அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு கிரிமினலா?
அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை நபி(ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது.
இவரின் தலைமையில்தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது! இவரது வரலாறு, இவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, இஸ்லாத்திற்கு முற்பட்ட இவரது வாழ்வு, இவரது மரணம் அனைத்தும் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும்.
தமிழ் உலகில் தவ்ஹீதுக்கு ஏகபோக உரிமை கோரும் சிலரால் இவர், “கிரிமினல்” என விமர்சிக்கப்பட்டு வருகின்றார். இவரைக் கிரிமினல் என விமர்சித்தவர், “எங்கள் ஊரில் புத்திசாலியையும் கிரிமினல்” என்று கூறுவார்கள் என சமாளித்தார். “இவர் செய்த வேலையை இன்றைக்கு வேறு ஒருவர் செய்தால் கிரிமினல் என்றுதான் சொல்வோம்; அதைத்தான் சொன்னேன்; யாருக்காகவும் எனது வார்த்தையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என அடம்பிடித்தார்.
அவரின் அழைப்பாளர்களோ குர்ஆன், ஹதீஸின் வசனத்தைப் பாதுகாக்க வாதாடுவது போல் “கிரிமினல்” என்ற இந்த வார்த்தையைப் பாதுகாக்கப் பாடுபட்டு வருகின்றனர். அண்மையில் இவர்களின் அமைப்பின் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஒருவர் அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் பற்றி, “கிரிமினலைக் கிரிமினல் என்றுதானே சொல்ல வேண்டும்” என்று கூறும் காணொளியைக் கண்ட போது இது குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
பின்னணி என்ன?
அலீ(ரலி) அவர்களது ஆட்சியின் போது இடம்பெற்ற ஸிப்பீன் போரின் போது அலி(ரலி), முஆவியா(ரலி) ஆகிய இரு சாராருக்கு மிடையில் சமாதானம் ஏற்படுத்துவதற்காக இரு தரப்பையும் சேர்ந்த இருவரை நியமித்து அவர்களின் தீர்ப்புப் பிரகாரம் இரு சாராரும் நடப்பதாக முடிவு செய்யப்பட்டது.
அலி(ரலி) அவர்கள் சார்பில் அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்களும் முஆவியா(ரலி) அவர்கள் தரப்பில் அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து அலி(ரலி), முஆவியா(ரலி) இருவரையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய ஒருவரைத் தெரிவு செய்தல் என்ற இணக்கப்பாட்டுக்கு வந்தார்கள். கூட்டத்திற்கு வந்த போது அபூமுஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் எனது கையில் இருந்து எனது மோதிரத்தைக் கழற்றுவது போல் ஆட்சியில் இருந்து அலி(ரலி), முஆவியா(ரலி) இருவரையும் நான் நீக்கிவிட்டேன் என்றார்கள்.
அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் எழுந்து எனது தோழர் சொன்னது போல் நானும் அலியை ஆட்சியை விட்டும் நீக்கிவிட்டேன். முஆவியாவை ஆட்சியில் அமர்த்திவிட்டேன் என்று கூறினார்களாம்.
இந்த சம்பவத்தை மையமாக வைத்தே அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் “கிரிமினல்” என விமர்சிக்கப்பட்டு வருகின்றார்கள். நபித்தோழர்கள் விடயத்தில் நாக்கு கொஞ்சம் நீண்டு போயுள்ள இந்த வழிகெட்ட போக்கு பற்றி தவ்ஹீத் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே இது குறித்த சில அவதானங்களை முன்வைக்கின்றோம்.
அவதானம் – 01
இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கூட அந்தச் செயல் தவறானது என்று கூறலாமே தவிர செய்தவரைக் “கிரிமினல்” என்று கூறுவது சரியானதல்ல. இறந்து போன முன்னோர் களுக்குத் தீர்ப்புச் சொல்ல இவர்கள் யார்? அவர் அந்தச் செயலைச் செய்திருந்து அதன் பின் தவ்பா செய்திருந்தால், அல்லாஹ் அவரை மன்னித்திருந்தால் அதன் பின் அவரைக் கிரிமினல் என்று கூறிய விஷக் கிருமிகளின் நிலை என்ன?
