மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 4)இந்த ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை தெளிவாக இத்தொடரில் விளக்கி வருகின்றோம். இந்த ஹதீஸ் நபிமார்கள், மலக்குகள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் மறுக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்தும் நோக்குவோம்.
– மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளவாறு நடந்திருப்பார்களா?– நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா?– இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்குச் சமமாகும் என்பதைக் கூட மூஸா நபியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த ஹதீஸை நாம் எவ்வாறு நம்ப இயலும்?– அப்படியே மூஸா நபி அறைந்திருந்தாலும் இறைவன் பணிந்து கெஞ்சிக்கொண்டிருக்க மாட்டான். யூனுஸ் நபியைத் தண்டித்ததைப் போன்று தண்டித்திருப்பான்.
இந்த வாதங்களை வைத்துத்தான் இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது. இந்த ஹதீஸின் ஒரு பகுதி நபியின் தன்மைக்கு முரண்படுகின்றது என்றும் மற்ற பகுதி மலக்கின் தன்மைக்கு முரண்படுகின்றது என்றும் கூறுகின்றார். இந்த வாதத்தை முன்வைத்து ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்க முடியுமா? அப்படி மறுத்தால் குர்ஆனைக் கூட மறுக்க நேரிடும் என்பதை எமது விளக்கத்தின் மூலம் நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
மூஸா நபி இப்படி நடந்திருப்பார்களா?
மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இப்படி நடந்திருப்பார்களா? என பீஜே கேள்வி கேட்கின்றார். இதே கோணத்தில் குர்ஆனை ஆய்வு செய்தால் ஏற்படும் விபரீதத்தைச் சிந்தித்துப் பாருங்கள்!
மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரு நபி இப்படி கறடு-முறடாக நடப்பார்களா? என்பது நியாயமான கேள்வியாகத் தோன்றும். ஆனால் இந்தக் கேள்வி ஒன்றே ஹதீஸை மறுக்கப் போதுமான வாதமாகி விடாது. தீடீரெனத் திட்டமிடாமல் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இப்படிக் கேள்வி கேட்கவும் கூடாது! இந்த வாதம் தவறானது என்பதைப் பின்வரும் விளக்கம் மூலம் விளங்கலாம்.
மூஸா நபி இளமையை அடைந்த போது அவர் ஒரு நாள் இரவு வெளியில் செல்கின்றார். கிப்தி இனத்தவன் ஒருவனும், இஸ்ரேல் இனத்தவன் ஒருவனும் சண்டை செய்துகொண்டிருக்கின்றனர். இஸ்ரவேல் இனத்தவன் மூஸா நபியை உதவிக்கு அழைக்கின்றான். இவரும் சென்று கிப்தி இனத்தவனுக்கு ஒரு குத்து குத்தினார். அவன் அங்கேயே செத்து விழுந்தான்.
(பார்க்க: அல்குர்ஆன் 28:15)
இந்தச் சம்பவத்தை எடுத்து வைத்துக் கொண்டு மிகச் சிறந்த ஒரு நபி இப்படி நடந்து கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பி இந்த ஆயத்தை மறுக்க முடியுமா? இந்தச் சம்பவம் மூஸா நபி, நபியாக ஆகும் முன்னர் நடந்தது என்று வேண்டுமானால் சமாளிக்கலாம்.
இந்த நிகழ்ச்சி பற்றி அல்லாஹ் கூறுவதற்கு முன்னரே ”அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் வழங்கினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்.” (28:14)
என்று கூறுகின்றான். சரி, ஒரு வாதத்திற்காக நபியாக அவர் ஆக்கப்படவில்லை என்று ஏற்றுக்கொள்வோம். இந்த வசனத்தில் அவர் இல்ம் (அறிவு) ஹுக்ம் (ஞானம்) வழங்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது (முஹ்ஸின்) அவர் நன்மை செய்பவர் என்றும் கூறப்படுகின்றது.
அறிவும், ஞானமும் வழங்கப்பட்ட நல்ல மனிதரான மூஸா இப்படி நடந்திருப்பாரா? இருவர் சண்டை பிடித்தால் இருவரையும் சமாதானம் செய்து வைப்பது நல்லவரின் வேலை. அறிவும், ஞானமும் உள்ளவர்களின் வேலை. அதை விட்டு விட்டு ஒரு பக்கச் சார்பாக நின்று நீதி-நியாயம் பார்க்காமல் அடுத்தவன் சாகும் அளவுக்கு அடிப்பது நல்ல மனிதனின் செயலாக இருக்குமா? கொலை வெறித் தாக்குதல் நடத்திய ஒருவரை அல்லாஹ் நபியாகத் தேர்ந்தெடுப்பானா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் ஒன்றில் மூஸா நபி நல்லவர் இல்லை என்று கூற வேண்டும் அல்லது இந்த வசனத்தை நிராகரிக்க வேண்டும்.
