அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும்
اِنَّ الَّذِيْنَ يَاكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا
‘நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.’ (4:10)
அநாதைகளின் சொத்துக்களை உண்பவர்கள் தமது வயிற்றில் நெருப்பைத்தான் கொட்டிக் கொள்கின்றனர். மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள் என இந்த வசனம் கண்டிக்கின்றது. ‘அநாதைகளின் சொத்துக்களை உண்பது’ என்ற வார்த்தைதான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு தேவைகளுக்கு அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணி விடக் கூடாது.
மனித வாழ்வில் உணவு அத்தியவசியப் பொருளாகும். அத்தியவசியத்திற்குக் கூட அநாதைகளின் சொத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றால் ஆடம்பரத்துக்கும், அடுத்த தேவைகளுக்கும் அதைப் பயன்படுத்தலாம் என்று கூற முடியாதல்லவா?
அநாதையின் சொத்து என்றதும் நாம் வெகு தூரமாகத்தான் சிந்திப்போம். தாய் தந்தை இல்லாத பிள்ளைகளின் சொத்தை அடுத்தவர் அபகரிக்கக் கூடாது என்று கூறப்படுவதாக மட்டுமே எடுத்துக் கொள்கின்றோம். ஆனால், இது இன்று பல குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கும் அநியாயமாகும்.
ஒரு தந்தை மரணித்து அவருக்கு பல பிள்ளைகள் இருந்து மூத்தவன் இளையவர்களுடைய சொத்தை எடுத்தாலும் அநாதையின் சொத்தை ஆக்கிரமிக்கும் அநியாயம்தான் இது. இந்த நிலை இன்று பல குடும்பங்களில் நிலவி வருகின்றது.
அடுத்து, இஸ்லாம் அநாதைகளை ஆதரிக்கச் சொல்கின்றது, அரவணைக்கச் சொல்கின்றது, அவர்களுக்கு நல்லது செய்யச் சொல்கின்றது. இப்படியிருக்கும் போது அவர்களுக்கு உரியதைக் கொடுக்காமல் பறித்துக் கொள்வது மிகப்பெரும் அநியாயமும் அக்கிரமுமாகும்.
08. பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு:
‘இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.’ (4:11)
உங்கள் குழந்தைகளில் பெண்ணுக்குக் கொடுப்பது போன்ற இரண்டு மடங்கு ஆண் பிள்ளைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. உங்கள் பிள்ளைகள் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பொதுச் சட்டத்தில் இருந்து சிலர் விதிவிலக்காகுவார்கள்.
நபிமார்களின் வாரிசுகள்:
ஒரு நபிக்குக் குழந்தை இருந்தால் அவரது சொத்துக்கு அந்தக் குழந்தை வாரிசாக மாட்டாது. அவரது சொத்துக்கள் (ஸதகா) தர்மமாகவே அமையும். ‘உங்கள் குழந்தைகள்’ என்பதில் நபிமார்களும் அவர்களது பிள்ளைகளும் அடங்குவார்கள் என்றாலும், ஹதீஸ் அவர்களை இந்த பொதுச் சட்டத்தில் இருந்து விதிவிலக்காக்குகின்றது.
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவை யெல்லாம் தர்மமேயாகும்.’
அறிவிப்பவர்: ஆயிஷா(Ë)
நூல்: புகாரி – 6727
இவ்வாறே ஒரு மகன் தனது தந்தையின் சொத்தை அடைந்து கொள்வதற்காக அவரைக் கொலை செய்தால் அவனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கப்படமாட்டாது. இவ்வாறே, முஸ்லிமான தந்தைக்கு காபிரான மகனோ, அல்லது காபிரான மகனுக்கு முஸ்லிமான தந்தையோ வாரிசாக முடியாது.
