ஒன்லைன் PJ இணைய தளத்தில் சூனியம் பற்றிப் பேசும் 2:102 வசனத்திற்கு புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தான் உருவாக்கிய வழிகெட்ட சிந்தனையைப் பாதுகாக்க குர்ஆனைக் கூட திரிவுபடுத்த முனைந்துவிட்டனர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்துவிட்டது. இந்த விளக்கத்தை அவதானித்தால் குர்ஆனுடன் விளையாடும் இவர்களது வழிகெட்ட போக்கையும் அல்லாஹ்வையும், ரஸூலையும் மிஞ்சிப் போகும் இவர்களது வழிகெட்ட சுபாவத்தையும் புரிந்து கொள்ளலாம்.
அந்த வெளியீட்டில் புதிய சூனிய பித்னா என்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இல்லாத ஒரு இலக்கண விதியைச் சொல்லி குர்ஆனில் உள்ள ஒரு விடயம் மறுக்கப்பட்டுள்ளது. ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் சூனியத்தைக் கற்கவில்லை. கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணும் சூனியம் அல்லாத வேறு ஒரு கலையைத்தான் கற்றனர் என்பதுதான் இந்த புதிய வாதத்தின் சுருக்கம்.
“எனினும், ஷைத்தான்களே நிராகரித்து மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுக்கின்றர்.” 2:102 இந்த வசனம் தெளிவாகவே சூனியம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறுகின்றது.
நாம் சோதனையாக உள்ளோம். (இதனைக் கற்று) நிராகரிப்பாளனாக நீ ஆகிவிடாதே! என்று கூறாது அவ்விருவரும் எவருக்கும் கற்றுக் கொடுத்ததில்லை என அல்லாஹூதஆலா கூறுகின்றான். இந்த வசனமும் கற்றுக் காபிராகிவிடாதீர்கள் எனக் கூறி, சூனியத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர் என்றே கூறுகின்றது.
இது குறித்து அந்த இணைய தள வெளியீட்டில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
“காஃபிர்களாகிவிட்ட ஹாரூத் மாரூத் எனும் ஷைத்தான்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு முன், கற்றுக் கொள்ள முன்வரும் ஒவ்வொருவருக்கும் மறவாமல் ஒரு எச்சரிக்கையைச் செய்து விடுவார்கள். நாங்கள் சூனியத்தைக் கற்றதால் காஃபிர்களாக “இறை மறுப்பாளர்களாக” ஆகி உங்களுக்கு முன்னால் படிப்பினையாக இருக்கிறோம். எனவே நீங்களும் இதைக் கற்று காஃபிர்களாகி விடாதீர்கள் என்பது தான் அந்த எச்சரிக்கை. அந்த எச்சரிக்கையை ஒருவருக்கும் செய்யாமல் அவர்கள் இருந்ததிலை.
எனவே கணவனுக்கும், மனைவிக்கு மிடையில் பிரிவினை ஏற்படுத்துவதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.
இந்த இடத்தில் அரபு மூலத்தில் “சபிய்யா” எனப்படும் “ஃபா” என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. அதாவது, இச்சொல்லுக்குப் பின்னால் சொல்லப்படும் நிலைமை இச்சொல்லுக்கு முன்னால் சொல்லப்பட்ட செய்தியின் காரணமாக நடந்தது என்று இதன் பொருள். இதைக் குறிக்க தமிழ்மொழியில் எனவே அல்லது ஆகவே என்று கூறலாம்.
“இந்த மனிதன் ஏமாற்றுபவன். எனவே அவனுக்கு நான் கடன் கொடுக்க மாட்டேன்” என்று சொன்னால் அவனுக்குக் கடன் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவன் ஏமாற்றுபவனாக இருப்பதுதான் என்ற கருத்து கிடைக்கும்.
அது போல் தான் இச்சொற்றொடரும் அமைந்துள்ளது.
கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்துவதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதும் இதில் இருந்து விளங்குகிறது. சூனியத்தைக் கற்றால் காஃபிராகிவிடுவீர்கள் என்ற எச்சரிக்கை தான் இதற்குக் காரணம் என்றும் விளங்குகிறது.
சூனியத்தைக் கற்றுக் கொள்வதால் காஃபிராகி விடுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டதால் தங்களைக் காஃபிர்களாக ஆக்கிவிடும் சூனியத்தைக் கற்றுக் கொள்ளாமல் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள் என்பது “எனவே” என்ற சொல்லில் இருந்து தெரிகிறது.” (ஆன்லைன் பீஜே)
Screen shot below:
சூனியத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு முன் இப்படிச் சொல்வார்கள். சொல்லித்தான் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பதிலிருந்து சூனியத்தைத்தான் கற்றுக் கொடுத்துள்ளனர் என்பது உறுதியாகின்றது.
சூனியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தனர் என அல்லாஹ் பொதுவாகக் கூறும் போது இல்லை இல்லை, சூனியத்தை அல்ல சூனியம் அல்லாத கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணக் கூடிய வேறு ஒரு கலையைக் கற்றுக் கொண்டனர் என அவ்விணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ளதை ஏற்றால் அல்லாஹ் சொல்வதை நிராகரிக்க வேண்டும். அல்லாஹ் சொன்னதை ஏற்றால் அதில் சொல்லப்பட்டதை நிராகரிக்க வேண்டும். இதில் யார் சொன்னதை ஏற்பது, யார் சொன்னதை நிராகரிப்பது என்பதைத் தமிழ் பேசும் சமூகம் தீர்மானிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் வார்த்தையைக் கூட நிராகரித்தாலும் பரவாயில்லை நான் உருவாக்கிய கொள்கையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற முரட்டுப் பிடிவாதம் ஏற்பட்டுவிட்டதைத்தான் இந்த புதிய வாதம் புரிய வைக்கின்றது.
“(நபியே!) தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? நன்கறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். மேலும், அவனது செவிப்புலனிலும், உள்ளத் திலும் முத்திரையிட்டு, அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தினான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார்? நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?”
(45:23)
“யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருடன் முரண்பட்டு, நம்பிக்கை கொண்டோரின் வழி அல்லாததைப் பின்பற்றுகின்றானோ அவன் செல்லும் வழியிலேயே அவனைச் செல்லவிட்டு, அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்.”
(4:115)
இந்த வசனங்கள் இவருக்குப் பொருந்திப் போவதைப் பாருங்கள்.
ஏன் இந்தப் புதிய வாதம் உருவானது? இதைப் புரிந்து கொள்ள சில செய்திகளை விபரிக்க வேண்டியுள்ளது.
ஆரம்பத்தில், சூனியம் உண்டு; அதில் பாதிப்பும் உண்டு என்றனர். பின்னர் சூனியம் என்றாலே வெறும் ஏமாற்று, தந்திர வித்தை என்றெல்லாம் கூறி வந்தனர். பின்னர் சூனியம் என்று ஒரு கலையே இல்லை என்று நாம் கூறவில்லை. அப்படி ஒரு கலை உண்டு; அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றனர். பின்னர் சூனியத்தின் மூலம் அதிகபட்சம் கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முடியும். அது கூட கோள் சொல்லி மூட்டிவிடுவதுதான் என்றார். கோள் சொல்லி கணவன்-மனைவியைப் பிரிப்பவன் காபிரா? என்ற கேள்விக்குப் பதில் இல்லாமல் போனது. சூனியத்தின் அதிகபட்ச பாதிப்பு கணவன்-மனைவியைப் பிரிப்பதுதான் என்றனர். அதிகபட்சமோ, கொஞ்சமோ பாதிப்பு உண்டு என்றால் மறைமுகத் தாக்கம் உண்டு என்றாகிவிடும். சூனியத்திற்குப் பாதிப்பு உண்டு என்பது உண்மையாகிவிடும். எனவேதான், கணவன் மனைவியைப் பிரிப்பதை சூனியம் அல்லாத புதிய கலையாக கதை விடப்பட்டுள்ளது. இதற்காக நடந்த திருகுதாளங்களையும் குர்ஆனுடன் இந்த இணையதளக்காரர் எப்படியெல்லாம் விளையாடினர் என்பதையும் சற்று அவதானியுங்கள்.
