இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களின் குடும்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்பவர்களை ஏற்படுத்தி விடுவது அல்லாஹ் ஆற்றலைக் காட்டும் நிகழ்வாகும்.
பிர்அவ்ன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியாவான். அவனது மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதேபோன்று பிர்அவ்னின் அரசபையில் இருந்த பிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் முஸ்லிமாக இருந்தார். ஆனால் அவர் மூஸா நபியை ஏற்றிருந்ததை இரகசியமாக வைத்திருந்தார். மூஸா நபி பிர்அவ்னின் அரசவைக்கு வந்து அவனிடம் சத்தியத்தை எடுத்துச் சொன்னார். இஸ்ரவேல் சமூகத்தை அநியாயம் செய்யாதே என்றெல்லாம் கூறினார். பிர்அவ்ன் மூஸா நபியிடம், “உங்கள் இறைவன் யார்?” என்று கேட்டான். “எல்லா உயிர்களைப் படைத்து அவற்றுக்கான வாழும் வழியைக் காட்டியவனே எங்கள் இறைவன்” என்று மூஸா நபி கூறினார். “அப்படியா? அப்படியென்றால் இதற்கு முன்னர் வாழ்ந்து மறைந்தவர்களின் நிலை என்ன? அவர்கள் எல்லாம் நரகவாசிகளா?” என பிர்அவ்ன் கேட்டான்.
மூஸா நபி “அதுபற்றி அறிவு என் இறைவனிடம் இருக்கின்றது. அதை அவன் மறந்து விடவும் மாட்டான். தவர விடவும் மாட்டான்” என்று சாணக்கியமாக பதில் கூறினார். பிர்அவ்னிடம் மூஸா நபி அத்தாட்சிகளைக் காட்டினார். சூனியக்காரன் என்றான். ஆதாரங்களைக் காட்டினார். பைத்தியக்காரன் என்றான். இறுதியில், “என்னை விடுங்கள். இந்த மூஸாவை நான் கொல்லப் போகின்றேன். அவர் அவரது இறைவனைக் கூப்பிட்டுக் கொள்ளட்டும். அவர் உங்களது மார்க்கத்தை மாற்றி விடுவார். பூமியில் குழப்பத்தை உண்டு பண்ணுவார். அதனால் அவரைக் கொல்வதுதான் சரி” என்று கூறினான். இதைக் கேட்ட மூஸா நபி, “உங்களது இறைவனும் எனது இறைவனுமாகிய அல்லாஹ்விடம், மறுமையை நம்பாத பெருமைக்காரர்களிடம் இருந்து நான் பாதுகாவல் தேடுகின்றேன்” என்று துஆ செய்தார்.
அல்லாஹ் அந்த துஆவை ஏற்றுக் கொண்டான். பிர்அவ்னின் குடும்பத்தில் இருந்து ஒருவர் பேசினார். “எனது இறைவன் அல்லாஹ் தான் என்று கூறியதற்காகவா ஒரு மனிதனைக் கொல்லப் போகின்றீர்கள்? அவர் சும்மா சொல்லவும் இல்லையே! அத்தாட்சிகளைக் காட்டினார் அல்லவா? அவரை நாம் விட்டுவிடுவோம். அவர் பொய் சொல்லி இருந்தால் அந்தப் பொய்யின் பாவத்தை அவர் சுமப்பார். சிலவேளை அவர் கூறுவது உண்மையாக இருந்து அவரை நாம் கொன்று விட்டால் எமக்கு அழிவு அல்லவா வரும்” என்று நடுநிலையாக நின்று மூஸா நபியைப் பாதுகாக்கும் வண்ணம் வாதிட்டார்.
அத்தோடு மக்களைப் பார்த்து, “இன்று ஆட்சி அதிகாரம் எமது கையில் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் நாம் செய்யலாம். ஆனால் அல்லாஹ்வின் தண்டனை எமக்கு வந்தால் யாரால் நமக்கு உதவ முடியும்?” என்று அவர்களின் சிந்தனையையும் தூண்டினார். பிர்அவ்ன் கைதேர்ந்த அரசியல்வாதியாவான். அவன் தனது ஆதிக்கத்திற்காக எடுக்கும் முடிவை மக்கள் நலன் நாடிய முடிவாக சித்தரித்து வந்தான். அவன் மக்களைப் பார்த்து “எனக்கு எது சரியென்று படுகின்றதோ அதைத்தான் நான் கூறுகின்றேன். உங்களை சரியான வழியில் தான் நான் அழைத்துச் செல்வேன்” என்றும் மக்களிடம் இதமாகப் பேசி அவர்களைத் தனது நிலைப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தான்.
உடனே அந்த நல்லடியார் அரசவைப் பிரமுகர்களைப் பார்த்து “மக்களே சத்தியத்தை மறுத்தால் நூஹ், ஆத் சமூகம் அழிக்கப்பட்டது போல் நீங்களும் அழிக்கப்படுவீர்களோ என நான் பயப்படுகின்றேன். மறுமை நாளில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்களோ என்று அஞ்சுகின்றேன்” என்று கூறினார்.
அப்போது பிர்அவ்ன் கிண்டலாக, “மூஸா அவரது இறைவன் மேலே இருப்பதாகக் கூறினார். ஹாமானே! ஒரு உயர்ந்த கோபுதத்தைக் காட்டுங்கள். நான் மேலே போய் மூஸா நபியின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்
சொல்கிறார் போலுள்ளது” என்றான். அதற்கு அந்த நல்ல மனிதர், “மக்களே நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள்.
உங்களை நான் சரியான வழியில் அழைத்துச் செல்கின்றேன்” என்று கூறினார். இப்படி வாதிட்டு மூஸா நபியைக் கொலை செய்வது என்ற நிலைப்பாட்டை நீக்கினார்.
அல்லாஹ் மூஸா நபியைக் காப்பாற்றினான். (இந்நிகழ்வு பற்றி 28:36&38, 20:47&58, 40:26&45 வரையுள்ள வசனங்களில் காணலாம்.