சில மாதங்களாக வரலாறு காணாத வரட்சியும், வெப்பமும் இலங்கையை வாட்டி வதைத்தது. இலங்கையின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றது, செல்கின்றது. தற்போது நாடு வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளப் பெருக்கும், மண்சரிவு அபாயமும், உயிர் மற்றும் பொருட் சேதங்களும் அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன் மண்சரிவு அபாயமும் நீடிக்கின்றது. வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பல இலட்சம் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் எமது அமைப்புக்கள் பலதும் போட்டி போட்டுக் கொண்டு வெள்ள நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருவது மகிழ்வளிக்கின்றது. நாட்டில் ஏற்படும் இத்தகைய அசாதாரண நிகழ்வுகள் நாட்டு மக்கள் மத்தியில் மனித நேயத்தை வளர்ப்பதுடன் இன, மத பேதங்களையும் குறைக்கின்றது என்பது யதார்த்தமாகும்.
இது போன்ற இழப்புக்களை இஸ்லாம் சோதனையாகப் பார்க்கின்றது.
‘நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!”
‘அவர்கள் யாரெனில் தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறுவார்கள்.” (2:155-156)
இது போன்ற சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட, இழப்புக்களைச் சந்தித்த மக்கள் பொறுமை மூலம் அல்லாஹ்வின் அருளை அடைய முயற்சிக்க வேண்டும். ஏனைய மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் நல்கி அவர்களை அரவணைக்க வேண்டும்.
அடுத்து, இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் சிந்திக்க வேண்டிய இன்னொரு கோணமும் உண்டு.
‘மனிதர்களின் கைகள் சம்பாதித்தவற்றின் காரணமாக தரையிலும் கடலிலும் குழப்பம் தோன்றிவிட்டது. அவர்கள் மீளும் பொருட்டு அவர்கள் செய்தவற்றில் சிலதை அவர்களுக்கு சுவைக்கச் செய்வதற்காக (இவ்விதம் சோதிக்கின்றான்.)” (30:41)
மனிதர்களின் பாவங்கள் காரணமாகத்தான் கடலிலும் தரையிலும் குழப்பங்கள் அதிகரித்து விட்டதாக இந்த வசனம் கூறுகின்றது. இதன் அர்த்தம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாவிகள், பாதிக்கப்படாத மக்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள் என்பதல்ல. உலகம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதே அர்த்தமாகும்.
இத்தகைய அழிவுகளையும் இழப்புக்களையும் பார்த்து மனிதன் தனது தவறான பாதையை மாற்றி சரியான வழிக்கு மீள வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் சோதனைகளைக் காணும் போது நபி(ச) அவர்கள் அதிகமாகப் பாவமன்னிப்புச் செய்வார்கள் என ஹதீஸ்கள் கூறுகின்றன. சோதனைகள் வரும் போது பள்ளியை நோக்கி விரைவார்கள் என்றும் படித்திருக்கின்றோம். எனவே, பாவமன்னிப்புத் தேடுதல் என்பதும் சிந்திக்க வேண்டிய மற்றொரு பகுதியாகும்.
இதோ எம்மைப் புனித ரமழானும் வந்தடைந்துவிட்டது. பாவமன்னிப்புக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள மாதம், மனித வரலாற்றையே மாற்றியமைத்த வான்மறை வந்திறங்கிய மாதம் இது. தமது தவறான பாதையை மாற்றியமைக்க விரும்புகின்றவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் இதுதான். எனவே, புனித ரமழானைப் பயன்படுத்தி எமது வாழ்க்கையோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ள உறுதியாக முடிவெடுக்க வேண்டிய தருணம் இது!
புனித ரமழான் அல்குர்ஆனின் மாதமாகும். எனவே, இந்த மாதத்தில் இருந்தாவது அல்குர்ஆனுடன் இறுக்கமான, நெருக்கமான உறவை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதை ஓத வேண்டும், அதைப் படிக்க வேண்டும். அல்குர்ஆன் கூறும் அழகிய உபதேசங்களின் அடிப்படையில் எமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, ரமழான் நோன்புக்குரிய மாதமாகும். ரமழான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்றாக வேண்டும். அல்குர்ஆன் மூலம் எமக்கு வழிகாட்டிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமுகமாகவே இந்த நோன்பு நோற்கப்படுகின்றது.
நோன்பின் மூலம் ‘தக்வா” – இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நோக்கமாகும். இஸ்லாம் நோன்பை ஒரு சடங்காக ஆக்கவில்லை. அல்லாஹ்வுக்காக உணவையும், பானத்தையும், உடலுறவையும் தவிர்த்த ஒரு முஸ்லிம் அதே அல்லாஹ்வுக்காக அவன் தடுத்த அனைத்தையும் தவிர்ந்து வாழப் பழக வேண்டும். சிரமத்துடன் அல்லாஹ்வுடைய கட்டளையை ஏற்று நோன்பு நோற்கும் முஸ்லிம் அல்லாஹ்வின் ஏவல்களை சிரமப்பட்டாவது எடுத்து நடக்கக் கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே நோன்பின் நோக்கமாகும். எனவே, அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாகக் கட்டுப்படும் பக்குவத்தை ஏற்படுத்தி எமது வாழ்க்கைப் போக்கையும் நாம் சீர் செய்து கொள்ள வேண்டும்.
ரமழான் தவ்பாவின் மாதமாகும். தவறு செய்பவர்கள் தமது தவறுகளுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டு இனி இந்தத் தவறைச் செய்வதில்லை என உறுதி பூண வேண்டும். தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். தவ்பா அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுத் தரும் சிறந்த வழியாகும்.
