த மெசேஜ்
ஓர் விமர்சன நோக்கு!
ஆக்கம்: Anan Asmath Bin Ismail. (மகன்)
நபி(ச) அவர்களின் தூதுத்துவ வரலாறு 1976 ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக ‘The Message’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதை சிரியா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ‘முஸ்தபா அக்காப்’ என்பவர் இயக்கியிருந்தார். இப்பட உருவாக்கத்திற்கு எகிப்து, மொரோக்கோ போன்ற நாடுகள் அனுமதியும், குவைட், லிபியா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் வாக்களித்திருந்தன. இருந்தாலும் மக்காவிலுள்ள ‘ராபிதது ஆலமுல் இஸ்லாம்’ என்ற அமைப்பு இதற்கான அனுமதியை மறுத்தது. அதனால் குவைட் மட்டும் இதற்கு உதவுவதில்லை என முடிவு செய்தது. பின்னர் இது மொரோக்கோ மற்றும் லிபியாவில் படம் பிடிக்கப்பட்டது.
சினிமா என்து பலமான ஊடகமாகும். வரலாற்று நிகழ்வுகளைப் படமாக்கும் போது பெரிய வெற்றியையும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புக்களையும் உருவாக்குகின்றன. மூஸா நபியின் வரலாறு ஏற்கனவே பத்துக் கட்டளைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறே மகாத்மா காந்தி வரலாறும் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. உமர் முக்தாரின் புரட்சியும் சினிமாவாக்கப்பட்டது.
இந்தக் கோணத்தில் நபியவர்களது வரலாறும் படமாக்கப்பட்டது. செவி வழிச் செய்தியாக இல்லாமல் காட்சியூடாகப் பார்க்கப்படும் போது அது மனதில் அதிகம் பதியக் கூடியதாகும். இருப்பினும் வரலாறுகளைப் படமாக்கும் போது அந்த வரலாற்று நாயகர்களாக சினிமா நடிகர்களே தோன்றுவர். சிவாஜி கட்டபொம்மனாக நடித்தார். இன்றும் கட்டபொம்மன் என்றதும் சிவாஜியின் தோற்றமே கண் முன் வரும். இந்தத் திரைப்படத்தில் ஹம்ஸா கதாபாத்திரமே முக்கியமானதாகும். ஹம்ஸா(ர) என்று கூறும் போது இந்த நடிகரின் முகம்தான் மனக் கண்ணில் ஓடும். நிழல்கள் நிஜமாக்கப்படுகின்றன. இதனால் இவ்வாறான சினிமாக்களை உலமாக்களில் பலரும் ஆதரிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
தமிழ் உலகிக்கு இத்திரைப்படம் சில வருடங்களுக்கு முன்னரே அறிமுமானது. இத்திரைப்படத்தின் மூலம் நபி(ச) அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் அனைவரும் இதன் வரவை எதிர்பார்த்திருந்தனர். இத்திரைப்படத்தில் சில பொய்யான பெய்திகளும் ஷீஆக்களின் ஊடுருவல்களும் காணப்படுகின்றன. அவற்றை அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்.
முதலாவது:
இத்திரைப்படத்தில் நபி(ச) அவர்களின் தூதுத்துவத்தை எத்தி வைத்ததில் அபூபக்கர், உமர், உஸ்மான் (ர) ஆகிய முக்கிய மூன்று கலீபாக்களுக்கும் பங்கிருப்பதாகக் காட்டப்படவில்லை. இவர்கள்தான் நபியவர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழர்களாக இருந்தார்கள். மேலும், அழைப்புப் பணியிலும், ஜிஹாதிலும் குறைவான நேரமே தவிர அவர்கள் நபியவர்களைப் பிரிந்திருக்கவில்லை. இவ்வாறானவர்களைப் பற்றிய அனைத்து விபரங்களும் இதிலே மறைக்கப்பட்டுள்ளது. இது ஷீஆக்களின் திட்டமிட்ட சதி என்பதைப் புரியலாம்.
இது விடயத்தில் நல்லெண்ணம் வைப்பதற்கும் ஒரு வழி உள்ளது. படத்தில் அலி(ர) அவர்களும் காட்சிப்படுத்தப்படவில்லை. பத்ர் போரின் ஆரம்பத்தில் இரு தரப்பு போர் வீரர்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காட்சியில் அலி(ர) அவர்களுக்குப் பகரமாக இரு வாழ்கள் மட்டுமே காட்டப்படுகின்றன.
நபியவர்களும் காட்சிப்படுத்தப்படவில்லை. நபியவர்களைப் போன்றும் நான்கு கலீபாக்கள் போன்றும் யாரும் நடிப்பதை முஸ்லிம்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் காட்சிப்படுத்தப் படாமல் விடப்பட்டிருக்கலாம் என்று நல்லெண்ணம் கொள்ள வழி உண்டு. இதனால்தான் ஹம்ஸா(ர) அவர்களது கதாபாத்திரம்தான் இத்திரைப்படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் உண்மை வரலாறு மறைக்கப்படாமல் இருக்க முன்னைய மூன்று கலீபாக்களின் பங்கும் திரைப் படத்தில் ஏதோ ஒரு அடிப்படையில் வெளியிடப்படாமை முக்கியமான ஒரு குறையாகவே தென்படுகின்றது.
