வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள்:
வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம்.
ஒரு ரக்அத்து:
வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர்.
‘இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள்.” (புஹாரி:472)
‘இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். முஆவியா(ரழி), தம்மிடம் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் சென்றார். (முஆவியா(ரழி) அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ்(ரழி), ‘அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்” என்று கூறினார்கள்.”
(புஹாரி: 3764)
‘இரவின் இறுதியில் தொழப்படும் ஒரு ரக்அத்தே வித்ராகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி)
ஆதாரம்: முஸ்லிம் 752-153
இந்த அறிவிப்புக்களின் அடிப்படையில் வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதை அறியலாம்.
எனினும், இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் வித்ர் மூன்றுக்குக் குறைய தொழ முடியாது என்ற கருத்தில் இருக்கின்றார்கள். ‘மஃரிப் என்பது பகலின் வித்ராகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அஹ்மத்: 4847)
இங்கே மஃரிப் தொழுகை வித்ருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மஃரிப் மூன்று ரக்அத்துக் களை உடைய தொழுகை. எனவே, வித்ர் தொழுகை மூன்று ரக்அத்துக்களுக்குக் குறைவாக இருக்கக் கூடாது என்பது அவரது வாதமாகும்.
நாம் ஏற்கனவே கூறிய ஆதாரங்கள் வெளிப்படையாகவே வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் எனக் கூறும் போது இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் ஒப்பீட்டின் அடிப்படையில் எடுத்த இந்தத் தீர்மானம் பலவீனமாகிவிடுகின்றது என்பதை நாம் அறியலாம்.
மூன்று ரக்அத்து வித்ர் தொழுதல்:
மூன்று ரக்அத்துக்களும் வித்ர் தொழலாம். வித்ர் மூன்று ரக்அத்துக்கள் தொழும் போது பின்வரும் இரண்டு அடிப்படைகளில் தொழப்படும்.
1. இரண்டு ஸலாம்களில் தொழுதல்:
முதலில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு மீதி ஒரு ரக்அத்தை தனியாகத் தொழுதல்.
‘நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர் (ரழி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளை யிடுவார்கள்.” (புஹாரி: 991)
இங்கே இது இப்னு உமர் (ரழி) அவர்களின் நடைமுறையாகக் கூறப்படுகின்றது. இப்னு உமர் (ரழி) அவர்கள் சுன்னாவைப் பேணுவதில் அதிக அக்கறை கொண்ட நபித்தோழராகத் திகழ்ந்தவர் என்பதை அனைவரும் அறிவர். அவரின் இந்த நடைமுறை இப்படியும் தொழலாம் என்பதற்கான அனுமதி இருப்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது எனலாம்.
இதே வேளை, நபி(ஸல்) அவர்கள் இப்படித் தொழுவார்கள் என இப்னு உமர்(ரழி) அவர்களே அறிவிக்கவும் செய்கின்றார்கள். இரட்டைத் தொழுகைக்கும் ஒற்றை வித்ர் தொழுகைக்கும் இடையில் நாம் கேட்கக் கூடிய ஸலாத்தின் மூலம் நபி(ஸல்) அவர்கள் பிரிவை ஏற்படுத்துவார்கள் என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம்: இப்னு ஹிப்பான்: 2435,) அஹ்மத்
அறிஞர் அல்பானி இதனை ஸஹீஹ் என்கின்றார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இரண்டிரண்டாகத் தொழுது இறுதியில் ஒரு ரக்அத்து மட்டும் தொழும் விதத்திலும் வித்ர் தொழலாம். மூன்று ரக்அத்துக்கள் தொழுபவர்கள் முதலில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு தனியாக ஒரு ரக்அத்தையும் தொழலாம் என்பதை அறியலாம்.
2. மூன்று ரக்அத்துக்களையும் ஒரு ஸலாம் ஒரு அத்தஹிய்யாத்து மூலம் தொழுதல்:
இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்துக்காக அமராமல் மூன்றாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்வர்.
‘அபூ ஸலமா அறிவித்தார். ரமழானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத நாட்களிலும் பதினொரு(11) ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள் என்றும் ஆயிஷா(ரழி) கூறினார்கள். ” (புஹாரி: 1147, 2013, முஸ்லிம்: 738-125, அபூதாவூத்: 1341)
இங்கே நபி(ஸல்) அவர்கள் வித்ர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
‘நபி(ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்துக்கள் மூலம் வித்ர் தொழுவார்கள். அதன் இறுதியில் அன்றி (அத்தஹிய்யாத்துக்காக) அமர மாட்டார்கள்” என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம்: இப்னு ஹிப்பான்: 2439, 2440)
இந்த அடிப்படையில் மூன்று அல்லது ஐந்து ரக்அத்துக்கள் தொழும் போது இடையில் அத்தஹிய்யாத்துக்காக அமராமல் இறுதியில் ஓதும் அத்தஹிய்யாத்துடன் மட்டும் தொழுகையை முடித்துக் கொள்ள வேண்டும்.
