பெண்ணே பெண்ணே! – (தொடர் 9)

பெண்ணே! பெண்ணே! அநியாயம் வேண்டாம் கண்ணே!
பெண்ணின் அன்பு, பாசம் காரணமாகவும் அவள் அநியாயக்காரியாக மாறும் நிலை ஏற்படுகின்றது. தன் பிள்ளை மீது கொள்ளும் பாசத்தின் காரணமாக அடுத்த பிள்ளைகளுக்கு அநியாயம் செய்கின்றாள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதி, நியாயமாகப் பேச வேண்டும் என்பதை மறந்து தனது பிள்ளையின் தவறை மறைத்துப் பேசுகின்றாள். அடுத்த பிள்ளைகளின் சின்னத் தவறையும் பூதாகரமாக்கிக் காட்ட முயற்சிக்கின்றாள்.

கணவன் மீதுள்ள பாசத்தால் கூட பெண் இப்படி நடந்து கொள்வதுண்டு. பக்கச்சார்பு என்பது பெண்ணின் பிறவிக் குணம் போன்றே ஆகிவிட்டது.
திருமணம் தொடர்பில் பெண்களின் அநியாய முகம் அகோரமாகக் காட்சியளிப்பதைச் சமூகத்தில் காணலாம்.
ஒரு ஆண் பலதாரமணம் புரிந்திருந்தால் முதல் மனைவி இரண்டாம் மனைவிக்கு அநியாயம் செய்து, எப்படியாவது இருவரையும் பிரித்துவிட சதி செய்வதைக் காண்கின்றோம். சில போது இரண்டாம் மனைவி முதல் மனைவியை அந்தரத்தில் விட்டுவிட்டுத் தன் கணவன் தன்னோடு மட்டும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றாள். இதனால் முதல் மனைவி மட்டுமன்றி அவளது குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வரும் நிகழ்வுகளை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.
இவ்வாறே ஒருவன் தனது மனைவி இறந்த பின்னர் அல்லது விவாகரத்தான பின்னர் இன்னொரு திருமணம் முடித்தால் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவள் முதல் தாரத்தின் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதைக் காண்கின்றோம். அவர்களை வேலைக்காரக் குழந்தைகள் போன்று நடாத்துவதையும் முறையாக உண்ணக் கொடுக்காமல், நிம்மியாகத் தூங்கவிடாமல் அநியாயம் செய்கின்றாள். சில வேளை அவளுக்கு இவரை முடிக்கும் முன்னர் வேறு திருமணம் முடித்திருந்து குழந்தையும் இருந்து விட்டால் இந்தப் பிள்ளைகளின் பாடு பெரும்பாடுதான். இதனால் சிலர் மனைவி மரணித்து விட்டால் விபச்சாரம் செய்தாலும் பரவாயில்லை வேறு திருமணம் முடித்துவிடக் கூடாது என எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிலவேளை முதலாம் தாரத்தின் பிள்ளைகள் பெரிய பிள்ளைகளாக இருந்தால் தமது தந்தையின் இரண்டாம் தாரத்தை அவர்கள் இம்சிப்பதையும் கூட காணமுடிகின்றது. இந்த சூழ்நிலைகளிலெல்லாம் பெண்ணின் அநியாய முகம் ஆக்ரோசமாகக் காட்சியளிக்கும்.
பெண்ணிடம் இருக்கும் இன்னொரு நீதியற்ற அல்லது அநியாய முகம்தான் ஒருவரைப் புகழ்வதாக இருந்தாலும், இகழ்வதாக இருந்தாலும் அதில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதில்லை. தமக்கு விருப்பமானவர்களின் குறைகளைக் கண்டு கொள்ளாமல் புகழ்ந்து தள்ளுவர். தமக்குப் பிடிக்காதவர்களின் நிறைகளை நினைத்துப் பார்க்காமலேயே இகழ்ந்து தள்ளுவர். இதனால் இவர்கள் அடிக்கடி கட்சி மாறும் சூழ்நிலை ஏற்படுகின்றது.
தனது சகோதரி பக்கத்து வீட்டுக்காரியோடு கோபம். அதனால் தானும் அவளுடன் கோபம். அவள் பக்கத்து வீட்டுக்காரியோடு கோபித்துக் கொண்டால் தனது பிள்ளைகளும் அவளுடன் கோபித்துக் கொள்ள வேண்டும். அவர்களது வீட்டுக்குப் போகக் கூடாது. அத்துடன் பிரச்சினை நின்றுவிடாது. அந்த வீட்டுக்கும் போகக் கூடாது. அவர்களுடைய பிள்ளைகளுடனும் விளையாடக் கூடாது என்று சட்டம் போடுவர். ஏன் தமது தாய் அடிக்கடி இப்படி மாறுகின்றாள் என்பதை அறியலாமலேயே அந்தப் பிஞ்சுகள் பெற்றோர் சொல்லை முழுமையாகக் கேட்கவும் முடியாமல், தட்டவும் முடியாமல் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் பெற்றோருக்குத் தெரியாமல் விளையாடுவார்கள், உறவை வளர்ப்பார்கள். தமக்குள் ஏற்பட்ட கோபத்திற்காகப் பிஞ்சு உள்ளங்களில் எதற்காக நஞ்சை ஊற்ற வேண்டும்?