நபித்தோழர்கள் விடயத்தில் கண்ணியம் பேணாமல் இப்படித் தீர்ப்புக் கூறுவது “அஹ்லுல் பிதஃ” எனும் வழிகேடர்களின் வழிமுறையையே அன்றி நல்லோர்களின் வழிமுறை அல்ல.
அவதானம்- 02:
இட்டுக்கட்டப்பட்ட செய்தி:
இந்தத் தகவல் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இமாம் தபரி(ரஹ்) அவர்கள் இந்த செய்தியை தனது வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்கள். இமாம் தபரி அவர்கள் அறிவிப்பாளர் வரிசையுடன் வரலாற்றைப் பதிவு செய்யும் வழக்கமுள்ளவர். இருப்பினும் தனது முன்னுரையில்,
“நான் எனக்குக் கிடைத்த தகவல்களைத் தந்துள்ளேன். அது ஸஹீஹானதா என்பது குறித்து நான் உறுதி செய்யவில்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
பெரும்பாலும் தபரியில் இடம்பெறும் நபித்தேழர்களைக் குறை காணும் அறிவிப்புக்களை ஆய்வு செய்தால் அந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ராவீக்களில் ஒருவராக “லூத் இப்னு யாஹ்யா” என்பவர் “அபூமிஹ்;னப்” என்ற புனைப் பெயரில் இடம்பெற்றிருப்பார். இவரைப் போலவே அல்வாகிதி, ஸைப் இப்னு உமர் அத்தமீமீ, முஹம்மத் இப்னுஸ் ஸாயிப் அல்கல்பி போன்றவர்களது அறிவிப்புக்கள் நபித்தோழர் களைக் குறை காணும் அமைப்பில் இடம் பெற்றிருக்கும். அம்ர் இப்னுல் ஆஸ்(ரலி) அவர்களைக் கிரிமினல் என விமர்சிப்பதற்குக் காரணமாக அமைந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தில் “அபூமிஹ்னப்” எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் குறித்து,
“இமாம் முயீன், இவரிடம் நம்பகத்தன்மை இல்லை என்றும்,
இமாம் அபூஹாதம் அவர்கள், ஹதீஸ் வரிசையில் விடப்பட்டவர்,
இமாம் தாரகுத்னீ அவர்கள், ழயீப் – பலவீனமானவர் என்றும்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்கள், பலமான அறிவிப்பாளர் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என்றும்,
இமாம் தஹபி செய்தி சொல்லக் கூடியவர். இவரது செய்திகள் நம்ப முடியாதவை என்றும் குறிப்பிடுகின்றார்கள். (பார்க்க: அல்ஜரஹ் வத் தஃதீல் 7/182, மீஸானுல் இஃதிதால் 3/419, லிஸானுல் மீஸான் 4/492)
அபூமிஹ்னப், கல்பி ஆகிய இருவரை யும் இமாம் இப்னுல் கையிம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் பொய்யர்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். மற்றும் இவர் ஷPயாக் கொள்கைக்காரர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
ஷPஆ சிந்தனையுடைய இவரது அறிவிப்புக்கள் எவ்வளவு மோசமானவை என்பதை விளக்குவதற்காக இவரால் இட்டுக்கட்டப்பட்ட இரண்டு தகவல்களைத் தருகின்றோம்.