‘நபி(ச) அவர்கள், ‘இறை நம்பிக்கையாளர், இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். அவ்வாறே இறைமறுப்பாளரும் இறைநம்பிக்கையாளருக்கு வாரிசாகமாட்டார்’ என்று கூறினார்கள். ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், ‘அபூ தாலிபுக்கு யார் வாரிசானார்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவருக்கு அகீலும், தாலிபும் வாரிசானார்கள்’ என்று பதிலளித் தார்கள். ‘ (நூல்: புகாரி 4283, 6764)
உங்கள் குழந்தைகளுக்கு சொத்தைக் கொடுங்கள் என குர்ஆன் பொதுவாகக் கூறும் போது காபிரான உங்கள் குழந்தைக்கு வாரிசுரிமை இல்லையென ஹதீஸ் கூறுகின்றது. இதை வைத்து இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. குர்ஆன் பொதுவாகச் சொன்ன சட்டத்தில் சுன்னா சில விதிவிலக்குகளைக் கூறி விளக்குவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
09. கடனா, வஸிய்யத்தா?:
ஒருவர் தனது சொத்தில் 1/3 க்கு அதிகமாகாத அளவுக்கு வஸிய்யத் செய்யலாம். அந்த வஸிய்யத் பொது அமைப்புக்காகவும் இருக்கலாம். குர்ஆன் குறிப்பிட்ட, வாரிசுரிமை பெறாத தனி நபர்களாகவும் இருக்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் ஒருவரின் மரணத்தின் பின்னர்தான் சொத்துக்கள் பங்கிடப்படும். அவரது இறுதிக் கிரியைகளுக்கான செலவுகள் போன பின்னர் அவரது கடன்கள் மற்றும் வஸிய்யத்துக்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்தான் அவரது சொத்துக்கள் பகிரப்பட வேண்டும். இது பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,
‘(இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரண சாசனம், அல்லது கடன் என்பவற்றை நிறை வேற்றிய பின்னரேயாகும்.’
அவரது வஸிய்யத்தை அல்லது கடனை நிறைவேற்றியதன் பின்னர் இப்படி பகிரப்பட வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது. இதில் முதலாவதாக வஸிய்யத்தும் அடுத்து கடனும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், வஸிய்யத்தை விட கடன் அவசியம் அடைக்கப்பட வேண்டியதாகும். நபியவர்கள் இறந்தவருக்கு தொழுகை நடத்த முன்னரே இவருக்குக் கடன் இருக்கின்றதா என்பதைத்தான் முதலில் விசாரிப்பார்கள். முதலில் கடனை அடைப்பதா அல்லது வஸிய்யத்தை நிறைவேற்றுவதா என்பது குறித்து சுன்னா விளக்கும் போது கடனையே முன்னிலைப் படுத்துகின்றது.
‘நபி(ச) அவர்கள் வஸிய்யத்தை விட கடனை நிறைவு செய்வதை முன்னிலைப்படுத்தி தீர்ப்புக் கூறினார்கள்.
(நூல்: திர்மிதி 2094, 2122, அஹ்மத்: 1222)
குர்ஆனில் முதலில் வஸிய்யத்தும் அடுத்து கடனும் குறிப்பிடப்பட்டாலும் இதை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்று விளக்கமளிக்கும் பொறுப்பில் உள்ள நபி(ச) அவர்கள், முதலில் கடனையும் அடுத்து வஸிய்யத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விளக்கியுள்ளதால் இதையே நாம் ஏற்க வேண்டும். இது குர்ஆனை விட சுன்னாவை முதன்மைப் படுத்துவதாகாது. குர்ஆனை சுன்னாவின் விளக்கத்துடன் பின்பற்றுவதாக அமையும். இது குர்ஆனை விளங்க சுன்னாவின் வழிகாட்டல் அவசியம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
10. சொத்துப் பங்கீட்டில் பெண்ணுக்கு ஏன் இந்த அநீதி!:
ஆணை விட பெண்ணுக்கு சொத்து அரைவாசி குறைவாகக் கொடுக்கும் படி இந்த வசனம் கூறுகின்றது.
பெண்ணுக்கு பாதிப் பங்கு என்பது அநீதியானது என முஸ்லிம் அல்லாத பலரால் விமர்சிக் கப்படுகின்றது. இது குறித்த தெளிவு அவசியமாகும்.
நபி(ச) அவர்கள் இஸ்லாமிய பிரசாரம் செய்ய முன்னர் பெண்ணுக்கு எவ்வித சொத்துரிமையும் இருக்கவில்லை. அவளே சொத்துடன் சொத்தாகப் பகிரப்பட்டு வந்தாள். இஸ்லாம் பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியது. நவீன உலகில் கூட ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் பெண் தனதுபெயரில் சொத்துக்களை வைத்திருக்கும் உரிமையையும் பெற்றாள்.
பெண்ணைப் போன்ற இரு மடங்கு சொத்து என்ற இஸ்லாமிய சட்டத்தில் இருக்கக்கூடிய நீதி நியாயத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொறுப்பு:
இஸ்லாம் ஆண்கள் மீதுதான் பொருளாதாரப் பொறுப்புக்களைச் சுமத்தியுள்ளது. பொறுப்புக்கள் உள்ள ஆணுக்கு பொருளாதார பொறுப்புக்கள் சுமத்தப் படாத பெண்ணுக்குக் கொடுப்பதை விட அதிகமாகக் கொடுப்பது அநீதியாகாது.
