பைபிளில் முஹம்மத் (ஸல்) | கட்டுரை.

பைபிளில் முஹம்மத் (ஸல்)

மூஸாவைப் போன்ற தூதர்:
மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் அந்த முன்னறிவிப்புக்குரியவர் யார் என்பதையே இத்தொடரில் விரிவாக ஆராயவுள்ளோம்.

01.
அவர்களுக்காக ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன் என்றுதான் முன்னறிவிப்புச் செய்யப்படுகின்றது. கிறிஸ்தவர்களில் அதிகமானவர்கள் இயேசுவைக் கடவுள் என்று நம்புகின்றனர். அப்படியிருக்கும் போது அவர்கள் இந்த முன்னறிவிப்புக்கு எப்படி உரிமை கோர முடியும்? ஒன்றில் இயேசுவை தீர்க்கதரிசியாக மட்டும் நம்பி அவர் கடவுளோ கடவுளின் தன்மையில் பங்குள்ளவரோ அல்லர் என நம்பிக்கை கொண்டு இந்த உரிமையைக் கோரினால் ஓரளவு நியாயம் இருப்பதாகக் கூறலாம்.

தேவன் தானே வரப்போவதாகக் கூறவில்லை. ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவ தாகத்தான் கூறினார். இயேசுவைக் கடவுளின் குமாரன், கடவுள் தன்மையில் பங்குள்ளவர் என நம்பிக் கொண்டு இந்த முன்னறிவிப்பு இயேசுவைத்தான் குறிக்கும் எனக் கிறிஸ்தவ உலகு நம்புவது முரண்பாடானதாகும்.

02.
அடுத்து மூஸாவைப் போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமூகத்தில் தோன்றுவார் என்று கூறப்படவில்லை. அவர்களின் சகோதரர்களின் மத்தியில் இருந்து தோன்றுவார் என்றுதான் கூறப்படுகின்றது. இஸ்ரவேலர்களின் சகோதரர்கள் இஸ்மவேலர்கள் ஆவர். முஹம்மத் நபி(ச) அவர்கள் இஸ்மவேல் சமூகத்தில் தோன்றிய இறைத்தூதராவார்கள்.

இப்றாஹீம் நபிக்கு இஸ்மாயீல் (இஸ்மவேல்) இஸ்ஹாக் (ஈஸாக்) என இரண்டு மகன்கள் இருந்தனர். ஈஸாக்கின் புதல்வர்தான் யஃகூப் நபி. இவருக்கு 12 ஆண் குழந்தைகள். யஃகூப் நபிதான் இஸ்ராஈல் என அழைக்கப் பட்டார். அவரது குழந்தைகள் பனூஇஸ்ராயீல் என அழைக்கப்பட்டனர். அவர்களின் பரம்பரையினர் தான் இஸ்ராயீல் சமூகம் என அழைக்கப் படுகின்றனர்.

மோஸேயைப் போன்ற இறைத்தூதர் இஸ்ரவேல் சமூகத்தின் சகோதரர்கள் மத்தியில் தோன்றுவார் என்று கூறப்படுகின்றது. இஸ்ரவேல் சமூகத்தின் சகோதரர்கள் இஸ்மவேல் சமூகத்த வராவார்கள். அந்தப் பரம்பரையில் வந்தவர்தான் முஹம்மத் நபி. இந்த அடிப்படையில் இந்த முன்னறிவிப்பு முஹம்மது நபியைத்தான் குறிக்கும். இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த இயேசுவை ஒரு போதும் குறிக்காது.

03.
இயேசு, முஹம்மத், மோஸே ஆகிய தூதர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் முஹம்மத் நபிக்கும் மூஸா நபிக்கும் இடையில்தான் ஒற்றுமைகள் அதிகமாக இருப்பதைக் காணலாம்.

இப்படிப் பார்த்தால் மோஸேவிற்கும் இயேசுவிற்கும் இடையில் பல முரண்பாடுகள் இருப்பதை அறியலாம்.