ஆரம்பத்தில் இந்த வசனத்தில் வரும் அதன் மூலமாக (சூனியத்தின் மூலமாக) என்ற அர்த்தத்தைத் தருதம் “பிஹி” என்ற வார்த்தைக்கு அர்த்தம் செய்யாமல் மூடி மறைக்கப்பட்டது. மனிதன் என்ற அடிப்படையில் தெரியாமல் விடுபட்டிருக்கலாம் என நல்லெண்ணம் கொள்ள முடியாத அளவுக்கு இது விடயத்தில் கர்வத்துடன் அம்மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சூனியத்திற்குத் தாக்கம் உண்டு என்ற கருத்தில் இருந்த போது இந்த “பிஹி” அதாவது சூனியத்தின் மூலம் அல்லாஹ்வின் அனுமதியின்றி பாதிப்பு ஏற்படுத்த முடியாது என மொழிபெயர்க்கப் பட்டது.
சூனியத்திற்குப் பாதிப்பு இல்லை என்ற நிலைக்கு வந்த போது “பிஹி”க்கு அர்த்தம் செய்யாமல் விடப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி “பிஹி”க்கு அர்த்தம் செய்து வரும் மொழி பெயர்ப்பைப் பிழையான மொழிபெயர்ப்பு என்றும் அல்லாஹ்வின் வார்த்தைக்கு அர்த்தம் செய்யாமல் தான் செய்த திருகுதாள மொழிபெயர்ப்பை சரியான மொழிபெயர்ப்பு என்றும், “இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்” என்ற புத்தகத்தில் பக்கம் 55-56-57 இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் கீழே:
இது, சத்தியத்தை மறுக்கும் கர்வப் போக்கு குடிகொண்டுவிட்டதை எடுத்துக் காட்டுகின்றது.
“பிஹி”க்கு அர்த்தம் செய்தால் கூட மக்கள் எமது நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டார்கள் என்பது உறுதியான பின்னர், திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் தற்போது “பிஹி”க்கு அர்த்தம் போடப்பட்டுள்ளது.
இருந்தாலும், அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தின் மூலம் அவர்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அல்லாஹ் பாதிப்பு ஏற்படுவதற்கு நாடமாட்டான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சொல்வது போல் அர்த்தம் செய்தால் இப்றாஹீம் நபி கூட சிலைக்குப் பயந்தார்கள் என அர்த்தம் எடுக்க நேரிடும் என்றெல்லாம் தமிழகத்து அறிவு மேதைகள் வியாக்கியானம் செய்தனர்.
“பூனை குறுக்கே போனால் ஆபத்து” என ஒருவர் அச்சப்படுகின்றார். அவரைப்பார்த்து அல்லாஹ் நாடாமல் ஒன்றும் நடக்காது. நீங்கள் பயமின்றி பணியைத் தொடருங்கள் என்று சொன்னால் பூனை குறுக்கால் போவதால் பாதிப்பில்லை என்பதுதானே அர்த்தம். அப்படித்தான் இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் இலங்கையின் ஆஸ்தான அறிஞர்களும் விளக்கமளித்தனர்.
ஆனால், நீண்ட காலத்திற்கு இந்த தவறான வாதத்தில் நிலைத்து நிற்க முடியாத நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. “இதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதியின்றி எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது” என்றால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் அர்த்தம். அல்லாஹ் பாதிப்பு ஏற்படுத்த நாடமாட்டான் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தமது விளக்கம் தவறானது என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டார். அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும். ஆனால், இதன் மூலம் என்று உள்ளதே. இதன் மூலம் என்றால் சூனியத்தின் மூலம் என்று அர்த்தம் இல்லை. கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் கலை மூலம் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும் என்று புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதுவரையும் சூனியத்தின் உச்சக்கட்டப் பாதிப்பே கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதுதான் என்று கூறி வந்தவர், கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவது என்பதே சூனியத்துடன் சம்பந்தப்படாத தனியான ஒரு கலை என கதையளக்க ஆரம்பித்துள்ளார்.