பீஜே மூஸா நபியையும் நல்லவர் என்று ஏற்றுக்கொண்டு இந்த வசனத்தையும் ஏற்பதாக இருந்தால் மனித ரூபத்தில் வந்த மலக்கை மூஸா நபி அறைந்ததை, ஒரு நபி இப்படி நடப்பாரா? எனக் கேள்வி எழுப்பி மறுப்பது எப்படி நியாயமாகும்?
குர்ஆன் கூறும் சம்பவத்தை ஏற்க முடியும் என்றால் இந்த ஹதீஸையும் ஏற்க முடியும். ஹதீஸை மறுப்பதென்றால் குர்ஆனின் வசனத்தையும் அதே காரணத்தைக் கூறி மறுக்க நேரிடும். குர்ஆனையும், ஹதீஸையும் மறுக்காத போக்கை ஏற்பதா? அல்லது போலி வாதத்திற்கு மயங்கி ஹதீஸை மறுத்துப் பின்னர் குர்ஆனையும் மறுக்கும் மனநிலைக்கு மாறுவதா? என்பதைப் பொது மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
ஒரு நபி இறைத்தூதருடன் இப்படி நடப்பாரா?
மேலே கூறிய சம்பவம் மூஸா நபி சராசரி மனிதனுடன் நடந்துகொண்ட விதமாகும். ஆனால் இங்கே ஒரு வானவருடன் இப்படி நடந்துகொண்டதாகக் கூறப்படுகின்றது.
ஒரு நபி இறைத்தூதருடன் இப்படி நடந்து கொள்வாரா? இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்ப்பதற்குச் சமமாகும் என்பதைக் கூட மூஸா நபி அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த இந்த ஹதீஸை எப்படி நம்ப இயலும் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது கூட அறிவீனமான வாதம்தான். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால் கூட, குர்ஆனில் வரும் சம்பவங்களை அதுவும் மூஸா நபி சம்பந்தப்பட்ட சம்பவங்களையே நிராகரிக்கும் நிர்க்கதி நிலை உருவாகும்.
மூஸா(அலை) அவர்களை அல்லாஹ் வேதத்தை வழங்க அழைத்த போது அவர் தனது சமூகத்தை ஹாரூன்(அலை) அவர்களின் பொறுப்பில் விட்டு விட்டுச் செல்கின்றார்கள். மூஸா நபி சென்ற பின்னர் சாமிரி என்பவன் நகைகள் மூலம் ஒரு காளைக் கன்றைச் செய்கின்றான். அதில் மாட்டின் சப்தத்தைப் போன்ற சப்தம் வருகின்றது. அந்த மக்கள் வழிகெட்டு காளை மாட்டை வணங்குகின்றனர். ஹாரூன் நபி தன்னால் முடிந்த வரை மக்களுக்குச் சத்தியத்தைச் சொல்கின்றார்கள். மக்கள் ஏற்கவில்லை. மூஸா நபி வந்ததும் அல்லாஹ் வழங்கிய ஏட்டைத் தூக்கி வீசி விட்டு, ஹாரூன் நபியின் தலைமுடியையும், தாடியையும் பிடித்து இழுக்கின்றார்கள். அவர்கள் வழிகெட்ட போது ‘நீ என்ன செய்தாய்? எனது கட்டளைக்கு மாறு செய்து விட்டாயே!’ என்று கண்டிக்கின்றார்கள். அப்போதுதான் ஹாரூன் நபி ‘எனது தாயின் மகனே! எனது தாடியையும், தலைமுடியையும் பிடித்து இழுத்து என் எதிரிகளை மகிழ்வுறச் செய்து விடாதீர்!’ எனக் கூறித் தன்னிலை விளக்கம் அளிக்கின்றார்கள்.
(பார்க்க: அல்குர்ஆன் 20:83-97, 7:148-150)
இந்தச் சம்பவத்தையும், மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸை பீஜே அணுகுவது போல் அணுகினால் மறுக்க நேரிடும்.
ஒரு நபி மற்றுமொரு நபியின் தாடியையும், தலைமுடியையும் பகிரங்கமாகப் பிடித்து இழுத்து அவமரியாதை செய்வாரா? நாங்கள் கூட நமது பகைவர்களைக் கண்டால் கூடப் பாதை ஓரங்களில் பகிரங்கமாக வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டால் கூட தாடியையும், தலைமுடியையும் பிடித்து இழுக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்து செல்ல மாட்டோம் எனும் போது மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா நபி இப்படி நடந்திருப்பார்களா?