அபூ மிஹ்னப் தனது அறிவிப்பாளர் வரிசையில் குறிப்பிட்டுள்ளதாக இப்னுல் கல்பிய்யி அவருடைய தந்தை மூலமாகக் கூறியதாக பலாதூரி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
“உஸ்மான் (ரலி) அவர்களை அப்துர் ரஹ்மான் (ரலி) “பைஅத்” (சத்தியப்பிரமாணம்) செய் வித்த போது அலி (ரலி) நின்று கொண்டிருந்தார். அவ்வேளையில் அப்துர் ரஹ்மான் அலி(ரலி)யிடம் நீயும் “பைஅத்” (சத்தியப்பிரமாணம்) செய்துவிடு. இல்லாவிடில் உன் கழுத்தை வெட்டிவிடுவேன் என்றார். அப்போது அப்துர்ரஹ்மானைத் தவிர வேறு எவரிடமும் வாள் இருக்கவில்லை. அலி(ரலி) கோபத்துடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். ஆலோசனை சபையிலுள்ளவர்கள் அலி(ரலி) அவர்களை சந்தித்து நீங்கள் “பைஅத்” (சத்தியப்பிரமானம்) செய்துவிடுங்கள். இல்லா விட்டால் உங்களை எதிர்த்துப் போரிடுவோம் என்றார்கள். இதனால் அலி(ரலி) அவர்கள் சென்று உஸ்மான்(ரலி) அவர்களுக்கு “பைஅத்” செய்தார்;.”
(ஷரஹு நஹ்ஜுல் பலாகா: 3529/1,
இப்னு அபில் ஹதீத்)
அபூ மிஹ்னப் தனது அறிவிப்பாளர் வரிசையில் கூறியுள்ளதாக அப்பாஸ் இப்னு ஹிஷாம் “அல்கல்பிய்யி”அறிவிக்கிறார். மதீனாவில் உள்ள பைதுல் மாலில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதில் ஆபரணங்களும் மரகதங்களும் இருந்தன. உஸ்மான்(ரலி) அந்த ஆபரணங்களில் இருந்து எடுத்து தன் குடும்பத்தில் சிலருக்கு அணிவித்தார்கள். இந்தச் செய்தி மக்களிடம் அவரைப் பற்றிய தவறான கருத்தை ஏற்படுத்தியது. இது பற்றி மக்கள் உஸ்மான்(ரலி)அவர்களிடம் கடுமையாகக் கதைத்தார்கள். அதனால் உஸ்மான்(ரலி) அவர்களுக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டதும் மக்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள். அதிகமான கூட்டத்தினர் இதை வெறுத்தாலும் எமது தேவைகளை “பைஉ” யுத்தத்தில் கிடைத்த சொத்திலிருந்து எடுப்போம் என்றதும், அலி(ரலி) அப்படி நீங்கள் செய்தால் நாங்கள் தடுப்போம். உங்களுக்கும் இச்சொத்துக்குமிடையில் திரையிடப்படும் என்றார்கள். அப்போது அம்மார்(ரலி), அல்லாஹ்வை சாட்சியாக வைத்துக் கூறுகின்றேன். இதை முதலில் நான் தடுப்பேன் என்றார். அப்போது உஸ்மான்(ரலி) யாஸீருடைய மகனே! நீரும் அலியாகிவிட்டீரா? என்று கேட்டுவிட்டு, அவரைப் பிடியுங்கள் என்று கூறி பிடித்து அவருக்கு அடித்தார்கள். அவர் மயக்கமுற்றுக் கிடந்தார். அவரை உம்மு ஸலமா(ரழி) அவர்களின் இல்லத்திற்குச் சுமந்து செல்லப்பட்டது. ழுஹர், அஸர், மஃரிப் ஆகிய தொழுகைகளை அவர் தொழவில்லை. மயக்கம் தெளிந்த பின் வுழூச் செய்து தொழுதார்கள். பின்னர், அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்காக நாங்கள் நோவிக்கப்பட்டதில் இது முதல் முறை அல்ல என்று கூறினார்கள்.
மக்சூமி கிளையார்களில் முக்கிய நபராக அம்மார் இருந்ததால் மக்சூமி கிளையைச் சார்ந்த ஹிஷாமிப்னு வலீதிப்னு முகீறா, உஸ்மானே! அலியை நீங்கள் பாதுகாத்தீர்கள். எங்கள் மீது அடர்ந்தேறி எங்கள் சகோதரனை அடித்து அழித்துவிடப் பார்த்தீர்கள். அல்லாஹ் மீது சத்தியமாக அவர் மரணித்திருந்தால் உமைய்யாக் கிளையாளர்களில் முக்கியமான ஒருவரை நான் கொன்றிருப்பேன் என்றார்.
உடனே உஸ்மான்(ரலி) கஸ்ரியின் மகனே! என்றார்கள். அதற்கவர், இரண்டு கஸ்ரியின் மகன் என்றார். ஏனெனில், ஷpஹாமின் தாயும் பாட்டியும் கஸ்ரிக் கிளையைச் சேர்ந்தவர்கள். உஸ்மான்(ரலி) அவரை ஏசினார். வெளியே அனுப்பும்படி உத்தரவிட்டார். அதன் பின் அவர்களை உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அம்மாருக்கு நடந்த இந்த நிகழ்வைப் பார்த்து உம்மு ஸலமா(ரலி) மிகவும் கோபமடைந்தார்கள். அம்மாருக்கு நடந்த இந்த நிகழ்வு ஆயிஷா(ரழி) அவர்களுக்கும் எத்தி வைக்கப்பட்ட போது அவர்களும் மிகவும் கோபமடைந்தார். பின்னர் ரஸூலுல்லாஹ்வின் முடி, செருப்பு, ஆடை இவைகளை எடுத்து வந்து இவைகள் இன்னும் அழிந்து விடவில்லை; அதற்கு முன் நீங்கள் உங்கள் நபியுடைய சுன்னாவை விட்டுவிட்டீர்களா? என்று கடிந்து கொண்டார்கள்.
(ஷரஹு நஹ்ஜுல் பலாகா: 693/1,
இப்னு அபில் ஹதீத்)
இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களில் குழப்பத்தை உண்டு பண்ணும் விதத்தில் இவர் இட்டுக்கட்டிய இது போன்ற செய்திகள் ஏராளம். இது குறித்து கலாநிதி யஹ்யா அல் யஹ்யா அவர்கள்,
“தபரியின் வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ள அபூமிஹ்னபின் அறிவிப்புக்கள்” என்ற பெயரில் தனி ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்தத் தகவல்களின் படி அறிவிப்பாளர் வரிசையில் இட்டுக்கட்டக்கூடியவர் இடம் பெற்றிருப்பதால் அம்ரிப்னு ஆஸ்(ரலி) சம்பந்தப்பட்ட இந்த அறிவிப்பு இட்டுக்கட்டப் பட்டதாகும்.
தாம் சொன்ன “கிரிமினல்” என்ற வார்த்தையை உறுதிப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்த இவர்கள், இந்த செய்தி உண்மையானதுதனா? என்பதை உறுதிப்படுத்து வதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நபித்தோழரைக் கிரிமினலாக மக்கள் மனதில் பதிந்த குற்றத்தில் இருந்து தப்பியிருக்க முடியும்.
இந்தக் கதையின் அறிவிப்பாளர் வரிசையில் மட்டுமன்றி அது கூறும் தகவல்களிலும் பல குறைபாடுகளும் குளறுபடிகளும் காணப்படுகின்றன.
அவதானம் – 03:
ஆட்சி என்பது அடிப்படை அல்ல:
அலி(ரலி), முஆவியா(ரலி) ஆகிய இரு நபித்தோழர்களுக்குமிடையில் யார் கலீபா என்பது பிரச்சினையே அல்ல. இது பற்றி விரிவாகப் பேசப்பட வேண்டிய அவசியம் இருந்தாலும் சுருக்கமான ஒரு தெளிவைத் தர வேண்டியுள்ளது.
