அனுராதபுர ஷியார உடைப்பு முதல் இன்றுவரை முஸ்லிம்கள் பல்வேறுபட்ட இனவாத செயற்பாடுகளையும் அது தொடர்பில் அரசின் அசமந்தப் போக்கையும் கண்டு மனம் நொந்து போயுள்ளனர். கூட்டங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எனக் களைத்துப் போயுள்ளனர். மன ரீதியாக முஸ்லிம்கள் பெரும் உளைச்சலுக்கும் சோர்வுக்கும் உள்ளாகியுள்ளனர்.
எனவே, முதலில்,
1. முஸ்லிம்களுக்கு மன ஆறுதல் தரக்கூடிய விதத்தில் எமது பேச்சு, எழுத்து, செயற்திட்டங்களை அமைக்க வேண்டியுள்ளது. இந்த வகையில் உலமாக்களும் இயக்கங்களும் அச்சமூட்டும் உரைகளையும் உபதேசங்களையும் குறைத்து ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டும் வழிமுறைகள் பக்கம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
2. அச்சம் தவிர்ப்போம்:
ஷ இது அச்சப்பட வேண்டிய சந்தர்ப்பம்தான். அச்சப்படும் சந்தர்ப்பத்தில்தான் அஞ்சாதே! என்று கூற வேண்டும்.
நபி(ச) அவர்கள் குகையில் இருந்த போது கவலைப்படாதே! அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான் என்று கூறிய உபதேசம் இன்று இலங்கை முஸ்லிம்களுக்குத் தேவையாக இருக்கின்றது.
3. பத்தாயிரம் எதிரிகள் அணிதிரண்டு மதீனா நோக்கி வருகின்றார்கள் என்று முனாபிக்குகள் அச்சமூட்டிய போது அது முஃமின்களுக்கு ஈமானை அதிகரித்தது. “ஹஸ்புனல்லாஹ் வனிஃமல் வகீல்!” என்றே கூறினார்கள்.
எனவே, அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டும் பக்குவத்தை ஏற்படுத்துவோம். முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாதுள்ளது.
4. பிரிந்திருந்து முஸ்லிம்கள் இதன் மூலம் ஒன்றுபடும் வாய்ப்பை அல்லாஹ் தந்துள்ளான். இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அனைவரும் ஒருமுகப்பட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைப் பலப்படுத்தி எமது செயற்திட்டங்களை முன்னெடுக்க முனைய வேண்டும்.
5. எமது சமூகத்தில் உள்ள அரசியல், சமய, சமூகத் துரோகிகளையும், முனாபிக்குகளையும் இந்தப் பிரச்சினை மூலம் அல்லாஹ் எமக்கு இனம் காட்டியுள்ளான். இந்தத் துரோகிகள் தாமாகத் திருந்தாவிட்டால் இவர்களின் மரண நிகழ்சியில் கூட கலந்து கொள்வதில்லை என நாம் உறுதி கொள்ள வேண்டும்.
6. எமது நாட்டில் உள்ள அரசியல் தலைமைகள் சிலவற்றின் அப்பட்டமான அயோக்கியத்தனத்தை அல்லாஹ் இனம் காட்டியுள்ளான். எனவே, அரசியல் என்கின்ற வட்டத்தில் இருந்து விலகி சிந்தித்து வாக்களிக்கும் மனநிலைக்கு முஸ்லிம்கள் வர வேண்டியதன் அவசியத்தை அல்லாஹ் உணர்த்தி உள்ளான்.
7. கஷ்டத்தில்தான் இலேசு உள்ளது என குர்ஆன் கூறுகின்றது. இந்தக் கஷ்டம் சில இலகுபடுத்தல்களை எமக்கு ஏற்படுத்தும்.
(உதாரணமாக:)
ஒன்றுபடுத்தவே முடியாது என்றிருந்த அமைப்புக்கள் ஒன்றுபட்டு செயற்பட ஏங்குவதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
8. பிற சமூக மக்களுக்கு இஸ்லாம் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் பிறந்திருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
9. எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூக ஒற்றுமை என்ற பெயரில் பிற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு இஸ்லாமிய வரம்புகளை மீறக் கூடாது. சமூக விவகாரங்கள், மனித நேயப் பணிகள் மூலமாக சமூக நல்லிணக்கத்திற்கு முயற்சிக்க வேண்டும். எமது சமூகம் பிற சமூகத்திற்குத் தனிப்பட்ட முறையில் நிறையவே செய்துள்ளது. அவை போதியளவு விளம்பரப்படுத்தப்பட்டு மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
10. மீடியாக்களின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வுகள் முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்தியுள்ளது. ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் ஒன்றுபடும் முஸ்லிம் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எமக்கான மீடியாவை உருவாக்குவதற்கான நல்ல வாய்ப்பை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தித் தந்துள்ளது.
11. தொடர்ந்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் எதிராக வழக்குகள் தொடரப்பட்டு அவை பதிவுகளாக்கப்பட வேண்டும். நடந்த நிகழ்வுகள் அனைத்துக்குமான தரவுகள், புகைப்படங்கள், தகவல்கள் முழுமையாக முஸ்லிம்களிடம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.