அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.
இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய அம்சமாகும். இந்த அடிப்படையில் நாம் அலசப் போகும் அம்சம் அவசியமானதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என்பதை வாசகர்கள் முதலில் கவனத்திற் கொள்ள வேண்டும்.
தனிநபர் ஒருவர் மீது கொள்ளும் பற்றும், பாசமும், அவர் செய்த தியாகத்தின் மீதும், புரட்சியின் மீதும் கொள்ளும் காதலும் கண்ணியமும் நபித்துவத்தில் ஒரு பகுதி மறுக்கப்பட்டாலும் பரவாயில்லை என்கின்ற நிலைக்கு எம்மைக் கொண்டு சென்று விடக்கூடாது என்பதற்காகவும், கருத்து விமர்சனம் செய்வது அக்கருத்துடையவரின் கண்ணியத்தை மறுப்பதாகாது என்பதை தெளிவுபடுத்தவுமே இந்த முன்னுரையை வழங்குகின்றோம்.
ஹதீஸ்களை மறுப்போர்:
இஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ்களை மறுப்போர் ஆரம்ப காலந்தொட்டே உருவாகி விட்டனர்.
சிலர் ஹதீஸ்களை முழுமையாக மறுக்கின்றனர். இவர்கள் இன்றுவரை “அஹ்லுல் குர்ஆன்” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் குர்ஆனில் இல்லாத புதிய சட்டங்களைத் தரும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் “ஆஹாத்” எனும் வகை சார்ந்த ஹதீஸ்களில் ஹலால், ஹராம், அகீதா பற்றிப் பேசும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் அல்குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்தனர். ஹவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்றோர் இந்த வகையில் பல்வேறு ஹதீஸ்களை மறுத்து வந்தனர். நவீனகால அறிஞர்கள் பலரும் இந்தத் தவறில் வீழ்ந்துள்ளனர். முஹம்மத் அல் கஸ்ஸாலி எனும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த அறிஞர் இவ்வகையில் பல ஹதீஸ்களைப் பகுத்தறிவு ரீதியில் ஆய்வு செய்து மறுத்துள்ளார். பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகர் அபுல் அஃலா மவ்தூதி (ரஹ்) அவர்கள் குறித்தும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறே முஹம்மத் அப்துஹு போன்ற அறிஞர்களும் பல அறிவிப்புக்களை மறுத்துள்ளனர்.
இவர்களது ஹதீஸ் துறை சார்ந்த இத்தகைய விமர்சனங்கள் பாமர மக்களிடம் எந்தத்தாக்கத்தையும் எற்படுத்தவில்லை. இவர்களை நேசிக்கும் சகோதரர்களும் இவர்களது இத்தகைய கருத்துக்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவரவில்லை. இவர்கள் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த பலரும் இவர்களின் இத்தகைய கருத்துக்களின் தாக்கத்திற்குக் கூட உட்படவில்லை. ஆயினும், தமிழ் உலகில் இத்தகைய கருத்துக்கள் பரவலாக பாமரர்கள் மத்தியிலும் கூட இடம் பிடித்ததற்கு இந்தக் கருத்தை முன்வைத்த அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் உலவி அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கே காரணமாகும்.
இவர் கடந்த பல ஆண்டுகளாக குர்அன், சுன்னாவை மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருபவர். சமூக எதிர்ப்புக்கள் எதையும் கவனத்திற் கொள்ளாது துணிச்சலாக களப்பணி ஆற்றிவருபவர். சுமார் 20 வருடங்களாகத் தொய்வின்றித் தொடராகப் பணியில் ஈடுபட்டு வருபவர். அல்லாஹ் இவருக்கு வழங்கியிருக்கும் அபரிதமான நாவன்மை, வாதம் செய்யும் வலிமை, எதையும் எவரும் புரியும் வண்ணம் இலகுவாக விளக்கும் ஆற்றல் என்பன பாமர மக்களிடம் இவருக்குப் பெருத்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது.
