அருள் வளம் பொருந்திய அற்புத மாதமாம் ரமழான் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! பாவ மன்னிப்பும் இரட்டிப்பு நன்மையும் வழங்கப்படுகின்ற இந்தப் புனித மாதத்தின் சிறப்புக்களை அறிந்து பக்குவத்துடனும் அழகிய முறையிலும் இம்மாதத்தினை அனுசரித்து நடக்க நாம் முற்பட வேண்டும்.
குர்ஆனின் மாதம்:
இந்த ரமழானுக்கு அல்லாஹ் வழங்கிய எல்லாப் புனிதத்துவத்துக்கும் அடிப்படையாக அமைவது இம்மாத்தில் இறுதி வேதமாம் அல்குர்ஆன் அருளப்பட்டதேயாகும்.
“ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்ப வில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப்படுத்து வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற் காகவும் (இவ்வாறு செய்தான்.)” (2:185)
ரமழான் மாதத்தின் சிறப்புக்கு அடிப்படைக் காரணம், அதில் குர்ஆன் அருளப்பட்டது என குர்ஆன் கூறுகின்றது. குர்ஆன் அகில உலக மக்களுக்கும் நேர்வழி காட்டக்கூடியது. சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிரித்தறிவிக்கக்கூடியது எனக் குர்ஆன் கூறுகின்றது. அகில உலகப் பொது மறையான குர்ஆன் குறித்து குர்ஆனே பல இடங்களில் சிறப்பித்துப் பேசுகின்றது.
“அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் நிச்சயமாக உங்களிடம் வந்து விட்டது.”“அல்லாஹ் தனது பொருத்தத்தை நாடு வோருக்கு அதன்மூலம் ஈடேற்றத்திற்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவனது நாட்டத்தின் மூலம் அவர்களை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்றி, அவர்களை நேரான வழியின் பக்கம் செலுத்துகின்றான்.” (5:15-16)
“மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியும், நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிட்டது.” (10:57)
“ஒவ்வொரு சமூகத்திலும் அவர்களிலிருந்து அவர்களுக்கு ஒரு சாட்சியாளரை நாம் எழுப்பி, உம்மை இவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டுவரும் நாளை (எண்ணிப் பார்ப்பீராக.) அனைத்தையும் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் நாம் இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்துள்ளோம்.” (16:89)
“மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நிவா ரணியாகவும் அருளாகவும் உள்ளவற்றையே இக்குர்ஆனில் நாம் இறக்கியுள்ளோம். அது அநியாயக்காரர்களுக்கு நஷ்டத்தைத் தவிர வேறெதையும் அதிகரிக்காது.”(17:82)
இவ்வளவு சிறப்புமிக்க குர்ஆனை வைத்துக் கொண்டு, அதை ஓதாமல், அதன்படி வாழாமல,; குர்ஆனைப் புறக்கணிக்கும் சமூகமாக முஸ்லிம்கள் வாழ்வது அவர்களின் எல்லா வiகாயன வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாகும். ஆகவே, அல்குர்ஆனுடன் ஒரு இறுக்கமான தொடர்பை ஏற்படுத்தும் மாதமாக இம்மாதம் திகழ வேண்டும்.
பொறுமையின் மாதம்:
நோன்பும் ரமழானும் ஒரு மனிதனுக்குப் பொறுமையைக் கற்றுக் கொடுக்கின்றன. பசியையும், தாகத்தையும், மனோ இச்சையையும் நோன்பின் மூலம் கட்டுப்படுத்தி கொள்ள ஒரு முஸ்லிம் பழக்கப்படுத்தப் படுகின்றான். அவ்வாறே அவன் கோபத்தையும் கட்டுப்படுத்தப் பழக வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
“நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக் களைப் பேச வேண்டாம், முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவறுடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி எனக் கூறி ஒதுங்கிவிடட்டும்….” என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ), ஆதாரம்: புஹாரி- 1984)
ஒருவன் வீண் சண்டைக்கு வந்தால் கூட நான் நோன்பாளி என்று கூறி, நோன்பாளி சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது எனக் கூறி ஒதுங்கிவிட வேண்டும் எனும் அளவுக்கு நோன்பு பொறுமையைப் போதிக்கின்றது.
