கிண்ணியாவில் காணப்பட்ட பிறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டு 9.8.2013 பெருநாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் 8.8.2013 ஆம் திகதியன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. JASM தலைமையகத்திலும், கிளைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு மாற்றமாகப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இவ்வாறு பெருநாள் கொண்டாடியவர்கள் தவ்பா செய்ய வேண்டும்; விட்டவர்கள் நோ
ன்பைக் கழாச் செய்ய வேண்டும் என பத்வா வழங்கப்பட்டதினாலும் மக்களுக்கு எமது நிலையைத் தெளிவுபடுத்தும் கட்டாயம் இருப்பதினாலும் நடந்தது என்ன என்பது ஒரு வரலாற்றுப் பதிவாக வேண்டும் என்பதினாலும் இது குறித்து இங்கு விரிவாக விபரிக்கப்படுகின்றது.
பொருத்தமற்ற நாட்டுச் சூழல்:
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கும். இக்காலகட்டத்தில் எமது ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இலங்கை முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்று “பொதுபலசேனா” (BBS) தீவிரவாதிகளும் துரோகிகளான சில முஸ்லிம் அமைப்புக்களும் கூறிவரும் சூழ்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கூட இருந்தே குழி பறிப்பவர்களின் சூழ்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.
ஜம்இய்யதுல் உலமாவைப் பலவீனப்படுத்தவும், உடைக்கவும் முயற்சிக்கும் சூழ்ச்சிகள் பற்றி ஜம்இய்யதுல் உலமா அதிகம் கவனம் செலுத்தத் தவறிவிட்டது என்றே தோன்றுகின்றது.
நமது நிலை:
நாம் பிறை விவகாரத்தில் நடுநிலையான போக்கையே கைக்கொண்டிருக்கின்றோம். 07 ஆம் திகதி இரவு 7 மணியளவிலேயே கிண்ணியாவில் பிறை தென்பட்ட தகவல் எமக்குக் கிடைத்துவிட்டது. மறுநாள் பெருநாளாக அமைந்துவிடலாம் என்பதால் விரைவாக சேகரிக்கப்பட்ட பித்ரா அரிசிகளை விநியோகிப்பதில் ஈடுபட்டிருந்தோம். இதே வேளை பெருநாளை அறிவித்து சில SMSகள் வந்தன.
எமது JASM Twitter சேவை மூலமாக ACJU வின் உத்தியோகபூர்வ அறிவித்தல் இல்லாமல் தவறாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தி இரவு 8.30 இற்கு நாம் ளுஆளு அனுப்புகின்றோம்.
இதன் பின்னரும் பல பகுதிகளில் மக்கள் பெருநாள் எடுக்கும் எண்ணத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பை எதிர்பார்க்குமாறு நாம் மக்களுக்குக் கூறும் அதே வேளை எமது தலைமையகத்தில் தராவீஹ் தொழுகையும் நடத்தினோம்.
ACJU அறிவிக்காவிட்டாலும் நாட்டில் பல இடங்களில் பெருநாள் கொண்டாடப்படும். இது ஜம்இய்யதுல் உலமாவைப் பலவீனப்படுத்தும் இலங்கை முஸ்லிம்கள் ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் இல்லையென்ற தகவலை அந்நியருக்கு வழங்கும் என்று அஞ்சிய நாம் 077 680524 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிறை விடயத்தில் ஜம்இய்யதுல் உலமா மாற்று முடிவெடுத்தால் ஜம்இய்யா பலவீனப்பட்டுவிடும் என்று கூறினோம்.
எதிர்த்தரப்பில் பேசியவர்களுக்கு அந்தக் கவலை இருந்ததாகத் தெரியவில்லை. அவர் அப்படி நடக்காது என்றார். ஜம்இய்யதுல் உலமா மட்டும் இந்த முடிவை எடுப்பதில்லை. பெரிய பள்ளி, கலாச்சாரத் திணைக்களம் எல்லோரும் இணைந்தே எடுப்பார்கள் என்றார். தலைவருடன் பேச வேண்டும் என்ற போது அவர்கள் உள்ளே இருப்பதாகவும், தான் வெளியே இருப்பதாகவும் கூறினார்.