இதே வேளை வழிகெட்ட காதியானி போன்ற அமைப்புக்களுடன் அவர் விவாதம் செய்தமையும் அவர் நடத்தி வரும் “இஸ்லாம் ஓர் இனிய மர்க்கம்” நிகழ்ச்சியும் தவ்ஹீத் வட்டாரத்தையும் தாண்டி பெரியதோர் இமேஜை அவருக்கு ஏறங்படுத்தியுள்ளது.
இந்த வகையில் இவரது கருத்துக்கள் உடனுக்குடன் பல்லாயிரம் மக்களைச் சென்றடைகின்றன. இவர் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருப்பதால் அவர் கூறுவதுதான் சரி என்ற மனநிலைக்குக் கூட பலரும் வந்துள்ளனர். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் பலவற்றை மறுக்கும் இவரது சிந்தனை தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாகத் தாக்கம் செலுத்தியுள்ளது.
எனவே, இது குறித்த மாற்று விளக்கம் ஒன்றை மக்கள் மன்றத்திற்கு வைக்கும் தேவையுள்ளது. இந்த நோக்கத்தில்தான் இக்கட்டுரை வரையப்படுகின்றது.
அன்பான வேண்டுகோள்:
வாசகர்களிடம் அன்பான ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். நீங்கள் இந்தக் கட்டுரை முடியும் வரை நிதானமாக நடுநிலையோடு இதனை வாசிக்க வேண்டும். எவ்வளவோ தியாகங்கள் செய்த நபித்தோழர்கள், அறிஞர்கள், இமாம்களின் தவறான கூற்றுக்களைக் கூட மறுக்கத் துணிந்த நாம் ஒரு தனிநபர் அவர் எவ்வளவுதான் சேவை செய்திருந்தாலும் கூட அவரது கருத்துக்கள் தவறாக இருந்தாலும் மறுக்கக் கூடாது எனக் கருதுவது குராபிகளின் மனநிலையை விட மோசமானதாகும்.
எனவே, அவரது கருத்தை மறுக்கலாமா? இவரது கருத்தை மறுக்கலாமா? என மௌனம் காத்து உண்மையை மறைக்க முடியாது என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, நடுநிலையோடு முழுமையாக வாசித்து முடிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
புதிய கருத்து
அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் 20 வருடங்களுக்கு மேலாக பிரச்சாரம் செய்து வந்தாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது நிலையும் அவரது பிரச்சாரமும் அவரிடம் அண்மையில் ஏற்பட்ட மாற்றமாகும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலப் பிரச்சாரத்தில் அவரிடம் இந்த நிலை இருக்கவில்லை.
அவரது கருத்துக்கள் மறுக்கப்படும் போது அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என்றால் மார்க்கத்திற்காக அல்ல தனிப்பட்ட கோபத்திற்காக எதிர்க்கிறார்கள் என்று தப்புப் பிரச்சாரம் செய்யப்படுவதுண்டு. அது தவறு, இவரது இந்தக் கருத்து அவரது புதிய நிலைப்பாடு என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
அத்துடன் பல தவ்ஹீத் அழைப்பாளர்கள் கொள்கையில் இருந்து தடம் புரண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை கொள்கையில் தடம் புரளாமல் உறுதியாக இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இது தவறு. ஹதீஸ் துறையில் அவரிடம்தான் தடம்புரள்வு ஏற்பட்டது என்பதையும் உணர்த்தும் கடமையில் இருப்பதால் இது குறித்து சிறிது விளக்க வேண்டிய அவசியமுள்ளது.
அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் காதியானிகளுடன் ஒரு விவாதம் செய்தார்கள். அந்த விவாதத்தின் மூலம் தமிழ் உலகில் காதியானிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதற்காக அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் காதியானிகளுடன் விவாதம் தொடர்பாகக் கடிதப் பரிமாற்றம் நடந்தது. அந்தக் கடிதங்கள். ‘காதியானிகளின் கல்லறைப் பயணம்’ என்ற தலைப்பில் 1988 அக்டோபர் அல் ஜன்னத் இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது.
அப்போது காதியானிகள் இப்போது இவர் இருக்கும் நிலைப்பாட்டில் தான் இருந்தனர். அவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க முடியாது என எழுத அதை மறுத்து பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் பல இடங்களில் எழுதியிருக்கின்றார்கள்.
