குத்பாவின்போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழுதல்
இமாம் குத்பாப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது மஸ்ஜிதுக்குள் நுழைபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் எனக் கோருகின்ற ஹதீஸ் வந்துள்ள போதிலும் ஹனபீக்களும், மாலிக்கினரும் குத்பாப் பிரசங்கத்தின் போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கது என்று கூறுகின்றனர். இதற்கான காரணம் குறித்து நான் சிந்தித்துப் பார்த்தேன். (பக்கம் 25)
இவ்வாறு கூறி ஹதீஸிற்கு முரணாக வந்த ஹனபீ, மாலிகீ மத்ஹபின் கூற்றை நியாயப்படுத்த முனைகின்றார். ஹதீஸிற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைப் பர்த்தீர்களா? ஹதீஸ் ஸஹீஹானதாக இருந்தால் அதுதான் எனது மத்ஹபு எனக் கூறிய அபூஹனீபா இமாமே இதை அங்கீகரிப்பாரா?
“அனைவரின் கூற்றுக்களும் ஏற்றுக் கொள்ளவும்படலாம், மறுக்கவும்படலாம். இந்தக் கப்ரில் அடக்கப்பட்டிருக்கும் நபி(ச) அவர்களது கூற்றுக்கள் மறுக்கப்படமாட்டாது” எனக் கூறிய மாலிக் இமாமாவது இந்தப் போக்கை சரி காண்பார்களா?
குத்பா நடக்கும் போது பள்ளிக்குள் நுழைபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழக்கூடாது என்ற தனது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காகப் அஷ்ஷேய்க் கஸ்ஸாலி தனது நூலில் பின்வருமாறு வாதிடுகின்றார்.
நபி(ச) அவர்கள் மிம்பரில் அதிகமாக குர்ஆன் வசனங்களைத்தான் ஓதியிருப்பார்கள். நபி(ச) அவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதும் போது அமைதியாக இருந்து அதன் கருத்துக்களை அவதானிப்பது அனைவர் மீதும் கடமையாகும். இதனை விட்டு விட்டு ஒருவர் தொழுகையிலோ அல்லது குர்ஆன் பாராயணத்திலோ ஈடுபடுவார் என்பது அசாத்தியமானதாகும் என்று கூறுகின்றார்.
இமாம் குத்பா ஓதும் போது அவர் குர்ஆனை ஓதினாலோ வேறு விபரங்களை குத்பாவில் விளக்கப்படுத்தினாலோ அந்த நேரத்தில் ஜும்ஆவுக்குச் சென்றவர் தொழுவது, குர்ஆன் ஓதுவது போன்றவற்றில் ஈடுபடமாட்டார். ஆனால் அப்போதுதான் பள்ளிக்குள் வந்து சேர்பவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவதைத் தடுப்பதற்கு இதில் என்ன வாதம் இருக்கின்றது?
தனது கூற்றுக்கு வலுச்சேர்க்கப் பின்வரும் வசனத்தை ஆதாரமாக ஷேய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி காட்டுகின்றார்.
“அல்குர்ஆன் ஓதப்பட்டால் நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு அதற்குச் செவிசாய்த்து, மௌனமாக இருங்கள்.” (7:204)
ஒரு இமாம் குத்பா ஓதுகின்றார். அவர் வழமையாக குத்பாவில் குர்ஆன் வசனங்களை ஓதாமல் கதைகளையும், கப்ஸாக்களையும், வரலாறுக்களையும் கூறுவதுதான் வழமை என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஜும்ஆவுக்கு வந்தவர்கள் சும்மா கதைகளைக் கேட்பதை விட இரண்டு ரக்அத்துக்கள் எழுந்து தொழுதால் நன்மை கிடைக்கும் என்று எழுந்து தொழலாமா? அதை ஷேய்க் சரி காண்பாரா? குத்பா நடக்கும் போது மௌனமாக இருந்து அதைக் கேட்க வேண்டும் என்பதற்கும் குர்ஆன் ஓதப்படுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இமாம் குத்பா உரை நிகழ்த்தும் போது மஸ்ஜிதுக்குள் வருபவர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்ற சுன்னாவை மறுப்பதற்கு இப்படி சுற்றி வளைக்க வேண்டியதில்லை.
