கண்ணியத்திற்குரிய சகோதரர் PJ அவர்களுக்கு ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’
உங்களது தொடர்-2 ஐயும், ஸலபியின் மறுப்புக்கு மறுப்பையும் படித்த போது நீங்கள் உங்களுக்கு ஒரு நீதி, எனக்கொரு நீதி என்ற அடிப்படையில் எழுதியிருப்பதையும், என்னை இழிவுபடுத்துவதற்கும், உண்மைகளை மறுப்பதற்கும் பெரிதும் முயன்றிருக்கின்றீர்கள் என்பதையும் அறிந்து ஆச்சரியமடைந்தேன்.
‘அவரது எந்த வாதத்திற்கும் பதில் அளிக்காமல் விடுபடவில்லை என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்’ என்று உங்களது விடை குறித்த (உங்கள் பார்வையில்) தற்புகழ்ச்சியுடன் உங்கள் மறுப்புத் தொடங்குகின்றது. அது மட்டுமன்றி சத்தியத்தை மறுத்தல், பிறரை இழிவாகக் கருதுதல் என்ற ஆணவத்தின் அடையாளமாகவும் அது திகழ்கின்றது. இதனைப் பின்வரும் அம்சங்கள் மூலம் தெளிவாக உணரலாம்.
X] ‘இனி வரும் தொடர்களில் அவரது அவதூறுகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட மாட்டாது. நாளை மறுமையில் அதன் பெறுபேற்றை அல்லாஹ்வின் நீதி மன்றத்தில் வைத்துப் பெற்றுக்கொள்வோம். அவரது மார்க்க ரீதியான கருத்துக்களுக்கு மட்டும் இத்தொடரில் பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!’ என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இதற்குப் பதில் எழுதுவதற்காக பல பக்கங்களைச் செலவிட்டுள்ளீர்கள். இது குறித்து நீங்கள் குறிப்பிடும் போது, ‘இது சரியான முடிவு அல்ல. அனைத்துக்குமே நீங்கள் பதிலளிப்பதுதான் முறையானது’ என்று கூறியுள்ளதன் மூலம், தொடர்ந்தும் அவதூறுகள் கூறுவீர்கள் என்று வாக்குமூலம் அளித்துள்ளீர்கள்.
‘ஒரு விவாதம் நடக்கிறது. அதில் ஆதாரங்களைக் காட்டி வாதிடுவதுதான் முறை…’என்று கூறிய நீங்கள் ஆதாரத்தை விட்டு விட்டு அவதூறுகளில் காலத்தையும், நேரத்தையும் வீணாக விரயமாக்கிக்கொண்டிருப்பது நியாயம்தானா?
‘அவதூறுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்; அல்லாஹ்வின் பொறுப்பில் விட முடியாது’ என்று எனக்குக் கூறும் நீங்கள் இது விடயத்தில் ‘தனக்கொரு நீதி, பிறருக்கொரு நீதி’ என்று செயல்படலாமா?
நீங்கள் தமுமுக அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீங்கும் போது ‘மனம் திறந்த மடல்’ என்ற பெயரில் ஒரு கடிதத்தை (உணர்வு 5:06) உணர்வு வார இதழின் பின் பக்கத்தில் வெளியிட்டீர்கள். அதில்,
.. .. .. இவற்றையெல்லாம் குறிப்பிடக் காரணம் இதன் பிறகும் யாரேனும் அவதூறு பரப்பினால் மறுமையில் அல்லாஹ்விடம் அவர்களுக்கு எதிராக நான் வழக்குத் தொடர்வேன் என்று எச்சரிப்பதற்குத் தான்.
அதே மடலில் இன்னொரு இடத்தில்
என்னைப் பற்றி யார் எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் அதை என் கவனத்துக்கு யாரும் கொண்டு வரத்தேவையில்லை. இதற்கு முன்னரும், இனியும் அவதூறுப் பிரச்சாரம் செய்யும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன். அவற்றை மறுமை நாளுக்கான தயாரிப்பாக நான் படுத்துவேன்.
நீங்கள் கூறிய அதே செய்தியைத்தான் நானும் கூறியுள்ளேன். நான் கூறினால் தவறு, நீங்கள் கூறினால் சரியா? ஏன் இந்த முரண்பாடு? நான் சொன்னால், ‘பதில் சொல்ல முடியாது’ என்பதற்காகச் சொன்னது; நீங்கள் சொன்னால், ‘பதில் உண்டு; மறுமைக்காகச் சொன்னது’ என்று ஏன் வித்தியாசமான நீதி? இது ஒன்றே நீங்கள் தவறான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதற்குத் தக்க சான்றாகும்.
X] ‘முஜீப் கூறுவதையே ஆதாரமாகக் காட்டத் துணிந்து விட்டீர்கள்’ என்று ஒரு அவதூற்றைக் கூறியுள்ளீர்கள். முஜீபுர் ரஹ்மான் உமரி கூறியதை ஆதாரமாகக் காட்டும் விதத்தில் நான் ஏதாவது வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளேனா? என்று மீண்டும் எனது மறுப்பை வாசித்து நீங்களே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!
X] அடுத்து, நீங்கள் முஜீபுர் ரஹ்மான் உமரியுடன்; நடத்திய தெருச் சண்டை பற்றி அதிகம் பேசுவது நமது தலைப்புக்கு அப்பாற்பட்டதாகும். இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அபூதாவூத், அஹ்மத் ஹதீஸின் படி அவர் கூறியது சரி என்றுதான் கூற வேண்டும். அந்த ஹதீஸ் உங்களுக்குத்தான் மறுப்பாக உள்ளது.
முஜீபுர் ரஹ்மான் உமரி விவாதத்தின் ஆரம்பத்திலோ இடை நடுவிலோ அழுதிருந்தால், அச்சத்தாலோ கேவலத்தாலோ அழுதார் என்று கூற முடியும். ஆனால், விவாதம் முடிந்து நஸீஹத்து செய்யும் போது அழுகிறார். இது உள்ளம் உயிருடன் இருக்கும் எவருக்கும் ஏற்படலாம். அவர், தனது நிலையை அறிவுபூர்வமாக விளக்க விடாமல் நாகரிகமும், பண்பாடும் மிக்க உங்கள் தோழர்கள் அவரை மிகைத்து விடுகின்றனர். இந்நிலையில் அவர் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவதைத்தான் அந்த ஹதீஸ் ஆகுமாக்கியுள்ளதே!
