அல்லாஹுதஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும்.
‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்’ (9:36)
போர் செய்வது தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களும் எவை என்பதை நபி(ச) அவர்கள் பின்வருமாறு விபரித்தார்கள்.
ஹஜ்ஜத்துல் வதாவில் உரையாற்றிய போது) நபி(ச) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள ‘ரஜப்’ மாதம் ஆகும்’ என அபூ பக்ரா(ர) அறிவித்தார்.’
(நூல்: புகாரி: 4662, 5550, 7447)
எனவே, ரஜப் மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்று என்பது குர்ஆன் சுன்னா மூலம் உறுதியாகின்றது. மக்கள் இபாதத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக அல்லாஹுதஆலா இவ்வாறு சில நாட்களையும் மாதங்களையும் சிறப்பித்துள்ளான். ஆனால், மனிதர்களில் சிலர் தமது மனோ இச்சையை வெளிப்படுத்தவும் கேளிக்கைகள், வீண் விளையாட்டுக் களில் ஈடுபடுவதற்குரிய காலமாக அவற்றை மாற்றி வருகின்றனர். இபாதத் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் கூட இஸ்லாத்தில் இல்லாதவற்றை உருவாக்கி செயற்படுத்தி அநியாயமாக பாவத்தைத் தேடிக் கொள்கின்றனர். இந்த வகையில் இந்த ரஜப் மாதத்திலும் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட பித்அத்துக்கள் இடம்பிடித்துவிட்டன.
இந்த வகையில் ரஜப் மாதத்தில் தொழப்படும் ‘ஸலாதுர் ரகாயிப்’ எனும் தொழுகை, இஸ்ரா-மிஃராஜைக் கொண்டாடும் நிகழ்வுகள், இந்த மாதத்தில் இறந்தவர்களுக்காக செய்யப்படும் தர்மங்கள், இந்த மாதத்திற்காகவே செய்யப்படும் கப்ர் ஸியாரத்துக்கள் அனைத்துமே மார்க்கம் போதிக்காத அம்சமாகும்.
ரஜப் மாதத்தின் சிறப்பு:
ரஜப் மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட மாதமாகும். அதல்லாமல் அதற்கு வேறு சிறப்புக்கள் உண்டா என்பது பற்றி இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
ரஜப் மாதத்தின் சிறப்பு தொடர்பாகவோ, அதில் நோன்பு நோற்பது தொடர்பாகவோ, அதில் குறிப்பிட்ட சில தினங்களில் நோன்பு நோற்பது தொடர்பிலோ அதில் குறிப்பிட்ட இரவில் நின்று வணங்குவது பற்றியோ எந்தச் செய்தியும் வரவில்லை.
நோன்பு நோற்பது பற்றி வெளிப்படையாகப் பேசும் ஹதீஸ்களைப் பொருத்த வரையில் அவை இரு வகைப்படும். ஒன்று, பலவீனமானது. மற்றையது இட்டுக் கட்டப்பட்டவையாகும். என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
ஸலாதுர் ரகாயிப்:
ஸலாதுர் ரகாயிப் என்ற பெயரில் ரஜப் மாதம் முதலாவது வெள்ளிக்கிமை இரவில் மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடையில் 12 ரக்அத்துக்கள் இப்பெயரில் தொழப்படும். இந்தத் தொழுகை பாமர மக்களிடம் ஆரம்பத்தில் காணப் பட்டது. பல்வேறுபட்ட இமாம்கள் இதைக் கண்டித்துள் ளார்கள். இது பற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘ஸலாதுர் ரகாயிப் தொழுகையைப் பொருத்தவரையில் அதற்கு அஸிலே – அடிப்படையே கிடையாது. அது பித்அத்தாகும். அது முஸ்தஹப்பானது அல்ல. தனித்துத் தொழுவதும் இல்லை| ஜமாஅத்தாகத் தொழுவதும் இல்லை. நபி(ச) அவர்கள் வெள்ளிக்கிமை இரவை தொழுகை மற்றும் நோன்பால் குறிப்பிட்டு சிறப்பிப்பதைத் தடுத்துள்ளதாக ஸஹீஹ் முஸ்லிமில் ஹதீஸ் வந்துள்ளது’ என்று குறிப்பிடுகின்றார்கள்.
இஸ்ரா-மிஃராஜ் விழா:
நபி(ச) அவர்களின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்வுகளில் அவர்களது விண்வெளிப் பயணமும் ஒன்றாகும். இஸ்ரா-மிஃராஜை நம்புவது கட்டாயக் கடமையாகும். நபியவர்கள் ரஜப் மாதம் 27ஆம் இரவில்தான் மிஃராஜ் சென்றார்கள் என சில செய்திகள் சொல்கின்றன. இந்த அடிப்படையில் ரஜப் மாதத்தின் 27 ஆம் இரவு பள்ளிகளை அலங்கரித்து விளக்குகள் பூட்டி விழாவாகக் கொண்டாடும் பழக்கம் இருந்து வருகின்றது. இது பித்அத்தாகும்.