நாம் எச்சரித்தது போன்று ஜம்இய்யதுல் உலமாவை பலவீனப்படுத்திக் கொண்டனர். கிழக்குமாகாணத்திற்கென தனியான பிறைக் குழு, தனியான ஜம்இய்யதுல் உலமா என்பன பற்றியெல்லாம் சிந்திக்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளனர்.
எதிர்பார்ப்புக்கு மாற்றமாக பெருநாள் இல்லையென ஜம்இய்யதுல் உலமா அறிவித்ததும் மக்கள் எம்மைத் தொடராக தொடர்பு கொண்டனர். கிண்ணியாவில் மற்றும் பலரும் பல இடங்களில் பிறை கண்டதாகத் தகவல்கள் வந்தன. இவ்வாறே நிகவெரடிய, மன்னார் போன்ற பகுதியிலும் பிறை பார்த்த தகவல்கள் வந்தன. இது குறித்து விசாரணைகளில் நாம் ஈடுபட்டோம்.
கிண்ணியாவில் பிறை கண்டவர்களுடன் நேரடியாகத் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் வாக்குமூலத்தைப் பெற்றோம். இதன் பின்னரும் இவர்கள் நம்பகமானவர்களா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தினோம். ஆனால், குறித்த நபர்களிடம் அவர்களது கொள்கை குறித்து விசாரித்துக் கொண்டிருக்கவில்லை.
கிண்ணியா பிறையை ஜம்இய்யதுல் உலமா ஏன் மறுத்தது என்ற காரணத்தை அறிந்து அந்தக் காரணம் நியாயமானதாக இருந்தால் அதை வைத்து முடிவு செய்யலாம் என்ற கருத்து எமக்குள் எழுந்தது.
எனவே, இதன் பின்னரும் இரவு 11.09 மணியளவில் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களது 077 680524 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு கிண்ணியாவில் காணப்பட்ட பிறை மறுக்கப்பட்டகாரணத்தை அறிந்தால் எமக்கு முடிவு எடுக்க வசதியாக இருக்கும்É என்ன காரணம் எனக் கேட்ட போது நாளை காலை நேரடியாக வாருங்கள் எழுத்து மூலமாகவே தருகின்றோம் என எதிர்தரப்பில் தொலைபேசி எடுத்தவர் கூறினார். அவர் பேச்சைத் துண்டிப்பதில் கவனமாக இருப்பதாகத் தெரிந்தது.
இதன் பின்னர் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுடன் தொடர்பு கொண்டு பிறை பார்க்கப்பட்ட தகவல், பார்த்தவர்களது நம்பகத் தன்மை பற்றி விசாரித்தோம். கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் பிறை பார்க்கப்பட்டது உறுதியான தகவல் என்றும் பலர் பார்த்திருப்பதாகவும் தாம் தேசியத் தலைமையுடன் தொடர்பு கொண்டு பெருநாளை நாடுபூராகவும் அறிவிக்க முயற்சித்து வருவதாகவும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
எனவே, சகல மட்டத்திலும் பேசிப் பார்த்துவிட்டு ஜம்இய்யதுல் உலமா 08 ஆம் திகதி பெருநாள் தொடர்பில் அறிவிக்கும் போது, பிறையைக் கண்டவர்கள் நோன்பை விடலாம் என இரண்டுக்கும் இடம்பாடாக அறிவித்ததை மனதிற் கொண்டு 08 ஆம் திகதி பெருநாள் கொண்டாடுவதாக முடிவு செய்து இரவு 12 மணியின் பின்னரே நாம் பெருநாளை அறிவித்தோம். ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது.