‘நீ அறிவுபூர்வமாகச் செயல்பட வேண்டும்; காரியம் உன்னை மிகைத்துவிட்டால், ‘அல்லாஹ் போதுமானவன்’ எனக் கூறுமாறு அந்த ஹதீஸ் கூறுகிறது. (அஹ்மத், அபூதாவூத்)
எனவே, நீங்கள் காட்டிய ஹதீஸ் அவருக்குத்தான் சாதகமாக இருக்கின்றது என்பதை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் எவரும் உணர்ந்து கொள்ளலாம்.
X] அடுத்து அல்லாஹ் ‘கழுதை’ என்று கூறியிருப்பதையும், நபி(ஸல்) அவர்கள், ‘அன்பளிப்புக் கொடுத்து விட்டு சொல்லிக் காட்டுபவன், வாந்தி எடுத்துவிட்டு திரும்பச் சாப்பிடும் நாய்’ போன்றவன் என்று கூறிய ஹதீஸ்களை வைத்துக் கடுமையான வார்த்தையைத்தான் பயன்படுத்துவேன் என்கிறீர்கள். பிரச்சினையில்லை. நாகரிகத்தையும், பண்பாட்டையும் விரும்பும் இன்னும் சிலர் உங்களை விட்டும் பிரிந்து விடுவார்கள். உங்கள் கடும் சொற்கள் தொடரட்டும். (பன்றி என்ற பதத்தைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் ‘பன்றியின் மாமிசம் தவிர்ந்த ஏனையவை ஹராம் இல்லை; பேணுதலுக்காகத் தவிர்ந்துகொள்ள வேண்டும்’ என்று ஆரம்பத்தில் தவறாக எழுதியதால் இலங்கையில் ‘பன்றி சூப் பீஜே‘ என எம்மைக் கேலி செய்தார்கள். கொஞ்ச நாளாக மறந்திருந்தார்கள். அதை நினைவூட்டுவது போன்றதாகி விடும்.)
X] அடுத்து நீங்களே குறிப்பிட்டபடி பொய் கலக்காமல் இருந்தால் சரி என்பதையாவது கடைபிடியுங்கள்!
X] அடுத்து, கருத்துக்களை விமர்சிப்பதோடு நிற்காமல் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்தது நானா? நீங்களா? என்று கேட்டுள்ளீர்கள்?
‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடர்தான் விமர்சனத்தின் ஆரம்பமா? இந்தக் கட்டுரை சுமார் 10 மாதங்களுக்கு முன்பிருந்துதான் எழுத ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் நீங்கள் இலங்கை வரும் முன்னரே நியாஸ் ஹாஜியாருக்கு (2003) எழுதிய கடிதத்தில் வெளி நாட்டு நிதி உதவி பெறும் அமைப்புக்களை விமர்சிக்கவில்லையா? இந்தக் கடிதம் மூலம்தானே இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தினீர்கள்.
நீங்கள், ‘வெளி நாட்டு நிதி பெறலாம், பெறுவதில்லை’ என்றும் முடிவு செய்யலாம். இரண்டும் உங்கள் சுதந்திரத்தைப் பொறுத்தது. ஆயினும், ‘தேனைத் தொட்டவன் புறங் கையை நக்காமலா இருப்பான்?’ என்ற பாணியில் அவதூறு கூறி விமர்சித்தது நியாயமா? இழிவான இந்த விமர்சனத்தை ஆரம்பித்தது யார்?
அடுத்து இலங்கையைச் சேர்ந்த முஜாஹித் ரசீன் என்பவருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இலங்கை உலமாக்களைக் கேவலமாக நீங்கள் விமர்சிக்கவில்லையா? நீங்கள் நடத்திய ஏகத்துவ எழுச்சி மாநாட்டில் தவ்ஹீதிலிருந்து தடம் புரண்டவர்கள் பட்டியலில் இலங்கை உலமாக்களை நீங்கள் இடம் பெறச் செய்யவில்லையா?
முதலில் கீழ்த்தரமான விமர்சனத்தை ஆரம்பித்தது நீங்கள்தான். அதன் பின்னரும் கூட நாம் தனிநபர் தாக்குதல் செய்யவில்லை. கருத்து விமர்சனம் மட்டுமே செய்தோம். இவை எல்லாவற்றையும் மறந்தது போன்று ஏன் எழுதுகின்றீர்கள்?
X] அடுத்து, தஃவா கலந்துரையாடலும், சூனியக் கட்டுரையும் என்ற உண்மை உதயம் 2009 ஜூன் இதழ் 15, 16 பக்தைப் காட்டி 26 உலமாக்கள் நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகத் தீர்ப்பு வழங்கி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் உள்ளதை மீண்டும் வாசித்துப் பாருங்கள்!
‘அத்துடன் கட்டுரையாளர் கையாளும் கடின வார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும். அவர் அடுத்தவர்களைத் தரக் குறையாக விமர்சித்தாலும், கடின வார்த்தைகளை அவர் பயன்படுத்தினாலும் நாம் நாகரிகம் கருதி, நடுநிலையோடு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.’ (உண்மை உதயம் 2009 ஜூன்)
நீங்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், நான் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அவர்களின் கூற்றாக இருந்தது. இதை எப்படி உங்களுக்குச் சாதகமான சான்றாக எடுப்பீர்கள்?
X] அடுத்து, அபூபக்கர் ஸித்தீக் (மதனி) அவர்களுடன் இரண்டு பாங்கு விடயத்தில் சர்ச்சைப்பட்டதாகவும், அப்போது நானும் இருந்ததாகவும் கூறுகின்றீர்கள். இது ஒரு அப்பட்டமாக பொய்யாகும்.
அடுத்து, இக்பால் அலியின் கவிதை நூல் பற்றி இலங்கையில் மாணவர்கள் கூறும் போது,‘…எல்லாம் இஸ்மாயில் ஸலபிக்குத் தெரியும்(?)’ என்று குறிப்பிட்டதாகக் கூறுகின்றீர்கள். இதுவும் ஒரு பொய். இந்தக் கவிதை நூல் வெளிவந்து இதில் தவறான கவிதை இடம் பெற்றுள்ளது பற்றி சிலர் என்னிடம் கூறிய பின்னர்தான் இந்த நூல் பற்றியே எனக்குத் தெரியும். அது வரையும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியும் என்று மாணவர்கள் கூறியதாக நீங்கள் கூறும் பொய்யை வைத்து அந்த நூல் எனது மேற்பார்வையில் வெளியிடப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான அவதூறை எந்த அடிப்படையில் கூறினீர்கள்?
