இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் பொறுப்பு?

-உண்மை உதயம் மாதஇதழ்-
2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டில் சுமார் இரண்டரை வருடங்களாக முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான இன, மத வாதப் பிரச்சாரத்தை BBS, சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களது இனவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள் மூலம் பல பள்ளிவாயில்கள், முஸ்லிம்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு வந்தன. அனுராதபுர தர்கா உடைப்பு முதல் தர்கா நகர், பேருவலை, பாணந்துறை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் சொத்தழிப்பு வரை இந்த இனவாதக் கும்பலின் அடாவடித்தனம் நீண்டு கொண்டே செல்கின்றது. அனுராதபுர ஸியாரம் உடைக்கப்படும் போது சூழ இருந்த காக்கிச் சட்டையினர் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடராக இடம்பெற்று வரும் இன, மத ரீதியான சாடல்கள், தாக்குதல்களுக்காக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இதனால் அரசின் ஆசியுடன்தான் இந்த நாசகார நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
BBS, சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள் பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கும், சிங்கள மக்களின் உயர்ச்சிக்குமாக முயற்சிக்குமென்றால் அது ஆட்சேபிக்கத்தக்கல்ல. அதை யாருக்கும் குறை காணவும் முடியாது.
முஸ்லிம்களது பொருளாதாரத்தை அழித்து பௌத்தர்களின் பொருளாதாரத்தை வளர்க்கவும், முஸ்லிம் சமூகத்தை நசுக்கிவிட்டு சிங்கள சமூகத்தை எழுச்சியடையச் செய்யவும், இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தி பௌத்தத்தை வளர்க்க முற்படுவதும்தான் ஆட்சேபிக்கத்தக்கதாகும்.
தர்காநகர், பேருவலை, பாணந்துறை Nolimit மாவனல்லை போன்ற இடங்களில் கொள்ளையிட்டு அழிக்கப்பட்டது முஸ்லிம்களின் சொத்து என்றாலும் அது தேசத்தின் சொத்து என்பதையும் இவர்கள் கவனிக்கத் தவறுகின்றனர்.
அளுத்கம, தர்கா நகர் சொத்தழிப்புக்கு யார் பொறுப்பேற்பது? குற்றவாளிகள் யார்? உண்மையை மூடி மறைத்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளியாக்கும் முயற்சிகளைத்தான் அதிகாரிகள் செய்து வருகின்றனர். அணிந்திருந்த ஆடையைத் தவிர அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களைப் பரிவோடு பார்ப்பதை விட்டு விட்டு, பாதிக்கப்பட்டால் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே! ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் என்று ஏன் எமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றீர்கள்! என்று எரிச்சலுடன் பார்ப்பது போன்றுதான் தெரிகின்றது.
அளுத்கம, தர்காநகர் கலவரத்திற்கு முஸ்லிம்களே காரணம் என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கின்றனர்.
இதில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள்,

அனுமதியளித்தோர்:
அளுத்கம கூட்டம் நடந்தால் வன்முறை வெடிக்கும். எனவே, கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் எழுத்து மூலம் வேண்டியிருந்தும் கூட்டம் நடத்த அனுமதியளித்தவர்கள் முதல் குற்றவாளிகளாவர்.

BBS செயலாளர்:
அந்தக் கூட்டத்தில் சிங்கள இளைஞர்களை உசுப்பேத்தி வன்முறையைத் தூண்டும் அளவுக்குப் பேசிய BBS பொதுச் செயலாளரின் பேச்சே இத்தனை அழிவுகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த வகையில், அனைத்துக் குற்றச் செயல்களினதும் அடிப்படைக் காரண கர்த்தாவாக இவர் இருக்கின்றார்.

பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை:
BBS செயலாளர் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் போதே அந்தப் பேச்சை சட்டத்தை மதிக்கும் காவலர்கள் இடை மறித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களும் அவரது பேச்சைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். வன்முறைப் பேச்சைத் தடுக்காத காவல்துறையினரும் குற்றவாளிகளே!

