மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! ‘ஆங்சான் சூகி’ – ‘அசின் விராது’ கொடூரக் கொலைக் களத்தின் கோர முகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்!
ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர்.
ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் அல்லர், வந்தேறிகள் என்று கூறித்தான் இந்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் மியன்மார் அரசும் பௌத்த தீவிரவாதத்தின் மறு வடிவமான 969 அமைப்பும் இரத்த வெறி பிடித்த இனவாதிகளும் அரங்கேற்றி வருகின்றனர்.
இத்தனைக்கும் 788களில் அங்கு இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. 1430 தொடக்கம் 1784 இல் ‘யூதாபாஸ்’ எனும் பௌத்த மன்னனால் அராகான் பகுதி கைப்பற்றப்படும் வரை அங்கு ஓர் இஸ்லாமிய ஆட்சி இருந்தது.
1. சுலைமான் ஷாஹ் – 1430 – 1437
2. அலிஷான் – 1437 – 1459
3. கலிமதுஹாஹ் – 1459 – 1482
4. மன்கூஷாஹ் – 1482 – 1491
5. முஹம்மத்ஷாஹ் – 1491 – 1493
இவ்வாறு தொடராக 48 முஸ்லிம் மன்னர்களால் இஸ்லாமியக் குடியரசாக ஆளப்பட்ட பிரதேசம்தான் இந்த அராக்கான் பகுதியாகும்.
அந்தக் கால அராகான் இஸ்லாமியக் குடியரசால் வெளியிடப்பட்ட நாணயங்களில் ‘லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற இஸ்லாத்தின் அடிப்படையும் ‘மார்க்கத்தை நிலைநாட்டுங்கள்’ என்ற குர்ஆன் வசனமும் அரபு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
350 வருட இஸ்லாமிய ஆட்சி நடந்த பகுதிதான் ரோஹிங்யா முஸ்லிம்கள் வசிக்கும் அராக்கான் பகுதியாகும். 1784 இல் பௌத்த மன்னனால் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்லாமியச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. எட்டு நூற்றாண்டுகள் இஸ்லாமிய ஆட்சி நடந்த ஸ்பெயின் முற்று முழுதாக முஸ்லிம்கள் இல்லாது அழிக்கப்பட்டது போன்று 350 வருட இஸ்லாமிய ஆட்சி நடந்த பகுதியில் வாழும் மக்கள்தான் மியன்மாருக்குரியவர்கள் அல்லர் என அநியாயமாக அழிக்கப்படுகின்றனர். உண்மைதான் அந்த மக்கள் மியன்மாருக்குரியவர்கள் அல்லர். அந்த நிலமும் மியன்மாருக்குரியதன்று.
1824 இல் மியன்மாரைக் கைப்பற்றிய பிரித்தானியா 1937 இல் அராக்கானையும் ஆக்கிரமித்தது 1948 ஜனவரி 04 இல் மியன்மாருக்கு சுதந்திரம் வழங்கும் போது பர்மாவுடன் அராக்கான் பகுதியையும் இணைத்துவிட்டது. ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாருக்குரியவர்கள் இல்லை என்றால் அராக்கான் பகுதியும் மியன்மாருக்குரியதல்ல. அந்த மக்களையும் அந்த நிலப்பரப்பையும் பர்மா அரசு கைவிட வேண்டும். 2012 இல் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற அறிவிப்பின் பின் அம்மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வன்முறைகளை அனுபவித்து வருகின்றனர். மனித உரிமை மீறல்களை அரசே முன்நின்று நடாத்துகின்றது. அம்மக்களின் வாழ்வுரிமை பரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புக்கள் இப்போதுதான் இவர்கள் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்த மக்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பது இதயத்தில் ஈரமுள்ள அனைத்து மனித குலத்தின் மீதுமுள்ள கடமையாகும்.
உலக நாடுகளில் மியன்மாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது இலங்கையில் சில இனவாதிகள் மியன்மாரின் கொடூரக் கொலைகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்து தம்மைத்தாமே அசிங்கப்படுத்திக் கொண்டனர். மியன்மாரில் இருந்து இலங்கை வந்து சட்டபூர்வமாகத் தங்கியுள்ள அப்பாவி அகதிகள் விடயத்தில் அடாவடித்தனமாக நடந்து, பௌத்தம் போதிக்கும் அன்பையும் அகிம்சையையும் குழிதோண்டிப் புதைத்துள்ளனர். காலம் இவர்களுக்குப் பதில் சொல்லும்.
பௌத்தம் அன்பைப் போதிக்கின்றது, அமைதியை வலியுறுத்துகின்றது. ஆனால், பௌத்தத்தின் அடிப்படைப் போதனையைப் புறம் தள்ளிவிட்டு கொடூரங்களை அரங்கேற்றி வரும் பௌத்த துறவி அசின் விராது, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுவிட்டு அநியாயங்களை அரங்கேற்றி வரும் ஆங்சாங் சூகி அரசு என்பவற்றின் மீதான அழுத்தம் அதிகரிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தை விட நாம் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வை நம்புகின்றோம். இஸ்ரவேல் சமூகத்தின் ஆண் குழந்தைகளை அறுத்துக் கொலை செய்த கொடுங்கோலன் பிர்அவ்ன் அழிக்கப்பட்ட இந்த முஹர்ரம் மாதத்தில் அநியாயக்கார அரசின் அழிவுக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி அவன் உதவியைப் பெற்றிட முயற்சிப்போமாக!