ஜும்ஆவில் குர்ஆன் ஓதப்பட்டதோ, இல்லையோ குத்பா செய்யப்படும் போது மௌனமாக இருந்து அதை செவியேற்க வேண்டும். பேசக்கூடாது என்பதெல்லாம் ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதே ஹதீஸ்கள்தான் மஸ்ஜிதுக்குள் இமாம் குத்பா ஓதும் போது நுழைபவர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்று கூறுகின்றது. இந்த ஹதீஸிற்கு மாற்றமாக இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களோ அல்லது மாலிக் இமாமோ கூறியிருந்தால் அதை நியாயப்படுத்துவதற்காக இப்படி சுற்றி வளைத்திருக்க வேண்டியதில்லை.
இவர் குறிப்பிட்டுள்ள 7:204 ஆம் வசனம் தொழுகையில் குர்ஆன் ஓதப்படும் போது மௌனமாக இருப்பது பற்றி அருளப்பட்ட வசனமாகும். நாம் ஒரு பஸ்ஸில் பயணிக்கின்றோம். அங்கே கிராத் சீடியொன்று போடப்பட்டிருக்கின்றது. இப்போது பஸ்ஸில் பயணிக்கின்ற எவரும் பேசக் கூடாது என்று சட்டம் கூறுவார்களா? குர்ஆன் ஓதப்பட்டால் பேசக் கூடாதென்பதைப் பொதுச்சட்டமாக எடுக்கலாமா?
அப்படியே இவர்கள் கூறுவது போல் அந்த வசனம் ஜும்ஆ குத்பா உரை குறித்து அருளப்பட்டிருந்தால் கூட அது பொதுச்சட்டமாக இருக்கும். இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்குள் நுழைபவர் இரண்டு ரக்அத்துக்கள் தொழாமல் இருக்கக் கூடாது என்பது ஹதீஸில் வந்துள்ளதால் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை அந்தப் பொதுச்சட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெற்றதாக இருக்கும். உஸுலுல் பிக்ஹ் படித்தவர்களுக்கு இது புரியாத அம்சம் அல்ல.
இந்த இடத்தில் ஹதீஸை மறுக்க முடியாத நிலையில் ஷேய்க் கஸ்ஸாலி தொழுமாறு ஏவும் ஹதீஸ் குறித்து வலுவில்லாத வாதமொன்றை முன்வைக்கின்றார்.
குத்பாப் பிரசங்கத்தைச் செவிமடுப்பதே சுன்னாவாக இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது. தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையைத் தொழுமாறு ஏவுகின்ற ஹதீஸைப் பொருத்தவரையில் அது குறிப்பிட்ட ஒரு மனிதரோடு மாத்திரம் சுருங்கியதாகும். குத்பாப் பிரசங்கத்தின் போது தொழுவதையும், கதைப்பதையும் செயல் ரீதியான சுன்னா தடுத்தே வந்துள்ளது……. (பக்கம்: 26)
ஷேய்க் அவர்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் குறித்த நபருக்கு மட்டும் கூறப்பட்டதாகும் என்று கூறுவது தவறாகும். ஒரு இமாமின் கூற்றை நியாயப்படுத்துவதற்காக இப்படியெல்லாம் வலிந்து பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இது குறித்து வந்துள்ள ஹதீஸ்களைப் பார்க்கும் போது ஒரு சாதாரண பொதுமகன் கூட இது ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு மட்டுமுரியதல்ல என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
“உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்கு வந்தால் அவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” (அறி: அபூகதாதா(வ), ஆதாராம்: அபூதாவூத்-467)
இந்த நபிமொழி பொதுவாகவே தஹிய்யதுல் மஸ்ஜித் பற்றிப் பேசுகின்றது. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(வ) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இமாம் குத்பா ஓதும் போது வந்தாலும் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் என்று கூறுகின்றது.