காவல்துறை:
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் சென்ற மக்களை காவல்துறை ஒருங்கிணைத்து அமைதியாக நடந்து கொள்வதற்கான ஏற்பட்டைச் செய்திருக்க வேண்டும். கூட்டம் முடிந்த பின்னர் முஸ்லிம்கள் செறிவாக வாழும் உள்வீதிகள் வழியாக சிங்கள இளைஞர்களைக் கோஷத்துடன் செல்லவிட்ட காவல் துறைக்கும் இக்குற்றத்தில் பங்குள்ளது.

கல் வீச்சு:
சிங்கள இளைஞர்கள் கல் வீசிய போதே பள்ளிவாசலைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் தரப்பிலிருந்தும் கல் வீசப்பட்டுள்ளது. இதில் முதலில் முஸ்லிம்களே கல் வீசியதாகக் கூறப்படுகின்றது. அப்படி நடந்திருந்தால் அந்த இடத்தில் ஏற்பட்ட பதற்றத்துடன் பிரச்சினை முடிந்திருக்க வேண்டும். ஆனால், கூட்டம் நடாத்த முன்பே கலவரத்திற்கான முன்னேற்பாடுகளுக்குத் திட்டம் தீட்டப்பட்டுவிட்டன என்பதை கலவரத்தின் அகோரத்தையும் அழிவையும் பார்த்தால் புரியும்.

பாதுகாவல்துறை:
அளுத்கம, பேருவலை பிரதேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட அந்த நேரத்தில்தான் முஸ்லிம்களது கடைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. வீடுகள், பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன.

ஊரடங்கு நேரத்தில் இராணுவமும் காவல் துறையும்தான் வீதியில் இருக்கும். அந்த நேரத்தில் நடந்த அத்தனை சூறையாடல்களையும் காவல் துறைதான் செய்திருக்க வேண்டும் அல்லது காவல் துறையின் அனுமதியுடன் செய்திருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஊரடங்கு நேரத்தில் இந்த அழிவுகள் சாத்தியமே இல்லை.
எனவே, ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாத, அதே நேரம் கலகத்தை அடக்காமல் கலவரக்காரர்களுக்குத் துணை போன குற்றம் காவல்துறை மீது உள்ளது!
மேலதிகாரிகள்:
காவல்துறையினர் கலகக்காரர்களைக் கட்டுப்படுத்தாமல் ஊரடங்குச் சட்டத்தில் சிங்கள வன்முறையாளர்களுக்கு மட்டும் சலுகை கொடுத்தனர் என்றால் அவர்களுக்கு மேலிடத்திலிருந்து இந்த உத்தரவு வந்திருக்க வேண்டும். காவல்துறையின் கையைக் கட்டிப்போட்ட, சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடையாக இருந்த அந்த மேலதிகாரி அல்லது அதிகாரிகள் யார்?

