குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு
“உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.
நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.
மற்றும் சிலர் சட்டம் இருக்கின்றதோ இல்லையோ பாசத்தின் பெயரில் குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாதிருந்து விட்டு தவறுகள் பெருத்த பின்னர் கவலைப்படுகின்றனர்.
இது இப்படியிருக்க, குழந்தைகளைத் தண்டிக்கும் சிலர் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். குழந்தைகளை நல்வழிப் படுத்தல் என்பதுதான் தண்டனையின் நோக்கம். தண்டிக்காமலேயே வழிகாட்டுவதன் மூலம் அந்த இலக்கை அடையமுடியுமாக இருந்தால் தண்டனை இல்லாமலேயே நல்லுபதேசத்தின் மூலமே அடைய முயற்சிக்க வேண்டும்.
சிலர் தமது கோபத்தைத் தீர்ப்பதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கையில் கிடைத்ததை எடுத்து தண்டிக்கின்றனர். இல்லையில்லை தாக்குகின்றனர். இது குழந்தைகளை நல்வழிக்குட்படுத்துவதற்குப் பதிலாக மனரீதியில் பாதிப்படையச் செய்யலாம். வீட்டை விட்டு வெருண்டோட வைக்கலாம். போதை, தீய நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் போன்ற தவறுகளுக்கு உள்ளாக்கலாம். இத்தகைய தண்டனை முறையை இஸ்லாமும் ஏற்காது. இதயத்தில் ஈரமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். எனவே தண்டித்தல் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குதல் நல்லதெனக் கருதுகின்றேன்.
1. கோபத்தில் இருக்கும் போது தண்டிக்காதீர்கள்:
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பார்கள். அதனால்தான் கோபப்பட்டவர் வீட்டில் பொருட்களை, கண்ணாடியை யெல்லாம் உடைப்பதைப் பார்க்கின்றோம். கோபத்தில் நாம் பேசினால் நமது பேச்சு சரியாக இருக்காது. தண்டித்தால் அது நியாயமாக இருக்காது. சின்னக் குற்றத்திற்குப் பெரிய தண்டனையளித்து அநியாயம் செய்துவிடுவோம். எனவே, உங்கள் கோபம் தணியும் வரையும் இருந்து நீங்கள் நிதானத்திற்கு வந்த பின்னர் நிதானமாகத் தண்டியுங்கள்.
நமது பெற்றோர்கள் சிலரின் செயற்பாடு ஆச்சர்யமாக இருக்கின்றது. மூத்தவன் இளையவனைத் தள்ளிவிட்டான். இளையவனின் தலையில் இரத்தம் வடிகின்றது. பாதிக்கப்பட்ட இளையவனைக் கவனிப்பதற்கு முன்னர் மூத்தவனுக்கு நாலு மொத்து மொத்தாவிட்டால் இவர்களுக்கு ஆத்திரம் அடங்காது. இதனால் தவறு செய்த பிள்ளை அடிக்குப் பயந்து ஓடி வேறு பிரச்சினைகளைத் தேடிக் கொண்டு வருகின்றது. பிறகு இரு குழந்தைகளுக்குமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு!
எனவே, தண்டிப்பதிலும் நிதானமும் நியாயமும் தேவை. எனவே, கோபத்தில் இருக்கும் போது தண்டிப்பதைத் தவிருங்கள். நிதானமான நிலையில் தண்டியுங்கள். கோபம் அடங்கிய பின்னர் எப்படி தண்டிப்பது என்று கேட்கின்றீர்களா? குழந்தை இதன் பிறகு இந்தத் தவறை செய்யக் கூடாது என்று உணரும் அளவுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்து வதற்காகத் தண்டியுங்கள். கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தண்டிப்பதென்றால் அது முறையான தண்டனையல்ல.
2. சதா தண்டிக்காதீர்கள்:
சில பெற்றோர் எப்போதுமே பிள்ளைகளை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். சதாவும் தண்டித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு நடந்து கொண்டால் எமது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு எழாது. தவறில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் உண்டாகும். வெளியிடத்தில் கூட தவறு செய்து அடிவாங்குவது அவர்களுக்குப் பெரிய பாதிப்பாகத் தெரியாது. நாம் வாங்காத அடியா, கேட்காத ஏச்சா என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் வாழ்நாளிலேயே திருந்தமாட்டார்கள். எனவே, எப்போதாவது ஏதாவது பெரிய தவறுகளுக்காக மட்டும் தண்டியுங்கள். சின்னச் சின்னப் பிழைகளைத் திருத்துங்கள். அப்போது அடியென்றால் பயப்படுவார்கள். ஏச்சு என்றால் கூச்சப்படுவார்கள்.
3. வன்முறை வேண்டாம்:
குழந்தைகளைக் கண்டிக்கும் போது காயம் ஏற்படாவண்ணம் இலேசாகத் தண்டிக்க வேண்டும். கல் மனதுடன் நடந்து கொள்ளக் கூடாது. என் பெற்றோர் தண்டித்தாலும் என்னுடன் பாசத்துடன்தான் இருக்கின்றனர் எனக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். கடுமையான தாக்குதல்களால் குழந்தைகள் குடும்பத்தின் எதிரிகளாக மாறுவர். தகாத உறவுகளை ஏற்படுத்தி தம்மைத் தண்டித்த பெற்றோர்களை இழிவுபடுத்துவர்.