“உங்களில் ஒருவர் இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்கு வந்தால் அவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
(அறி: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அதாரம்: இப்னு குஸைமா- 1831)
இங்கே பொதுவாகவே ஏவப்பட்டிருக்கும் போது அது ஒரு தனி நபருக்கு மட்டும் உரிய ஏவல் என்று எப்படிக் கூற முடியும்?
பின்வரும் நிகழ்வையொட்டித்தான் ஷேய்க் கஸ்ஸாலி, இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்கு வருபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் என்ற ஹதீஸ் ஒரு தனி நபருக்குரியது என்று கூறுகின்றார். அந்த நிகழ்வை முழுமையாகப் பார்த்தால் ஷேய்க் அவர்களின் கூற்று எவ்வளவு தவறானது என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஜாபிர்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
“அவர்கள் நபி(ச) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது சுலைக் அல் கதபானி(ல) பள்ளிக்கு வந்து அமர்ந்தார்கள். அவருக்கு நபி(ச) அவர்கள் “சுலைக்கே! எழுந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுவீராக!” என்று கூறினார்கள். பின்னர் உங்களில் ஒருவர் இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்கு வந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளட்டும் என்று கூறினார்கள். ” (இப்னு குஸைமா: 1835)
எனவே, இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்கு வருபவர் இலேசான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது சுன்னாவாகும். இதற்கு மாற்றமாக ஷேய்க் அவர்கள் செயல் ரீதியான சுன்னா தொழுவதைத் தடுத்து வந்ததாகக் கூறுகின்றார். நபி(ச) அவர்களின் பொதுவான ஏவலை நனி நபருக்குரியது என்று கூறுகின்றார். குர்ஆன் ஓதும் போது செவி தாழ்த்திக் கேட்க வேண்டும் என்ற குர்ஆன் வசனத்தை வைத்துத் தான் தொழக் கூடாது என்று ஷேய்க் கூறுகின்றார். தொழுமாறு கூறும் ஹதீஸையும் பொருத்தமற்ற காரணம் கூறி மறுக்கின்றார். இவர் கூறும் அந்த மனிதர் மட்டும் நபி(ச) அவர்கள் குர்ஆன் ஓதும் போது கேட்கத் தேவையில்லாதவராக எப்படி மாறினார் என ஷேய்க்தான் கூற வேண்டும்.
குத்பாப் பிரசங்கத்தின் போது தொழப்படும் தொழுகையை இமாம் மாலிக் ஏற்றுக் கொள்ளப்படாத (பாதிலான) தொழுகை எனக் குறிப்பிடுகின்றார். இதற்காக ஆதாரபூர்வமான சுன்னாவுக்கு எதிரானவர் என முஅத்தாவின் ஆசிரியர் குற்றம் சாட்டப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. (பக்கம்: 26) என்று ஷேய்க் கஸ்ஸாலி கூறுகின்றார்.
இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் குத்பாவின் போது “தஹிய்யதுல் மஸ்ஜித்” தொழுவதை பாதிலானது என்று கூறியிருந்தால் அவர் ஸஹீஹான ஹதீஸுக்கு எதிரானவர் என்றும் கூறமாட்டோம். இவர் இப்படிக் கூறிவிட்டாரே என்பதற்காக ஸஹீஹான ஹதீஸையும் விட்டுவிடவும் மாட்டோம். இமாம் மாலிக்(ரஹ்) இஜ்திஹாதில் தவறு விட்டுவிட்டார். அல்லாஹ் அவருக்கு ஒரு நற்கூலியை வழங்குவான். அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார் என்போம். ஷேய்க் கஸ்ஸாலி அவர்கள் புஹாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் ஆயிஷh(ரழி) அவர்கள் மறுத்த ஹதீஸ்களைத் தமது ஏடுகளில் எழுதியுள்ளார்கள் என்று குறை கூறியது போன்று இவர்கள் குறை கூறப்படமாட்டார்கள்.
