உரிமையுடன் அடித்துத் திருத்த நல்ல உறவுகள் இருப்பது மிகப் பெரும் அருள்தான்.சிறுவயதில் நான் கண்டியில் இருக்கும் போது நடந்த நிகழ்வு இது. அப்போது எனக்கு ஏழு வயதுக்குள் இருக்கும். உடதலவின்ன கலதெனிய பகுதியில் வசித்து வந்த நாம் குளிப்பதற்காக சிங்களப் பகுதிக்குச் செல்வோம். அவ்வாறு எனது நாநா மற்றும் அவரது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சிகரட் குடிக்க ஐடியா போட்டனர். அவர்கள் கடையில் சிகரட் வாங்கினால் கடைக்காரருக்கு சந்தேகம் வரும் என்பதால் என்னை அனுப்ப முடிவு செய்தனர். நானும் “சிகரட் வாங்கி வருவேன் எனக்கும் தர வேண்டும்” என்று டிமாண்ட் பன்னினேன். அந்த சீக்ரட் சிகரெட் பாட்டியில் எனது மச்சான் ஒருவரும் இருந்தார். “அவர் ஓங்கி ஒரு அறைவிட்டார்.” நாநாவின் நண்பர் ஒருவர் “சின்ன பிள்ளைக்கு அடிக்கப்படா. பத்து வயசுக்குப் பின்னால்தான் அடிக்க வேண்டும்” என்று ஹதீஸ் எல்லாம் சொன்னார். அந்த மச்சான் அடித்த அடி எவ்வளவு அருள் நிறைந்தது. அல்லாஹ் அந்தக் கைக்கு அருள் புரிவானாக. நான் திருமலை ஜமாலியாவில் இருக்கும் போது நடந்த நிகழ்வு இது.
ரபாய்தீன் என்று ஒரு நண்பர் இருந்தார். இந்திய
இராணுவம் இலங்கையில் இருந்த போது கப்டாய
இராணுவப்படையில் இருந்த அவர் இந்திய
இராணுவம் சென்ற பின்னர் புலிகளால் கொல்லப்பட்டார். நான் சொல்ல வரும் நிகழ்வு நடக்கும் போது நான் 4/5 வகுப்பு படிக்கும் காலமாக இருக்கலாம். நோன்பு 27 நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதில் பித்ரா கேட்டு சிறுவர்கள் வீடு வீடாகச் செல்வார்கள். 5 சதம் அல்லது 10 சதம் கொடுப்பார்கள். அந்த ரபாய்தீன் சென்ற வருடம் பித்ரா கலக்சன் பற்றி சந்தோசமாக சொல்லிக் கொண்டிருந்தார். உசாரான நான் எனது சின்ன நாநாவைப் பார்த்து “நாங்களும் போவோமா” என்று கேட்டதுதான் தாமதம் பலார் என கண்ணத்தில் அறைந்தார். சுயமரியாதையுடன் தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு அந்த அறை. வாழ்நாள் வழிகாட்டல் அது. தொடர்ந்தும் அப்படியே வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.
“அறைந்த அந்த கைகளுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. உரிமையுடன் அடித்துத் திருத்தும் உறவுகள் அல்லாஹ்வின் அருள் என்பது உண்மை அல்லவா?”