இது குறித்து இமாமுல் ஹரமைன் அல் ஜுவைனி அவர்கள் தமது “லம்உல் அதில்லா” வில் குறிப்பிடும் போது,
முஆவியா(ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களுடன் போரிட்டாலும் அலி(ரலி) அவர்களது இமாமத்தை மறுக்கவும் இல்லை. தனக்கு அந்தத் தலைமைத்துவம் இருப்பதாக வாதிடவும் இல்லை. உஸ்மான்(ரலி) அவர்களின் கொலைக்கு நீதி கேட்டுத்தான் அவர் போரிட்டார். தான் இருப்பது சரியென அவர் நம்பினார். ஆனால், இந்த முடிவு விடயத்தில் அவர் தவறில் இருந்தார் என்று குறிப்பிடுகின்றார்.
இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறும் போது,
முஆவியா(ரலி) அவர்கள் கிலாபத்தைக் கோரவில்லை. அலி(ரலி) அவர்கள் கொல்லப்படும் வரை அவருக்கு கிலாபத்துக் குரிய பைஅத் செய்யப்படவும் இல்லை. தான் ஒரு கலீபா என்றோ, அதற்குத் தகுதியானவர் என்றோ அவர் போராடவும் இல்லை. தன்னிடம் இதுபற்றிக் கேட்பவர்களிடம் இதை ஏற்றுக் கொள்பவராகவே அவர் இருந்தார்.
(பதாவா: 35/72)
அபூதர்தா, அபூ உமாமா(ரலி) ஆகியோர் முஆவியா(ரலி) அவர்களிடம் வந்து அலி(ரலி) அவர்களுடன் போராடுகின்றீர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக உம்மையும் உமது தந்தையையும் விட அவர் இஸ்லாத்தை ஏற்றதில் முந்தியவர்; நபியவர்களுக்கு உம்மை விட நெருக்கமானவர்; உம்மைவிட ஆட்சிக்கு அவரே உரிமையானவர் என்று கூறினர். அதற்கு முஆவியா(ரலி) அவர்கள்,
“உஸ்மானின் இரத்தத்திற்காக அவருடன் போராடுகின்றேன். அவர் உஸ்மானைக் கொன்றவர்களை அரவணைக் கின்றார். நீங்கள் இருவரும் அலீ(ரலி) அவர்களிடம் சென்று உஸ்மானைக் கொன்றவர்களை எம்மிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். ஷாம் வாசிகளில் முதல் நபராக நான் அவருக்கு பைஅத் செய்கிறேன் என்று கூறுங்கள் என்றார்.”
(அல் பிதாயா வன்னிஹாயா)
இந்தச் செய்திகள் ஆட்சிக்குரியவர் யார் என்பதல்ல பிரச்சினை. ஆனால், அம்ர் இப்னுல் ஆஸ்(ரலி) சம்பந்தப்பட்ட செய்தி யார் ஆட்சியாளார் என்பதுதான் அவர்களுக் கிடையில் இருந்த பிரச்சினை என்பது போல் சித்தரிக்கப்படுகின்றது. இது இக்கதையில் உள்ள வரலாற்றுத் திரிபாகும்.
அவதானம் – 04:
தனி நபர் நீக்க முடியுமா?
ஒரு ஆட்சியாளரைத் தனி நபரோ குழுக்களோ நீக்க முடியாது. இதனால்தான் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி நடந்த போது அவர்கள் மரணிக்கத் தயாரானார்கள். ஆட்சியை விட்டும் நீங்கத் தயாராகவில்லை.
நான் அலியைப் பதவியிலிருந்து நீக்குகின்றேன் என அறிவும் தெளிவும் உள்ள அபூ மூஸா அல் அஷ்அரி() அவர்கள் கூறியிக்கமாட்டார்கள். கலீபாவை இப்படிப் பதவி நீக்க முடியாது.
அவதானம் – 05:
இல்லாதவரை நீக்க முடியுமா?
அலியையும் முஆவியாவையும் அபூ மூஸா அல் அஷ்அரி நீக்குவதென்பது சாத்தியம ற்றதாகும். முஆவியா(ரலி) அவர்கள் கலீபாவாக இல்லாத நிலையில், இல்லாத கலீபாவை நீக்குகிறேன் என எப்படி அபூ மூஸா அல் அஷ்அரி அவர்கள் கூற முடியும்?