தக்வாவின் மாதம்:
முடிந்தவரை நன்மைகள் செய்யக் கூடிய ஊக்கத்தையும், பாவங்களை விட்டும் விலகிக் கொள்ளக் கூடிய பக்குவத்தையும் ஏற்படுத்திக் கொள்வதே தக்வா எனும் இறையச்சமாகும். நோன்பின் மூலமும் ரமழானின் மூலமும் நன்மைகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகின்றது. தீமைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. இதன் மூலம் ரமழான் தக்வாவின் மாதமாகவும் திகழ்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)
இந்த வசனமும் தக்வா என்பதே நோன்பின் நோக்கம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வுக்காக ஆகுமான உணவையும் பானத்தையும் தவிர்ந்து பயிற்சியெடுக்கும் ஒரு முஸ்லிம், அல்லாஹ்வுக்காக அவன் தடுத்தவற்றி லிருந்து விலகிக் கொள்கின்ற பக்குவத்தையும் பெற முடியும். அல்லாஹ் தன் கட்டளைகளைச் செயற்படுத்துவதில் ஏற்படும் கஷ;டங்களையும் நஷ;டங்களையும் சகித்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெறுகின்றான். இதன் மூலம் அவனது தக்வா அதிகரிக்கின்றது. எனவே, ரமழான் இறையச்சத்தின் மாதமாகவும் திகழ்கின்றது.
ரமழான் தர்மத்தின் மாதம்:
முஸ்லிம்கள் அதிகமதிகம் தர்மம் செய்யும் மாதமாக இம்மாதம் திகழ்கின்றது. அடுத்தவர்களின் தேவைகளை உணர்ந்து, தான தர்மங்கள் செய்யும் பக்குவத்தையும் இம்மாதம் வழங்குகின்றது.
“நபி(ச) அவர்கள் இயல்பிலேயே வாரி வழங்கம் வல்லலாகத் திகழ்ந்தார்கள். ரமழான் மாத்தில் ஜிப்ரீல்(ர) அவர்களைச் சந்திக்கும் தருணத்தில் காற்றை விட வேகமாக அவர்களது தர்மம் இருக்கும்” என இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி: 6)
ரமழான் நல்லறங்களின் மாதம்:
மனிதன் நல்லறங்கள் செய்வதற்கும் நல்ல சந்தர்ப்பம் அமைய வேண்டும். அந்த நல்ல சர்ந்தர்ப்பத்தை ரமழான் வழங்குகின்றது.
“ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)ஆதாரம்: புஹாரி: 1899
ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுவதன் மூலம் கெட்ட செல்களை விட்டும் விலகும் உணர்வை ஏனைய மாதங்களை விட அதிகமாகவே ரமழானில் மனிதன் பெறுகின்றான்.
“ரமழான் மாத்தின் முதல் இரவில் ஷைத்தான்களுக்கும் மூர்க்கத்தனமான ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் வாயில்கள் மூடப்படும், அதன் எந்த வாயிலும் திறக்கப்படமாட்டாது. சுனத்தின் வாயில்கள் திறக்கப்படும், அதன் எந்த வாயிலும் மூடப்பட மாட்டாது. ஒரு வானவர் நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! உன் தீமையைக் குறைத்துக் கொள்! என அழைப்பு விடுப்பார்…” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)ஆதாரம்: திர்மிதி- 682, இப்னு மாஜா- 1642, அஹ்மத்- 19002-18795
நன்மை செய்பவரை ஆர்வமூட்டி, தீமை செய்பவன் தன் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என ரமழானில் அழைப்பு விடுக்கப்படுவதால் இது நல்லறங்களை அதிகமதிகம் செய்ய வேண்டிய மாதமாகத் திகழ்வதை அறியலாம்.
பாவமன்னிப்பின் மாதம்:
அல்லாஹ் எப்போதும் பாவங்களை மன்னிப்பவனாகவே இருக்கின்றான். ஆனால், ரமழான் என்பது பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற்று தன்னை மாற்றிக் கொள்வதற்கு அல்லாஹ் வழங்கிய அருமையான சந்தர்ப்பமாகும்.