அதற்காக அவர் கையில் எடுத்ததுதான் “ப(f)” என்ற எழுத்து அவருக்குத் தேவையில்லை என்றால் “பிஹி” யையும் வெட்டிவிடுவார். தேவையென்றால் “ப(f)”வைப் பிடித்துக் கொண்டு தொங்குவார். நல்ல நிலைப்பாடுதான்.
அரபு மொழியில் “ப(f)” என்ற எழுத்து வசனங்களின் தொடருக்காகவும் ஒரு செய்தியைப் பேசிவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்காகவும், வசன ஒழுங்குக்காகவும் பயன்படுத்தப்படும். அதே போன்று, “எனவே”, ஆகவே என்ற அர்த்தத்திலும் பயன் படுத்தப்படும்.
நாங்கள் படிப்பினையாக இருக்கின்றோம். எனவே, (இதைக் கற்று இறைவனை) மறுத்துவிடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொண்டனர்….” என்று அல்லாஹ் கூறுகின்றான். சூனியத்தைக் கற்று காபிராகிவிடாதீர்கள் என்று கூறினார்கள். எனவே அவர்கள் கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதைக் கற்றுக் கொண்டனர் என்றால் கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணும் கலை சூனியத்தைச் சேராது என்பது அவர்களது புதிய வாதமாகும்.
அந்த இணையதள ஆக்கத்தின் முதல் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர்.
ஹாரூத் மாரூத் எனும் ஷைத்தான்கள் தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். இதன் மூலம் அவர்கள் இறைமறுப்பாளர்களாக காஃபிர்களாக ஆயினர். (ஆன்லைன்பீஜே.காம்)
ஆதாரம் கீழே:
ஹாரூத் மாரூத் இருவரும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததினால் காபிரானார்கள் என்று கூறிவிட்டு அவர்களிடம் கற்க வந்தவர்கள் சூனியத்தைக் கற்கவில்லை; சூனியம் அல்லாத வேறொரு கலையைத்தான் கற்றனர் என்று கூறுவது முன்னுக்குப் பின் முரணானது என்பது அவர்களின் ஆய்வுக் கண்களுக்குப் புலப்படாமல் போனதா? அல்லது தமது கருத்தை எப்படியாவது நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக குர்ஆனின் கருத்தை மறுத்து போலி இலக்கணம் பேசுகின்றனரா?
“அவர்கள் மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்” என்று அல்லாஹ் சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணக் கூடியதை மக்கள் கற்றனர் என்றால், கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதும் சூனியத்தின் ஒரு வகை என்று அர்த்தம் எடுக்காமல் அல்லாஹ்வை மிஞ்சிப் போகின்றனர் இந்த “ப(f)” விடயத்தில் செய்யப்பட்டுள்ள தில்லுமுல்லுகளையும் சற்றுக் கவனியுங்கள்.
சூனியம் இருக்கிறது; அதற்குப் பாதிப்பு உண்டு என்று ஆரம்பத்தில் எழுதிய போது இந்த “ப(f)”வுக்கு வழங்கியஅர்த்தத்தைக் கவனியுங்கள்.
