பயமும் பட்டினியும் இல்லாத வாழ்வு என்பது அல்லாஹ் வழங்கும் அருள்களில் முக்கியமானதாகும். நாட்டை ஆள்பவர்களின் அடிப்படையான கடமையும் இதுதான். மக்களுக்கு அச்சமற்ற ஒரு வாழ்வை வழங்குவதும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பட்டினியில்லாத சூழ்நிலையை உருவாக்குவதும்தான் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமையாகும்.
பலமான மக்களிடமிருந்து பலவீனர்கள் பாதுகாக்கப்படுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதும் ஆட்சியாளர்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக மிளிர வேண்டும். அபூபக்கர்(வ) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போதும் இதைத்தான் கூறினார்கள். ‘உங்களில் பலவீனமானவன் அவனது உரிமையை அவனுக்குப் பெற்றுக் கொடுக்கும் வரை அவன்தான் என்னிடம் பலமானவன்’ என்று கூறினார்கள்.
ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட, அநீதிக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்குப் பக்க பலமாக இருந்து அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த நீதி சட்டரீதியாகக் கிடைக்காத போது, அவனவன் சட்டத்தைக் கையில் எடுக்க முற்படும் போது நாட்டின் அமைதியும், சுபீட்சமும் சீர்குலைகின்றது. அச்சமும் பீதியும் மக்களை அப்பிக் கொள்கின்றது. நாட்டின் சட்ட ஒழுங்கு சீர் குலைகின்றது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலும் அயோக்கியர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள முற்படுகின்றனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு… என்பன தொடர்கதையாகின்றன. இந்நிலையில் நாடு நலமோ, வளமோ பெறாது!
இந்த நாட்டில் (இலங்கையில்) தலைவிரித்தாடிய இன வெறியும் மொழி வெறியும் சேர்ந்து பயங்கரவாதத்தை ஈன்றெடுத்தன. அந்தப் பயங்கரவாதத்தால் இந்த நாடு இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. இந்த நாட்டின் மனித வளம், பெருளாதாரம் என அனைத்தும் சிதைக்கப்பட்டன. ஒரு அச்சம் சூழ்ந்த தசாப்தங்களை மக்கள் சந்தித்தனர். ஈற்றில் பயங்கரவாதம் பல்லாயிரம் இழப்புக்களுக்கு மத்தியில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அச்சமற்ற சூழ்நிலை உருவானது. அடுத்து,
நாட்டின் பொருளாதாரம் வளப்படுத்தப்படுவதே முக்கிய இலக்காக இருக்கும் நிலையில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான தவறான புரிந்துணர்வுகள் வளர்க்கப்படுவது நாட்டின் நலனுக்கோ வளத்துக்கோ எந்த வகையிலும் உதவப் போவதில்லை. எனவே, நாடு வளம்பெற வேண்டுமெனின் இனங்களுக்கிடையிலான நல்லுறவுகள் வளர்க்கப்பட வேண்டும்.
நாட்டின் மிகப் பெரிய வளம் மனித வளமேயாகும். இந்த மனித வளம் வீண் போகக் கூடாது! ஆதலால், இனங்களுக்கும் மதங்களுக்குமிடையிலான கசப்புணர்வுகள் நீக்கப்பட்டு நல்லுறவு கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவது அரசியல், சமூக, சமயத் தமைகளின் அடிப்படைக் கடமையாகும்.
அத்துடன் தனி மனித, சமூக வளங்களை சீரழிக்கக் கூடிய மது, போதை, சூது, விபச்சாரம் போன்ற பாவங்கள் தடுக்கப்பட்டு, ஒழுக்கமுள்ள தனி மனித ஆளுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் மூலம் ஆளுமை மிக்க சமூகங்களையும் சமூகத்தைக் கட்டியெழுப்பலாம். மது, சூது போன்றவற்றால் பொருளாதார வளம் கிடைப்பது போல் தோன்றினாலும் அவற்றால் ஏற்படும் குற்றச் செயல்கள், ஒழுக்க வீழ்ச்சிகள், விபத்துக்கள், தனிநபர் சண்டைகள், கல்வியிப் பின்னடைவுகள்…. போன்றவற்றை ஆராய்ந்தால் பெருளாதார நஷ்டமும் மனித வள வீழ்ச்சியும் உருவாகும் வாயில்களாக அவற்றைக் காணலாம்.
எனவே, நாட்டுக்குத் தேவை அமைதியும் சுபீட்சமுமேயாகும். சமூகங்களுக்கிடையில் நல்லுறவும் நட்புறவும் வளர்க்கப்பட வேண்டும். யாரும் யாரைப்பற்றியும் அச்சப்பட்டு வாழும் நிலை தடுக்கப்பட வேண்டும். நீதியும் நியாயமும் நிறைந்த சமூக நிலை உருவாக வேண்டும்.
தனி மனித வாழ்வில் ஒழுக்கம், ஞானம், நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதன் மூலம் தனி மனித ஆழுமை விருத்தி செய்யப்பட வேண்டும். மக்கள்தான் நாடு, மக்களிடம் மாற்றம் வந்தால் நாடே மாறியதாக இருக்கும். இத்தகைய ஒரு நாடாக எமது தாய்நாடு மிளிர்வதுதான் எமக்கு சர்வதேச மட்டத்தில் நற்பெயரை உருவாக்கும். இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் குழப்பங்களை ஏற்படுத்துவோர் நாட்டுக்குத் துரோகம் செய்பவர்களாகக் கருதப்பட வேண்டும். நாட்டுப்பற்பற்றுள்ள யாரும் நாட்டு மக்களுக்குத் தீங்கிழைக்கும் நிலையை ஏற்படுத்த முயலமாட்டார்கள்.
எனவே, இலங்கை மக்களாகிய நாம் இன, மத, நல்லுறவைப் பேணுபவர்களாகவும் அதற்காகப் பாடுபடுபவர்களாக இருப்பதன் மூலம் நமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முயல்வோமாக!