‘கேட்டதையெல்லாம் ஒருவன் பேசுவதே அவன் பெய்யன் என்பதற்குப் போதிய சான்றாகும்’ (முஸ்லிம்) என்ற ஹதீஸ் உங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கின்றது.
அடுத்து, உங்கள் அண்ணனின் நூலில் உள்ள தவறுகளை நீங்கள் விமர்சித்தது பற்றிக் கூறும் போது, இந்த உண்மைகள் இஸ்மாயில் ஸலபிக்குத் தெரியும்(?) என்று பொய்யைக் கூறுயுள்ளீர்கள். ஸைது குதுபின் தஃப்ஸீரில் அத்வைதம் இருப்பதாக அஷ்ஷெய்க் மன்சூர் அவர்களின் கலந்துரையாடலின் போது கூறியது தெரியும். ஆனால், உங்களின் அண்ணலின் நூல் குறித்து நீங்கள் விமர்சனம் செய்ததாகக் கூறும் செய்திகள் எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த மூன்று பொய்களையும் எதற்காகக் கூறினீர்கள்? நீங்கள் தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே என் மீது அவதூறு கூறியதை நிரூபித்து விட்டதால், தெரிந்து கொண்டே நானும் விமர்சித்திருப்பதாக சித்தரிக்க வேண்டும் என்ற உளவியல் பலவீனத்தால் உதித்த பொய்கள்தானே இவைகள்? ஏன் இந்தத் திருகு தாளங்கள்?
அடுத்து, எனது கட்டுரைக்கு நீங்கள் பதில் கூற முன் வந்ததன் மூலம் ஏற்கனவே அது வெறும் உளறல் என்ற உங்களது கருத்தை வாபஸ் வாங்கிக் கொண்டீர்கள் என்று குறிப்பிட்டதை தற்புகழ்ச்சி என்று கூறியுள்ளீர்கள். தற்புகழ்ச்சி உங்களிடம் இல்லை என்றால், உங்களது மறுப்பையும் உளறல் என்று கூறுவீர்கள் போலும்! நான் அதைக் கூறியதே மார்க்க விடயங்களில் மட்டுமன்றி உலக விடயங்களிலும் இவர் அடிக்கடி முடிவுகளை மாற்றித் தனக்குத் தானே முரண்பட்டுக்கொள்ளும் இயல்புடையவர் என்பதற்கு இது ஒரு சான்று என்பதற்காகத்தான் அதை மறுக்காததன் மூலம் ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்!
X] இதற்குப் பதில் சொல்ல முற்பட்ட நீங்கள் நான் முன்னர் பதில் சொல்வதில்லை என்றிருந்தேன் இப்போது மாறிவிட்டேன் என்று கூறி மீண்டும் உங்கள் முரண்பட்ட போக்கை நிரூபித்துள்ளீர்கள். அதற்கும் நன்றிகள்!
X] அடுத்தவர்கள் எழுதுவதையும் பேசுவதையும் உளறல் என்றும், நான் எழுதுவதும் பேசுவதும் மட்டும்தான் தத்துவ முத்துக்கள் என்ற விதத்திலும் நீங்கள் எழுதுகிறீர்கள். அறிவுடைய எவரேனும் இப்படி வாதிட மாட்டார்கள். தற்பெருமை தலை தூக்கியுள்ளதால்தான் இப்படி எல்லாம் உங்களால் எழுத முடிகிறது என்ற உங்கள் கூற்று உங்களுக்குத்தான் முழுமையாகப் பொருந்துகிறது.
என்னைக் கிண்டல் பண்ணுவதற்காக மாதம் நாலு பக்கக் கட்டுரையும், அரைத்த மாவை அரைக்கும் உங்களை விட இங்குள்ள தாஈகள் நூறு மடங்கு பணியாற்றுகிறார்கள் என்று எழுதியுள்ளீர்கள். என்னை இழிவுபடுத்துவது என்ற உங்கள் இலக்கை அடைய ஆணவம் தலைக்கேறிய நிலையில் மறைவான செய்திகளையும் அறிந்தவன் போல் பேசுகின்றீர்கள். நீங்கள் மாதம் நானூறு பக்கம் கட்டுரை எழுதுங்கள்! நூறு முறை அரைத்த மாவையே அரையுங்கள்! பிரச்சினையில்லை. எனினும், உங்களைப் போல் உள்ள பணிகளை எல்லாம் ஒதுக்கி விட்டு, அறைக்குள் இருந்து கொண்டு எம்மால் பணியாற்ற முடியாது என்று நான் கூறியது உங்களை விட நான் பிஸியான ஆள் என்று கூறுவதற்கன்று. உங்களைப் போல் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, எழுதுவதற்கு மட்டும் என்னால் ஒதுக்க முடியாது என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். அது கூட உங்களது ஒரு குறையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டவே அப்படி எழுதினேன். அதை இப்போது நேரடியாகவே முன்வைக்கின்றேன்.
கண்ணியத்திற்குரிய அறிஞர் அவர்களே!
நீங்கள் தற்போது சமீப காலமாக ஜமாஅத்துத் தொழுகைக்குக் கூடச் செல்லாமல் முழுமையாக எழுத்துப் பணிக்கென்று ஒதுங்கியுள்ளதாக இணையத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இது குறித்து வாசகர்களின் கேள்விக்கு நீங்கள் அளித்த பதில்கள் தெளிவுபடுத்துகின்றன. இது எந்தக் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்தது? உங்களை விட பிஸியான நபி(ஸல்) அவர்கள் மரண வேளையிலும் ஜமாஅத்துத் தொழுகைக்குச் சென்றார்களல்லவா? மக்கள் சந்திக்கிறார்கள்; கேள்வி கேட்கிறார்கள்; டைம் கேட்கிறார்கள்; சொன்னாலும் புரிந்துகொள்கிறார்களில்லை என்பதற்காக ஜமாஅத்துத் தொழுகைக்குச் செல்லாமல் இருக்கலாமா? எனக்கு எழுதிய மறுப்புத் தொடர் இரண்டில் யுத்த களத்திலும் தொழச் சொன்ன மார்க்கம் இஸ்லாம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். யுத்த களத்தில் தொழ மட்டும் சொல்லவில்லை. ஜமாஅத்தாகத் தொழுவதற்கும் வழி காட்டியது இஸ்லாம். அந்த மார்க்கத்தைப் போதித்துக் கொண்டு மறுப்பு எழுதுவதற்காக ஜமாஅத்துக்குக் கூடச் செல்லாமல் இருக்கலாமா? இது ஷைத்தான் உங்களைத் திசை மாற்றிச் செல்வதற்கான அடையாளமாகப் படவில்லையா? இதைத்தான் உங்களைப் போல் எல்லாப் பணிகளையும் ஒதுக்கி விட்டு என்னால் எழுத முடியவில்லை என்று குறிப்பிட்டேன். நான் பிஸியான ஆள் என்பதைக் காட்டுவதற்கல்ல.