பெருநாளை அறிவிக்கும் விடயத்தில் ஜம்இய்யதுல் உலமாவுக்கும், பெரிய பள்ளிக்குமிடையில் வித்தியாசம் நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இதற்கு முன்னர் பெரிய பள்ளிவாசல் சார்ந்த ரவுடிக் கும்பலால் ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் தாக்கப்பட்டதும் உண்டு. ஏற்கனவே நாளை நோன்பு என அறிவித்து அதன் பின் சில உலமாக்கள் அதிரடியாகச் செயற்பட்ட பின்னர் ஸஹருடைய நேரத்தில் பெருநாள் அறிவிப்புச் செய்யப்பட்டதுமுண்டு.
சென்ற பெருநாள் அறிவிப்பில் ஜம்இய்யதுல் உலமாவுக்கும், பெரிய பள்ளி வாசலுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுமுள்ளது. பெரிய பள்ளியே ஜம்இய்யதுல் உலமாவின் பெருநாள் அறிவிப்பை ஏற்காமல் ஜம்இய்யதுல் உலமாதலைவரை அதன்பின் விமர்சித்தும் உள்ளனர்.
இப்படியான சூழ்நிலையில் கண்டவர்கள் நோன்பை விடலாம் பிரச்சாரம் செய்யாதீர்கள் என அறிவித்ததை வைத்து சிந்திக்கும் போது உள்ளேயே முரண்பாடு இருக்கின்றதோ, ஜம்இய்யதுல் உலமா தலைவர் ஒற்றுமையை விரும்புபவர் அதனால் விட்டுக் கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் எற்பட்டது.
பெருநாள் உரை:
JASM இன் தலைமைப் பெருநாள் உரையில் மிகத் தெளிவாகப் பின்வருமாறு விளக்கப்பட்டது.
“இது ஜம்இய்யதுல் உலமாவிற்கு எதிரான ஒரு நடவடிக்கை அல்ல. நாம் ஜம்இய்யதுல் உலமாவைப் பலவீனப்படுத்த விரும்பவில்லை. ஆன்மீகத் தலைமை என்ற வகையில் ஜம்இய்யதுல் உலமாவைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எமது ஜமாஅத்தின் நிலைப்பாடாகும். இந்தப் பெருநாள் மூலம் இலங்கை முஸ்லிம் உம்மத்திலிருந்து நாம் பிரிந்து செல்ல விரும்பவில்லை, இனியும் ஜம்இய்யதுல் உலமாவின் நல்ல நிலைப்பாட்டுக்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம்.பிறை காணப்பட்டதாக உறுதியாக நாம் நம்புவதால் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். எமது ஊரில் பிறை காணப்பட்டதை நம்பாத ஜம்இய்யதுல் உலமாவின் முடிவின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் நோன்போடு உள்ளனர். அவர்களது நோன்பை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நோற்ற நோன்பை ஹராமாகப் பார்க்காதீர்கள்……”
இவ்வாறான நிதானமான நடுநிலையான விளக்கத்தை மக்களுக்கு நாம் வழங்கினோம்.
தலைவரின் உரை:
பெருநாள் தினத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் “ரிஸ்வி முப்தி” அவர்களின் உரை இரு முறை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அந்த உரை “ரிஸ்வி முப்தி” எனும் ஆளுமைக்குரியதாக இருக்கவில்லை. அந்த உரை பிறை அறிவிப்பை விட மக்கள் மனதில் ரணத்தையும், அவர் மீதுள்ள மரியாதையில் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது கிளைகள் மீது கூட நம்பிக்கை வைக்கவில்லை என்பதையும் கிளைகள் பற்றிய அறிவு தேசிய தலைமைக்கு போதியளவு இல்லை என்பதையும் அவ்வுரை தெளிவாக உணர்த்தியிருந்தது.
01. கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா தலைவர் பெயரில் வேரொருவர் ஒப்பமிட்டுள்ளதாக வானொலி உரையில் தவறான தகவலையும் வெளியிட்டதானது ஒட்டுமொத்த கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவைக் கேவலப்படுத்தும் குற்றச் சாட்டாகும்.