பணிகள், போராட்டங்கள், வெற்றிகள், சோதனைகள்… என அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மோஸேவுக்கும் முஹம்மது நபிக்கும் மத்தியில் பல ஒற்றுமை இருப்பதை உறுதியாக அறியலாம். இயேசுவே, எனக்குப் பிறகு ஒருவர் வருவார். அவர் நியாயம் தீர்ப்பார். சட்டத்தை நிலைநாட்டுவார் என்று கூறியுள்ளார். இயேசு சட்டத்தை நிலைநாட்டுபவராக அதிகாரம் உள்ளராக இருக்கவில்லை.

‘நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.” (யோவான் 8:50) என்று இயேசுவே கூறியுள்ளார்.

04. மோஸேவைப் போன்ற அந்தத் தூதர் எழுத, வாசிக்கத் தெரியாதவராக இருப்பார்:
‘என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்” என்ற வாசகம் இதை உணர்த்து கின்றது. மூஸா நபிக்கு வேதம் எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டது. முஹம்மத் நபி இது விடயத்தில் மூஸாநபிக்கு மாறுபடுகின்றார். முஹம்மத் நபி எழுத, வாசிக்கத் தெரியாதவர் என்பதால் தேவனின் வார்த்தைகள் அவர் வாயில் அருளப்படும். அதை அவர் சொல்லுவார் என்று கூறப்படுகின்றது.

நபியவர்கள் பற்றி முன்னைய வேதங்களில் எழுத வாசிக்கத் தெரியாத உம்மி நபி என எழுதப் பட்டிருப்பதாகக் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. மோஸேயைப் போன்ற தீர்க்க தரிசி எழுத வாசிக்கத் தெரியாதவர். அதை இந்த முன்னறி விப்புக் கூறுகின்றது.
முஹம்மது நபி எழுத, வாசிக்கத் தெரியாதவராக இருந்தார்கள். ஆனால், இயேசு எழுத, வாசிக்கத் தெரிந்தவராக இருந்தார் என பைபிள் கூறுகின்றது.

‘தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.”

‘அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது,” (லூக்கா: 4:16-18)

இந்தச் செய்தி மூலம் இயேசு எழுத வாசிக்கத் தெரிந்தவர் என்பது உறுதியாகின்றது. மோஸேயைப் போன்ற தீர்க்க தரிசி எழுத வாசிக்கத் தெரியாதவர்என்பதால் அந்த முன்னறிவிப்புக்கு முஹம்மத் நபியே உரித்தான வராவார்.

05. மோஸேவைப் போன்ற இறைத்தூதரின் மார்க்கம் முழுமை பெறும்.
‘நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” என்ற வாசகம் மூலம் இது உணரப்படுகின்றது. இந்த வார்த்தை அவர் இறுதி நபியாக இருப்பார் என்பதையும் உணர்த்துகின்றது. முஹம்மத் நபியின் போதனை முழுமை பெற்றது. அவருக்கு அருளப்பெற்ற அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.

‘இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது பூரணப்படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தையே உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்.” (5:3)

அத்தோடு முஹம்மது நபியும் நானே இறுதித் தூதர், எனக்குப் பின்னர் வேறு ஒரு இறைத்தூதர் வரமாட்டார் எனப் பகிரங்கமாக அறிவித்தார்.

இயேசு இந்த அறிவிப்புக்கு அப்பாற் பட்டவராவார்.

‘என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்வூட்டுவார்.”
(யோவான்: 14:26)

பின்னால் வரும் இறைத்தூதரே அனைத்தையும் உங்களுக்குச் சொல்லுவார் என இயேசு கூறினார். தனது போதனை முழுமை பெறவில்லை என்கின்றார்.

‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்க மாட்டீர்கள்.”