உண்மையில் இஸ்ரா-மிஃராஜ் என்பன ரஜப் 27 இல் நடந்ததாக இருந்தாலும் அந்த நாளை விஷேடமாக விழாவாக எடுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அத்துடன் நபித்தோழர்கள் யாரும் அதை விழாவாக்கியதும் இல்லை. இந்த வகையில் இது பித்அத்தாகும்.
ரஜப் 27 இல் இஸ்ரா-மிஃராஜ் நடந்தது என்ற கருத்தையும் பல அறிஞர்கள் கண்டித்துள்ளனர். இது குறித்து இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது, சில கதை கூறுபவர்கள் இஸ்ராஃ ரஜப் மாதத்தில் நடந்ததாகக் கூறுகின்றார். இது பொய்யாகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
ரஜப் மாதத்தை சிறப்பிக்கும் விதத்தில் உம்றா செய்வது, குர்பான் கொடுப்பது, நோன்பு நோற்பது அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டியதாகும். இது குறித்து ஷெய்க் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறும் போது, இந்த மாதத்திற்கென சில தொழுகைகள், துஆக்கள் வந்துள்ளன. ஆனால், அவை பலவீன மானவை. ஆதாரத்திற்கு எடுக்க முடியாதவையாகும். சுன்னாவில் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இது போர் செய்வது தடுக்கப்பட்ட மாதம். எனவே, நான் எனது தொழுகையை அதிகப் படுத்துவேன் அல்லது திக்ரை அல்லது நோன்பை அல்லது இவை போன்ற அமல்களை அதிகப் படுத்துவேன் என்று கூற முடியாது.
ஏன் அப்படிக் கூற முடியாது?:
நபியவர்கள் இந்த மாதத்தை அடைந்தார்கள் அல்லவா? ரஜப் அல்லாத மாதத்தில் செய்ததை விட ரஜப் மாதத்தில் விஷேடமாக ஏதாவது செய்தார்களா?
அவர்கள் அப்படி ரஜபில் அதிகமாக செய்யவில்லை என்றால், ‘இது போர் செய்வது தடுக்கப்பட்ட மாதம். நான் இஃதல்லாத மாதத்தில் செய்வதை விட இம்மாதத்தில் அதிக இபாதத் செய்வேன் என்று கூற நமக்கு உரிமையில்லை.
ஏனெனில், நாம் பின்பற்றுபவர்களே அல்லாமல் உருவாக்குபவர்கள் அல்ல என்று பதிலளிக்கின்றார்கள். இந்த வகையில் ரஜப் மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட மாதமாகும். அந்த மாதத்திற்கென தனியான எந்த இபாதத்தையும் இஸ்லாம் அறிமுகப்படுத்தவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ரஜபும் பலவீனமான ஹதீஸ்களும்:
ரஜப் மாதத்துடன் தொடர்புபட்ட பல பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன. அவற்றை அறிந்து கொள்வது இந்தக் கட்டுரையை முழுமை பெறச் செய்யும் என எண்ணுகின்றேன்.
1. ‘சுவனத்தில் ரஜப் என அழைக்கப்படும் ஒரு ஆறு உண்டு……’ (பலவீனமான செய்தி.)
2. ரஜப் மாதம் வந்துவிட்டால் ‘யா அல்லாஹ் ரஜப் மற்றும் ஸஃபானில் எமக்கு அருள் புரிவாயாக! எம்மை ரமழானை அடையச் செய்வாயாக!’ எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (பலவீனமான செய்தி.)
3. ‘ரமழானுக்கு அடுத்ததாக ரஜப், ஸஃபான் தவிர்ந்த மாதங்களில் நபி(ச) அவர்கள் நோன்பு நோற்றதில்லை.’ (பாதிலானது. இவ்வாறே ரஜபில் நோன்பு நோற்பது அதன் 27 ஆம் இரவில் 12 ரக்அத்துள்ள அறிவிப்புக்கள் இட்டுக்கட்டப் பட்டவையாகும்.)
இந்த அடிப்படையில் உலமாக்கள் மக்களுக்கு உபதேசம் செய்யும் போது இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கூறாது ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் வந்துள்ள செய்திகளைக் கூறி சரியான வழியில் மக்களை வழி நடத்த முன்வர வேண்டும்.