குர்ஆன், சுன்னா என்ற அடிப்படைகளை மீறிச் செல்பவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் இது போன்ற சாதாரண விடயங்களில் கூட தவறு விடுவதென்பது தவிர்க்க முடியாதது என்பதையே ஷேய்க் கஸ்ஸாலி விட்ட தவறுகள் உணர்த்துகின்றன.
உண்ட பின்னர் விரல்களைச் சூப்புவது அறியாமைக் கால நடவடிக்கையா?
உணவு உண்ட பின்னர் கை விரல்களைச் சூப்புவது சுன்னத்தாகும். ஷேய்க் கஸ்ஸாலி அவர்கள் இதனை அறபிகளின் பழக்கவழக்கம் என்றும் இது ஜாஹிலிய்யாக் காலப் பழக்கவழக்கம் என்றும் குறை கூறும் அதே நேரம் இந்த நடத்தை இஸ்லாத்தை விட்டும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது என்றும் கூறுகின்றார். இதோ அவர் கூறுவதைக் கவனியுங்கள்.
“…… அறபிகள் தமது கைகளினால் உண்ணக் கூடியவர்களாக இருந்தனர். அது அவர்களது வழக்கமாகும். கையினால் உண்னும் ஒருவர் தனது விரல்களை நக்கிக் கொள்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் இவ் வழக்கத்தை மார்க்கமாக ஆக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.” (பக்கம்: 122)
அறபிகளின் வழக்கம் எல்லாம் மார்க்கமாகாது என்பதில் எமக்கு உடன்பாடுள்ளது. அறபிகளின் வழக்கத்தில் எதையாவது நபி(ச) அவர்கள் ஏவினார்கள் என்றால் அது “ஆதத்” வழக்காறு என்ற கட்டத்தைத் தாண்டி இபாhத் “வணக்கமாக” மாறிவிடும். குறைந்தபட்சம் நபி(ச) அவர்கள் முன்னிலையில் பிறர் செய்ய நபி(ச) அவர்கள் அதைத் தடுக்கவில்லை என்றால் அது மார்க்க அங்கீகாரத்தைப் பெற்றதாக மாறிவிடும். ஆனால், உணவு உண்டவர் கைவிரல்களைச் சூப்புமாறு நபி(ச) அவர்கள் ஏவியுள்ளார்கள். விரல் சூப்பும் பழக்கத்தை மார்க்கமாக்க எந்த அடிப்படையும் இல்லையென ஷேய்க் கஸ்ஸாலி கூறியது அப்பட்டமான பொய்யாகும்.
“உங்களில் ஒருவர் உண்டால் தனது விரல்களைத் தான் சூப்பாமல் அல்லது பிறருக்கு சூப்பக் கொடுக்காமல் துடைக்க வேண்டாம் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” (அறி: இப்னு அப்பாஸ்(வ), ஆதா: புஹாரி: 5456 – முஸ்லிம்: 129, 2031, 130)
நபி(ச) அவர்கள் ஏவிய ஒன்றை மார்க்கமாக ஆக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்கின்றார்.
“நபி(ச) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள். கையைத் துடைப்பதற்கு முன்னர் சூப்பிக் கொள்வார்கள் என கஃப் இப்னு மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.” (முஸ்லிம்: 2032)
நபி(ச) அவர்கள் செய்ததொன்றை மார்க்கமாக ஆக்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்கின்றார். நபி(ச) அவர்கள் விரல் சூப்புவது பற்றி ஏவும் போது மார்க்கக் காரணத்தைக் கூறியே ஏவுகின்றார்கள்.