உதாரணமாக:
ஆதாரபூர்வமான ஸனதுகளுடன் உள்ள ஹதீஸ்கள் என்று ஏற்கப்படும் ஹதீஸ்களை எக்காரணம் கொண்டும் மறுக்கக் கூடாது.
இவ்வாறே 27-05-1988 தேதியிட்ட கடிதத்தில் இரண்டாவது அம்சமாக “திருக்குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படும்” என்ற உங்கள் கூற்று ஏற்க முடியாது. ஆதாரபூர்வமான எந்த ஹதீஸையும் மறுக்கவே கூடாது என்பது எங்களின் நிலை. திருக்குர்ஆனுடன் எந்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் முரண்படுகின்றது என்று நீங்கள் கூறினால் முரண்படவில்லை என நாம் நிரூபிப்போம்………..” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்தக் கடிதங்களில் பல இடங்களில் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முரண்படாது. சுமார் 50 ஹதீஸ்கள் அளவில் முரண்போல் தோன்றும் ஆனால் முரண் இல்லை என்று தான் அன்று கூறிவந்தார்.
இவ்வாறே 2001 ல் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட சுனன் திர்மதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பில் ‘அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும்’ என்ற தலைப்பில் முழுமையாக ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கு அழகானதொரு மறுப்பை பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் அளித்துள்ளார்கள்.
அதிலே ஹதீஸை மறுப்பவர்கள் நான்கு பிரதான காரணங்களை முன்வைத்து ஹதீஸ்களை மறுப்பவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அவையாவன:
1. ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன.
2. குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.
3. ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.
4. குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.
என்றெல்லாம் காரணங்கள் கூறியே ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.
ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விசயத்திலும் கூற இயலும். இது பற்றி இங்கு விரிவாக அலசுவோம் என்று தொடர்கிறது அவ்விளக்கம். (சுனன் திர்மிதி நூல் அறிமுகம் A25)
மொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதற்குக் கூறப்பட்ட நான்கு காரணங்களில் மூன்றாவது காரணம் தவிர மற்றைய மூன்று காரணங்களையும் கூறி இன்று பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் ஆதாரபூhவமான ஹதீஸ்களை மறுக்கின்றார்.
இதில் அச்சப்பட வேண்டிய மற்றுமொரு அம்சமுண்டு. இந்த குறைகளைக் குர்ஆன் விசயத்திலும் கூற முடியம் என்று வேறு குறிப்பிட்டுள்ளார்கள். இது ஹதீஸுடன் மட்டும் நிற்குமா? குர்ஆனுக்கும் தாவுமா? என்று அச்சப்பட வேண்டியுள்ளது. இவர் இவ்வளவுடன் நின்று கொண்டாலும் இவருக்குப் பின்னால் இதே அடிப்படையில் வருபவர் குர்ஆன் விசயத்திலும் கூட ஐயம் எழுப்ப வாய்ப்புள்ளதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
இதுவரை நாம் குறிப்பிட்டதிலிருந்து குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது தவறான நிலைப்பாடு 2002க்குப் பின்னர்தான் அவரிடம் எற்பட்ட கொள்கைத் தடம்புரள்வே தவிர இருபது வருட பிரச்சாரத்தில் கிடையாது என்பதைப் புரிந்திருப்பீர்கள்.
அடுத்தாக ஆரம்பத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மட்டும் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக மறுக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பின்னர் விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினாலும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மறுக்கப்படும் ஹதீஸ்
சூனியம்:
தமிழ் உலகில் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸே முதலில் மறுக்கப்பட்டது. பின்னர் அதற்கு விமர்சனம் எழுந்ததால் அதை நியாயப்படுத்த இன்னும் பல ஹதீஸ்கள் மறுக்கப்பட்டன.
ஆரம்பத்தில் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் பில்லி சூனியம் என்ற பெயரில் 2:102 வசனத்திற்கு விளக்கமாக ஒரு கட்டுரையை எழுதினார்கள். பின்னர் அது பில்லி சூனியம் என்ற பெயரில் தனிப் புத்தகமாக வெளிவந்தது.