இரண்டாவது:
படத்திலே அபூசுப்யானுக்கும் அம்மாருக்கும் இடையில் ஒரு உரையாடல் நடைபெறுகின்றது. அதிலே அபூசுப்யான் அம்மாரைப் பார்த்து, ‘நீங்கள் அல்லாஹ் யதார்த்தத்தில் எல்லா இடத்திலும் உள்ளான் என்று கூறுகின்றீர்கள்’ என்று கூறுகின்றார் அதற்கு அம்மார் (ர) மறுப்பளிக்கவில்லை (படத்தில் உள்ளபடி). இந்த அகீதா சார்ந்த தவறான கருத்தை அம்மார் ஏற்றுக் கொள்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அஹ்லுஸ் சுன்னாவுடைய உலமாக்கள் அல்லாஹ் எங்கும் உள்ளான் என்று கூறமாட்டார்கள். மாறாக அல்லாஹ் அர்ஷின் மீது ஆகியுள்ளான். திறந்த வெளியிலும், மிருகங்களிலும், மரங்களிலும், கற்களிலும் உள்ளான் என்பது ஷீஆக்கள் மற்றும் நஸரானிகளின் கொள்கையாகும்.
மூன்றாவது:
படத்திலே ஹின்தா பின்த் உத்பஹ் நன்றாக அம்பு எரியக் கூடியவனான வஹ்சிக்கு ஹம்ஸாவைக் கொல்லுமாறு கட்டளை இடுவதாகவும் அதற்குப் பகரமாக வஹ்சிக்கு சுதந்திரமும் அவரின் எடையின் அளவுக்கு தங்கம் கொடுப்பதாகவும் வந்துள்ளது. இந்த செய்திக்கு எந்த அடிப்படையும் இல்லை. மேலும், வஹ்சீ ஹின்தாவின் அடிமையாக இருக்கவில்லை. மாறாக அவர் ஜபீர் இப்னு முத்இம் என்பவரின் அடிமையாக இருந்தான். வஹ்ஸி தன் எஜமானின் கட்டளைப்படியே ஹம்ஸா (ர) ஜபீரின் சிரிய தந்தையான தஈமா இப்னு அதீ என்பவனைக் கொண்டதற்காகவே இவ்வாறு செய்தார்.
நான்காவது:
படத்திலே ஹின்த் பின்த் உத்பா (ர) ஹம்ஸா (ர) அவர்களின் கல்லீரலை உண்பதாக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பொய்யான தாகும். இந்தச் செய்தி தப்ரிஸி என்ற ஷீஆவைச் சேர்ந்த பொய்யனிடமிருந்து வந்ததாகும். அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களிடம் இந்தச் செய்தி உறுதிப்படுத்தப் படவில்லை. இச்செய்தியை சுமந்து வரக் கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானதாகும்.
ஐந்தாவது:
இத்திரைப்படம் அபூதாலிபை முஸ்லிமாகவும் ஏகத்துவவாதியாகவும், ஏகத்துவத்தின்பால் அழைப்பவராகவும் சித்தரிக்கின்றது. இது பிழையாகும். அபூதாலிப் காபிராகவே மரணித்தார். அவருடைய மரணத்தருவாயில் நபி(ச) அவர்கள் அவரிடம் சென்று கலிமாவை சொல்லிக் கொடுத்தும் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அல்லாஹ் நாடியவர்களுக்கு மாத்திரமே நேர்வழி கொடுப்பான்.
ஆறாவது:
பத்ரிலே அபூ ஜஹ்ல் அறியப்படாத ஒருவரிடமிருந்து எரியப்பட்ட அம்பின் மூலம் கொல்லப்படுவதாக படமாக்கப்பட்டுள்ளது. மாறாக, யதார்த்தம் என்னவென்றால் அபூஜஹ்ல் கொல்லப்பட்டது ஸஹாபாக்களான இரண்டு சிறுவர்கள் மூலமே! அவர்களில் ஒருவர் முஆத் இப்னு அம்ர் மற்றையவர் முஅவ்வித் இப்னு அப்ரா.
ஏழாவது:
ஹிஜ்ரத்தின் போது நபியவர்களும் அபூபக்ர் (ர) அவர்களும் தவ்ர் குகையில் மறைந்திருந்தனர். அப்போது குகையின் வாயிலை சிலந்தி வலை அடைத்திருந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ஸஹீஹானது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
எட்டாவது:
ஸஹாபாக்களில் சிலரை கட்டையாக தாடி வைத்திருப்பவர்களாகவும் இன்னும் சிலரை தாடி இல்லாதவர்களாவும் காட்டப்பட்டுள்ளது. மாறாக , நபி (ச) அவர்கள் தாடியை வளர விடும்படியே ஏவினார்கள். இன்னும் காபிர்கள் அடர்ந்த தாடியுடையவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது நபியவர்கள் தனக்கு முன்னால் தாடி இல்லாமல் இருப்பதை அனுமதித்து அங்கீகரித்தது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.
ஒன்பதாவது:
இவை அனைத்தையும் விடவும் இப்படத்திலே யஹூதிகளைப் பற்றியோ அவர்கள் செய்த மோசடிகளைப் பற்றியோ எதுவும் வெளிக்கொண்டு வரப்படவில்லை.
இறுதியாக, இத்திரப்படம் ஸஹாபாக்களையும் அஹ்லுஸ் சுன்னாக்களையும் பிழையாக சித்தரிக்கின்றன. நாம் நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டும் என்று இது போன்ற சினிமாக்களைப் பார்ப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சினிமா என்பது யஹூதிகளின் கைப்பிடிக்குள் இருக்கும் ஒரு கலையாகும். அதனால் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களின் விருப்பத்திற்கும் சட்டதிட்டத்திற்கும் அமைவாகவே அனைத்துத் திரைப்படங்களும் வெளியாக்கப் படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, இவற்றை முற்று முழுதாக புறக்கணித்து வாழ்வோம்!