நபி(ச) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரிகள் தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முற்பட்டனர். அபூபக்கர், உமர், அபூ உபைதா(வ) ஆகியோர் அவர்களிடம் சென்று பேசிய பின்னர்தான் அந்த இடத்தில் அபூபக்கர்(வ) அவர்களுக்கு பைஅத் செய்யப்பட்டது. அன்ஸாரிகள் தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தீர்மானித்த பின்னரும் தமது முடிவில் இருந்து பின்வாங்கி ஏன் அபூபக்கர்(வ) அவர்களுக்கு பைஅத் செய்தார்கள் என்று கேட்டால் பின்வரும் ஏதானும் ஒரு பதிலை ஷீஆக்கள் கூறலாம்.
1. அபூபக்கர் ஆயுத பலம் மூலம் அவர்களை அடக்கி பைஅத் செய்வித்துக் கொண்டார்கள்.
இப்படிக் கூறினால் அது ஏற்றுக் கொள்ள முடியாத கூற்றாகும். ஏனெனில், அங்கே சண்டை இடம்பெறவில்லை, ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை. இவர்கள் மூவர்தான் சென்றார்கள். அந்த மூவருக்கும் ஒட்டுமொத்தமாக அன்ஸாரிகளும் பயப்பட வேண்டியதில்லை.
2. பின்னால் ஏதாவது ஆபத்து வரலாம், அழிவு வரலாம் எனப் பயந்து பைஅத் செய்திருக்கலாம் என்று கூட ஷிஆக்கள் கூறலாம்.
இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாது. அன்ஸாரிகள் நபி(ச) அவர்களது காலத்தில் மட்டுமன்றி அபூபக்கர்(வ), உமர்(வ) ஆகியோர் காலத்தில் நடந்த போர்களில் கூட தீரத்தோடு போராடி தமது துணிவை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் எதிர் காலத்தில் அதாவது, இவர்களுக்கு பைஅத் செய்யாவிட்டால் எங்களை அழித்து விடுவார்கள் என்ற அஞ்சுவதற்கு அனுவளவு கூட இடமே இல்லை.
முஹாஜிர்கள்தான் தலைவர்களாக வர வேண்டும் என்ற அபூபக்கர்(வ) அவர்களது வாதத்தின் உண்மைத் தன்மையை உணர்ந்து பைஅத் செய்தனர். இந்த பதிலைத்தான் இறுதியாகக் கூற முடியும்.
நபி(ச) அவர்களுக்குப் பின்னர் அலி(வ) அவர்கள்தான் கலீபாவாக வர வேண்டும் என நபி(ச) அவர்கள் கூறியிருந்தால் அலி(வ) அவர்கள் அந்த ஆதாரங்களை எடுத்துக் காட்டியிருந்தால் நிச்சயமாக அன்ஸாரிகள் அலி(வ) அவர்களுக்கு பைஅத் செய்திருப்பார்கள். முஹாஜிர்களில் ஒருவரான அபூபக்கர்(வ) அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களில் ஒருவரான அலி(வ) அவர்களை எப்படிப் புறக்கணித்திருப்பார்கள். இதிலிருந்து தனக்குப் பின் அலி கலீபாவாக வர வேண்டும் என நபி(ச) அவர்கள் கூறவில்லை என்பது உறுதியாகின்றது. ஷீஆக்கள் கூறுவது போல் அப்படிக் கூறியிருந்தால் அந்த உரிமையைக் கேட்காத அலி(வ) அவர்கள்தான் குற்றவாளியாவார்கள். அன்ஸாரிகள் ஆட்சித் தலைமை ஏற்படுத்த முற்பட்டபோது இது தவறு, தலைமைப் பொறுப்பு முஹாஜிர்களில் ஒருவருக்கு வர வேண்டும் என தமது நிலைப்பாட்டை அதற்கான சான்றுகளுடன் அபூபக்கர், உமர், அபூ உபைதா(வ) ஆகியோர் தெளிவுபடுத்தினார்கள்.
இதே போன்று நபிக்குப் பின்னர் தனக்குத்தான் கிலாபத் வர வேண்டும் என அலி மக்களுக்கு விளக்கவில்லை. இந்த வகையில் தனக்குரிய கிலாபத்தைக் கோராத அலி(வ) அவர்கள்தான் அத்தனை வழிகேட்டிற்கும் காரணம் என்று கூற நேரிடும். அவர்கள் உயிருடன் இருக்கும் போது கோராத ஆட்சித் தலைமை குறித்து இப்போது ஷீஆக்கள் எதற்காப் பேச வேண்டும்? இப்போது பேசி என்ன பயன் ஏற்படப் போகின்றது?
அலி(வ) அவர்கள் ஆட்சித் தலைமையைக் கோராதது சரியென்றால் இப்போது ஆட்சித் தலைமை பற்றிப் பேசும் ஷீஆக்களின் போக்கு ஆயிரம் மடங்கு தவறு என்றாகிவிடும். ஷீஆக்கள் சொல்வது சரியென்றால் ஆட்சித் தலைமையை அன்று வாய்ப்பிருந்தும் கேட்காமல் விட்டது அலி(வ) அவர்கள் விட்ட பெரிய தவறு என்றாகிவிடும். தவறு செய்தவர்கள் யார்? அலி(வ)யா? ஷீஆக்களா? யார் தவறு செய்தார்கள் என்று முடிவு எடுத்தாலும் ஷீஆக்கள் தவறான கொள்கையில் இருக்கின்றனர் என்பது உறுதியாகிவிடும்.
அபூபக்கர்(வ), உமர்(வ) ஆகிய இருவரும் உண்மையில் முஸ்லிம்கள் இல்லை. அவர்கள் முனாபிக்குகள் (நஊதுபில்லாஹ்) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக போலியாக முஸ்லிம்கள் போன்று நடித்தார்கள் என்பது ஷீஆக்களின் வாதமாகும்.
பல வருடங்களாக ஆட்சிக்காகத் திட்டம் தீட்டி நடித்த இவர்கள் ஆட்சிபீடம் ஏறிய பின்னர் ஆடம்பரமாக வாழ்ந்தார்களா? ஆட்சி சுகத்தை அனுபவித்தார்களா?தமது பிள்ளைகளுக்கு சொத்து, சுகம் சேர்த்தார்களா? மாட மாளிகைகளைக் கட்டினார்களா? தமக்குப் பின்னர் தமது பிள்ளைகள் ஆட்சிபீடம் ஏற வழி செய்தார்களா? இல்லையென்றால் அவர்கள் எதற்காக ஆட்சிக்கு ஆசைப்பட வேண்டும்.
இந்த இருவரது ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் மேலோங்கிச் சென்றது. இஸ்லாத்தின் எதிரிகள் அடக்கப்பட்டார்கள். புதிய புதிய நாடுகள் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டது. இவர்களின் ஆட்சியின் போது அல்லாஹ் இஸ்லாத்திற்கு கண்ணித்தை வழங்கினான் என்றால் இவர்களது ஆட்சியை அல்லாஹ் அங்கீகரித்துவிட்டான் என்பதுதானே அர்த்தம்!
அபூபக்கர்(வ), உமர்(வ) ஆகியோர் நபி(ச) அவர்கள் ஆட்சி அதிகாரத்துடன் இருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றிருந்தால் கூட பதவிக்காக வந்தவர்கள் என்று கூற முடியும். ஆனால் ஆட்சியோ அதிகாரமோ தற்பாதுகாப்போ இல்லாத சூழ்நிலையில்தான் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். நபி(ச) அவர்கள் மதீனா போவார்கள்ளூ ஆட்சி செய்வார்கள்ளூ எமக்கு முன்னரே மரணித்து விடுவார்கள்ளூ அதன் பிறகு எம்மை இந்த மக்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்வார்கள் என்றெல்லாம் எதிர்காலத்தை அறிந்து திட்டமிட அவர்களிடமும் மறைவான அறிவு இருந்தது என ஷீஆக்கள் கூறப்போகின்றார்களா?
அபூபக்கர்(வ), உமர்(வ) ஆகிய இருவருமே காபிர்கள். இஸ்லாத்தின் எதிரிகள் என்பது ஷீஆக்களின் நம்பிக்கையாகும். ஒரு முஸ்லிம் மரணித்தால் அவரைக் காபிர்களுடன் அடக்கம் செய்வதை நாம்மில் யாருமே விரும்ப மாட்டோம். இப்படி இருக்க, அகிலத்தின் அருட்கொடை நபி(ச) அவர்களை இரண்டு காபிர்களுக்கு மத்தியில் (நஊதுபில்லாஹ்) அடக்கம் செய்யும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பானா?
ஆயிஷா(ரழி) அவர்கள் முஸ்லிம் அல்ல. குறைந்த பட்சம் ஒழுக்கமான பெண் கூட இல்லை (நஊதுபில்லாஹ்) என்பது ஷீஆக்களின் நம்பிக்கையும் பிரச்சாரமுமாகும். மனித குலத்தின் மாணிக்கமான நபி(ச) அவர்கள் ஒரு காபிரான (நஊதுபில்லாஹ்) பெண்ணின் வீட்டில் அடக்கம் செய்யப்படும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பானா?
இந்தக் கோணத்தில் சிந்தித்தால் ஷீஆக்களின் கொள்கைதான் வழிகேடானது. நபித்தோழர்களிலேயே அபூபக்கர்(வ), உமர்(வ) ஆகிய இருவரும் சிறப்பானவர்கள், நபி(ச) அவர்களது மனைவியரில் ஆயிஷா நாயகிக்கு சிறந்த இடம் உண்டு. எனவேதான் ஆயிஷா(ரழி) அவர்களது இல்லத்தில் இவ்விரு நபித்தோழர்களுக்கு அருகில் நபி(ச) அவர்களது அடக்கம் இடம்பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்…