“(உங்களில் ஒருவர் உணவு உண்டால்) தனது விரல்களைச் சூப்புவதற்கு முன்னர் கையைத் துடைக்க வேண்டாம். அவரது எந்த உணவில் பரகத் இருக்கிறது என்பதை அவர் அறியமாட்டார் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர்(வ). ஆதாரம்: முஸ்லிம்-2033)
நபி(ச) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் அடங்கிய இந்த சுன்னா குறித்து ஷேய்க் கஸ்ஸாலி கூறுவதைக் கவனியுங்கள்.
“…… விரல்களை நக்குவதில் கூடிய கரிசனை காட்டுதல் போன்ற விடயங்களைக் கட்டாயப்படுத்தினால் அவை வருந்திச் செய்யும் செயல்களாகும். மேலும் அவை இஸ்லாத்துக்கும் அதன் தூதுக்கும் தீங்கிழைப்பதாகும். முஸ்லிம்கள் குறித்து மட்டரகமான வதந்திகள் பரவுவதற்கும் அவை வழி செய்யும்.” (பக்கம்: 123)
(குறிப்பு: தரையில் அமர்ந்துதான் உண்ண வேண்டும். கரண்டியைப் பயன்படுத்தி உண்ணக் கூடாது போன்ற கருத்துக்களை ஷேய்க் அவர்கள் கண்டிக்கின்றார்கள். இதில் அவருடன் எமக்கு முரண்பாடில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்)
இந்தப் பகுதியை ஷேய்க் அவர்கள் முடிக்கும் போது குறிப்பிடும் வார்த்தைகள் அருவறுப்பானவையாகும்.
“ஏகத்துவத்தின் பாலான அழைப்பு அறபிகளின் நடத்தைகளிலும் பாலான அதிலும் அவர்களது அறியாமைக் கால நடவடிக்கைகளின் பாலான அழைப்பாக மாறிவிட்டதா? பாமரத்தானமாக நாட்டுப்புற இந்நடத்தைகள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுக்கும் தடையாக அமைந்துள்ளன.” (பக்கம்:123)
விரல் சூப்புவது அறபிகளின் நடத்தையாம். அதுவும் அறியாமைக் கால நடத்தையாம். அதுவும் பாமரத்தனமான நாட்டுப் புற நடத்தையாம். இஸ்லாத்தின் பால் மக்கள் வருவதைத் தடுக்கும் நடத்தையாம். நபி(ச) அவர்கள் செய்த, செய்யுமாறு ஏவிய ஒரு சுன்னத்தை இப்படியெல்லாம் விமர்சிக்கும் துணிவு எங்கிருந்து வந்ததோ நாம் அறியோம்! நபி(ச) அவர்கள் இவரது பார்வையில் பாமரத்தனமான, நாட்டுப்புற அறபியாக மாறிவிட்டார்! சுன்னாவை உரிய முறையில் மதிக்காத போக்குத்தான் இத்தகைய தீய சிந்தனைகளை உருவாக்குகின்றது. ஷேய்க் அவர்களின் இத்தகைய விமர்சனங்கள்தான் இது பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்கும் கட்டாயத்திற்கு எம்மை உள்ளாக்கியது.
மாதவிடாய்தான் காரணமா?
பெண்களின் சாட்சியம் பற்றி ஷேய்க் அவர்கள் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ஆணின் சாட்சியத்தில் அரைப் பங்கே பெண்ணின் சாட்சியம் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். பெண்ணுக்கு மறதி ஏற்படலாம் அல்லது அல்லது குழப்பம் ஏற்படலாம் அல்லது ஐயம் ஏற்படலாம் என அல் குர்ஆன் அதற்குக் காரணம் சொல்கின்றது. அவளுடன் மற்றுமொரு பெண் இருக்கின்ற போது சத்தியத்தை முழுமையாக ஒப்புவிப்பதற்கு ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ளலாம்.
இவ்விடயம் குறித்து ஆராய்ந்து பார்த்தேன். பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுகின்ற போது அவள் நோயாளியைப் போல மாறுகின்றாள் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் போது அவளது சுபாவம் மாற்றமடைகின்றது. உயிர் நிலை உறுப்புக்களின் சீரற்ற இயக்கத்தினால் கலவர நிலைக்கு ஆட்படுகின்றாள். சாட்சி சொல்லும் போது சீரான ஸ்திர நிலையிலிருப்பது அவசியமாகும்.