தமக்கு நெருக்கமானவர்கள் அடுத்தவர்களுடன் பகைத்துக் கொண்டால் அதற்கான காரணத்தைப் பார்க்க வேண்டும். அதில் யார் பக்கம் நியாயம் இருக்கின்றது என்று அவதானிக்க வேண்டும். நமக்கு வேண்டியவர்களிடத்தில் நியாயம் இல்லையென்றால் அவர்களுக்கு எந்த வகையிலும் நாம் ஒத்துழைக்கக் கூடாது.
‘அநியாயம் செய்தோர் பக்கம் நீங்கள் சாய்ந்து விட வேண்டாம். (அவ்வாறெனில்) நரகம் உங்களைத் தீண்டும். அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவரும் இல்லை. பின்னர் நீங்கள் உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.’ (11:113)
அநியாயத்திற்குத் துணை போவது நரகம் சொல்வதற்குக் காரணமாக அமையும் என இந்த வசனம் கூறுகின்றது.
‘மஸ்ஜிதுல் ஹராமுக்குச் செல்லவிடாது உங்களைத் தடுத்த ஒரு கூட்டத்தாரின் மீதுள்ள வெறுப்பு (அவர்கள் மீது) வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்டவேண்டாம். நன்மை செய்வதிலும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள். மேலும், பாவம் செய்வதிலும், வரம்பு மீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்காதீர்கள். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாவான்.’ (5:2)
எனவே, அநியாயத்திற்கும், அக்கிரத்திற்கும் துணை போய்விடக் கூடாது என்பதில் அவதானம் தேவை.
‘உனது சகோதரன் அநியாயம் செய்திருந்தாலும் அவனுக்கு உதவி செய் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபியவர்களிடம் அநியாயத்திற்குட்பட்டவர்களுக்கு உதவுவது நியாயம். அநியாயக்காரனுக்கு எப்படி உதவுவது, என்று கேட்டபோது ‘அநியாயம் செய்பவனை அநியாயம் செய்வதை விட்டும் தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி’ என்று கூறினார்கள்.’ (புஹாரி: 6952) எனவே, உங்களுக்கு வேண்டியவர்கள் அநியாம் செய்ய உதவாதீர்கள். அவர்களை அநியாயத்தை விட்டும் தடுங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உதவியாகும்.
பெண்களில் சிலர் தான் பெற்ற பிள்ளைகளுக்கே அநியாயம் செய்பவர்களாக உள்ளனர். மருமகளுக்கு, மாமிக்கு, உடன் பிறந்த சகோதர – சகோதரிகளுக்கு, கணவன் குடும்பத்தினருக்கு, கணவனின் மறு மனைவிகளுக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு, அண்டை அயவர்களுக்கு என சிலரது அநியாயப் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதுண்டு. இவர்கள் தமது வாழ்நாளில் தாம் சில அநியாயங்களுக்கும், அவமதிப்புக்களுக்கும் ஆளானபோது தமது மனம்பட்ட கஷ்டங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். இதைச் சிந்தித்தாவது அநியாயத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முனைய வேண்டும்.
அநியாயம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அல் குர்ஆனும், ஹதீஸும் எச்சரிக்கின்றன. இந்தத் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமென்றால் நாம் யாருக்கு அநியாயம் செய்தோமோ அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கோர வேண்டும். அடுத்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
‘தனது அநியாயத்தின் பின் எவர் பாவமன்னிப்புத் தேடி, (தன்னைச்) சீர்செய்து கொள்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரை மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாவான்.’ (5:39)
தௌபாச் செய்து தன்னை சீர் செய்து கொள்கின்றவர்களுக்கு மன்னிப்பு உண்டு என இந்த வசனம் கூறுகின்றது. இல்லையென்றால் நாளை மறுமையில் இதற்காகவும் பரிகாரம் காண நேரிடும்.
‘ஒருமுறை நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து ‘அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாகப் போனவன் யார் என்று தெரியுமா’ எனக் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘யாரிடத்தில் ஒரு தீனாரோ, திர்ஹமோ இல்லையோ அவர்தான் ஓட்டாண்டி என்று கூறினர்’ அதற்கு நபியவர்கள் ‘அனைத்தையும் இழந்த ஓட்டாண்டி அவன் அல்ல. நாளை மறுமையில் ஒருவன் தனது தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களோடு வருவான். அப்போது சிலர் வந்து இவன் எனது செல்வத்தை எடுத்தான், இவன் என்னை அடித்தான் என முறைப்பாட்டை முன்வைப்பார்கள். இவனது நன்மையை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அதற்குப் பின்னரும் சிலர் வந்து என்னைப் பற்றிப் பொய் சொன்னான், அவதூறு சொன்னான் என்றெல்லாம் முறைப்பாடு வைப்பார்கள். இப்போது இவனிடம் நன்மைகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களது பாவத்தை எடுத்து இவன் மீது போடப்பட்டு இவன் நரகத்தில் வீசப்படுவான். இவன்தான் உண்மையான ஓட்டாண்டியாவான் எனக் கூறினார்கள்.’
சகோதரிகளே!
செய்த அநியாயங்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயமாக மறுமையில் கணக்குத் தீர்க்கப்படும். அடுத்தவர்கள் பற்றி சொன்ன பொய்கள், அவதூறுகள், செய்த அநியாயங்கள் என அனைத்துக்கும் நிச்சயம் மறுமையில் கணக்குத் தீர்க்கப்படும். அது விசாரணை நாள். எந்தக் குற்றத்தையும் மறைக்க முடியாத நாள். அந்த நாளில் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அநியாயம் வேண்டாம் கண்ணே! செய்த அநியாயங்களுக்கு இன்றே, இப்போதே உரியவர்களிடம் மன்னிப்புக் கேட்டு உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.