ஒரு நபியின் தாடியைப் பிடித்து இழுப்பது அல்லாஹ்வை நேருக்கு நேர் எதிர்ப்பதற்குச் சமமானதாகும் என்ற சாதாரண அறிவு கூட மூஸா நபிக்கு இருக்கவில்லை எனக் கூறும் இந்தக் குர்ஆனிய சம்பவத்தை எப்படி நம்ப இயலும்?
தவ்ஹீதை ஏற்ற மக்கள் ஷிர்க்கில் வீழ்ந்தால் நாமே கொதிப்போம்; குமுறுவோம். அதை எதிர்ப்போம். இப்படி இருக்க ஒரு நபி ஷிர்க் நடக்கும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார் என மூஸா நபி நம்பியதாக இந்தச் சம்பவம் கூறுகின்றது. இதை நம்ப முடியுமா?
மூஸா நபி இப்படி நம்பி இருந்தால் அது ஹாரூன் நபியை மட்டுமல்ல; அல்லாஹ்வையே குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடும். அல்லாஹ் தனது தூதுத்துவப் பணிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதென்றால் அதற்குத் தகுதியானவரைத்தான் தேர்ந்தெடுப்பான்.
அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஹாரூன் நபி சிலை வணக்கம் நடக்கும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததாக மூஸா நபி நம்பியதாக இந்தச் சம்பவம் கூறுகின்றது. அப்படியென்றால் அல்லாஹ் தனது தூதுத்துவப் பணிக்குத் தகுதி இல்லாதவரைத் தெரிவு செய்து விட்டான். அல்லது அல்லாஹ்வுக்குத் தகுதியானவரைத் தெரிவு செய்யத் தெரியாமல் போய் விட்டது என்பதே இதன் அர்த்தமாகும். எனவே இந்தக் குர்ஆன் கூறும் சம்பவத்தை ஏற்க முடியாது என்று கூற நேரிடும்.
அப்படி இல்லை. குர்ஆன் கூறும் சம்பவத்தை நாம் ஏற்போம் என்று கூறுவதென்றால் ஆதாரபூர்வமான ஹதீஸ் கூறும் இந்தச் சம்பவத்தையும் ஏற்க முடியும்! ஹதீஸை மறுப்பதென்றால் குர்ஆனையும் மறுக்க நேரிடும். பீஜேயின் தவறான வாதங்கள் அந்த நிலைக்குத்தான் மனிதர்களை அழைத்துச் செல்லும். எனவே தவறான வாதங்களின் அடிப்படையில் ஹதீஸை மறுத்து, அதைத் தொடர்ந்து குர்ஆனையும் மறுக்கும் அல்லது முழுமையாக, முறையாகக் குர்ஆனை நம்பாத மனநிலைக்குச் செல்வதை விட்டும் மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.
வேதத்தை வீசிய மூஸா நபி..?
இந்த ஹதீஸில் கூறப்படுவது போன்று மூஸா நபி ‘மலக்குல் மவ்த்’துக்கு அறைந்திருந்தால் அல்லாஹ் அவரைத் தண்டித்திருப்பான். பணிந்து போய்க் கெஞ்சிக்கொண்டிருக்க மாட்டான். யூனுஸ் நபியைத் தண்டித்தது போல் தண்டித்திருப்பான். எனவே, அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் இந்தச் செயலை அல்லாஹ் தண்டிக்காமல் விட்டிருக்க மாட்டான் என்ற தோரணையிலும் இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது.
இந்த வாதமும் தவறானதாகும். மூஸா நபி அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத் தூதரின் தாடியையும், தலைமுடியையும் பகிரங்கமாகப் பிடித்து இழுத்துள்ளார்கள். ஒரு இறைத் தூதருடன் இப்படி நடந்து கொள்வது அல்லாஹ்வையே எதிர்த்து நிற்பதற்குச் சமமானதாகும். இப்படி மூஸா நபி நடந்திருந்தால் நிச்சயமாக யூனுஸ் நபியைத் தண்டித்தது போல் தண்டித்தே இருப்பான். அப்படித் தண்டித்ததாக எந்தச் செய்தியும் வரவில்லை. எனவே, மூஸா நபி, ஹாரூன் நபியுடன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நம்ப முடியாது என இந்தக் குர்ஆன் கூறும் சம்பவத்தையும் பீஜேயும், அவர் கூறும் இத்தகைய தவறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் சகோதரர்களும் கூறப் போகின்றார்களா?
மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான். அந்த வேதம் எழுத்து வடிவில் ஒரேயடியாக வழங்கப்பட்டது. இதை வழங்குவதற்காக அல்லாஹ் மூஸா நபிக்குத் தனியாக அவகாசம் அளித்து அவரை அழைத்து நேரடியாக வழங்கினான்.