அப்போது சூனியம் இருக்கின்றது. ஆனால் அதன் மூலம் நினைத்ததையெல்லம் செய்ய முடியாது. அல்லாஹ்வுடைய நாட்டம் இருந்தால் அதன் மூலம் பாதிப்பு ஏற்படும். சூனியத்தின் அதிகபட்ச பாதிப்பு கணவன்-மனைவிக்கிடையில் பிரிவை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை முன்வைத்து நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதைச் சரிகண்டு எழுதியிருந்தார். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் அவரது தூதுத்துவத்தில் அது எந்தப் பாதிப்பையும் எற்படுத்தவில்லை என்றும் எழுதியிருந்தார்.
பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை பல்வேறு வாதங்களை முன்வைத்து மறுத்து வருகின்றார். அதேவேளை சூனியம் என்று ஒன்றில்லை. சூனியத்திற்கு எந்தத் தாக்கமுமில்லை என்று நேரடியாக குர்ஆனுக்கு முரணாகவே எழுதியும் பேசியும் வருகின்றார். இதைப் பார்க்கும்போது ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரண் என்பதற்காக அல்லாமல் தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது என்பதற்காகத்தான் மறுக்கப்பட்டு வருகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது. எனவே, முதலில் சூனியம் என்றதொன்று இருக்கின்றது. குர்ஆன் கூறும் சூனியம் வெறும் மெஜிக் அல்ல என்பது குறித்து நாம் தெளிவு பெறவேண்டியுள்ளது. அதன் பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் சம்பந்தப்பட்ட வாதங்களையும் நோக்கலாம்.
அல்குர்ஆனும் சூனியமும்
அல்குர்ஆனில் சூனியம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல பதங்களைக் காணலாம் “ஸிஹ்ரு” என்ற பதம் சுமார் 12 இடங்களிலும் “அஸ்ஸிஹ்ரு” 6 இடங்களிலும் “அஸ்ஸஹரது” என்பது 8 இடங்களிலும் “ஸாஹிர்” (சூனியக்காரன்) என்பது 7 இடங்களிலும் “அஸ்ஸாஹிர்” என்பது 2 இடங்களிலும் “அஸ்ஸாஹிரூன்” என்பது 1 இடத்திலும் “மஸ்ஹூரா” என்பது 3 இடங்களிலும் “அல்முஸஹ்ஹரீன்” என்பது 2 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.
இல்லாத ஒன்றைத்தான் அல்குர்ஆனில் இத்தனை இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளானா?
சூனியம் பற்றி 2:102 வசனம் மிக விரிவாகப் பேசுகின்றது. அந்த வசனத்தின் அடிப்படையான சில அம்சங்களை இங்கே நோக்குவோம்.
‘(யூதர்களான) அவர்கள், சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியதைப் பின்பற்றினர். சுலைமான் நிராகரிக்க வில்லை. மாறாக, ஷைத்தான்களே நிராகரித்து, மனிதர்களுக்கு சூனியத்தையும், பாபிலோனில் ‘ஹாரூத், மாரூத்’ என்ற இரு வானவர்கள் மீது இறக்கப்பட்டதையும் கற்றுக்கொடுத்தனர். ‘நாம் சோதனையாக இருக்கின்றோம். (இதனைக் கற்று) நிராகரிப்பாளனாக நீ ஆகிவிடாதே’ என்று அவ்விருவரும் கூறாது எவருக்கும் கற்றுக் கொடுத்ததில்லை. அவ்விருவரிடமிருந்தும் கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணக் கூடியதைக் கற்றுக் கொண்டனர். அவர்கள் இதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒருவருக்கும் தீங்கிழைக்கக் கூடியவர்களாக இல்லை. அவர்கள் தங்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காத, தங்களுக்குத் தீங்கிழைப்பதையே கற்றுக் கொண்டனர். மாறாக யார் இதை விலைக்கு வாங்குகிறாரோ அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் அறிபவர்களாக இருந்தால், எதற்காகத் தம்மை விற்றார்களோ அது மிகவும் கெட்டதாகும். (அல்குர்ஆன் 2:102)
1. சூனியத்தைக் கற்றுக்கொடுப்பது நிராகரிப்பை எற்படுத்தும். ஏனெனில் ஷைத்தான் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததினால் காபிர்களானதாக இந்த வசனம் கூறுகின்றது.
