தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபத்வா
கேள்வி:
நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களது கூற்று சரியானதுதானா?
பதில்:
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!
மேலே குறிப்பிட்ட கூற்று (தப்ஸீர்) அல்மனாரின் ஆசிரியர் ஷைக் ரஸீத் ரிழா அவர்களுடைய கூற்றாகும். பின்னர் ஷைய்க் ஹஸனுல்பன்னா(ரஹ்) அவர்கள் தனது ரஸாயில்களில் இதனைக் குறிப்பிட்டார். அதிகமான மக்கள் இது ஹஸனுல் பன்னா(ரஹ்) அவர்களது கருத்து எனக் கருதும் அளவுக்கு அவர் பெயரில் இக்கூற்று பிரபல்யமடைந்துவிட்டது.
மேற்படி கூற்றின் முதற்பகுதி நமக்குள் உடன்பாடான விடயங்களில் ஒருவருக் கொருவர் உதவியாக இருப்போம் என்பதாகும். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடில்லாத ஏகோபித்த அடிப்படையில் உள்ள நல்ல விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.
இது குர்ஆனிலும் நபிமொழியிலும் கட்டாயமாக்கப்பட்ட “தஆவுன்” ஒருவருக் கொருவர் உதவி செய்தலாகும்.
“நன்மை செய்வதிலும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள். மேலும், பாவம் செய்வதிலும், வரம்பு மீறுவதிலும் ஒரு வருக்கொருவர் உதவியாக இருக்காதீர்கள். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாவான்.”
(5:2)
இந்த வசனம் இது போன்ற விடயங்களில் ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருப்பதைக் கட்டாயப் படுத்துகின்றது.
முஸ்லிம்கள் உடன்பட்ட விடயம் தவறாக இருந்தாலும் ஒருவர் மற்றவருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என இக்கூற்றைக் கூறுபவர் கருதிவிடக் கூடாது! ஏனெனில், “பா(த்)திலான” (பிழையான) விடயத்தில் ஒன்றுபடுதல் என்பது நடைமுறைச் சாத்திமானதும் அல்ல; ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்டதும் அல்ல.
ஏனெனில்,
“எனது உம்மத்து அசத்தியத்தில் ஒன்று சேராது என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு உமர்(வ),
ஆதாரம்: திர்மிதி)
இதனை அல்பானி(ரஹ்) ஸஹீஹ் என்று குறிப்பிடுகின்றார்.
அக்கூற்றின் அடுத்த பகுதி நமக்குள் முரண்பட்ட விடயத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம் என்பதாகும். இக்கூற்றுக்கு நல்ல அர்த்தமும் கற்பிக்க முடியும். தவறான அர்த்தமும் கற்பிக்க முடியும்.
ஏனெனில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் என்பது என்ன விடயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படும். எல்லா முரண்பாடுகளிலும் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் என்பது சாத்தியம் கிடையாது!
சாதாரண விடயத்திலான கருத்து வேறுபாடாக இருந்தால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளலாம். சாதாரண விடயங்களில் இல்லாமல் வழிகெட்ட பிரிவுகள், கடினப் போக்குள்ள சூபித்துவம் போன்ற பித்அத்தான கருத்து வேறுபாடாக இருந்தால், அதே போல தெளிவான குர்ஆன் ஸுன்னாவுக்கும், ஸஹீஹான இஜ்மாவுக்கும் முரணாக இருந்தால் இவர் அவ்விடயத்தில் விட்டுக் கொடுத்தல் என்பது கிடையாது. மாறாக, மறுப்புத் தெரிவிப்பதும் அந்த பித்அத் குறித்தும், முரண்பாடு குறித்தும் எச்சரிக்கை செய்வதும் கட்டாயமாகும்.
முரண்பாடுகள் விடயத்தில் (மொத்தமாக) விட்டுக் கொடுத்துச் செல்லுதல் என்றால் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்ற கட்டாயக் கடமை விடுபட்டுப் போய்விடும். சத்தியமும் அசத்தியமும், நல்லதும் கெட்டதும், ஸுன்னாவும் பித்ஆவும் இரண்டறக் கலந்து விடும். இது எத்தகைய தீங்காக அமையும் என்பது வெளிப்படை யானதாகும்.
விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய (இஜ்திஹாதுடைய மஸாயில்) விடயங்களில் கூட மாற்றுக் கருத்துடையவரைப் பாவியாக்காமல், பகைத்துக் கொள்ளாமல் உண்மையைத் தெளிவுபடுத்துவதற்காகவும், சத்தியத்தைக் கண்டறிவதற்காகவும் கருத்துப் பரிமாற்றம் செய்வது தடுக்கப்பட்டது அல்ல. இந்த நிலைப்பாட்டில்தான் இந்த உம்மத்தின் முன் சென்ற, பின் வந்த உலமாக்கள் இருந்தனர்.
அஷ்ஷைய்க் ஹஸனுல் பன்னா(ரஹ்), ரஷீத் ரிழா ஆகிய இருவரும் இஸ்லாம் இழிவுபடுத்தக்கூடிய கருத்து வேறுபாடுகளில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளச் சொன்னதாக யாரும் கருதிவிடக் கூடாது!
ஏனெனில், அஷ்ஷைய்க் ஹஸனுல் பன்னா(ரஹ்) அவர்கள் தமது இருபது உஸூல்களில் 08 ஆம் உஸூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“பிக்ஹுடைய உப பிரிவுகளில் ஏற்படும் கருத்து வேறுபாடு என்பது மார்க்கத்தில் பிரிவினைக்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது. கோப தாபத்திற்கோ, தர்க்கத்திற்கோ இட்டுச் செல்லக் கூடாது. ஒவ்வொரு ஆய்வாளருக்கும் அவருக்குரிய கூலி கிடைக்கும். கருத்து வேறுபாடான விடயங்களில் அல்லாஹ்வின் விடயத்தில் நேசித்தல், சத்தியத்தை அறிந்து கொள்ள ஒருவர் மற்றவருக்கு உதவி செய்தல் என்ற நிழலில் அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றம் என்பது தவிர்க்கப்பட வேண்டியதல்ல. இந்த கருத்துப் பறிமாற்றம் இழிவான தர்க்க வாதத்திற்கோ, பிடிவாதத்திற்கோ இட்டுச் செல்லக் கூடாது”
(எனவே, அடிப்படை விடயத்தில் அல்லாமல் பிக்ஹுடைய உப பிரிவுகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் விடயத்தில்தான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் nஷய்க் அவர்கள் தமது கூற்றின் மூலம் முன்வைத்துள்ளார்கள். இது விடயத்தில் இக்கூற்று சரியானதே!)
அல்லாஹு அஃலம்!
அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்)
http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=30268