“யஃகூபுக்கு மரணம் வந்தபோது (யூதர்களே!) நீங்கள் (அங்கு) பிரசன்ன மாக இருந்தீர்களா? அவர் தனது பிள்ளைகளிடம், “எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” எனக் கேட்ட போது அவர் கள், “உமது இரட்சகனும் உமது மூதாதையர்களாகிய இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இரட்சகனுமாகிய ஒரே இரட்சகனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக நடப்போம்” எனக் கூறினர்.” (2:133)
யஃகூப் நபி தனது மரண வேளையின் போது தனது புதல்வர்களை அழைத்துத் தனது மரணத்திற்குப் பின்னர் தடம் புரண்டுவிடாது அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும், அவனுக்குக் கட்டுப்பட்டு முஸ்லிமாக வாழ வேண்டும் என்றும் வஸிய்யத்துச் செய்ததை இந்த வசனம் கூறுகின்றது. இந்த வசனம் இப்றாஹீம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), யஃகூப் (அலை), இஸ்ரவேல் சந்ததியினர் அனைவரும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்கி வந்தனர் என்பதையும் அவனுக்கே கட்டுப்பட்ட முஸ்லிம்களாகவே இருந்தனர் என்பதையும் உறுதி செய்கின்றது.
அத்தோடு யஃகூப் (அலை) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது நீங்கள் பக்கத்திலா இருந்தீர்கள் என வேதம் கொடுக்கப்பட்ட மக்களிம் கேட்பதன் மூலம், யஃகூப் நபி மரணத் தறுவாயில் கூறிய இந்த உண்மைக்கு மாற்றமான செய்திகளை அவர்கள் இட்டுக்கட்டிக் கூறி வந்துள்ளனர் என்பதை அறியலாம்.
இன்றைய பைபிளை எடுத்து நோக்கினாலும் ஆதியாகாமம்:49 ஆம் அதிகாரத்தில் யஃகூப் நபி மரணிப்பதற்கு முன்னர் இஸ்ரவேல் சமூகத்தில் யூத வகுப்பாரை உயர்த்திப் பேசியதாகவும் ஏனைய சந்ததியினரை சபித்ததாகவும் உள்ளது. இதை மறுக்கும் விதத்தில் யஃகூப் மரணித்த போது நீங்கள் பக்கத்தில் இருந்தீர்களா? அவர் தனக்குப் பின்னர் ஏக இறை வழிபாட்டில் இருந்து விலகிவிடக் கூடாது என்றும் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிக்க வேண்டும் என்றுமே போதித்தார் என்று இந்த வசனம் கூறுகின்றது.