02. சுனாமியின் போது உதவி செய்ததை சொல்லிக்காட்டினார். இதற்கும் பிறை அறிவிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதனை இந்த இடத்தில் குறிப்பிட்டது சிறுபிள்ளைத்தனமான வாதமாகப்பட்டது.
03. கிண்ணியா பிறை மறுக்கப்பட்டதற்கான காரணத்தைக் கூறும் போது அன்றைய தினம் பிறை தென்பட வாய்ப்பிருக்கவில்லை என முஸ்லிம் வானியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். எனவே, பிறை தென்பட வாய்ப்பில்லை என்பதையே பிரதான வாதமாக முன்வைத்தார்.
நாம் உம்மி சமூகமாவோம். எழுதவோ, கணிப்பிடவோ மாட்டோம். மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்களாகும் என்று வரும் ஹதீஸ்களின் அடிப்படையில் 29 ஆம் நாளில் பிறை தென்பட வாய்புள்ளதாக ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன. 29 ஆம் நாளில் உள்நாட்டில் பிறைக் கருவிகள் இல்லாமல் தென்பட்டதாக நம்பகமான முஸ்லிம் சொன்னால் ஏற்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இருப்பினும் பிறை கண்ணுக்குத் தெரியாது என்றால் பிறையைக் கண்டால் அறிவியுங்கள் என ஏன் மக்களுக்கு அறிவித்தீர்கள்? எதற்காகக் கூட்டம் கூட்டினீர்கள்? பிறை கண்டதாகக் கூறும் மக்களைப் பொய்யர்களாக்கத்தான் கூட்டம் கூட்டினீர்களா? என்ற நியாயமான கேள்விக்கு நீதமான பதிலளிப்பது ஜம்இய்யதுல் உலமாவின் கடமையாகும்.
இதே காரணத்தைக் கூறித்தான் பெரிய பள்ளி நிர்வாகம் ஜம்இய்யதுல் உலமாவின் பெருநாள் அறிவிப்பைச் சென்ற முறை மறுத்தது. இது குறித்து ஜம்இய்யதுல் உலமாவில் பேசப்பட்ட போது இதேகேள்வியை நான் எழுப்பினேன். பிறை காண முடியாது என்றால் எதற்காக பிறை கண்டால் அறிவியுங்கள் என மக்களிடம் கூற வேண்டும் என நான் கேட்ட போது “புர்ஹானுத்தீன் மௌலவி” அவர்கள் இது சிந்திக்க வேண்டிய கேள்விதான்! இதே கேள்வியை நானும் அன்றிலிருந்தே கேட்டு வருகின்றேன் என்று கூறினார்.
அடுத்து ஜம்இய்யதுல் உலமா குறிப்பிடும் ஆய்வாளர்கள் யார்? அவர்களது ஆய்வு நிலையங்கள் எங்கே உள்ளன? அவர்கள் சுயமாக ஆய்வு செய்கின்றார்களா? அல்லது செய்யப்பட்ட ஆய்வுகளை வைத்து முடிவு சொல்கின்றார்களா? என்ற கேள்விகளுக்குத் தெளிவு தேவை.
04. நோன்பை விட்டவர்கள் நோன்பைக் கழாச் செய்ய வேண்டும் எனவும் தவ்பா செய்ய வேண்டும் எனவும் தலைவர் உரையில் குறிப்பிட்டார். இது சரியான பத்வா என்றால் கண்டவர்கள் நோன்பை விடலாம் எனக் கூறிய ஜம்இய்யதுல் உலமாதான் முதலில் தவ்பா செய்ய வேண்டும் எனக் கூறுவது குற்றமாகாது என நினைக்கின்றேன். பிறை கண்ட தகவலை நம்பியவர்கள் நோன்பை விட்டனர். அவர்கள் பெருநாளில் நோன்பு நோற்றதற்காக தவ்பா செய்யுங்கள் என நோன்பு நோற்றவர்கள் மாற்றிக் கூறினால் எப்படி இருக்கும் என்று சிந்திப்பது நல்லதாகும்.