அவதானம் – 06:
தனி நபர் எப்படி நியமிப்பார்?
நான் அலியை நீக்கி முஆவியாவை பதவியில் அமர்த்துகின்றேன் என எப்படி அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் கூற முடியும்? பதவியல் நியமிப்பது என்பது தனிநபர் கையில் உள்ளது அல்லவே!
நடந்த உடன்பாடு என்ன?
இரு நபித்தோழர்களுக்குமிடையில் நடந்த உடன்பாடு என்னவென்றால், இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும். அலி(ரலி) அவர்கள் கூபாவில் கலீபாவாக இருப்பார்கள். முஆவியா(ரலி) அவர்கள் ஏற்கனவே சிரியாவின் கவர்னராக இருந்து அலி(ரலி) அவர்களால் நீக்கப்பட்டார்கள். அவர் தொடர்ந்தும் சிரியாவின் அமீராக இருப்பார்கள்.
இந்த உடன்பாட்டின் பின்னர் அலி(ரலி), முஆவியா(ரலி) தரப்பில் போர் நடை பெறவில்லை. அதே வேளை, முஆவியா(ரலி) அவர்கள் தன்னைக் கலீபாவாக அறிவிக்கவும் இல்லை. அலி(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் முஆவியா(ரலி) அவர்கள் கலீபாவாக பைஅத் செய்யப்பட்டார்கள்.
ஆனால், இந்த உடன்பாடு எட்டப்பட்டால் உஸ்மானைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும். முஆவியா, அலி அணிகள் இணைந்துவிட்டால் குழப்பக்காரக் கூட்டம் நசுக்கப்பட்டுவிடும். எனவே, அலி(ரலி) அவர்கள் தரப்பில் இருந்த சிலர் அல்லாஹ்விடம்தான் தீர்ப்புக் கேட்க வேண்டும். மனிதர்களிடம் தீர்ப்புக் கேட்டு விட்டால் இது குப்ராகும் எனக் குழப்பம் விளைவித்தனர். அதுமட்டுமல்லாது, அக்குழு கொடூரமான கொலைகளையும் செய்தது. எனவே, அலி(ரலி) அவர்கள் படை திரட்டி அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். இவர்கள் வரலாற்றில் “கவாரிஜ்கள்” என அடையாளம் காணப்படுகின்றனர்.
அலி(ரலி) அவர்கள் இவர்களை ஒடுக்கும் பணியில் இருந்ததால் உஸ்மான்(ரலி) அவர்களின் கொலையாளிகளை இணங்கண்டு அவர்களுக்கான தண்டனையை வழங்க முடியாது போனது!
அபூ மிஹ்னப் எனும் ஷிஆ இட்டுக் கட்டிய செய்தியை வஹீயாகக் கருதி அம்ர் இப்னுல் ஆஸ்(ரலி) அவர்களைக் “கிரிமினல்” என இன்றுவரை குற்றம் சாட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் “கவாரிஜ்கள்” இந்த மோசடியைத்தான் பெரிய பிரச்சினையாக ஆக்கியிருப்பார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை.
எனவே, அம்ர் இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கிரிமினல் எனக் குற்றம் சாட்டுவோர் கூறும் இந்த சம்பவம் இஸ்லாத்தின் எதிரிகளால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவலாகும்; வரலாற்றுத் திரிபாகும். இதுவரை நபித்தோழரை நாக்கூசாமல் கிரிமினல் எனக் கூறியவர்களும் தலைவர் மொழிந்த வார்த்தையை வேதமாக நம்பி நியாயப் படுத்துவதற்காக வாதிட்டு வந்த தொண்டர்களும் மனம் திருந்தி மக்களுக்கு அறிவித்துத் தமது தவறில் இருந்து மீண்டு விடுவார்களா?