அடுத்து, ‘எவ்வளவு முக்கியமான நேரம் என்றாலும் மற்றக் காரியங்களைச் செய்யக் கூடாது என்று அறிவிலிதான் கூறுவான்’ என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். மறுப்பு எழுதுவதற்காக ஜமாஅத்துத் தொழுகைக்குச் செல்லாமை, பயான் நிகழ்ச்சிகளைக் கூட செய்யாமலிருப்பதாக முடிவு செய்தமை என்பன மூலம் இந்தக் கூற்று உங்களுக்குப் பொருந்துகிறதல்லவா?
X] அடுத்து, நான் என்ன எழுதினேன் என்பதை நீங்கள் புரியாததுபோல் எழுதினாலும் பரவாயில்லை. நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பதைக் கூட புரியாதது போன்று திசை திருப்புவது ஆச்சர்யமாக உள்ளது.
‘தவ்ஹீதுக்கு எதிராகவும், இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் செயல்படுபவர்களுக்கு எட்டுத் தொடர்கள் என்ன? எட்டு வரிகளாலும் பதிலளிக்காதவர்கள்’ என்று என்னையும், அன்ஸாருஸ் சுன்னாவையும் குறிப்பிடுகின்றீர்கள்.
எட்டு வரி என்று நீங்கள் குறிப்பிட்டதற்காக உங்கள் பொய்யைத் தெளிவுபடுத்தும் நோக்கில் தவ்ஹீதுக்கும் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எதிரானவர்களுக்கு எதிராக நான் எழுதிய எட்டுப் புத்தகங்களைக் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் பொய் சொன்னதற்காகத்தான் அவ்வாறு குறிபிடப்பட்டது.
இப்படிக் கேட்ட நீங்கள், ‘நீங்கள் சுட்டிக் காட்டிய கட்டுரைகள், நூல்கள் எதுவும் ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னாவின் தவறுகளைக் கண்டித்து எழுதப்பட்டவை அல்ல’என்று மழுப்புகிறீர்கள். நீங்கள் கேட்டது என்ன? இப்போது கூறுவது என்ன? என்று ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்!
என்னைத் தவ்ஹீதுக்கு எதிரானவர்களுக்கோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானவர்களுக்கோ எதிராக எழுதாதவன், தஃவாச் செய்யாதவன் என்று அவதூறு கூற முற்பட்டீர்கள். முடியாமல் போன போது ஜம்இய்யாவுக்கு எதிராக எழுதவில்லை என்று மாற்றுகின்றீர்கள்.
ஜம்இய்யாவில் உள்ள தவறுகளைப் புத்தகம் எழுதித்தான் சுட்டிக் காட்ட வேண்டுமா? உங்களுடைய இத்தகைய மூர்க்கத்தனமான நிலைப்பாடுகள்தான் அமைப்புக்களைச் சிதறடித்துக் கொள்கைவாதிகளைக் கூடப் பகைவர்களாக்கியுள்ளது!
நீங்கள் இப்படி அவதூறு கூறியதற்கு நான் குறிப்பிட்ட விடையை வைத்து ‘நீங்கள் எழுத்தாளர்’ என்று கூறுவதற்காக சம்பந்தமில்லாத விடையைக் கூறியுள்ளீர்கள். சிலர் சம்பந்தமில்லாமல் ‘நான் அமெரிக்கா போயிருந்த போது..’ என்று கூறுவார்கள். இதன் நோக்கம் எந்தச் செய்தியையும் சொல்வது அல்ல; அவர் அமெரிக்கா போனார் என்பதைத் தெரிவிப்பது மட்டும்தான் அதன் நோக்கம் என்று கூறி என்னைப் பெருமை பேசுபவன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே நீங்கள் எதை வேண்டுமானாலும் கூறி விட்டுப் போங்கள்!
நீங்கள் காட்டிய உதாரணம் எனக்குப் பொருத்தமானதன்று. நான் சம்பந்தம் இல்லாமல் நூல் எழுதியதாகக் கூறவில்லை. நீங்கள் ஒருவரைப் பற்றி அவன் அமெரிக்கா என்ன? அடுத்த மாநிலத்திற்கே சென்றதில்லை என்று கூறுகிறீர்கள். இது அறிந்த அவர், ‘நான் அமெரிக்கா சென்ற போது அங்கு வைத்து இவரையே சந்தித்துப் பேசினேன். இப்போது இவர் பொய் சொல்கிறார்’ என்று கூறினால், அவர் பெருமைக்காகச் சொல்வது அல்ல; உங்கள் பொய்யை மறுக்கக் கூறுகிறார். இதுதான் எனது நிலை. உதாரணம் காட்டும் அறிவு கூட உங்களுக்கு இல்லை என்று நான் கூற மாட்டேன். உங்களிடம் நிறையவே அறிவு உள்ளது. ஆனால், என்னை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்கள் அறிவை மழுங்கடித்து விட்டது.
அடுத்து, மீண்டும் அறபு நாட்டுப் பணம் குறித்து எழுதியுள்ளீர்கள். கண்ணியத்திற்குரிய சகோதரர் அவர்களே! நீங்கள் எழுதுவதன் நோக்கம், ‘மக்கள் எமது மாநாட்டுக்கு வரக் கூடாது; இதன் மூலம் எமக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கக் கூடாது’ என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நல்ல இஹ்லாஸான முடிவு! தொடர்ந்தும் செயல்படுங்கள்! நீங்கள் திரும்பத் திரும்ப இதைக் கூறுவதைப் பார்க்கும் போது எமக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. அதையும் முன்வைத்து விடுகின்றோம்.
அண்மைக் காலமாக உங்களுக்கு இறங்கு முகம்! செல்வாக்கு சரிந்து வருகின்றது. எமது கட்டுரையை மக்கள் பார்த்து நம்பி விட்டால், கணக்கு-வழக்கின்றி அவர்கள் அனுப்பும் நிதி குறைந்து விடும்; உள்நாட்டில் சரிவு ஏற்பட்டு உங்கள் கூட்டங்களுக்கு மக்கள் வருவது குறைந்து விட்டால் மக்களைக் காட்டி பெரிய பெரிய அரசியல் கட்சிகளிடம் பைஸா (தமிழகத்தில் பணத்துக்குப் பைஸா என்றும் கூறுவார்கள்.) அடிக்க முடியாது என்ற அச்சத்தில் தானே இப்படிக் குமுறுகிறீர்கள்?
