கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) கட்டாயமானதாகும். ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவை அடைவது ஒரு ஒட்டமாகவும் பின்னர் மர்வாவில் இருந்து ஸஃபாவுக்கு வருவது இரண்டாம் ஓட்டமாகவும் கணிக்கப்படும்.
இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஹஜ், உம்றா செய்பவர் அவ்விரண்டு மலைகளையும் சுற்றுவது குற்றமில்லை என்றுதான் கூறுகின்றது. இதை வைத்துச் சுற்றுவது குற்றமில்லை, சுற்றாமல் விடுவதே நல்லது என்று கூட சிலர் நினைக்கலாம். அல்லது சுற்றுவது கட்டாயம் இல்லை என்று கூடப் புரிந்து கொள்ளலாம்.
குர்ஆனின் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்குக் குறித்த வசனம் என்ன காரணத்திற்காக அருளப்பட்டது என்ற அறிவு அவசியமானதாகும்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம்கள் ஹஜ், உம்றாவுக்கு மக்கா சென்று வந்தனர். அப்போது கஃபா, காபிர்களின் கையில் இருந்தது. ஸஃபா-மர்வா மலைகளுக்கிடையே சிலைகளும் இருந்தன. ஸஃபா-மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் ஓடும் போது அந்தச் சிலைகளையும் முஸ்லிம்கள் சுற்றி வர நேரிட்டது. இதனால் தாம் தவறு செய்கின்றோமோ என்ற ஐயமும் குற்ற உணர்வும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. அந்த ஐயத்திற்குப் பதிலாகவே இந்த வசனம் அருளப்பட்டது.
ஸஃபா-மர்வா என்பது அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள். நீங்கள் சிலைகளுக்காக அதைச் சுற்றவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்காகச் சுற்றுகின்றீர்கள். எனவே, நீங்கள் சுற்றுவதில் குற்றமில்லை என்று இந்த வசனம் விளக்குகின்றது. இந்தப் பின்னணி இல்லாமல் இந்த வசனத்தைப் பார்த்தால் சுற்றுவது குற்றமில்லை எனக் குர்ஆன் கூறுகின்றது. சுற்றாமல் கூட விட்டுவிடலாம் என்ற தவறான முடிவுக்குக் கூட வந்துவிடலாம். அல்குர்ஆனைப் புரிந்து கொள்ள ‘ஸபபுன் நுஸூல்’ எனும் அருளப்பட்ட காரணத்தை அறிந்து கொள்வது பெரிதும் உதவும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது