டியூனிசியாவின் ஜெஸ்மின் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து, லிபியா ஜோர்தான், சிரியா, பஹ்ரைன், ஈரான், மொரொக்கோ என முஸ்லிம் நாடுகளை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கதிகலக்கிக்கொண்டிருக்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சியாளர்களின் அடிவயிற்றில் இந்தப் புரட்சிகள் தீ மூட்டியுள்ளன. அடுத்த நாடு எது என்ற மனநிலையில் மன்னர்கள் வினாடிகளைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
காட்டுத் தீ போன்று பரவும் மக்கள் புரட்சிகள், முஸ்லிம் நாடுகளைக் குறி வைத்துச் சுழல்வதைப் பார்க்கும் போது இதன் பின்னணி என்ன என்று ஐயப்பட வேண்டியுள்ளது.
டியூனிசியாவில் முஹம்மத் அஸீஸி எனும் ஏழை மரக்கறி வியாபாரி, அரசுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளிப்படுத்தத் தீக்குளித்து மரணமானான். இதனைத் தொடர்ந்து ஊழல் ஜனாதிபதியான ஸைனுல் ஆப்தீன் பின் அலியும், அவரது பங்காளிகளும் ஜனவரி 14 இல் நாட்டை விட்டே வெருண்டோடும் அளவுக்கு ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்தன.
அமெரிக்காவின் உற்ற நண்பனும், இஸ்ரேலின் அடிவருடியுமான ஹுஸ்னி முபாறக்குக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எகிப்தில் உக்கிரமடைந்து, எகிப்தின் சர்வாதிகார ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமாச் செய்து, தற்போது கோமா நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு எகிப்தின் நிலைமை மாற்றமடைந்தது.
இந்த இரு தலைவர்களும் இஸ்லாத்தின் எதிரிகளின் அடிவருடிகளாகவும், அந்நிய சக்திகளின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் அடிமைகளாகவும் செயற்பட்டவர்களாவர்.
இந்த இரு ஆர்ப்பாட்டங்களை அமெரிக்கா ஆதரித்து கருத்து வெளியிட்டதுடன், எகிப்தில் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே ஹுஸ்னி முபாறக் பதவி விலகுவதுதான் சரியென அமெரிக்கா கருத்துக் கூறியது. இதனை நோக்கும் போது இஸ்லாத்தின் எதிரிகள் இன்னுமொரு ஸைனுல் ஆபிதீனையும், ஹுஸ்னி முபாறக்கையும் டியூனீஸியாவுக்கும், எகிப்துக்கும் தயார் பண்ணி விட்டனர். இவ்விருவரும் செய்ததை விடச் சிறப்பாக இஸ்லாத்துக்கு எதிராகச் செயற்படக் கூடிய இருவரை இஸ்லாத்தின் எதிரிகள் தயார் பண்ணி விட்டனர் என்றே எண்ண வேண்டியுள்ளது.
டியூனீசியாவின் சர்வாதிகாரி நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிய பின்னர் டியூனீசியாவில் ஷரீஅத் சட்டத்துக்கு இடமில்லை என்ற கருத்துத்தான் முதன்மைப்படுத்தப்பட்டது. எகிப்தில் ஹுஸ்னி முபாறக் பதவி விலகிய பின்னர் அரசியல் அரங்கில் முன்னிலைப்படுத்தப்படுவோர் ஹுஸ்னி முபாறக்கை விடவும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை.