2. சூனியத்தைக் கற்பதும் குப்ராகும். ஏனெனில், ஹாரூத், மாரூத் இருவரும் தம்மிடம் சூனியத்தைக் கற்க வருபவாகளிடம் நாங்களே சோதனையாக இருக்கின்றோம் நீங்கள் நிராகரித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.
3. அதன் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும்.
4. அதில் தீங்கு உண்டு. ஆனால் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது.
5. சூனியத்தைக் கற்பது நன்மையளிக்காது. தீங்குதான் விளைவிக்கும்.
6. தங்களை விற்று சூனியத்தை வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் அழிவே.
இத்தகைய அடிப்படை அம்சங்களை இந்த வசனம் கூறுகின்றது. சூனியத்தின் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும் அல்லாஹ் நாடியால் அதன் மூலம் தீங்கு உண்டாகும் என்று தெளிவாகக் குர்ஆன் கூறும்போது பகுத்தறிவு வாதத்திற்கு குர்ஆனைவிட கூடுதல் முக்கியத்துவமளித்து சூனியத்தை முழுமையாக மறுக்கலாமா?
சூனியத்திற்கு கோல்மூட்டுதல் என்று மொழியாக்கம் சொன்னால் கோல்மூட்டுவதற்காக யாராவது வகுப்பு வைப்பார்களா? அதைப் படிக்க மக்கள் போவர்களா? “ஸிஹ்ரு” என்பதற்கு மெஜிக் என அர்த்தம் செய்தால்
மெஜிக் பார்த்தால் கணவன்-மனைவிக்கிடையே பிளவு வருமா? மெஜிக்கைக் கற்பதும் கற்றுக் கொடுப்பதும் குப்ராகுமா?
மெஜிக் தான் சூனியம் என்றால் உங்களது மாநாடுகளில் மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சியிலே மெஜிக் கற்றுக் கொடுக்கப்படுகின்றதே இலட்சக் கணக்கில் மக்களைச் சேர்த்து மெஜிக்கைக் கற்றுக் கொடுத்து நீங்களும் காபிராகி அவர்களையும் காபிராக்கி அனுப்புகின்றீர்களா? சூனியத்தைச் ஷைத்தான் கற்றுக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகின்றது. சூனியம் என்பது மெஜிக்கைக் குறிக்கும் என்றால் அதைக் கற்றுக் கொடுக்கும் நீங்கள் யார்? ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே! அதில் இரண்டாவதாக சூனியத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். சூனியம் என்றால் மெஜிக் எனில், மெஜிக் பெரும் பாவமா? அந்தப் பெரும்பாவத்தைத்தான் இலட்சக் கணக்கானவர்களைச் சேர்த்து வைத்து நீங்கள் செய்கின்றீர்களா?
நபி(ஸல்) அவர்கள் தவிர்ந்து விலகிக் கொள்ளுமாறு சொன்ன சூனியத்தை – மெஜிக்கை – நீங்கள் மாநாட்டில் செய்து நபி வழியை மீறுகின்றீர்களா? இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பும்போது ஸிஹ்ரு – சூனியத்திற்கு மெஜிக் என புதிய மாற்று விளக்கம் கொடுப்பது ஏற்க முடியாதது என்பது தெளிவாகப் புலனாகும்.
இந்த வசனம் மிகத் தெளிவாக சூனியம் இருப்பதையும் அல்லாஹ் நாடினால் அதற்குத் தாக்கம் உண்டு என்பதையும் வெளிப்படையாகவே கூறுகின்றது. இதில் குர்ஆனையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை.
மனோ இச்சையையும் பகுத்தறிவையும் வழிப்பட்ட முஃதஸிலாக்கள் போன்றவர்களே சூனியத்தை மறுத்திருக்கின்றனர். இது தொடர்பாக இன்னும் பல விளக்கங்களை நாம் பெற வேண்டியுள்ளது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
அன்புடன்
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர், உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்