“யார் ரமழானுடன் அல்லாஹ்வுக்காக நோன்பு பிடிக்கின்றாரோ அவரது முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ரமழானில் ஈமானுடன் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து இரவில் நின்று வனங்குகின்றாரோ அவரது முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.” இவ்வாறு வரும் பல்வேறு பட்ட அறிவிப்புக்களும் ரமழானுக்கும் பாவமன்னிப்புக்கு மிடையில் நெருங்கிய தொடர்பிருப்பதை உறுதி செய்கின்றன.
எனவே, பாவங்களை மன்னிக்கத்தக்க அமல்களை ரமழானில் அதிகம் செய்வதுடன் கடந்த காலப் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் அதிகமதிகம் தவ்பாச் செய்து எம்மை நாம் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமழானுக்குப் பின்னுள்ள வாழ்க்கையில் அந்த மாற்றம் தெளிவாகத் தெரியும் விதத்தில் எமது வாழ்வை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
மகத்தான இரவின் மாதம்:
ரமழான் மாதம் மகத்தான ஒரு இரவை உள்ளடக்கிய ஒரு மாதமாகும். அதுதான் அல்குர்ஆன் அருளப்பட்ட இரவு. அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அதாவது, அந்த ஒரு இரவு 83 வருடங்களை விடவும் சிற்நதது; பாக்கியம் பெற்றது. அந்த இரவில் ஒருவர் அமல் செய்கின்ற போது ஆயிரம் மாதங்கள் அமல் செய்த அந்தஸ்த்தைப் பெறுகின்றார். அந்த இரவை அல்குர்ஆன் அருள் வளம் பொருந்திய இரவு என்று கூறுகின்றது.
“நிச்சயமாக நாம் இதைப் பாக்கியம் பொருந்திய ஓர் இரவிலே இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் எச்சரிக்கை செய்பவர்களாக இருக்கின்றோம்.” (44:3)
அந்த இரவு மகத்தான, கண்ணியமிக்க இரவு என குர்ஆனில் போற்றப்படுகின்றது. அது சாந்தியும், அமைதியும் நிறைந்த வானவர்கள் இறங்கும் இரவு என குர்ஆன் போற்றுகின்றது.
“நிச்சயமாக நாம் (குர்ஆனாகிய) இதை (மகத்துவமிக்க இரவாகிய) “லைலதுல் கத்ரி”ல் இறக்கிவைத்தோம்.”“லைலதுல் கத்ர்” என்னவென்பதை (நபியே!) உமக்கு அறிவித்தது எது?“லைலதுல் கத்ர்” என்பது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.வானவர்களும் “ரூஹு” (எனும் ஜிப்ரீலு)ம் சகல கட்டளைகளுடன் தமது இரட்சகனின் அனுமதிப் பிரகாரம் அதில் இறங்குகின்றனர்.அதிகாலை உதயமாகும் வரை அது அமைதி பொதிந்திருக்கும்.” (97: 1-5)
எனவே, புனித ரமழானில் வரும் இந்த இரவை அடைந்து கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். அந்த இரவு ரமழானில் அதிலும் கடைசிப் பத்தில் அதிலும் இறுதிப் பத்து ஒற்றைப்படையான இருவுகளில் வருகின்றது. இவ்வாறு கூறிய நபி(ச) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக இறுதிப் பத்து பூராகவும் முழுமையாக முயற்சி செய்துள்ளார்கள்.
“ரமழானின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் லைலதுல் கத்ருடைய இரவைத் தேடிக்கொள்ளுங்கள்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)ஆதாரம்: புஹாரி- 2017“நபி(ச) அவர்கள் தமது மரணம் வரையிலும் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புஹாரி- 2026)“ரமழானின் இறுதிப் பத்து வந்துவிட்டால் நபி(ச) அவர்கள் தமது வேஷ;டியைக் கட்டிக் கொள்வார்கள். தமது இரவை உயிர்ப்பிப்பார்கள், தமது மனைவிமார்களை எழுப்பிவிடுவார்கள்” என ஆயிஷா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.(புஹாரி: 2024)
இந்த வகையில் நோன்பு 27-தான் லைலதுல் கத்ர் இரவு எனத் தெரியாமல் அந்த இரவில் மட்டும் சில சடங்குகளைச் செய்யும் வழக்கத்தைக் கைவிட்டு விட்டு ரமழான் இறுதிப் பத்து பூராக அனுமதிக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் மூலமாக லைலதுல் கத்ரை அடைந்து கொள்ள முயற்சிக்க நாம் முனைய வேண்டும்.