ஆக மொத்தத்தில் நூற்றுக் கணக்கான உயிர்ப் பலியான, ஆயிரக் கணக்கானோர் காயப்பட்ட, கோடிக் கணக்கான சொத்துக்ககளை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டங்கள் அதிகாரக் கட்டிலில் அமரும் ஆட்களை மாற்றியுள்ளன. எனினும், ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
எகிப்தின் ஆர்ப்பாட்டத்துக்கு ஈரான் ஆதரவு தெரிவித்தது. இன்று ஈரானின் வாசலையும் ஆர்ப்பாட்டம் தட்டிக்கொண்டிருக்கின்றது. ஈரானிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு அமெரிக்கா வெளிப்படையாகவே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதே வேளை பஹ்ரைனில் ஷீஆக்கள், ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். தற்போது 42 வருடங்களாக ஆட்சிக் கட்டிலை இறுகப் பற்றிப் பிடித்துள்ள கடாபிக்கு எதிராக லிபியாவில் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்து வருகின்றன.
இவ்வாறு நோக்கும் போது முஸ்லிம் உலகில் அரசியல் குழப்பத்தையும், ஸ்திரமின்மையையும் ஏற்படுத்தவும், தமக்குச் சாதகமான அரசியல் சூழ்நிலைகளை உருவாக்கவும் அந்நிய சக்திகள் மக்கள் உணர்வுகளைத் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னணியாகத் திகழ்கின்றனவா என ஐயப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் உலகு மட்டுமன்றி சர்வதேச அளவில் பாரிய பொருளாதார நெருக்கடிகளை இந்தப் புரட்சிகள் ஏற்படுத்தப்போகின்றன. வேலையின்மை, எண்ணெய் விலையேற்றம், உல்லாசப் பயணத்துறை பாதிப்பு என பாதிப்புக்கள் தொடரும்.
இந்தக் கண்ணோட்டத்தில் நோக்கும் போதும், ஆர்ப்பாட்டங்கள் நல்ல விளைவை ஏற்படுத்தாதுமட்டுமல்ல, பல குற்றச் செயல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளமை, ஷரீஆவின் கண்ணோட்டத்தில் இந்த மக்கள் புரட்சிகளைச் சரி காண முடியாதுள்ளது.
அடுத்து, இவ்வார்ப்பாட்டங்கள் திட்டமிட்ட எந்த ஒழுங்கமைப்பையும் கொண்டிராமல், வெறும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஊடகமாகவே தென்படுகின்றன. ஷரீஆவின் கண்ணோட்டத்தில், ஆட்சியாளனிடம் தெளிவான குப்ரைக் காணும் வரை ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதற்கு அனுமதி இல்லையென்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
அடுத்து, முஸ்லிம் நாடுகளைக் குறி வைத்து இந்த ஆர்ப்பாட்டத் தீ பரவுவதற்கு மற்றுமொரு காரணம் இருக்கின்றது. ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கு, ஊழல், ஆடம்பரம் இவற்றுடன் சேர்ந்து முஸ்லிம் நாடுகளில்தான் 30-40 வருட ஆட்சித் தலைவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நாட்டு நலனை விடத் தமது குடும்ப நலனை முன்வைத்தே செயற்படுகின்றனர். இதனால் மக்கள் கொதித்து எழும்புகின்றனர். இந்த ஆட்சியாளர்களின் அதிகாரத் துஷ்பிரயோகமும், ஆடம்பரமும், இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை என்றாலும் மன்னராட்சி முறையையோ, ஒருவர் நீண்ட காலம் ஆட்சி செய்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை என்ற உண்மையை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்வது அவசியமாகும்.
மன்னராட்சியோ, மக்களாட்சி எனக் கூறப்படும் ஜனநாயக ஆட்சியோ எதுவாக இருந்தாலும் ஆட்சித் திட்டம் இஸ்லாமாக இருக்குமாக இருந்தால் இஸ்லாம் அதை அங்கீகரிக்கின்றது.
நபி தாவூத் (அலை) அவர்களுக்குப் பின்னர் அவரது வாரிசாக அவருடைய மகன் நபி சுலைமான் (அலை) அவர்கள் மன்னரானார். தந்தைக்குப் பின் தனயன் மன்னனராவது இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.