4. தண்டித்தல் என்பது இறுதி முடிவாக இருக்கட்டும்:
எடுத்ததற்கெல்லாம் அடிக்காமல் புத்தி சொல்லுங்கள். சிலபோது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துங்கள். சிலபோது அவர்களது தவறுகளால் நீங்கள் வருத்தப்படுவதை நடைமுறையில் காட்டுங்கள். பிள்ளை தானாக மனம் இறங்கி நான் செய்த தவறால் பெற்றோர்கள் வருந்துகின்றார்கள் என்று தன்னை மாற்றிக் கொள்ளலாம். இவையெல்லாம் பலனளிக்காத போது இலேசாக அடியுங்கள். எடுத்ததும் கடுமையாகத் தாக்கி விடாதீர்கள்.
5. தண்டிப்பதிலும் நீதி நியாயம் வேண்டும்:
தவறுக்கு ஏற்ற தண்டனையே வழங்க வேண்டும். தண்டனை முறையில் கூட பிள்ளை படிப்பினை பெற வேண்டும். மகன் தவறுதலாக ஒரு கோப்பையை உடைத்துவிட்டான். இதற்காக தந்தை அடிக்கிறார். அதே மகன் ஒரு ஹறாத்தைச் செய்துவிட்டான். இப்போது கோப்பைக்காக அடித்ததை விட குறைவாக அடி என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஹறாத்தைச் செய்வதை விட கோப்பையை உடைத்ததைத்தான் எனது தந்தை பாரதூரமாகக் கருதுகின்றார் என்ற எண்ணத்தையும் குழந்தையின் உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றோம். இது எவ்வளவு பெரிய தவறு என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே, தண்டனை நீதியானதாக, நியாயமானதாக, தவறின் அளவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
6. தண்டனையை சேமிக்காதீர்கள்:
சில பெற்றோர் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பார்கள். நாலைந்து தவறுகளை ஒன்றாக சேர்த்து எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக அடிப்பார்கள். இது குழந்தைகளுக்கு அதிக வேதனையைக் கொடுக்கும். எல்லாத் தவறுக்குமாகக் கிடைக்கும் அடியெனப் பார்க்காமல் ஒரு தவறுக்கு இப்படி அடிக்கிறார்களே என பெற்றோர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவர். எனவே தவறுக்கு அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் தவறு நடந்தவுடன் அடித்து அதை அந்த இடத்திலேயே மறந்துவிட்டு சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.
7. நிரபராதிகளைத் தண்டிக்காதீர்கள்:
குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்புவதற்காகப் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களை மாட்டி விடுவார்கள். ஒரு தவறு நடந்து பின்னர் தான் தப்ப வேண்டும் என்பதற்காக அடுத்தவரை மாட்டிவிடுவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றத்தைக் குறித்த நபர் செய்தது உறுதியாகாத வரை தண்டிக்கக் கூடாது. தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்டால் குழந்தைகளின் உள்ளம் நொறுங்கிப் போகும். குறித்த நபர் தவறு செய்தது உறுதியாகாத சந்தர்ப்பங்களில் பொதுவாகப் புத்தி சொல்வதோடு விட்டுவிட வேண்டும். நிரபராதியைத் தண்டித்துவிட்டால் குழந்தையென்று பார்க்காமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.
8. மறதி, தவறுதல், நிர்ப்பந்த நிலை என்பவற்றை மன்னியுங்கள்:
தவறுதலாக அல்லது மறதியாக இடம்பெறும் தவறுகள் அல்லது நிர்ப்பந்த நிலையில் நிகழும் குற்றங்களுக்கு மன்னிப்பு அளியுங்கள். அல்லாஹ் இத்தகைய நிலைகளை மன்னித்துள்ளான். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் புத்தி சொல்வதுடன் விட்டுவிடுங்கள்.
9. உற்சாகத்திற்கு தண்டனையா?
சில பெற்றோர் பிள்ளைகள் ஓடியாடி விளையாடும் போது எரிச்சல்பட்டு பேசாம ஒரு இடத்தில இரு என்று கண்டிப்பார்கள். குழந்தைகள் என்றால் ஓடியாடி விளையாடத்தான் செய்வார்கள். இதையெல்லாம் தவறு என்று தண்டிக்கக் கூடாது. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை ஒழுங்குபடுத்துங்கள்.
10. பிரச்சினைகளைக் கவனிக்காமல் தண்டிக்காதீர்கள்:
ஒரு பாடத்தில் குழந்தை குறைந்த புள்ளி எடுத்துள்ளது அல்லது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறவில்லை போன்ற சந்தர்ப்பத்தில் குழந்தையை வையாதீர்கள். குழந்தையின் பின்னடைவுக்கு குழந்தை மட்டும் காரணமாக இருக்காது. ஆசிரியரின் குறை இருக்கலாம். பாடம் முறையாக நடக்காதிருந்திருக்கலாம். மற்றவர்கள் விட்ட குறைக்கு குழந்தைகள் தண்டிக்கப்படலாமா? எனவே, குழந்தையின் குறையில் அடுத்தவருக்கும் பங்கு இருக்கும் போது அல்லது குழந்தையிடம் மானசீகப் பிரச்சினைகள் இருக்கும் போது குழந்தையைத் தண்டிக்காமல், ஏசாமல் நீங்கள் பிரச்சினையை இணங்கான முயற்சியுங்கள். பின்னர் குழந்தையை நெறிப்படுத்துங்கள்.
11. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டிக்காதீர்கள்:
குழந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டு இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று கூறினால் தண்டிப்பதை விட்டுவிடுங்கள். அதே போன்று அல்லாஹ்வுக்காக அடிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டால் அடிப்பதை நிறுத்திவிடுங்கள். தண்டிப்பது என்பது இனி இது போன்ற தவறைச் செய்யக் கூடாது என்று உணர்த்துவதற்காகத்தான். பிள்ளையே இனி இப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிய பின் தண்டனை தேவையில்லையல்லவா?
இது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு தண்டிப்பின் உண்மையான பயனை அடைந்து கொள்ள முயல்வோமாக!