற்றுவதை இலக்காகக் கொண்டே அரசியல் பாதையை அமைக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமுள்ள சில அமைச்சுப் பதவிகள் அல்லது சில வெளிநாட்டுத் தூதுவர் நியமனங்களைக் கோரி சுய இலாபம் காணும் அரசியல் செய்யும் போக்கு ஒழிய வேண்டும். இந்த அமைச்சுப் பொறுப்புக்களால் சமூகம் பெற்றதாக பெரிதாகப் பீற்றிக் கொள்ள எதுவும் இல்லை. எனவே, எமது அரசியல் ‘டிமான்ட்’ என்பது சமுதாயத்தின் ஜீவாதாரப் பிரச்சினையை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டுமல்லாது, கட்சியையும், தன்னையும் நிலை நிறுத்திக் கொள்வதை மட்டும் இலக்காகக் கொண்டதாக இருந்துவிடக் கூடாது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சில கட்சித் தாவல்கள் ஏற்படலாம், அரசியலில் எந்தப் பக்கம் சாய்வது என்ற குழப்ப நிலை ஏற்படலாம். பொதுவாகத் தேர்தல்கள் வரும் போதெல்லாம் முஸ்லிம் கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்படுவது வழமையாகிவிட்டது. சுய நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடாத்துவதால்தான் இந்தப் பிளவுகள் ஏற்படுகின்றன.
எனவே, முஸ்லிம் அரசியல் கட்சிகள் தம்மை நம்பியுள்ளவர்களுக்குத் துரோகம் செய்யாமல் தமது கட்சி மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யாமல் சமூக உணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும். சமூக உணர்வுடன் எடுக்கப்பட்ட முடிவு சில வேளை பிழையாகிப் போனால் அல்லாஹ்விடம் தப்பிக் கொள்ளலாம்.
ஆனால், அரசியலில் சுய இலாபங்களை மட்டும் மையமாக வைத்து சரியான முடிவெடுத்தால் கூட அல்லாஹ்விடம் தப்ப முடியாது. அரசியலையும் ஒரு இபாதத்தாக எண்ணி இஹ்லாஸாக செயற்பட முன்வர வேண்டும். அப்படி செயற்பட்டால் நல்ல முடிவுகளை அல்லாஹ் வழங்குவான்.
கருணா-பிரபா பிரிவு என்பது புலிகளின் அழிவை விரைவுபடுத்தியது. இதே போல ஹகீம்-ரிசாத்-அதாவுல்லாஹ் பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்திவிடக் கூடாது. சமூக நலனை முதன்மையாகக் கொண்டு அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும்.
ஒன்றுபட்ட சிந்தனையுடன் செயற்பட்டால் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த நல்ல மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி இனவாத, மதவாத சிந்தனையை மழுங்கச் செய்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான மதவாத, இனவாத அச்சுருத்தல்களில் இருந்து நம்மையும் நாட்டையும் நாம் பாதுகாக்கலம்.
எனவே, எல்லாம் வல்ல அல்லாஹ் மதவாதமும், இனவாதமும் அற்ற சமாதானமும் சகவாழ்வும் நிலைத்து நீடிக்கக் கூடிய ஒரு நல்ல சூழலை நம் நாட்டுக்கு நல்குவானாக!..
குறிப்பு:இக்கட்டுரை அதிரடியான அரசியல் மாற்றங்கள் நிகழ்வதற்கு முன்னர் எழுதப்பட்டதாகும் தனியான அரசியல் அவதானக்கட்டுரை விரைவில் இடம்பெரும் இன்ஷா அல்லாஹ்