இதுவரையும் “நுஜூம்” கணக்குப்படி நோன்பையும் பெருநாளையும் தீர்மானித்தவர்களை தவ்பா செய்யச் சொன்னதில்லை. ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்தை ஏற்காமல் சென்ற முறை நோன்பு நோற்றவர்களுக்கும் தவ்பா செய்யச் சொல்லவில்லை. சென்ற முறை பெரிய பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாத நாளில் பெருநாள் கொண்டாடிய உங்களை பெரிய பள்ளி உலமாக்கள் தவ்பா செய்யச் சொல்லியிருந்தால் உங்கள் நிலை என்னவாக இருக்கும் என்று சிந்திப்பது நல்லதாகும்.
05. ஹதீஸ் தவறாகக் கையாளப்பட்டதையும் அவரின் உரையில் காணக்கூடியதாக இருந்தது. ஒருவர் ஆய்வு செய்து சரியான முடிவைச் சொன்னால் இரண்டு கூலி, தவறான முடிவைச் சொன்னால் ஒரு கூலி என்ற ஹதீஸைக் கூறி இதுதானே குர்ஆன்! இதுதானே சுன்னா!? எனக் கூறி கேள்வி எழுப்பப்பட்டது.
ஹதீஸில் சந்தேகம் இல்லை. அது தரும் கருத்திலும் சந்தேகமில்லை. இந்த வகையில் சிந்திப்பதாக இருந்தால் ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை அவர்களது பார்வையில் தவறான முடிவை எடுத்தவர்களுக்கும் ஒரு கூலி உண்டு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஏன் தவ்பா செய்யச் சொன்னார்கள்?
ஒரு “ஹாகிம்” தவறான தீர்ப்பைச் சொன்னால் அவருக்கு ஒரு கூலி உண்டு. அந்தத் தீர்வு தவறானது என்பதை அறிந்தவர்களும் அந்தத் தவறான தீர்வைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறவில்லையே!
இவ்வாறு ஷெய்க் அவர்களின் உரையில் பல தவறுகள் காணப்படுகின்றன. அவர் அந்த உரையை நிகழ்த்தாமல் விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அல்லது 7 ஆம் திகதி இரவு இது குறித்து விபரித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு ஜமாஅத்துக்களின் தலைமைகளுடன் ஜம்இய்யதுல் உலமா தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தால் சுமூகமான தீர்வை எட்டியிருக்கலாம். எனவே, ஜம்இய்யதுல் உலமா தனது நிலைப்பாடு குறித்து மீள் பரிசீலனை செய்து விட்ட தவறுக்கான பரிகாரங்களைக் காண வேண்டும். தலைமை மாற்றம், தனியான ஜம்இய்யதுல் உலமா என்ற சிந்தனைகளை நீக்கி இருக்கும் ஜம்இய்யதுல் உலமாவை அனைவரும் சேர்ந்து பலப்படுத்துவதே சிறந்ததாகும்.
கிழக்கு பிறைக் குழு, கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமா போன்ற எண்ணோட்டங்கள் வளரவிடாமல் சுமூக முடிவைக் காண்பதற்காக ஜம்இய்யதுல் உலமா களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.
அத்துடன் பிறை விவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளி மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர். எனவே, பிறை முடிவு விவகாரத்தில் ஏனைய ஜமாஅத்துக்களின் தலைவர்களும் இணைக்கப்பட்டு பெரிய பள்ளி அல்லாத வேறொரு இடத்தில் பிறைக்குழு கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் பிறைப் பிரச்சினை குறைவதற்கான வாய்ப்பில்லை என்பதே யாதார்த்தமானதாகும்.