ஆசிரியர் பக்கம் : (செப்டம்பர் 2018)
விழி இழந்த பின் விளக்கெதற்கு
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்| முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு வருகின்றோம்.
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இந்நாட்டில் எமக்குக் கிடைத்த ஒரு அருளாகும். இவ்வாறே பௌத்தர்களுக்கு கண்டி சட்டமும் ஹிந்துக்களுக்கு தேச வழமைச் சட்டமும் நடைமுறையில் உள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான மீளாய்வுக் குழு இரண்டு பரிந்துரைகளை சமர்ப்பித்தமையும், பெண்கள் அமைப்பினால் ஊடகங்கள் அழைக்கப்பட்டு இந்தப் பிரச்சினை ஊதிப் பெருப்பிக்கப்பட்டமையும்தான் இது தொடர்பான சர்ச்சைகள் பூதாகரமாவதற்கு அடிப்படைக் காரணமாகும். அத்துடன் மாற்று மத சகோதர சகோதரிகள் தேவையில்லாமல் முஸ்லிம் விவாக, விவாகரத்து விடயத்தில் மூக்கை நுழைப்பது ஆரோக்கியமற்றதாகும்.
இந்த நாட்டில் உள்ள ஏனைய தனியார் சட்ட விடயங்களில் முஸ்லிம்கள் தலையிடுவதில்லை. அப்படி இருக்க முஸ்லிம்கள் விடயங்களில் மட்டும் அவர்கள் தலையீடு செய்வது எந்த வகையில் நியாமானது? இதில் முஸ்லிம் பெண்ணிலை வாத அமைப்புக்கள் சார்பாக மாற்று மதத்தவர்கள் போஸ்டர் ஏந்தி நிற்பதையும் அவர்கள் அக்கரை காட்டுவதையும் பார்க்கும் போது இந்த பெண்ணிலைவாத அமைப்புக்களுக்குப் பின்னால் அந்நிய சக்திகள் சதிவலை பின்னுகின்றார்களா? என்ற ஐயம் வருவது தவிர்க்க முடியாததாகும்.
இதே வேளை இந்தக் கோரிக்கைகளை வைப்பவர்களின் புகைப்படங்களைப் பார்க்கும் போது முஸ்லிம் சமூக பெண்கள் சார்பாக இவர்கள் முன்னிலைப்படுத்தப்படும் நிலையிலும் இல்லை. முஸ்லிம் சமூகப் பெண்கள் இவர்களைத் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை.
இதே வேளை, அவர்களது கோரிக்கைகள்| இருக்கும் சட்டத்தில் உள்ள ஆரோக்கியமான மற்றும், ஷரீஆவுக்குத் தோதான விடயங்களை மாற்றி சமூக சீரழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக, திருமணத்திற்கு பெண்கள் சார்பில் ‘வலி’ -பொறுப்பாளர்- அவசியம் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இப்படி இருக்க இவர்கள் ‘வலி’ -பொறுப்பாளர்- தேவையில்லை என்ற சீர்திருத்தத்தை(?) கொண்டு வர முயற்சிக்கின்றனர். இதன் மூலம் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப் போய் திருமணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் பெண்கள் நலன் நாடும் நடவடிக்கையா?
இவ்வாறே ‘வலி’ மற்றும் மணவாளன் மூலம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் ஈஜாப்-கபூல் நடந்துவிட்டால் திருமண ஒப்பந்தம் நடந்துவிடும். திருமணப் பதிவு என்பது நாட்டுச் சட்டத்திற்கும் நமது நிர்வாக ஒழுங்குகளுக்கும் அவசியமாகும். ஆனால், பதிவு இல்லாமல் திருமண பந்தம் உரிய முறையில் நடந்தாலும் அவர்கள் இருவரும் கணவன்-மனைவி எனும் நிலையில்தான் உள்ளனர். திருமணப் பதிவு இல்லாவிட்டால் நிகாஹ் செல்லுபடியாகாது என்பது ஷரீஆவுக்கு மாற்றமானதாகும். இத்தகைய முடிவு எட்டப்பட்டால் அது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
இவ்வாறே இன்று உலகின் பல நாடுகளில் பெண்ணின் திருமண வயது 12. 13, 14, 18 என பல அடிப்படைகளில் உள்ளது. இலங்கையில் முஸ்லிம் பெண் 14 வயதில் திருமணம் செய்யலாம் என்றிருந்ததை தற்போது ஒரு பரிந்துரை 16 என்றும் அதற்குக் கீழ் திருமணம் செய்வதென்றால் காழியுடைய விஷேட அனுமதி பெற்றுச் செய்யலாம் என்று கூறும் போது பெண்கள் அமைப்பினர் ஆண்-பெண் இருவரது திருமண வயதும் 18தான் அதற்குக் கீழ் திருமணம் செய்ய முடியாது என்ற பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.
இளவயதுத் திருமணங்களை ஊக்குவிக்காவிட்டாலும் குடும்ப நிலை, பெண்ணின் பாதுகாப்பு, பெண்ணின் ஒழுக்க நிலை போன்ற பல விடயங்களை கருத்திற் கொண்டு இள வயதுத் திருமணங்களை அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை, நிர்ப்பந்தம் உள்ளது. இவர்கள் சொல்லும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டால் உரிய பராமரிப்பாளர் இல்லாத பல அநாதை மற்றும் அநாதரவான முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தக் கோணத்தில் சில பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சமூக வகிபாகத்தை சிதைக்க விரும்பும் சிலர் இதை சாட்டாக வைத்து விளையாட ஆரம்பித்துள்ளனர். மார்க்க ரீதியில் வலு இல்லாத கருத்துக்களைத் தேடி எடுத்து அதற்கு வலுக் கொடுக்க வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
நாங்களும் முற்போக்குவாதிகள், நவீன சிந்தனையாளர்கள் எனக் காட்டுவதற்காகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை குறைத்துக் காட்டுவதற்காகவும், முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தக் கூடிய தூர நோக்குப் பார்வை கொண்டவர்கள் நாமே எனக் காட்டுவதற்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் எமக்கு இருக்கும் சில உரிமைகளைக் கூட இக்கூட்டம் தாரை வார்த்து மார்க்கத்திற்கு முரணான முடிவுகளை முஸ்லிம் தனியார் சட்டம் என சமூகத்தின் மீது திணிக்க முற்படுவது ஆபத்தானதும், நீண்ட கால சமூக சீரழிவை ஏற்படுத்தக் கூடியதுமாகும் என்பதை இந்தத் தூரநோக்குப் பார்வையாளர்கள் சிந்திப்பது நல்லதாகும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவர்கள்தான் இறை நீதியை உலகில் நிலைநாட்ட வேண்டும், ஹாகிமிய்யத் அவசியம், அல்லாஹ்வின் சட்டம்தான் உலகை ஆள வேண்டும் என்றெல்லாம் தொடர் வகுப்புக்களை நடத்தினார்கள். இப்போது அந்நியர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இருப்பதையும் தாரை வார்க்க முற்படுகின்றனர்.
இலங்கையில் மாடறுப்பது தொடர்பாக சில பிரச்சினைகள் இருந்தாலும் சட்டம் மாடறுப்பதைத் தடுக்கவில்லை. இனவாத அமைப்புக்களும் நாட்டுச் சட்டத்திற்கு மாற்றமாக மாடறுக்கப்பட்டால் எதிர்ப்போம் என்றுதான் கூறி வருகின்றனர்.
அவர்களே தடுக்காத போது மாட்டை விட்டு விட்டு கோழி அறுப்போமா என இவர்கள் ஐடியா கொடுக்கின்றனர். அவர்கள் மாடு அறுப்பதைத் தடுத்தால் நாம் ஆட்டை அறுக்கலாம். அதையும் தடுத்தால் இலங்கையில் இருந்து ஆடு, மாடு, அறுக்கக் கூடிய நாடுகளுக்கு பணத்தை அனுப்பியாவது இதைச் செய்யலாம். ஆனால், அனுமதி இருக்கும் போதே உங்களுக்குப் பிடிக்காவிட்டால் நாங்கள் விட்டு விட்டு மாற்று முடிவு எடுக்கின்றோம் என்று மாட்டுத் தனமாகவும், மோட்டுத்தனமாகவும் பேசுபவர்கள் எப்படி இஸ்லாத்தைப் பாதுகாக்கப் போகின்றார்கள்? மாட்டை விட்டு விட்டு கோழி அறுப்போம் என்பது கேளிக்கையாகவும் கோழைத்தனமாகவும் கோமாளித்தனமாகவும் படவில்லையா?
நாம் இப்படிச் சிந்தித்தால், கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் இவர்கள் அடிப்படைக் கடமைகளையும் விட்டு விடுவார்கள் என்ற எண்ணத்தைத்தான் எதிரிகள் மனதில் ஏற்படுத்தும்.
மாட்டுக்குப் பதிலாக கோழி கொடுக்கலாம் என்ற கருத்தைச் சொன்னவர்கள் இதுவரை சர்ச்சையான விடயங்களைப் பேசக் கூடாது, சில்லறை விடயங்களைப் பேசக் கூடாது, சமூக ஒற்றுமை முக்கியம், சமூகத்தில் இல்லாத புதுப் புதுக் கருத்துக்களைச் சொல்லி சமூகத்தைக் குழப்பக் கூடாது. சில்லறைப் பிரச்சினைகளைப் பேசி சமூகத்தைக் குழப்புபவர்கள் யூத, நஸாராக்களின் கைக்கூலிகள் என மூச்சுக்கு முப்பது தரம் ஒப்பாரி வைத்தவர்கள். இன்று இவர்கள் மிகவும் சர்ச்சையான கருத்துக்களை முன்வைத்து சமூகத்தை மனம் தளரச் செய்கின்றார்கள் என்றால் அவர்கள் குறிப்பிட்டது போல் கைக்கூலிகளாக மாறிவிட்டனரா என சிந்திக்க வேண்டியுள்ளது.
மற்றும் சில அறிவாளிகள் அபாயாவை சவூதி கலாசாரம் என்றும் எமது மூதாதையர்கள் சாரிதான் அணிந்தார்கள் என்றும் அதிகம் படித்த அவர்கள்| அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு பொது ஆடையை அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறி வருகின்றனர். இதை சில அஷ்ஷெய்க்குகள் பாடசாலைகளிலும் பரப்பி வருகின்றனர். எமது தாய்மார் அணிந்தது போலதான் இன்று சாரிகள் அணியப்படுகின்றனவா? மார்க்கம் அறியாத சில அறிவாளிகள் இருக்கின்ற நலவுகளையும் அழித்துவிடுவார்களோ என்று அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனவாதிகள் பேசியதையெல்லாம் இப்போது இவர்கள் செய்ய முற்படுகின்றனர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து விடயத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கான ஆக்கபூர்வமான பணிகளைச் செய்வதை நாம் குறை காணவில்லை. கல் எடுக்கிறார்கள் என்பதற்காக பனை மரத்தை வெட்டுவது போன்ற தீர்மானங்களை தீர்வுகளாகக் காண முடியாது. முடிவுகள் எதுவாயினும் அவை அல் குர்ஆன், அல் ஹதீஸின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். குர்ஆன், சுன்னா நேரடியாகப் பேசாத விடயங்களில் நமது நாட்டையும், நாம் வாழும் சூழலையும் கவனத்தில் கொண்டு மிகப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நாம் இதில் தொடர்ந்து பிரச்சினைப்படுவதும் மாற்று மதத்தவர் இதில் தலையிட இடம் கொடுப்பதும் இருப்பதை அழிக்கும் அறிவீனமானதாகவே அமையும். அப்படிக் குழப்ப நிலை உருவாவதை விட இருக்கும் தனியார் சட்டத்திலேயே இருந்துவிட்டுப் போய்விடலாம் போலுள்ளது!