கலீபா உமர்(ரழி) அவர்கள் மரணத் தருவாயில் இருக்கும் போது, அவரது மகன் அப்துல்லாஹ்(ரழி) அவர்களைக் கலீபாவாக நியமிக்கும் படி சிலர் கேட்டனர். உமர்(ரழி) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. தந்தைக்குப் பின் தனயன் ஆட்சிக்கு வரும் நடைமுறை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால், உமர்(ரழி) அவர்கள் இந்த இடத்தில் அதைச் சுட்டிக் காட்டியிருப்பார்கள்.
அலி(ரழி) அவர்கள் கொல்லப்பட்டதும், மக்கள் ஹஸன்(ரழி) அவர்களிடத்தில் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவர் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையைத் தவிர்க்கும் முகமாக ஆட்சிப் பொறுப்பை முஆவியா(ரழி) அவர்களுக்கு விட்டுக் கொடுத்தார்கள்.
இங்கும் தந்தைக்குப் பின்னர் தனயன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். இஸ்லாம் அதைத் தடுக்கவில்லை.
நபி(ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின்னர் முக்கிய நபித் தோழர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களைக் கலீபாவாகத் தேர்ந்தெடுத்தனர். அதை மக்கள் அங்கீகரித்தனர். அபூபக்கர்(ரழி) அவர்கள் மரணிக்கும் போது உமர்(ரழி) அவர்களைக் கலீபாவாக நியமித்துச் சென்றார்கள்.
உமர்(ரழி) அவர்கள் மரணத் தருவாயில் இருக்கும் போது ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து அவர்களில் ஒருவரைக் கலீபாவாக நியமித்துக்கொள்ளுமாறு வேண்டினார்கள். ‘அபூ உபைதா அல்லது ஸாலிம் மவ்லா அபூ ஹுதைபா உயிருடன் இருந்தால் அவர்களில் ஒருவரைக் கலீபாவாக நியமித்து இருப்பேன்!’ என்று உமர்(ரழி) கூறினார்கள்.
இந்த அடிப்படையில் ஆட்சித் தலைவரே தனக்குப் பின்னர் யார் மக்களை ஆள்வது என்பதைத் தீர்மானித்து அறிவிக்கும் நடைமுறை இஸ்லாத்துக்கு விரோதமானதன்று. தந்தைக்குப் பின் தனயன் ஆட்சிக்கு வருவதும் இஸ்லாமிய வழிமுறைக்கு விரோதமானதன்று.
இதே போன்று ஒரு ஆட்சித் தலைவர் நீண்ட காலம் ஆட்சியில் இருப்பதும் இஸ்லாத்தின் பார்வையில் தவறானதன்று. அபூபக்கர்(ரழி) அவர்கள் மரணிக்கும் வரை ஆட்சி செய்தார்கள். இவ்வாறே உமர்(ரழி) அவர்களும் மரணிக்கும் வரையில் ஆட்சி செய்தார்கள். இவ்வாறே உஸ்மான்(ரழி), அலி(ரழி), முஆவியா(ரழி) ஆகிய அனைவரும் மரணிக்கும் வரையில் ஆட்சியில் நீடித்துள்ளனர். ஹஸன்(ரழி) அவர்கள் மட்டும் தனது வாழ்வுக் காலத்திலேயே ஆட்சிப் பொறுப்பை முழுமையாக முஆவியா(ரழி) அவர்களிடம் ஒப்படைத்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
எனவே மன்னராட்சியோ, நீடித்த ஆட்சியோ மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை. மக்களில் சிலர் ஜனநாயக ஆட்சிதான் இஸ்லாமிய அரசு என்ற எண்ணத்திலுள்ளனர். இது தவறானதாகும். மக்களும் ஆட்சியாளரைத் தெரிவு செய்யலாம். இதற்கு அபூபக்கர்(ரழி) அவர்களது பதவியேற்பு உதாரணமாகும். ஆனால் இன்றைய தேர்தல் மோசடிகள், வன்முறைகளைப் பார்க்கும் போது ஜனநாயகத்தின் போலித் தன்மையைப் புரிய முடியும். தேர்தலில் வாக்குக்காக இனவாதமும், மதவாதமும், வன்முறைகளும், சமூகப் பிரிவினைகளும் உண்டாக்கப்படுவதைப் பார்க்கும் போது, இவை ஜனநாயகம் ஏற்படுத்திய தீய விளைவுகள் எனலாம். ஒப்பீட்டு ரீதியில் மன்னராட்சி பரவாயில்லை எனலாம்.