திருக்குர்ஆன் (PJ-வின்) விளக்கம் பக்கம் : 85-86
இதைக் கற்று காபிராகிவிடாதீர்கள் என்று சொல்லியும் கேட்காமல் கற்றனர் என்ற அர்த்தத்தில் அப்படியிருந்தும் என்று மொழிபெயர்த்துள்ளார். பின்னர் சூனியத்திற்குத் தாக்கம் இல்லை என்று எழுதும் போது “பில்லி சூனியம்” புத்தகத்தின் 55 ஆம் பக்கத்தில் இந்த “ப(f)”வுக்கு அப்படியிருந்தும் என்று அர்த்தம் செய்வதைத் தவறான மொழிபெயர்ப்பு என்று அடையாளப்படுத்தியுள்ளனர்.
இதே நூலின் 57 ஆம் பக்கத்தில் சரியான மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் இந்த “ப(f)”வுக்கு அர்த்தம் செய்யாமல் விட்டார். அவரது தர்ஜமாவிலும் அப்படித்தான் செய்தார். இப்போது அந்த “ப(f)”வுக்கு “எனவே” என்று அர்த்தம் செய்துள்ளார்.
ஒரு “ப(f)” விடயத்தில் மூன்று நிலைப்பாடு! பாதிப்பு இருக்கிறது என்று கூறும் போது அப்படி இருந்தும் என்பது அர்த்தம். பாதிப்பு இல்லை எனும் போது இந்த மொழிபெயர்ப்பு பிழை. “ப(f)”வுக்கு அர்த்தம் செய்யாமல் இருப்பதே சரி! இப்போது அல்லாஹ் நேரடியாகக் கூறியதை மறுப்பதற்கு “ப(f)”வுக்கு “எனவே” என்ற மொழிபெயர்ப்பும் வழங்கி மாறிக் கொண்டே செல்கின்றார். இப்படியெல்லாம் குர்ஆனில் விளையாடிவிட்டு, “கவனமாக ஆராய்ந்தால்”, “ஆழமாக ஆராயந்தால்” நாம் சொல்வதுதான் சரி என்று கூறி தான் மட்டும்தான் கவனமாக ஆராய்வதாகத் தனது கூட்டத்தை நம்பவைத்தும் வருகின்றார். அத்துடன் கவனமாக ஆராய்பவர் என தனக்குத் தானே சிறப்புப் பட்டம் வேறு வழங்கிக் கொள்கின்றார்.
இந்த பா(f)வுக்கு அர்த்தம் “எனவே” என்று போட்டுவிட்டு இப்படி வாதிக்கிறார்.
புகை பிடிக்காதே! என்று தந்தை எச்சரிக்கிறார். எனவே மகன் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டான் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.
புகை பிடிக்காதே! என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் நன்றாகப் புகை பிடித்தான் என்பது பொருத்தமற்றதாக ஆகும்.
இப்படிக் கூறியுள்ளார். இவர் தந்தை சொல் தட்டாத ஒரு மகனை மனதில் கொண்டு இந்த உதாரணத்தைக் கூறியுள்ளார். ஆனால், சூனியம் பற்றிய வசனம் நல்ல மக்களைப் பற்றிப் பேசவில்லை. சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான் கூறியவற்றைப் பின்பற்றும் கெட்ட மக்களைப் பற்றிப் பேசுகின்றது. இப்போது அந்த உதாரணத்தில் வரும் எனவே என்பதை அப்படி இருந்தும் என அவர் ஆரம்பத்தில் செய்த மொழிபெயர்ப்பைப் போட்டுப் பாருங்கள்.
புகை பிடிக்காதே! என தந்தை எச்சரித்தார். அப்படி இருந்தும் மகன் நன்றாக புகை பிடித்தான்.
இது ஒரு கெட்ட மகனின் நிலையைக் கூறுகின்றது. அதில் சொல்லப்பட்ட உதாரணம் குர்ஆனின் போக்கிற்கு முரணானது. தனது வாதத்தை நிரூபிக்க யூதர்களை நல்ல பிள்ளைகளாக்கப் பார்க்கின்றார்.