X] அடுத்ததாக, ‘வேண்டுமானால் உங்கள் 25 வருட வரவு-செலவுக் கணக்குகளை நாங்கள் பரிந்துரை செய்யும் நபர்களும் அடங்கிய தணிக்கைக் குழு விசாரணைக்கு உட்படுத்தினால் பல கோடி ஊழல் வெளிச்சத்துக்கு வரும். இதற்கு நீங்கள் தயாரா?’என்று ஒரு சவாலை முன்வைத்துள்ளீர்கள்.
உங்களுக்கு கணக்குவழக்கு சமர்ப்பிக்கவேண்டிய கடமைப்பாடு ஜம்இய்யாவுக்குக் கிடையாது. யாருக்கு ஜம்இய்யா கணக்குக் காட்ட வேண்டுமோ அவர்களுக்கு முறையாகக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. உங்களை நம்பிக் கணக்கு-வழக்கைத் தரும் அளவுக்கு நீங்கள் நாணயமானவரா? உங்கள் மீதிருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்களில் நீங்கள் நீதமானவர் என்பதை நிரூபியுங்கள்! ‘அல் ஜன்னத்’ ஆசிரியர் பொறுப்புக்கு 2000 ரூபாச் சம்பளத்துடன் ஆரம்பித்த உங்கள் சமூக வாழ்வில் இப்போதைய உங்கள் பொருளாதார நிலை என்ன?
அன்பளிப்புக்களைப் பெறாத உங்கள் சொத்து வளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை விளக்குவீர்களா?
அடுத்து, இது அமெரிக்கா பாணியில் அமைந்த சவால். ஈராக்கில் ஆயுதம் இருப்பதாகக் கூறி ஈராக்கினுள் அமெரிக்கா நுழைந்தது போல் உள்ளே நுழையும் எண்ணமா?
அவதூறும், பொய்யும் சொல்லப் பழக்கப்பட்ட நீங்கள் கணக்கை விசாரணை செய்த பின்னர் உண்மையைத்தான் கூறுவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஒருவன் மற்றும் ஒருவனைப் பார்த்து, ‘உங்கள் குழந்தை உங்களுக்குப் பிறக்கவில்லை என்கிறான். டி.என்.ஏ. பரிசோதனைக்குத் தயாரா?’ என்று கேட்டால் மனைவியின் கற்பை நிரூபிக்க உடனே மறபணுப் பரிசோதனைக்கு எந்த அறிவாலியாவது ஒத்துக்கொள்வானா?
அடுத்ததாக, நீங்கள் ‘வசூலுக்காக ஆலிம்களை அனுப்புகிறீர்கள்’ என்று கூறியதற்கு, ‘நான் யாரையும் வசூலுக்கு அனுப்பவில்லை; ஜமாஅத் தலைமைதான் அனுப்புகிறது’என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்வாறு நீங்கள் குறிப்பிட்டதால் நானும் குறிப்பிடுகின்றேன். எனக்கும், வெளிநாட்டுப் பணத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. நிர்வாகம்தான் தொடர்புகொள்கிறது. நான் இது வரை பள்ளி கட்டியதோ, கிணறு வெட்டியதோ கிடையாது. IIRO நிறுவனத்திடம் உதவி பெற்று 5 பெண் பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்திற்கு மலசலகூடம் ஒன்று கட்டிக் கொடுத்துள்ளேன். இது தவிர எந்த நிர்மானமும் என்னால் நடந்ததில்லை.
அடுத்து ஜமாஅத், தான் வசூலுக்கு அனுப்பும் ரசீது பெற்றுக்கொள்ளும் கிளைதான் சேர்த்துக் கொடுக்கும் என்றெல்லாம் கூறியுள்ளீர்கள்.
நீங்கள் வசூலுக்கு அனுப்புபவர்களுக்கு கிளைதான் சேகரித்துக் கொடுக்கும். அதற்கு ரசீதும் கொடுக்கப்படும் என்று கூறுகிறீர்கள். நீங்கள் இலங்கையில் வெளிநாட்டு நிதிக்கு எதிராகப் பேசும் போது அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி குறித்துத்தான் கேள்வி கேட்கப்பட்டது. அவர் இங்கே வசூல் செய்யும் போது இலங்கையில் உங்களுக்கு கிளையும் இருக்கவில்லை; ரசீதும் கொடுக்கப்படவில்லை.
‘இலங்கையிலிருந்து உங்களுக்கு நிதி தந்தவர்கள் யாராவது கணக்கு-வழக்குக் கேட்ட சரித்திரம் உண்டா? அப்படிக் கேட்டாலும் பொய்க் கணக்குக் காட்டும் வாய்ப்பு இல்லையா?’ என்று கேட்டு நாம் உங்களைப் பற்றி அவதூறு கூற மாட்டோம்.
அடுத்து, இலங்கையில் நீங்கள், பேசும் போது ‘நாம் கடையநல்லூரில் உலமாக்களை உருவாக்கும் இஸ்லாமியக் கல்லூரி வைத்துள்ளோம். நிதியிருந்தால் அதைப் பல்கலைக் கழகத்தின் தரத்திற்கு நடத்தலாம். நீங்கள் தந்தால் பெற்றுக்கொள்வோம். ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெற மாட்டோம்; தந்தாலும் பெற மாட்டோம்’ என்கிறீர்கள்.
நீங்கள் எந்த மத்ரஸாவுக்கு ‘நிதி தந்தாலும் பெற மாட்டோம்!’ என்றீர்களோ, அதே மத்ரஸாவுக்கு அறபு நாட்டு நிதி நிறுவனங்களிடம் வசூல் செய்ய அஷ்ஷெய்க் ஸைஃபுல்லாஹ் காஜா அவர்கள் நற்சான்றுக் கடிதம் கேட்டு அனுப்பிய கடிதம் இதோ!
கி.பி.-கி.மு என்பது போல் என்னமோ கூறுகின்றீர்கள். உங்கள் நிலைப்பாடு மாறியும் இருக்கலாம். ஆனால், நீங்கள் ‘தந்தாலும் பெற மாட்டோம்!’ எனக் கடையநல்லூர் மத்ரஸா குறித்துக் கூறியது பொய் என்பதை இந்த மடல் குறிப்பிடுகின்றது.
