இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றைத் தவிர்ப்பதே நோன்பு என்று கூறப்படும். இந்த நோன்பை சில காரியங்கள் முறித்துவிடும். இதற்கு ‘முப்திலாதுஸ் ஸவ்ம்” (நோன்பை முறிப்பவை) என அறபியில் கூறப்படும். நோன்பு நோற்கும் நாம் இது குறித்து அறிந்திருப்பது அவசியமாகும்.
1 – 2) உண்ணல், பருகல்:
உண்பது, பருகுவது என்பன நோன்பை முறிக்கும். இது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின்வரும் வசனம் ஆதாரமாக அமைகின்றது.
‘…ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்….” (2:187)
பஜ்ரிலிருந்து இரவு வரை உண்ணல், பருகல் என்பவற்றைத் தவிர்ந்து கொள்ளுமாறு இந்த வசனம் கூறுகின்றது. உண்ணும் பொருள் எதுவாக இருந்தாலும் அது நோன்பை முறித்து விடும் என்ற பொதுவான அறிவு அனைவருக்கும் உள்ளது.
3. உடலுறவு:
உடலுறவில் ஈடுபடுவது நோன்பை முறிப்பதுடன் அதற்குத் தண்டப் பரிகாரமும் செய்யப்பட வேண்டும். நோன்பை முறிக்கும் காரியங்களில் இது கடுமையானதாகும். நோன்புடன் உடலுறவில் ஈடுபட்டவர் ஒரு அடிமையை உரிமையிட வேண்டும். முடியாவிட்டால் தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இதற்கான ஆதாரமாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது.
அபூ ஹுரைரா(வ) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் அழிந்துவிட்டேன்” என்று கூறினார். நபி(ச) அவர்கள், ‘ஏன் (என்ன நடந்தது)” என்று கேட்டார்கள். அவர், ‘நான் ரமழான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று கூறினார;. அதற்கு நபி(ச) அவர்கள், ‘ஓர் அடிமையை விடுதலை செய்து விடுவீராக!” என்று கூறினார;கள். அதற்கு அவர், ‘என்னிடம் அடிமை இல்லையே!” என்று கூறினார். நபி(ச) அவர்கள், ‘அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘அது என்னால் இயலாது” என்று கூறினார். நபி(ச) அவர்கள், ‘அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!” என்று கூறினார்கள். அம்மனிதர், ‘என்னிடம் வசதி இல்லையே!” என்று கூறினார;. அப்போது நபி(ச) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு கூடை (அரக்) கொண்டு வரப்பட்டது. உடனே அவர்கள், ‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், ‘இதோ! நானே அது” என்று பதிலளித்தார். நபி(ச) அவர்கள், ‘இதை தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர் ‘எங்களை விட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? இறைத்தூதர் அவர்களே! உங்களை சத்தியத்துடன் அனுப்பிய (இறை)வன் மீது ஆணையாக! மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுள்ள குடும்பத்தார் எவரும் இல்லை” என்று கூறினார். உடனே நபி(ச) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘அப்படியென்றால் நீங்கள்தாம் (அதற்கு உரியவர்கள்)” என்று கூறினார்கள்.” (புஹாரி: 1936-2600, 5368)
4. இச்சையுடன் விந்தை வெளியேற்றுதல்:
உடலுறவு அல்லாத வேறு வழிகளில் ஒருவர் இச்சையுடன் விந்தை வெளிப்படுத்தினால் நோன்பு முறிந்து விடும். உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்படாவிட்டாலும் மேற்கூறிய குற்றப் பரிகாரத்தை நிறைவேற்ற நேரிடும்.
5. வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்:
ஒருவருக்குத் தானாக வாந்தி வந்தால் நோன்பை அது முறிக்காது. ஒருவர் தானாக முயற்சித்து வாந்தியெடுத்தால் அது நோன்பை முறிக்கும்.
