இதோ புனித ரமழான் பிறந்துவிட்டது. சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டுவிட்டன. சுவனத்திற்கு பல வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றின் பெயர்தான் “ரைய்யான்” என்பதாகும்.
“நாளை மறுமை நாளில் நோன்பாளிகள் எங்கே என அழைக்கப்படும். நோன்பாளிகள் எழுந்து அந்த வாயில் வழியாக சுவனம் நுழைவார்கள். அவர்கள் நுழைந்த பின்னர் அந்த வாயில் மூடப்பட்டுவிடும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: ஸஹ்லா(வ)
ஆதாரம்: புஹாரி – 1896
நாளை மறுமையில் ரைய்யான் என்ற வாயில் வழியாக விஷேடமாக அழைக்கப்பட்டு சுவனம் நுழைய வேண்டுமென்றால் நோன்பாளிகள் என அழைக்கப்படத்தக்க விதத்தில் ஆன்மீக பக்குவத்துடன் நோன்பை நோற்று அதற்குரிய ஒழுங்குகளுடன் நாம் வாழ்ந்திருக்க வேண்டும். இதோ ரைய்யான் வாயில் திறந்திருக்கிறது. அதன் வழியால் சுவனம் பிரவேசிக்க நீங்கள் உங்களைத் தாயார் செய்து கொள்ள வேண்டாமா?
1. நற்செய்திக்குரியவர்கள்:
நோன்பு நோற்பவர்கள் அல்லாஹ்வின் நற்செய்திக்குரியவர்கள் என்பதைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.
“(இவர்கள்தான்) மன்னிப்புக் கோருவோரும், (அல்லாஹ்வை) வணங்குவோரும், (அவனைப்) புகழ்வோரும், நோன்பு நோற்போரும், ருகூஃ செய்வோரும், சுஜூது செய்வோரும், நன்மையை ஏவித் தீமையை விட்டும் தடுப்போரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணுவோருமாவர். இத்தகைய நம்பிக்கையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (9:112)
2. நிகரில்லாத இபாதத்:
நோன்புக்கு நிகர் நோன்புதான். அதற்கு நிகராக வேறு அமல் இல்லை என்பதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் அறியலாம்.
“அபூ உமாமா(வ) அவர்கள் நபியவர்களிடம், நல்லறங்களில் சிறந்தது எது? எனக் கேட்ட போது நீ நோன்பைப் பற்றிக் கொள்! ஏனெனில் அதற்கு நிகரில்லை என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
(நஸாஈ: 2222, 2220)
எனவே, நோன்பு என்பது முக்கியமான நிகரே இல்லாத நல்லறமாகத் திகழ்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.
3. அல்லாஹ்வுக்கே உரியது:
எல்லா நல்லறங்களும் அல்லாஹ் வுக்காவே செய்யப்பட்டாலும் அல்லாஹு தஆலா நோன்பை மட்டும் தனக்குரியது எனக் கூறி அதனை சிறப்பித்துள்ளான்.
“எல்லா அமல்களும் மனிதனுக்குரியதாகும், நோன்பைத் தவிர. அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன் என அல்லாஹ் கூறுவதாக நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: புஹாரி: 1904, 5927,
முஸ்லிம்: 1151,2762
நோன்பை அல்லாஹ் தன்னுடன் இணைத்துக் கூறியிருப்பது அதன் தனிப்பட்ட சிறப்பம்சத்திற்கு எடுத்தக்காட்டாகும்.
4. அளவற்ற கூலி:
நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என அல்லாஹ் கூறுகின்றான். எல்லா அமல்களுக்கும் அவன்தான் கூலி வழங்குகின்றான். இருப்பினும் நோன்புக்குரிய கூலியை அளவின்றி வழங்குகின்றான். இதையே இந்த ஹதீஸ் கூறுகின்றது.
எல்லா அமல்களுக்கும் ஒன்று பத்தாக, எழுநூறு மடங்காகக் கூலி அதிகரித்து வழங்கப்படும். இருந்தாலும் நோன்புக்கு இந்த அளவு கிடையாது. இது குறித்து இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறும் போது,
“நானே கூலி வழங்குகின்றேன் என்பதன் அர்த்தம் இதற்கான கூலி என்ன? எத்தனை மடங்காக அதிகரித்து வழங்கப்படும் என்பதை நானே அறிவேன் என்பதாகும்.” என விளக்குகின்றார்கள்.
இதே கருத்தை இமாம் குர்துபி போன்ற அறிஞர்களும் பதிவு செய்துள்ளார்கள். எனவே, நோன்புக்கு அளவற்ற கூலி வழங்கப்படுகின்றது என்பதை அறியலாம்.
5. பாவங்களைப் போக்கும் அமல்:
நோன்பு மனிதனது பாவங்களைப் போக்கி அவனைப் பரிசுத்தப்படுத்துகின்றது.
“யார் ஈமான் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து நோன்பு நோற்கின்றானோ அவனது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
(புஹாரி, முஸ்லிம்)
அரபா நோன்பு மற்றும் ஆஷ_ரா நோன்பு என்பன கடந்த வருட பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்ற கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களும் நோன்பு பாவங்களை அழித்து பரிசுத்தப்படுத்துகின்றது என்பதை உறுதி செய்கின்றன.
6. நோன்பு ஒரு கேடயம்
எதிரியின் தாக்குதலில் இருந்து மனிதனை கேடயம் பாதுகாக்கின்றது. இவ்வாறே நோன்பு மனிதனை நரகத்தை விட்டும் காப்பதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.
“நோன்பு ஒரு கேடயமாகும்! என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.” (திர்மிதி: 2616, 764)
நரகில் இருந்து தற்காத்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்தக் கேடயத்தைக் கையில் எடுத்துக் கொள்வது கட்டாயமாகும்.
7. மறுக்கப்படாத பிரார்த்தனை:
“நோன்பாளியின் பிரார்த்தனை மறுக்கப்பட மாட்டாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹூரைரா(வ)
ஆதாரம்: அபூதாவுத்: 1538
இது நோன்பின் சிறப்பை உறுதி செய்யும் மற்றுமொறு சான்றாகும்.
8. இரட்டை மகிழ்ச்சி தரும் இபாதத்:
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்றையது தனது இரட்சகனை (மறுமையில்) சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: புஹாரி – 1904)
நோன்பு நோற்பவர்கள் நாளை மறுமையில் மகத்தான பெறுபேறுகளைப் பெறுவார்கள். அதனால் மறுமையில் அவர்கள் மற்றற்ற மகிழ்ச்சியடைவார்கள் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.
8. கஸ்தூரியாக மணக்கும் வாய்:
“முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நோன்பாளியின் வாயில் இருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட சிறந்ததாகும்….. என நபி(ச) அவர்கள் கூறினார்கள்” (புஹாரி: 1904)
நீண்ட நேரம் எதையும் உண்ணாமலும் பருகாமலும் இருப்பதால் வாயில் வாடை வீசலாம். அது அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட சிறந்தது என்று கூறும் அளவுக்கு நோன்பாளிக்கு அல்லாஹ் மதிப்பளிக்கிறான் என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
இவ்வாறு பல்வேறுபட்ட ஹதீஸ்கள் நோன்பின் மான்புகளைத் தெளிவாக விளக்குகின்றன. எனவே, “ரையான்” எனும் வாயில் வழியாக சுவனம் நுழைய நோன்பை உரிய முறையில் அழகாக நோற்று எம்மை நாம் தயார் பண்ணிக் கொள்வோமாக!