‘சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.” (யோவான் 16:12-13)

பின்னால் ஒரு இறைத்தூதர் வருவார், அவர்தான் அனைத்தையும் சொல்வார் என இயேசு கூறுகின்றார். இயேசுவின் போதனை முழுமை பெறவில்லை என அவரே கூறுகின்றார். முஹம்மத் நபியின் போதனை முழுமை பெற்றது என குர்ஆன் கூறுகின்றது. மோஸேயைப் போன்ற தூதர் கடவுள் கூறிய அனைத்தையும் கூறுவார் என பைபிள் கூறுவதனால் அந்த முன்னறிவிப்புக்கு நபியே பொருத்தமானவர் இயேசு அதற்குரியவர் அல்ல என்பது உறுதியாகின்றது.

06. முன்னறிவிக்கப்பட்ட மூஸாவைப் போன்ற அந்த நபியின் போதனைக்கு கட்டுப்படாதவர்கள் கண்டிக்கப்படுவார்கள் என அந்த முன்னறிவிப்புக் கூறுகின்றது.
‘என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.” (உபகாமம் 18:19)

இங்கு பல விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். என் நாமத்தினாலே அவர் சொல்லுவார் என்பது ஒரு விடயம். முஹம்மது நபி ‘பிஸ்மில்லாஹ்” அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன் என்று கூறித்தான் அவரது போதனையைச் செய்தார். குர்ஆனின் 113 அத்தியாயங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கவும் படுகின்றன. அடுத்து, அவர் சொல்லும் செய்தி என் வார்த்தை என தேவனால் கூறப்படுகின்றது. முஹம்மது நபி போதித்த குர்ஆன் ‘கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் பேச்சு, வார்த்தை என்றே அழைக்கப்படுகன்றது. (2:75, 9:6)

அவர் செய்யும் போதனைக்கு செவி கொடாதவர்கள் கண்டிக்கப்படுவார்கள் என்று இங்கு கூறப்படுகின்றது. முஹம்மது நபியின் போதனைக்கு செவி கொடாதவர்கள் தோல்வி அடைந்து இழிவடைந்தார்கள். ஆனால், இயேசுவின் போதனைக்கு செவி கொடாதவர்கள் தண்டிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப் பிரகாரம் இயேசுவே தண்டிக்கப் பட்டார். இப்படியிருக்க மூஸா நபியைப் போன்ற இறைத்தூதரின் அடையாளத்துக்கு இயேசு முற்றிலும் முரண்படுவதால் இது இயேசுவைக் குறிக்கும் என எப்படிவாதாட முடியும்?

தொடர்ந்து வரும் பகுதியில் உண்மை யான தீர்க்க தரிசியை எப்படி அடையாளம் காணலாம் என்று கூறப்படுகின்றது. ஒரு தீர்க்கதரிசி சொன்ன முன்னறிவிப்பு நடக்காமல் போனால் அவர் உண்மையான தீர்க்கதரிசி அல்லர். அவர் சொன்னது கர்த்தர் சொன்னதும் அல்ல என்று கூறப்படுகின்றது. முஹம்மது நபி சொன்ன எத்தனையோ முன்னறிவிப்புக்கள் நடந்து முடிந்துவிட்டன. மற்றும் பல நடந்து கொண்டிருக்கின்றன. மற்றும் பல நடக்க இருக்கின்றன.

கிறிஸ்தவ உலகம் இதை கவனத்தில் கொண்டு இந்த இறைத் தூதரை ஏற்கக் கூடாதா? பைபிள் முன்னறிவிப்புச் செய்த இந்தத் தூதரை ஏற்க மறுப்பது பைபிளையே புறக்கணிப்ப தாகும். ‘உங்களை விட மூஸா நபி விடயத்தில் நானே மிகவும் உரிமையுடையவனாவேன்” (புஹாரி) என முஹம்மது நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தத் தூதரைப் புறக்கணித்து தேவனால் தண்டிக்கப்படுவதையா கிறிஸ்தவ உலகம் விரும்புகின்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.