அனைத்து விடயங்களையும் அவருக்காக நாம் பலகைகளில் எழுதினோம். அது உபதேசமாகவும், ஒவ்வொரு விடயத்தையும் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. எனவே, அவற்றைப் பலமாகப் பற்றிக்கொள்வீராக! மேலும், அவற்றில் உள்ள மிகச் சிறந்ததை எடுத்து நடக்கும் படி உமது சமூகத்திற்கு ஏவுவீராக! வெகு விரைவில் பாவிகளின் இருப்பிடத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன் என்று (அல்லாஹ்) கூறினான். (7:145)
இவ்வளவு சிறப்பு மிக்க வேதத்தைப் பெற்ற மூஸா நபி தனது சகோதரர் ஹாரூன் நபியைக் கண்டிக்கும் போது;
……(7:150)
அல்லாஹ் நேரடியாக வழங்கிய வேதத்தை வீசி விட்டு, தனது சகோதரனது தாடியையும், தலைமுடியையும் பிடித்துத் தன்பால் அவரை இழுத்தார்.
மூஸாவுக்குக் கோபம் தணிந்த போது, பலகைகளை எடுத்தார். அவற்றில் வரையப்பட்டிருந்ததில் தங்கள் இரட்சகனைப் பயப்படுவோருக்கு நேர்வழியும் அருளும் இருந்தன. (7:154)
கோபம் தணிந்த பின்னர் ஏட்டை எடுத்தார். ஒருவர் அனுப்பிய கடிதத்தைக் கசக்குவது கூடக் கடிதம் அனுப்பிய நபரை இழிவுபடுத்துவதாகவே இருக்கும். இப்படி இருக்க, அல்லாஹ் நேரடியாக அளித்த வேதத்தைக் கோபத்தில் மூஸா நபி வீசியுள்ளார். இது அல்லாஹ்வையே எதிர்த்து நிற்பதற்குச் சமமானது. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே எந்தச் சந்தர்ப்பத்திலும் குர்ஆனைத் தூக்கி வீச மாட்டோம். இப்படியிருக்க ஒரு நபி, அதுவும் அல்லாஹ்வே தன்னிடம் நேரடியாகத் தந்த வேதத்தை வீசியிருப்பாரா? அப்படியே வீசியிருந்தால், அல்லாஹ் தண்டிக்காமல் விட்டிருப்பானா? எனக் கேள்வி எழுப்பினால் குர்ஆன் கூறும் இச்சம்பவத்தை நிராகரிக்க நேரிடும். குர்ஆனைத் தொடர்ந்து பார்த்தால் இதற்காக மூஸா நபி தண்டிக்கப்பட்டதாகக் கூடக் கூறப்படவில்லை. எனவே, இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க முடியாது. மிகச் சிறந்த ஒரு நபி, தனக்கு அல்லாஹ் வழங்கிய ஒரு வேதத்தை எந்த நிலையிலும் எடுத்தெறிய மாட்டார். அப்படிச் செய்திருந்தால் கூட யூனுஸ் நபியை அல்லாஹ் தண்டித்தது போல் தண்டித்தே இருப்பான் எனக் கூறி, மூஸா நபி வேதத்தை எறிந்ததைப் பீஜே மறுக்கப் போகின்றாரா? அல்லது திட்டமிடாமல் வேகத்தில் நடந்த ஒரு அசாதாரண நிகழ்வை சாதாரண நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று புரிந்து கொள்வதா?
மூஸா நபி தண்டிக்கப்படவில்லை எனக் காரணம் கூறி ‘மலக்குள் மவ்த்’ சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுப்பதாயின் மூஸா நபி வேதத்தை எறிந்தது, ஹாரூன் நபியின் தலையையும் தாடியையும் பிடித்து இழுத்தது பற்றிப் பேசும் குர்ஆன் வசனங்களையும் மறுக்க வேண்டும். இத்தகைய குர்ஆன் வசனங்களை ஏற்க முடியுமாக இருந்தால் குதர்க்கமான வாதங்களை விட்டு விட்டு ‘மூஸா நபி-மலக்குல் மவ்த்’ சம்பந்தப்பட்ட ஹதீஸையும் நம்ப முடியும். ‘குர்ஆனை ஏற்போம்; அதே போன்ற கருத்தைத் தரும் ஹதீஸை வம்பு-வாதங்களை முன்வைத்து முரட்டுத்தனமாகப் பிடிவாதத்துடன் மறுப்போம்’ என்பது முரண்பாடான நிலைப்பாடாகும். எனவே, குர்ஆனையும் ஏற்று ஹதீஸையும் ஏற்று வெற்றி பெற முனைவோமாக!