ரமழான் ஸதகாவின் மாதமாகும். நபி(ச) அவர்களின் தர்மம் ரமழான் மாதத்தில் காற்றை விடவும் வேகமாக இருக்கும் என நபிமொழிகள் கூறுகின்றன. எனவே, இந்தப் புனித மாதத்தில் ஏழைகளுக்கும் பாதிப்புக்களைச் சந்தித்த மக்களுக்கும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.
ரமழான் அமல்களின் மாதமாகும். ஏனைய காலங்களில் செய்யப்படும் அமல்களை விட ரமழானில் செய்யப்படும் நல்லறங்கள் சிறப்புப் பெறுகின்றன. எனவே, இந்தப் புனித ரமழானை அமல்களால் அலங்கரிக்க முயற்சிக்க வேண்டும்.
பொதுவாகவே புனித ரமழானில் பள்ளியுடன் தொடர்பில்லாத பலர் கூட பள்ளிக்கு வருகின்றனர். மார்க்க அறிவற்றவர்களுக்கும் மார்க்க உணர்வு அதிகரிக்கின்றது. அதிகமான பயான் நிகழ்ச்சிகள், மார்க்க நிகழ்ச்சிகள், இப்தார் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதே வேளை, சர்ச்சைகள், கருத்து முரண்பாடுகள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால் ரமழான் என்றால் சண்டை பிடிக்கும் மாதம் என்பது போல் ஒரு நிலை முஸ்லிம் சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அல்லாஹ் தந்த புனித மாதத்தை எமது தவறான நடத்தை, அணுகுமுறையூடாக ஏனைய சமூகத்திற்கு மோசமாக நாம் அறிமுகப்படுத்துவது இந்த மார்க்கத்திற்குச் செய்யும் பெரும் துரோகமாகும். எனவே, சண்டைகள் மற்றும் சச்சரவுகளைத் தவிர்த்து அடுத்தவர்களின் சமயப் பணிகளுக்குத் தடையாக, எதிர்ப்பாக இருப்பதைக் கைவிட்டு சமாதானம் பேண முயற்சிக்க வேண்டும். எல்லாவற்றையும் சரிகாண்பதென்பது இதன் அர்த்தமல்ல. ஒரு சாரார் செய்யும் பயான் நிகழ்ச்சிகளையும், இப்தார் நிகழ்ச்சிகளையும் தடுக்க முற்படுவதால் சண்டைகள் ஏற்படுகின்றன. இரு சாராரும் காவல் நிலையத்திற்குச் செல்லும் நிலை ஏற்படுகின்றது.
எனவே, பிடித்தால் நீங்கள் கலந்து கொள்ளலாம். பிடிக்காவிட்டால் ஒதுங்கிக் கொள்ளலாம். தடுப்பது, வம்புக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியமாகும்.
ரமழான் கால இரவுகளை இளைஞர்கள் வீண் விளையாட்டுக்குரியதாக எடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக வீதியோரங்களில் விளையாடுவதும், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பதுமாக சிலர் நடந்து கொள்கின்றனர். இளைஞர்களின் இந்த நடவடிக்கையும் புனித மாதத்திற்கும் எமது மார்க்கத்திற்கும் கலங்கம் கற்பிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதையும் நாம் அவசியம் தவிர்க்க வேண்டும்.
ரமழான் காலங்களில் எமது வறிய முஸ்லிம்களில் பலரும் கொழும்பு, கண்டி போன்ற நகர்ப் புறங்களுக்கு வந்து பிச்சையெடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். பெண்கள், இளம் பெண்கள், சிறுவர், முதியவர்.. என எமது சமூகம் வீதிகளில் அலைந்து திரிவதைப் பார்க்கும் போது அசிங்கமாகவும், அருவறுப்பாகவும் உள்ளது. அவர்கள் வீதியோரங்களில் தங்கி அசிங்கமான தோற்றத்துடன் அந்நியர்களின் வீட்டுக் கதவுகளைக் கூட தட்டுகின்றனர். இதனால் ரமழான் என்றால் முஸ்லிம்கள் பிச்சையெடுக்கும் மாதம் என்ற முத்திரையை அடுத்தவர்களின் மனதில் குத்தி வருகின்றோம்.
இந்த வறிய முஸ்லிம்களின் தேவைகளை நிறைவு செய்ய ஸதகா, கூட்டு ஸகாத், கூட்டு ஸகாதுல் பித்ர்… போன்ற நடைமுறைகளை ஏற்படுத்தி அவ்வப் பகுதிகளிலேயே அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக திட்டமிட்டு நடவடிக்கை எடுப்பது ஊர் ஜமாஅத்துக்களின் பொறுப்பாகும். வறிய முஸ்லிம்களும் இந்தத் தவறான நடைமுறைகளைக் கைவிட வேண்டும்.
எனவே, இந்தப் புனித ரமழான் பற்றி மாற்று மதத்தவர்களிடம் நாம் நமது தவறான நடத்தைகள் மூலம் ஏற்படுத்தியுள்ள தப்பான எண்ணங்களைக் களையும் விதத்தில் எமது நடத்தையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. அத்துடன் எமது நல்ல நடத்தைகளினூடாக எமது மார்க்கத்திற்கும் இந்தப் புனித மாதத்திற்கும் கண்ணியத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இஸ்லாம் பற்றிய கண்ணியத்தை அவர்களிடம் ஏற்படுத்துவது என்பது மிகப்பெரிய தஃவாவாகும். இதன் மூலம் நல்ல எண்ணத்துடன் அவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ள முற்படலாம். இது நல்ல மனமாற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.
எனவே, நாம் நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மாறுவதற்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ள ரமழான் வந்துள்ளது. நீங்கள் மாறத் தயாரா? இதோ உங்களை ரமழான் ரையான் வாயில் வழியாக அழைக்கிறது!