சூனியத்தைக் கற்றுக் காபிர்களாகி விடாதீர்கள் என்று அவர்கள் சொன்னார்கள். இருந்த போதிலும், அவர்கள் கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணக் கூடியதைக் கற்றார்கள் என்றே இந்த வசனம் கூறுகின்றது. அதுவும் சூனியத்தின் ஒரு வகையே! ஷைத்தான்களுக்கு கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்து வது விருப்பத்திற்குரியதாகும் என ஹதீஸ்கள் கூறுகின்றன.
சூனியத்தின் ஒரு பகுதியான கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணும் கலை மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படலாம் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுவிடுகின்றது.
“கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவது குற்றம் என்றாலும் குப்ரை ஏற்படுத்தக் கூடிய குற்றம் அல்ல. நாமும் அப்படிக் கூற மாட்டோம். சூனியத்தை நம்பியோரும் அப்படிக் கூறமாட்டார்கள். அவர்கள் கற்றுக் கொண்ட கலை ஒருவனைக் காபிராக்காது என்றால் அது சூனியத்தின் ஒரு வகையாக இருக்க முடியாது” என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
கோள் சொல்லி கணவன்-மனைவியைப் பிரிப்பது குப்ர் அல்ல. ஆனால், சூனியம் செய்து பிரிக்க முற்பட்டால் அதன் மூலம் பிரிவினை ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் சூனியம் செய்தவன் காபிராகிவிடுவான் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில் இதுவும் அர்த்தமற்ற வாதமாகும்.
2:102 வசனம் முழுமையாக சூனியத்தைப் பற்றியே பேசுகின்றது. இந்த வசனத்தின் ஆரம்பத்திலும் அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறப்படுகின்றது. அவர்கள் கற்ற சூனியத்தின் ஒரு பகுதிதான் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணுவது. இந்த வசனத்தின் முடிவில் அவர்கள் தங்களுக்குப் பயனளிக்காத தீங்கிழைக்கக் கூடியதைக் கற்றுக் கொண்டார்கள் என்ற வசனமும் அவர்கள் தங்களை விற்று எதை வாங்கினார்களோ அது கெட்டது என்றெல்லாம் கூறப்படுவது சூனியம் குறித்துத்தான் பேசுகின்றது. அம்மக்கள் இதைக் கற்றதன் மூலம் தங்களை விற்றுவிட்டார்கள் என்று கூறப்படுவதன் மூலமும், அடுத்து வரும் 103 ஆம் வசனம், அவர்கள் ஈமான் கொண்டு அல்லாஹ்வை அஞ்சி வாழ்ந்தால் அவர்களுக்கு சிறந்த கூலி கிடைக்கும் என்று கூறப்படுவதும் அவர்கள் குப்ரான (சூனிய) கலையைத்தான் கற்றனர் என்பதையே உறுதி செய்கின்றது.
எனவே, “ப(f)” என்ற அப்படி இருந்தும், எனினும், என்று அர்த்தம் செய்ய வேண்டிய வார்த்தையை. எனவே என்று அர்த்தம் செய்திருப்பது தவறானது. குர்ஆனின் கருத்தை மறுக்கக் கூடியது. தனது வாதத்தை நிலைநிறுத்த குர்ஆனைத் திரிவுபடுத்தவும் குர்ஆனுடன் விளையாடவும்; துணிந்துவிட்டார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது உள்ளது. இவரின் இந்த வழிகேட்டைப் புரிந்து இவரைத் தமிழ் பேசும் சமூகம் நேர்வழிக்குக் கொண்டுவர முன்வர வேண்டும்.
2:102 வசனத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சூனியம் பற்றியே பேசுகின்றது. இந்த வசனத்தில் அவர்கள் இதன் (சூனியத்தின்) மூலம் அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒருவருக்கும் தீங்கிழைக்கக் கூடியவர்களாக இல்லை என அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் தாக்கம் ஏற்படலாம் என்பதையே இது கூறுகின்றது.
எனவே, சகோதரர் பீ.ஜே. குர்ஆனின் கருத்தை மாற்ற முனையாமல் தனது நிலையை மாற்றி சத்தியத்தின் பக்கம் வரவேண்டும். இதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.