அடுத்தது, 5.8.1998 இல் நீங்களே உங்கள் கைப்பட எழுதிய கடிதத்தில் இந்தியன் இஸ்லாமிக் மிஷன் நிறுவனத்திற்காக நிதி கேட்டு எழுதிய கடிதம் இதோ!
அடுத்ததாக, நீங்கள் திர்மிதி நூலை மொழி பெயர்த்தீர்கள். அதை இஸ்லாமியக் கல்விச் சங்கம் வெளியிட்டது. அதன் பதிப்புரிமை உங்களுடையது. அதில் அன்ஸாரிஸ் சுன்னா, ஷபாப், IIRO நிறுவனங்களின் அறபு அணிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. எதற்காக அறபு அணிந்துரைகள்? உங்கள் பாஷையில் சொல்வதானால், அறபியிடம் காட்டிச் சல்லி அடிப்பதைத் தவிர வேறு காரணம் கூற முடியுமா?
(திர்மிதி அணிந்துரை இதோ) PDF format file
அடுத்து உங்கள் அவதூறின்படி 2001 ஜூனில் அன்ஸாரிஸ் சுன்னா கம்யூனிஸ்ட் ஆகி விட்டது. 1990 களிலேயே உங்கள் கருத்துப் படி மூஸாவை இறைவனாக்கி அபூபக்ர் ஸித்தீக் (மதனி) அத்வைதியாகி விட்டார். உங்கள் நூலுக்குக் கம்யூனிஸ-அத்வைதியிடம்தான் நீங்கள் அணிந்துரை பெற்றீர்களா? 1996 லிருந்து உங்களை விமர்சித்து அல் ஜன்னத் வாங்குவதை நிறுத்திய ஒருவரிடம் 1998 இல் நிதியுதவியும், 2001 இல் அணிந்துரையும் பெற்றீர்களா? நீங்கள் முரண்பாட்டின் மொத்த உருவமாகத் திகழ்வதைத் தானே இவை நிரூபிக்கின்றன?
மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியினருக்கு 28.8.2001 இல் நீங்கள் எழுதிய கடிதத்தில் அஷ்ஷெய்க் ஷம்ஷுள்ளுஹா ரஹ்மானீ அவர்களுக்கு அஹ்மத் அல் அஹ்மத் அவர்கள் கட்டிடப் பணியை நிர்வகிக்கவும், மேற்பார்வை செய்யவும் 5000/= ஊதியம் வழங்கியதாக நீங்கள் எழுதிய இந்தக் கடிதம் எதை உணர்த்துகின்றது!
‘நீங்கள் வெளிநாட்டு நிதி எடுத்தால், நாங்களும் எடுக்கலாம்; நீங்கள் நிறுத்தியதும் பீஜே நிறுத்தி விட்டார்; நாமும் நிறுத்துவோம்’ என்று முடிவெடுக்கும் அளவுக்கு ஒரு நபியைப் பின்பற்றுவது போல் உங்களைப் பின்பற்ற வேண்டுமா? அப்படி நீங்கள் மாறியதும் நாங்களும் மாறா விட்டால், ஊழல்-மோசடி எனக் குற்றம் சாட்டுவீர்களா? இது என்ன நியாயம்? நீங்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் பிழையா?
இவைகளையெல்லாம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலையில் போட்டு விட்டு நழுவி விட மாட்டீர்கள் என எண்ணுகின்றேன்.
அடுத்ததாக, முபாறக் ஸலபியின் ஹதீஸ் மொழி பெயர்ப்பில் ‘…’ என்று இடம் பெற்றுள்ளது. இதன் அர்த்தம், இன்னும் ஹதீஸ் இருக்கிறது. நான் மொழி பெயர்க்கவில்லை என்பதுதான். இது சாதாரணமானவர்களுக்கும் புரியும். இதை வைத்து ஹதீஸை மறைத்து விட்டார்கள் என்று வரம்பு மீறிக் குற்றம் சாட்டுகிறீர்கள். அதே வேளை, காஃபிர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக அவர் அதை விட்டு விட்டதாக நீங்களே கற்பனை பண்ணி அதற்குப் பதிலும் எழுதுகின்றீர்கள்.
நான் எனது கட்டுரையில் நீங்கள் ஹதீஸில் இடைச் செறுகல் செய்ததைச் சுட்டிக் காட்டியதற்காக பழி வாங்குவதற்காகவே இப்படிக் குற்றம் சாட்டுகிறீர்கள். காட்டி விட்டுப் போங்கள்! இதில் நீங்கள் பொய்யாக அவதூறு கூறுகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். இதே தவறை இன்னும் பல இடங்களில் நீங்கள் செய்திருப்பதை இன்ஷா அல்லாஹ் நாம் நிரூபிப்போம்.
அடுத்து, ஒரு தவறைச் சுட்டிக் காட்டினால் தவறை ஒப்புக்கொள்ளாமல் அவன் இப்படித் தவறு விட்டுள்ளான்; இவன் இப்படித் தவறு விட்டுள்ளான் என்ற அடிப்படையில் நீங்கள் எதிர்க் கேள்வி கேட்பதை நான் விமர்சித்தது பற்றி நீங்கள் கூறும் போது, ‘என்னைப் பொறுத்த வரை இதைத் தவறு என்று கூற மாட்டேன். இது அனைவரும் செய்யக் கூடியதுதான்’ என்று கூறியுள்ளீர்கள். அனைவரும் செய்யக் கூடியது உங்களுக்கு மார்க்க ஆதாரமாகி விட்டதா? நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் இதற்கு ஆதாரம் காட்டுவதை விட்டு விட்டு, ‘எல்லாரும் செய்றாங்க. நானும் செய்வேன்!’ என்று கூறும் அளவுக்கு உங்கள் கொள்கை தரம் தாழ்ந்து சென்றது ஏன்?
அடுத்து, நீங்கள் எம் மீது சுமத்திய ‘கம்யூனிஸம்’, ‘அத்வைதம்’ ஆகிய இரண்டு குற்றங்களும் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ள உங்கள் அண்ணனின் ‘தி்ருக்குர்ஆனின் நிழலில்’ நூலில் இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். இது பற்றிக் கூறும் போதே, ‘பீஜே அவர்களின் தவறான வாதத்தையும், விமர்சனத்தையும் விளக்குவதற்காகவே இப்படிக் கேட்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளேன் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இதற்கு நீங்கள் பதிலளிக்கும் போது, ‘இவருடைய சிந்தனைத் தெளிவுக்கு இது தக்க ஆதாரம். என்னைப் பற்றிப் பேசும் போது காலம் சென்ற என் சகோதரர் பற்றிப் பேசுவது என்ன லாஜிக்கோ தெரியவில்லை. இவர்களிடம் இஸ்லாத்தில் அடிப்படை அறிவு கூட இல்லை என்பதை இக்கேள்வியின் மூலம் நிரூபிக்கின்றனர். ‘ஒரு மனிதனின் செயலுக்கு இன்னொரு மனிதன் பொறுப்பாளியாக முடியாது’ என்ற இஸ்லாத்தின் முக்கிய வேறுபாடு இவருக்குப் புரியவில்லை…’ என்று நீண்ட பயானே செய்கின்றீர்கள். இந்தச் செய்திகள் அனைத்தும் உங்களுக்குத்தான் பொருந்தும்.