“உங்களுடைய ஆண்களிலிருந்தும் இரு சாட்சியங்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு இருவரும் ஆண்களாக இல்லாதிருந்தால் சாட்சியாளர்களில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களில் ஓர் ஆணும், இரு பெண்களும் சாட்சியாகக்கப்பட வேண்டும். அவ்விருவரில் ஒருவர் மறந்துவிடலாம். அப்போது அவ்விருவரில் ஒருத்தி மற்றவளுக்கு நினைவுபடுத்துவாள்” (அல் பகறா:282) என்ற வசனத்தின் இரகசியம் அதுதான்.
இவ்விவகாரத்தை இந்த வரையரையுடன் நிறுத்திக் கொள்வது கடமையாகும்.” (பக்கம்: 84-85)
ஒரு காரணத்துக்காக சட்டம் கூறப்பட்டால் அந்தக் காரணம் நீங்கிவிட்டால் சட்டமும் நீங்கிவிடும் என்பது பொதுவான விதியாகும். இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்திற்கு சமனானது எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதற்கான காரணம் குறித்து அறிந்தாலோ அல்லது அறியாவிட்டாலோ இதுதான் சட்டம். காரணம் குறித்து ஆய்வு செய்பவர்கள் இதுதான் இதற்குக் காரணம் என்று அடித்துக் கூற முடியாது.
இங்கே ஷெய்க் அவர்கள் ஒரு காரணத்தைச் சிந்தித்துக் கூறுகின்றார். இவ்விவகாரத்தை இந்த வரையரையுடன் நிறுத்திக் கொள்வது கடமையாகும் என்றும் கூறுகின்றார். உதாரணத்திற்கு, ஒரு பிரச்சினை தொடர்பில் ஒரு பெண் தனித்து சாட்சியம் கூறுகின்றாள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஒரு பெண்ணின் சாட்சி பாதி சாட்சியாகத்தான் கணிக்கப்படும். இன்னொரு பெண்ணும் உன்னுடன் சாட்சிக்கு வந்தால்தான் அது ஒரு சாட்சியாகக் கணிக்கப்படும் என்று அவளிடம் கூறப்படுகின்றது. உடனே அவள் “இல்லை இல்லை இப்போது நான் மாதத் தீட்டுடன் இல்லை சுத்தமாக இருக்கிறேன். எனவே, எனது சாட்சி பாதி சாட்சியாகாது என்று கூறினால். ஷேய்க் கஸ்ஸாலி அவர்கள் வாதத்தை ஏற்பவர்களின் நிலை என்னவென்று சிந்தித்துப் பாருங்கள்? மேலே குறிப்பிட்ட 2:282 வசனத்தின் கருத்தை மீற நேரிடுமல்லவா?
பெண்ணின் சாட்சியத்தைக் குர்ஆன் பாதி சாட்சியாகக் கூறுகின்றது என்றால் பெண்ணிடம் காணப்படும் மாறாத ஒரு குணத்திற்காக அப்படிக் கூறியிருக்கலாம் அல்லது காரணமே இல்லாமல் கூறியிருந்தால் கூட “ஆமன்னா”, “ஸல்லம்னா” நம்பினோம், ஏற்றுக் கொண்டோம் என ஏற்றுக் கொள்வதுதான் வழியாகும். ஆய்வு செய்வதில் தவறில்லை. இதுதான் காரணம் என்று நாமாக அடித்துக் கூற முடியாது. ஆனால் ஷேய்க் அவர்கள் தன்னை அஹ்லுல் பிக்ஹ் ஆக அடையாளப்படுத்துகின்றார். எனினும் பிக்ஹ் துறையில் அவர் பல தவறுகளை விட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காவே இதனை இங்கு குறிப்பிட்டோம்.