இவர்கள் அத்தனை பேருமே அளுத்கம, பேருவளை குற்றத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள். இந்தக் குற்றவாளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், உரிய நஷ்ட ஈடும் வழங்கப்படாவிட்டால், முஸ்லிம்களது இருப்பைப் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால் அரசும் இந்தக் குற்றத்திற்குப் பங்குதாரியாகக் கருதப்படும் நிலை தோன்றும். BBS போன்ற இன, மத வாதம் என்பது இலங்கையின் எல்லா முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக அமையும் என்பதை நிதானமாக அரசு சிந்திக்க வேண்டும். இன, மத நல்லுறவை பெருமளவில் இவ்இனவாத அமைப்பு சீர்குலைத்து வருகின்றது. நாட்டின் அமைதி நிலைமாறி ஒரு பதற்ற நிலை உருவாகி வருகின்றது. சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகின்றது.
இந்த வன்முறைச் சூழலினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்; சுற்றுலாத்துறை மற்றும் அந்நிய முதலீடுகள் வீழ்ச்சியடையும். மேலும், வெளிநாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
காவல்துறை முஸ்லிம்கள் விடயத்தில் சட்டத்தை மதிக்காமல் நடந்ததால் இப்படித்தான் இவர்கள் போர் காலத்திலும் நடந்திருப்பார்கள் என்பது இன்னும் உறுதியாகிவிடும்.
இந்த இனவாத அமைப்பு இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டாலும் அடுத்து கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் செயற்படுவார்கள். கிறிஸ்த்தவர்களில் சிங்கள கிறிஸ்தவர்களும் உள்ளனர்; தமிழ் கிறிஸ்த்தவர்களும் உள்ளனர். இவர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராகச் செயற்படும் போது சிங்கள கிறிஸ்த்தவர்களையும் தாக்குவார்கள். அப்போது சிங்கள இனம் என்பதை விட பௌத்த மதம் என்பதே பெரிதாகத் தெரியும். அந்த சந்தப்பத்தில் சிங்கள மக்களே மதவாதத்தின் அடிப்படையில் சிங்கள மக்களினாலேயே தாக்கப்படும் நிலை ஏற்படலாம். அப்போது நாட்டின் தேசியத் தன்மையும் ஒற்றுமையும் இன்னும் வீழ்ச்சியடையும்.
இவர்கள் பௌத்த மதத்திற்கு நாங்களே ஏகபோக உரிமையாளர்கள் என்ற எண்ணத்துடன் செயற்படுவார்கள். தமது எண்ணத்திற்கு ஏற்ப செயற்படாத பௌத்தர்களையும் எதிர்ப்பார்கள். பிராபாகரன் எப்படித் தமிழ் மக்களை அழித்தாரோ அதே போன்று இவர்களும் தம்மோடு இனங்கி வராத பௌத்த மக்களையும் அமைப்புக்களையும் அழிக்கும் நிலை ஏற்படலாம். விஜித தேரர் மீதான தாக்குதல் இதற்கு சிறந்ததோர் உதாரணமாகும்.
இவர்களால் பௌத்த மதம் வளரப்போவதில்லை. எந்த மதத்திற்கும், கொள்கைக்கும் அதைப் பின்பற்றுவதாகக் கூறும் தீவிரவாதிகள், அழிவுச் சக்தியாக அமைவார்களே தவிர, ஆக்கச்சக்தியாக அமையமாட்டார்கள். அமைதியையும், அன்பையும், கருணையையும் போதிக்கும் பௌத்தம் இவர்களாலேயே அழியும். பௌத்த எழுச்சி என்பது பௌத்தத்ததைப் பின்பற்றும் மக்களை உருவாக்குவதில்தான் இருக்குமே தவிர, பௌத்த தர்மத்திற்கு எதிரான மக்களை உருவாக்குவதில் ஒரு போதும் இருக்காது. இந்த வகையில், இவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி இந்நாட்டிற்கும், உண்மையான பௌத்த தர்மத்திற்கும் எதிரானவர்களாவர் என்பதில் ஐயமில்லை.
இந்த இனவாதிகள் அடக்கப்படாவிட்டால் அது இந்த இலங்கை தேசத்திற்கே அழிவாக அமையும் என்பது உறுதியானது.
எனவே, இன, மத பேதத்தை ஒழித்து ‘நாம் அனைவரும் இலங்கையர்’ என்ற அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுவதுடன் அடுத்தவர்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்தாது, உடைமைகளைச் சேதப்படுத்தி அழிக்காது, சுமூகமாக வாழும் சூழலை ஏற்படுத்துவது அரசின் தலையாயக் கடமையாகும்.
முஸ்லிம்களே! இவற்றையெல்லாம் கண்டு அஞ்சாதீர்கள். வாழ்வில் நம்பிக்கை இழந்து விட வேண்டாம். நபி(ச) அவர்களும் பத்ர், உஹத் என்று தொடங்கி முஃதா, தபூக் எனப் பல யுத்தங்களைச் சந்தித்தனர். ஆனால், அப்போதெல்லாம் நபி(ச) அவர்களும் ஸஹாபாக்களும் பதற்றமடையவில்லை. ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. வெற்றிக்கான காரணியாக யுத்த தளபாடங்களைக் கணிக்கவில்லை. மாறாக, அவர்கள் யுத்த களத்திலும் பயன்படுத்திய ஒரே ஆயுதம் ‘துஆ’தான். எனவே, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போம், அவனிடம் முறையிடுவோம், அவனிடமே பாரம் சாட்டி அவன் பக்கமே மீளுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.