வித்ர் தொழுகையை மஃரிப் போல் ஆக்கிக் கொள்ள வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, மூன்று ரக்அத்துக்கள் வித்ர் தொழும் போது இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்துக்காக அமரக் கூடாது! ஏற்கனவே கூறியது போல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு ஸலாம் கொடுத்து மீதி ஒரு ரக்அத்து தொழலாம். அல்லது நடு அத்தஹிய்யாத்துக்கு அமராமல் மூன்றாம் அத்தஹிய்யாத்தில் மட்டும் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்கலாம். இதுதான் மிகவும் ஏற்றமானதாகும்.
என்ன ஓதலாம்?
மூன்று ரக்அத்துக்கள் வித்ர் தொழும் போது முதல் ரக்அத்தில் பாதிஹாவுக்குப் பின்னர் ஸப்பி ஹிஸ்ம…வும், இரண்டாம் ரக்அத்தில் குல் யா அய்யுஹல் காபிரூனும், மூன்றாம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹத்… சூறாவும் ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
ஐந்து ரக்அத்துக்கள்:
ஏற்கனவே நாம் கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் ஐந்து ரக்அத்துகள் வித்ர் தொழுவதாக இருந்தால் இறுதியில் மட்டும் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும். இடையில் அத்தஹிய்யாத்துக்காக அமர வேண்டியதில்லை.
ஏழு ரக்அத்துக்கள்:
ஏழு அல்லது ஒன்பது ரக்அத்துக்களும் வித்ர் தொழலாம். இவ்வாறு தொழும் போது கடைசிக்கு முந்திய ரக்அத்தில் அத்தஹிய்யாத் துக்காக அமர்ந்து அத்தஹிய்யாத்து ஓதிய பின்னர் எழுந்து ஒரு ரக்அத்தை தொழுது அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும். ஏழு தொழுபவர் ஆறிலும், ஏழிலும், ஒன்பது தொழுபவர் எட்டிலும், ஒன்பதிலும் அத்தஹிய்யாத்து ஓத வேண்டும்.
இதற்கு ஆயிஷா(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பு ஆதாரமாக அமைந்துள்ளது.
”முஃமின்களின் தாய் அவர்களே! நபி(ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்று ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்டேன்.
‘நபி(ஸல்) அவர்கள் பல் துலக்க மிஸ்வாக்கையும், சுத்தம் செய்ய நீரையும் ஏற்பாடு செய்து வைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் எப்போது விழிக்கச் செய்ய நாடுகின்றானோ அப்போது அவர்கள் எழும்புவார்கள். பின்னர் பல் துலக்கி வுழூச் செய்வார்கள். பின்னர் ஒன்பது ரக்அத்துக்கள் தொழுவார்கள். எட்டாம் ரக்அத்தில்தான் (அத்தஹிய்யாத்துக்காக) அமர்வார்கள். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, அவனைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்திப்பார்கள். பின்னர் எழுந்து ஒன்பதாம் ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து அவனைப் புகழ்ந்து , அவனைப் பிரார்த்திப்பார்கள். பின்னர் எமக்குக் கேட்கும் படி ஒரு ஸலாம் கொடுப்பார்கள்.”
அறிவிப்பவர்: ஹிஸாம் இப்னு அமீர்(ரஹ்)
ஆதாரம்: முஸ்லிம்- 746-139, தாரமி- 1620, நஸாஈ- 1718
வித்ருக்கு முன்னர் கியாமுல் லைல் தொழுதாக வேண்டுமா?:
வித்ர் தொழுவதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரண்டு ரக்அத்துக்களாவது தொழுதிருக்க வேண்டும் என்ற கருத்து மாலிக் மற்றும் ஹனபி மத்ஹபுடைய அறிஞர்களுக்கு மத்தியில் இருக்கின்றது. எனினும், ஒருவர் வித்ருக்கு முன்னர் எதுவும் தொழாமலே வித்ர் தொழலாம் என்பதே சரியான கருத்தாகும்.
‘நான் தூங்கிக் கொண்டிருப்பேன். நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் வித்ர் தொழ நாடும் போது என்னை எழுப்பிவிடுவார்கள். நான் வித்ர் தொழுவேன் என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.”
ஆதாரம்: புஹாரி 512, 997, முஸ்லிம்-512-268
இந்த ஹதீஸை வெளிப்படையில் பார்க்கும் போது ஆயிஷா(ரழி) அவர்கள் வித்ருக்கு முன்னர் எதுவும் தொழவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
தொழவில்லை என்பதைப் புரியவும்:
இவ்வாறே நாம் ஏற்கனவே குறிப்பிட்ட, நபி(ஸல்) அவர்கள் ஒன்பது, ஏழு ரக்அத்துக்கள் வித்ர் தொழும் ஹதீஸ்களைப் பார்க்கும் போதும் வித்ருக்கு முன்னர் இரட்டைப்படையாக ஏதேனும் தொழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்பதை அறியலாம்.