நான் உங்கள் அண்ணன் விடயத்தை ஒரு வாதமாக முன்வைக்கவில்லை. அப்படி முன்வைக்க நான் இஸ்லாமிய அடிப்படை அறிவு அற்றவன் அல்ல. ஆனால், நீங்கள் என்னோடு பேசும் போது இக்பால் அலி, இக்பால் (மதனி), முபாறக் (மதனி) குறித்தெல்லாம் பேசுவது என்ன லாஜிக்! நீங்கள் உங்கள் அண்ணன் செயலுக்கு பொறுப்பாளி அல்ல; நான் இவர்கள் செயலுக்குப் பொறுப்பாளியா? நல்ல நீதி! இதெல்லாம் பேரறிஞர் பீஜேயின் முரண்பாடுகளா!? என்று சிந்திக்கும் போது, நீங்கள் எப்படியாவது இவனை இழிவுபடுத்த வேண்டும் என்ற வெறியில்தான் நிதானமிழந்து எழுதுகிறீர்கள் என்பது தெளிவாகின்றது. இதை உங்கள் கூற்றிலே சொல்வதென்றால், ‘இஸ்லாத்திற்கு விரோதமான கேள்வியை இவர் கேட்டுள்ளதிலிருந்து இவரது நோக்கம் தனி மனிதத் தாக்குதல் தானே தவிர மார்க்கம் அல்ல என்பது தெளிவாகின்றது’ என உங்களுக்கு நீங்களே தீர்ப்பு வழங்கிக் கொண்டீர்கள்.
‘சலபி அவர்களே! நீங்கள் சுட்டிக் காட்டியது ஒன்றுதான் (ஒன்று அல்ல இரண்டு அதிலும் இருட்டடிப்பா?) அதில் ஏராளமான தவறுகள் உள்ளன. பட்டியல் அனுப்பட்டுமா?’ என்று கேட்டு, உன்னை விட எனக்குத் தெரியும் என்ற தனது அறிவு மமதையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று தெரிந்த நீங்கள் ஏன் அதைப் பற்றி எழுதவில்லை? எனக்குப் பட்டியல் அனுப்புவதை விட்டு விட்டு மக்களுக்கு விளங்க வைக்க எழுதலாமல்லவா? ஸகரிய்யா ஸாஹிபின் தஃலீம் தொகுப்புக்கு மறுப்பு எழுதிய நீங்கள் அண்ணனின் நூலுக்குப் பட்டியல் தயாரித்து பத்திரமாக வைத்திருக்கும் மர்மம் என்ன? சத்தியத்தை விட குடும்ப கௌரவம் பெரிதாகி விட்டதா?
அடுத்து, இக்பால் மதனியின் மொழி பெயர்ப்பில் ஏற்பட்டது எழுத்துத் தவறுதான். அதைக் கொள்கைத் தவறாகச் சித்தரிக்கின்றீர்கள். அபூபக்ர் ஸித்தீக் (மதனி) அத்வைதி இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இக்பால் மதனியின் தர்ஜமா வெளிவந்த பின்னர் மருதமுனையில் அத்வைதி அப்துல்லாஹ் பயில்வானின் வீட்டுக்கு அருகில் வைத்துப் பொது மேடையில் அத்வைதத்திற்கு எதிராக உங்களைப் பேச வைத்தவர் அவர்.
18.7.2003 இல் அவர் உங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூட கிழக்கு மாகாணத்தில் அத்வைதக் கொள்கை பரவி வருவது குறித்தும், நீங்கள் இலங்கை வரும் போது கிழக்கு மாகாணத்தில் அத்வைதம் பற்றிய தெளிவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இப்படியெல்லாம் தெளிவாக அவர் அத்வைதி அல்ல என்பதை அறிந்து கொண்டே அத்வைதீப் பட்டம் கொடுக்க உங்களுக்குக் கொஞ்சம் கூட அல்லாஹ்வைப் பற்றி அச்சமில்லையா? அல்லது ஒரு அத்வைதீ உங்களுக்கு நற்சான்று அளிக்கும் அளவுக்கு நீங்கள் தரம் தாழ்ந்து விட்டீர்களா?
பாலைவனத்தில் பயணம் செய்த ஒருவனது காணாமல் போன ஒட்டகம் கிடைத்து விடுகின்றது. இந்த மகிழ்ச்சியில் அவன் அல்லாஹ்வைப் பார்த்து, ‘யா அல்லாஹ்! நீ எனது அடிமை! நான் உனது எஜமான்!’ என மகிழ்ச்சியில் வாய் தவறிக் கூறி விடுகின்றான். இவன் சந்தோஷப்பட்டதை விட அதிகமாக, ஒரு மனிதன் தவ்பாச் செய்யும் போது அல்லாஹ் அதிகமாக மகிழ்வடைகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
இது குஃப்ருடைய வார்த்தை என்றாலும், வாய் தடுமாறி வந்ததால் அவனைக் காஃபிர் என நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. எழுத்துப் பிழையால் நடந்ததால் ஒருவர் காஃபிராகி விட மாட்டார். இந்த ஹதீஸை நீங்கள் அறியாதவர் அல்ல. அறிந்து கொண்டே இந்த ஹதீஸை மறுக்கும் விதத்தில் அவரை அத்வைதீ எனக் கூறும் உங்களது மார்க்க நிலை என்ன? என்பதை நீங்களே கூறுங்கள்!
அடுத்ததாக, தர்ஜமாவில் ஏற்பட்ட இந்தத் தவறைக் கண்டித்து எத்தனை கட்டுரை எழுதினீர்கள் என்று என்னிடம் கேட்டீர்கள். இதைக் கண்டிக்கத் தேவையில்லை; சுட்டிக் காட்டினால் போதுமானது. நாம் சுட்டிக் காட்டியுள்ளோம் என்பதை ‘உண்மை உதயம்’ இதழ் மூலம் நிரூபித்தோம்.