பங்களிப்பு:
ஒரு தந்தையின் பொருளாதாரத் தேடலில் மகளை விட மகன்தான் அதிக பங்களிப்புச் செய்திருப்பான். பொருளாதாரத் தேடலில் அதிக பங்களிப்புச் செய்த மகனுக்கு பொருளாதாரத் தேடலில் குறைந்த பங்களிப்புச் செய்த அல்லது பங்களிப்பே செய்யாத மகளுக்குக் கொடுப்பதை விட அதிகமாகக் கொடுப்பது அநீதியாகாது!
குறைந்த செலவு:
ஒரு ஆண் பிள்ளைக்குச் செலவிடுவதை விட அதிகமாக பெண் பிள்ளைக்கு ஒரு தந்தை செலவிடுகின்றான். ஆசைக்கு ஒரு மகளும் ஆஸ்த்திக்கு ஒரு மகனும் என்று கூறுவார்கள். பெண் பிள்ளைகளுக்கு நகை-நட்டு என்றும், அலங்கார வகைகள் என்றும், ஆடை அணிகலன்கள் என்றும், சீர் வரிசை என்றும் ஆண் பிள்ளைக்குச் செலவிடுவதை விட அதிகமாகவே ஒரு தந்தை செலவழித்து விடுகின்றான். ஆனால், ஆண் பிள்ளைக்கு இந்த அளவு அதிக செவீனங்கள் இல்லை. வாழும்போதே அதிக அளவு செல்வத்தைக் கொடுத்து விட்ட மகளை விட குறைந்த அளவு செல்வத்தை வழங்கிய மகனுக்கு சற்று கூடுதலாகக் கொடுப்பது குற்றமாகாது!
கைமாறும் சொத்து:
உழைத்த ஒருவன் தனது சொத்து தனது குடும்பத்துக்குள் இருக்க வேண்டும் என்றே விரும்புவான். ஒரு தந்தை மகனுக்கும், மகளுக்கும் ஒவ்வொரு கோடி கொடுப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். மகனுக்குக் கொடுத்த பணம் இவனது குடும்பத்திற்குள்ளேயே இருப்பதாகக் கொள்ளப்படும். மகளுக்குக் கொடுத்த பணம் அவள் கணவன் மற்றும் கணவனின் குடும்பத்திற்குக் கொடுத்த பணமாக மாறிப் போய்விடும். ஒரு வேளை, மகனிடம் இருக்கும் பணத்தை தேவை ஏற்பட்டால் கேட்பது போல் மகளிடம் கொடுத்ததைக் கேட்க முடியாத நிலை ஏற்படும்.
இதையே சொத்துப் பங்கீடு தொடர்பான இந்த வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
‘உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார்? என்பதை அறியமாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் மிக்க அறிந்தவனாகவும், ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான்’ என்று கூறுகின்றான்.
அடுத்து, சொத்துப் பங்கீட்டில், மகன், மகளை விட அதிக பங்கு பெறுவான் என்பதை விளங்கியே இஸ்லாமிய பாகப் பிரிவினை எதிர்க்கப்படுகின்றது. ஆனால், சில போது பெண் ஆணுக்கு நிகரான அளவையும், சில போது ஆணை விட அதிகமாகவும் பெறக் கூடிய சந்தர்ப்பங்களும் இஸ்லாமிய சொத்துப் பங்கீட்டில் வருவதுண்டு!
உதாரணமாக ஒருவர் மரணிக்கின்றார். அவருக்கு தாய் வழியில் சகோதர சகோதரிகளும் இருக்கின்றனர். இவரின் சொத்தைப் பங்கீடு செய்யும் போது 1/3 பகுதி அவர்களுக்கு மத்தியில் சமமாகப் பங்கிடப்படும். ஆண், பெண் இருவரும் சம அளவில் பங்கு பெறுவார்கள்.
இவ்வாறே, மரணித்த ஒருவருக்கு இரு பெண் பிள்ளைகளும் ஒரு சகோதரனும் இருந்தால் ஒவ்வொருவருக்கும் 1/3 பகுதி கிடைக்கும். இங்கு சகோதரனுக்குக் கிடைக்கும் சம அளவு பங்கு மகள்மார் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றது.
இவ்வாறே ஒருவர் மரணிக்கின்றார். அவருக்கு ஒரு மகள், ஒரு சகோதரி , ஒரு சாச்சா இருந்தால், மகளுக்கு 1/2 பங்கும், சகோதரிக்கு 1/2 பங்கும், கொடுக்கப்படும். தநதையின் உடன் பிறந்த சகோதரன் (சாச்சா, பெரியப்பா) பங்கு எதையும் பெற முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறான பல சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கவனத்திற் கொள்வது அவசியமாகும். இஸ்லாமிய பாகப் பிரிவினை என்பது நடைமுறைக்கு ஏற்றது மட்டுமன்றி நியாயமானதும் கூட என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் உணர முடியும்.