நீண்ட கால ஆட்சியை வீழ்த்த வேண்டும் அல்லது மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமென்றால் அந்த அடிப்படையே தவறானது என்பதை இந்தத் தகவல்கள் மூலம் நாமறியலாம்.
அடுத்து, இப்போது நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லையென்பது கசப்பான உண்மையாகும்.
ஸஊதியின் மன்னராட்சி வீழ்ச்சி கண்டதும், சர்வாதிகார ஆட்சி ஏற்படுமென்பது நபிமொழியாகும்.
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடும் வரை இங்கே நபித்துவம் இருக்கும். அதன் பின் நபித்துவத்தின் அடிப்படையிலான ஆட்சி நிலவும். அதன் பின் அல்லாஹ் நாடும் வரை மன்னராட்சி நிலவும். அதனைத் தொடர்ந்து சர்வாதிகார ஆட்சி நிலவும் என்று கூறினார்கள். (அஹ்மத்)
எனவே இந்த மாற்றங்கள் சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாகத்தான் அமையும்.
அடுத்து ஈராக், எகிப்து, சிரியா, ஜோர்தான், பலஸ்தீன் குறித்தும் நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
‘ஈராக்கின் அளவையும், நாணயமும் முஸ்லிம்களுக்குத் தடுக்கப்பட்டால், எகிப்தின் நாணயமும், அளவையும் தடுக்கப்பட்டால், ஷாமின் (சிரியா, ஜோர்தான், பலஸ்தீன்) அளவையும், நாணயமும் தடுக்கப்பட்டால் நீங்கள் ஆரம்பித்த அதே இடத்துக்கு மீண்டு வருவீர்கள்! ஆரம்பித்த அதே இடத்துக்கு மீண்டு வருவீர்கள்! ஆரம்பித்த அதே இடத்துக்கு மீண்டு வருவீர்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்களென அறிவித்த அபூஹுரைரா(ரழி) அவர்கள், ‘அபூஹுரைராவின் இரத்தமும், சதையும் இதற்குச் சாட்சியாகும்!’ எனக் கூறினார்கள். (முஸ்லிம் 33, 7459, அபூதாவூத் 3035, 3037)
இந்த ஹதீஸை நோக்கும் போது ஈராக்கைத் தொடர்ந்து எகிப்து, சிரியா போன்ற நாடுகளின் வளங்கள் முஸ்லிம் உலகுக்கு பயனற்றதாகப் போகும். அப்படிப் போனால் அது இஸ்லாமிய உலகுக்கு ஆபத்தான காலமாக இருக்குமென்பதை உணரலாம்.
எனவே இந்தப் புரட்சிகளால் ஏற்படும் மாற்றங்கள் மகிழ்ச்சிக்கு உரியவையாக இருக்காது என்றே எண்ண வேண்டியுள்ளது. சிலர் எங்கு புரட்சி நடந்தாலும் அதை ஆதரிப்பர். இந்த மக்கள் புரட்சியின் உண்மைத் தன்மையையும், அதன் பின்னணியையும் அதன் எதிர்விளைவுகளையும் அறியாது இவற்றுக்கு ஆதரவளிப்பது ஆரோக்கியமான முடிவாக இருக்காது என்பதே உண்மையாகும். இருப்பினும் ஏற்படும் மாற்றங்கள் நல்லதாய் அமைய அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!