‘யாருக்கு வாந்தி வந்ததோ அவர் அந்த நோன்பைக் கழா செய்ய வேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தியெடுத்தாரோ அவர் அதை கழாச் செய்யட்டும்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ர)
நூல்: இப்னு குஸைமா – 1960, 1961
இப்னு மாஜா: 1676
6. மாதவிடாய், பிரசவத்தீட்டு ஏற்படுதல்:
நோன்புடன் இருக்கும் போது மாத விடாயோ அல்லது பிரசவத்தீட்டோ ஏற்பட்டால் அந்த நிமிடமே நோன்பு முறிந்துவிடும். நோன்பின் இறுதி நிமிடத்தில் இது நிகழ்ந்தாலும் அந்த நோன்பை இவர்கள் கழா செய்ய வேண்டும்.
இந்தச் செயல்கள் மூலம் நோன்பு முறியும். என்றாலும் அதிலும் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அவையாவன,
1. அறிவு.
2. நினைவு.
3. நாட்டம்.
1. அறிவு:
ஒருவருக்கு அறிவு இல்லாமல் ஒரு விடயம் நிகழ்ந்துவிட்டால் அவருக்கு மன்னிப்பு உண்டு.
‘நபி(ச) அவர்களது காலத்தில் ஒரு நாள் மேக மூட்டாக இருந்தது. சூரியன் மறைந்துவிட்டது என்ற அடிப்படையில் நோன்பைத் திறந்தனர். பின்னர் மேக மூட்டம் நீங்கியது. சூரியன் மறைந்திருக்கவில்லை. அவர்களை நபியவர்கள் அந்த நோன்பை கழா செய்யுமாறு பணிக்கவில்லை.”
எனவே, அறிவு இல்லாமல் ஒரு விடயம் நிகழ்ந்துவிட்டால் மன்னிப்பு உண்டு.
2. நினைவு:
நினைவு என்பதற்கு எதிர்ப்பதம் மறதியாகும். ஒருவர் தான் நோன்புடன் இருப்பதை மறந்து உண்டுவிட்டால் அல்லது பருகிவிட்டால் அதனால் அவரது நோன்பு முறிந்துவிடாது.
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டு விட்டால் அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான்” என அபூ ஹுரைரா(ர) அறிவித்தார்.
(புஹாரி: 6669)
எனவே, நினைவில்லாமல் மறதியாக நடந்ததற்கு குற்றம் பிடிக்கப்படமாட்டாது.
‘எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அது சம்பாதித்ததன் நன்மை அதற்குரியதே. அது சம்பாதித்ததன் தீமையும் அதற்குரியதே! ‘எங்கள் இரட்சகனே! நாம் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எம்மைக் குற்றம் பிடித்து விடாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! எமக்கு முன் சென்றோர் மீது சுமத்தியது போன்ற சிரமத்தை எம்மீது நீ சுமத்தி விடாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! எதில் எமக்கு சக்தி இல்லையோ அதை எம்மீது சுமத்தி விடாதிருப்பாயாக! எம்மை மன்னித்து விடுவாயாக! எங்கள் பாவங்களை அழித்து விடுவாயாக! மேலும், எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். எனவே, நிராகரிப்பாளர்களான கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி புரிவாயாக!”
(2:286)
இந்த வசனம் கற்றுத் தரும் இந்த துஆவும் இதைத்தான் உணர்த்துகின்றது.
3. நாட்டம்:
ஒருவரின் நாட்டம் இல்லாமல் இக்காரியம் நடந்தாலும் மன்னிப்பு உண்டு. உதாரணமாக, ஒருவர் வாய் கொப்பளிக்கும் போது அவரையும் மீறி தண்ணீர் குடிபட்டுவிட்டால் நோன்பு முறிந்துவிடாது. அல்லது நிர்ப்பந்தம் காரணமாக நோன்பை முறிக்கும் செயலைச் செய்யும் நிலை ஏற்பட்டாலும் நோன்பு முறியாது. உதாரணமாக, சீனாவில் கடந்த ரமழானில் நோன்பாளிகள் நீரைக் குடிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டு சுய நாட்டம், விருப்பம் இல்லாமல் நீரைப் பருகியவர் அல்லது உணவை உண்டவருடைய நோன்பு முறியாது. அவர் தனது நோன்பைப் பூரணப்படுத்தலாம்.
நோன்பை முறிக்கும் காரியங்களில் சிலது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவை பற்றி இங்கு நாம் எதுவும் கூறவில்லை. இஸ்லாமிய சட்டங்களை உரிய முறையில் அறிந்து அமல் செய்ய முயற்சிப்போமாக!