உடனே குர்ஆனில் திருத்தாமல் நோட்டீஸில் திருத்துவதுதான் திருத்துவதா? எனத் தத்துவ முத்துக்களை உதித்துள்ளீர்கள். உங்களது தர்ஜமாவில் ஏற்பட்ட பிழைகளை இணையத்தில் திருத்துகிறீர்களே! அது சரி! நாம் உண்மை உதயத்தில் திருத்தினால் அது பிழை! நல்ல நியாயம் இது! நீங்கள் விரும்பிய படி தீர்ப்புச் சொல்ல இஸ்லாத்தையே குத்தகைக்கு எடுத்துக் கொண்டீர்களோ!?
ஏன் இப்படி முரண்படுகின்றீர்கள்? உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் இப்படி முரண்பாடு வராது. எனவே, ஆணவப் போக்கைக் கை விட்டு உண்மைகளை ஏற்று நடுநிலையோடு எழுத வாருங்கள்! என அன்பாக அழைக்கின்றேன்.
‘நீங்கள் உங்கள் மறுப்பின் ஆரம்பத்தில் அவரது எந்த வாதத்திற்கும் பதில் அளிக்காமல் விடுபடவில்லை என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்’ என எழுதியுள்ளீர்கள். இந்த அடிப்படையில்;
– மார்க்க விடயங்களில் மட்டுமன்றி உலக விடயங்களிலும் இவர் அடிக்கடி முடிவுகளை மாற்றித் தனக்குத் தானே முரண்படுபவர் என்பதையும்-
– அடுத்தவர்களின் நலவுகளையோ, தன்னுடைய தவறுகளையோ ஒப்புக்கொள்ளும் இயல்பு இவரிடம் இல்லை என்று குறிப்பிட்டதையும்-
– ”பிஹி” தவறுதலாக விடுபட்டு விட்டது; அடுத்த பதிப்பில் திருத்தி விடுகின்றேன்’ என்று அப்துந் நாஸர் மௌலவியிடம் நீங்கள் குறிப்பிட்டு அந்தத் திருத்தத்தைச் சுய கௌரவம் பார்த்து திருத்தாமல் விட்டது போன்ற விடயங்களுக்கு மறுப்பு ஏதும் கூறாமல் ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி!
அடுத்ததாக, ‘அஷ் ஷுஅரா’ (26 ஆம்) அத்தியாயம் என்பதற்குப் பதிலாக ‘அஷ் ஷீரா’ (42 ஆம்) அத்தியாயம் என்று நீங்கள் தவறாக எழுதியதைச் சுட்டிக் காட்டினேன்.
அதே போன்று, ‘காஃபிர்களே!’ எனப் போட வேண்டிய இடத்தில் ‘முஹம்மதே!’ என்று போட்டு 64:5 ஆம் வசனத்திற்கு மொழி பெயர்ப்புத் தவறு செய்திருந்தீர்கள். அதைச் சுட்டிக் காட்டினேன். ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. ஏற்றுக் கொண்டால் இஸ்மாயீல் ஸலபி சுட்டிக் காட்டி பீஜே ஏற்றுக் கொண்டார் என்ற நிலை வந்து விடும் என்ற கௌரவப் பிரச்சினையா? குர்ஆனை விட உங்கள் சுய கௌரவம் மேலாகி விட்டதா? இதுதான் தவறை யார் சுட்டிக் காட்டினாலும் ஏற்றுக்கொள்ளும் இலட்சணமா?
முடிவாகக் கூறுவதென்றால் அறபி நாட்டுப் பணம் பற்றிய உங்கள் கதையும், இக்பால் அலியின் கவிதையும் வெறும் அவதூறுகள். இக்பால் மதனியின் மொழி பெயர்ப்பில் ஏற்பட்டது எழுத்துப் பிழை. அதை வைத்து அத்வைதப் பட்டம் கொடுப்பது உங்கள் அறியாமை என்று கூற மாட்டேன். அறிந்து கொண்டே அவதூறு கூறும் உங்களது தீய போக்காகும்.
முபாறக் மதனியின் மொழி பெயர்ப்பில் ஹதீஸின் சில வசனங்கள் ‘…’ என்ற குறியீட்டுடன் மொழி பெயர்க்காமல் விடுபட்டுள்ளது. இக்குறியீட்டின் கருத்தை பெரும் எழுத்தாளரான நீங்கள் அறிந்து கொண்டே – ‘இருட்டடிப்பு’ என்று கூறுவது உங்களது கற்பனையும், அவதூறுமாகும்.
அடுத்து, அவதூறுக்கும் பதில் கூற வேண்டும் என்ற உங்கள் கூற்றும், உங்கள் அண்ணனின் நூல் பற்றிக் கேட்டதற்கு ஒருவர் செயலுக்கு மற்றவர் பொறுப்பாளி அல்ல என்று நீங்கள் கூறியதும், தர்ஜமா தவறு குறித்து உண்மை உதயத்தில் நாம் குறிப்பிட்டது தவறு என்று கூறி விட்டு உங்கள் தர்ஜமா தவறுகளை இணையத்தில் திருத்துவதும் உங்களுக்கு நீங்களே முரண்படும் இடங்கள்.
இப்படிப் பார்க்கும் போது நீங்கள் எழுதிய அனைத்தும் பொய் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகி விட்டது. எம்மை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக நீங்கள் அவிழ்த்து விட்ட அவதூறுகள், நாம் கேட்டதற்கு நீங்கள் எழுதிய பதில்கள் உங்களுக்கே எதிராக உள்ளன அல்லது நான் நிறைய எழுதியுள்ளேன் என்று உங்கள் பக்தர்களைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்கான சொதப்பலாக இருக்கின்றது என்பதும் உறுதியாகி விட்டது. அல்லாஹு அக்பர்!
குறிப்பு:
PJ அவர்களின் மறுப்பு 3-ல் வெளிவந்த பல கேள்விகளுக்கு இதிலேயே மறுப்பும் பதிலும் உள்ளது. அதில் அவர் கேட்டுள்ள கேள்விகளில் பெரும்பாலானது என்னுடன் சம்பந்தமற்றது. மற்றும் சில ஜம்இய்யாவுடன் கூட சம்பந்தமற்றது. அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களது இணையத்தளத்துக்கு வாழ்த்து வழங்கியமை போன்றவற்றிற்கு இதிலேயே மறுப்புண்டு. எமது அடுத்த தொடரில் இது குறித்த உண்மை நிலை இன்னும் விரிவாக விளக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.