பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும்.முஸ்லிம் சமூகத்தைப் பிளவு படுத்துவதற்காகவே இந்த வாதத்தை முன்வைக்கின்றனர்.
முதன் முதலில் அனுராதபுரத்தில் நாநூறு வருடம் பழைமை வாய்ந்த சியாரத்தை பொலிஸார் பார்த்திருக்க உடைத்தனர். இது வஹாபிகளுக்குரியதா? வஹாபிகள் ஷியாரங்கள் உடைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் அல்லவா?
அதன் பின்னர் ஆயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து தம்புள்ளைப் பள்ளிக்கு பிரச்சினையை உண்டு பண்ணினர். பள்ளித் தளபாடங்களை உடைத்தனர். இது வஹாபி முஸ்லிம்களுக்கு உரியதா?
முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்றனர். வஹாபி முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்றா கூறினர். குருநாகலில் அமைந்துள்ள சிறிய மஸ்ஜித் இரண்டுக்குப் பிரச்சினை உண்டுபண்ணினர். இதுவும் வஹாபி முஸ்லிம்களுக்குரியதா?
குளியாப்பிட்டியில் பன்றியின் உருவத்தை வரைந்து அதன் மீது அல்லாஹ் என்று எழுதினர். உருவம் ஒன்றைச் செய்து அதன் மீது அல்லாஹ் என்று எழுதி அதனைக் கொடும்பாவி எரித்தனர். “அல்லாஹ்” வஹாபி முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவனா?
மஹரகமயில் ழேடiஅவை கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். “கோ தம்பிலா” எனக் கத்தியவாறு சட்டக் கல்லூரிக்குள் நுழைந்தனர். இது வஹாபிகளுக்குரிய இடமா?
ஜெய்லானிக்குப் புனிதம் கொடுப்பதை வஹாபி முஸ்லிம்கள்தான் எதிர்க்கின்றனர். ஜெய்லானிக்கு எதிராக இன்று இனவாதிகள் கொடி தூக்கியுள்ளனர். இதுவும் வஹாபிகளுக்குரிய இடம் அல்லவே?
ஹலால் சான்றிதழ் பொறித்த உணவுகளைப் புறக்கணிக்குமாறு கோஷமிடுகின்றனர். ஹலால் என்பது வஹாபி முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதா?
ஏற்பட்ட பிரச்சினைகளில் தெஹிவளைப் பள்ளி தவிர்ந்த மற்ற அனைத்தும் வஹாபிகளுடன் நேரடித் தொடர்பு அற்றது என்பதுதான் உண்மையாகும். இப்படியிரக்க, பாரம்பரிய முஸ்லிம்களுடன் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என இனவாதிகள் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். முஸ்லிம்களை வஹாபி முஸ்லிம், பாரம்பரிய முஸ்லிம் என அவர்கள் பிரிக்க முயற்சிக்கின்றனர் என்றால் நாம் நமக்குள் உள்ள பிரச்சினைகளையும் பிளவுகளையும் ஓரம் கட்டிவிட்டு ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயமாகும். நம்மைப் பிரித்து முழுமையாக அழிக்க அவர்கள் துடிக்கின்றனர் என்பது அவர்களின் சதி நடவடிக்கைகளிலிருந்து விளங்குகின்றது. அதற்கு இடம் கொடுக்காமல் அவர்களின் பிரசாரத்தின் மூலமாகவே நாம் ஒன்று சேர்வதன் மூலம்தான் அவர்களுக்கு சரியான தோல்வியை வழங்க முடியும். இதை முஸ்லிம் சமூகம் சிந்திக்குமா?