1995 இல் அதாவது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றை இங்கே மீள் பிரசுரம் செய்கின்றோம். ஒரு முறை முழுமையாக வாசித்துப் பாருங்கள்.
இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் 1995 ஏப்ரல் 19 இல் கடற்படையின் “ரனசுரு” “சூரியர்” ஆகிய பீரங்கிப் படைகளைப் புலிகள் வெடிக்கச் செய்ததுடன் முறியடிக்கப்பட்டது. மூன்றாம் ஈழப் போர் ஆரம்பமானது.
இத்தோடு இலங்கையில் ஓர் அரசியல் அலை ஏற்பட்டது எனலாம். பொதுமக்களில் அநேகமானோர் அன்றாட அரசியல் நிலவரங்களை அறிவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர். குறிப்பாக யுத்த நிலவரம் பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தெடுத்தது. இதனால் பத்திரிகைகள் தொடக்கம் பொது மக்கள் வரை அனைவரும் யுத்த நிலவரம் பற்றிய விமர்சனத்தில் தான் அதிக அக்கறை காட்டி வந்தனர்.
இவ்வேளையில், நல்ல உள்ளங்கள் விரும்பாத ஆட்கடத்தல், இன மோதல்களை உருவாக்கும் தீய சக்திகளின் வியூகங்கள், ஏரியோரச் சடலங்கள் என்பன நடை பெற்றாலும் அவை பெரிதுபடுத்தப்படாமல் யுத்த மேகத்துக்குள் புதையுண்டு போயின.
மூன்றாம் ஈழப் போருக்குப் பின் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய, அவர்களின் உள்ளத்தை ரணப்படுத்திய சில தகவல்களை இங்கு ஒன்று சேர்த்து நோக்குவோம்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிக்கப் பட்டால் புலிகளின் இலக்காக கிழக்கும், அரச படையின் இலக்காக வடக்கும் குறிப்பாக யாழ்ப்பாணமும் இருக்கும் என்ற உண்மையை ஓரளவு அரசியல் அவதானமுள்ள நம்நாட்டு குடிமகனும் அறிந்து வைத்திருந்தான். இதனை உண்மைப் படுத்துவது போல் புலிகளின் முதல் தாக்குதல் வடக்கில் இருந்து துவங்கப்பட்டது. யுத்தத்தில் புலிகளின் கை ஓங்கி, கிழக்கு மாகாணம் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால் கிழக்குவாழ் முஸ்லிம் களுடனான அவர்களது செயற்பாடுகள் எப்படி இருக்கும்?
வடக்கிலிருந்து எம் உடன் பிறப்புக்கள் அனைத்து உரிமைகளும், உடைமைகளும் பறிக்கப்பட்டு அகதிகளாக, அநாதரவான நிலையில் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட அநியாயம் கிழக்கிலும் அறங்கேற்றப்படுமா?
ஏற்கனவே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட எம் உடன் பிறப்புக்கள் அகதி முகாம்களில் அல்லல்படும் காட்சி கிழக்கு முஸ்லிம்களைத் திணறச் செய்தது. ஆரம்பகால விடுதலைப் போரில் பங்குகொண்டு பல உயிர்த்தியாகங்களைச் செய்த, பல கோடிப் பணத்தைக் கொடுத்து உதவி செய்த வடக்கு முஸ்லிம்களை விரட்டியதன் மூலம் புலிகள் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய வடு ஆறமுன்னர் இன்னுமோர் வெளியேற்றமா?
ஏற்கனவே ஏற்பட்ட பொருள் இழப்புக்கள், சமூக, சமய, கலாசாரப் பாதிப்புக்கள், அறிவுத்துறை வீழ்ச்சி என்பவற்றை ஈடுசெய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது மறுபடியும் எம் சமூகம் வெளியேற்றப்பட்டால்….? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள்!
இச்சந்தேகங்களை சற்று வலுப்படுத்தி நிலைமையை இன்னும் கொஞ்சம் நெருக்கடியாக்கும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்தன.
முஸ்லிம்கள் ஒரு குறித்த காலக்கெடுவுக்குள் வெளியேற வேண்டும் என்ற அச்சுறுத்தல் கடிதங்கள் (காத்தான்குடி, புத்தளம் போன்ற பகுதிகளில்) புலிகளின் பெயரில் அனுப்பப்பட்டன. இக்கடிதங்கள் பலத்த சந்தேகங்களையும், அச்ச உணர்வையும் கிளப்பிவிட்டது. இது தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் இனவாத சக்திகளின் சதியா? புலிகளின் பெயரைப் பயன்படுத்தி எரிகின்ற வீட்டில் பிடுங்குகின்ற தந்திரத்தைக் கையாளத் திட்டமிட்ட கொள்ளைக் கோஷ்டியின் சேஷ்டையா? முஸ்லிம் இளைஞர்களையும் இராணுவத்துடன் இணைத்துக் கொள்ள அரச படை கையாண்ட தந்திரமா? புலிகளின் உத்தரவாக, இருக்குமானால் கிளம்பு என்றால் கிளம்புகின்ற நிலையில்தான் முஸ்லிம்கள் இருக்கின்றனரா என்பதைக் கண்டறியும் புலிகளின் “வெள்ளோட்ட அச்சுறுத்த”லாக இருக்குமா?
இவ்வாறு பல திக்குகளிலிருந்தும் கிளர்ந்து வந்த கேள்விகள் கலைந்து வருகின்றன. இருப்பினும் கிழக்கு முஸ்லிம்களின் குடியுரிமை பற்றி உறுதியான ஒரு தீர்மானத்தை கூற முடியாத நிலை இன்னும் நீங்கவில்லை.
புல்மோட்டையில் இராணுவ வெறியாட்டம்:
யுத்தம் வெடித்த பின் கிழக்கு மாகாணத்தின் நுழைவாயிலாகத் திகழும் திருமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புல்மோட்டைப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் உயிர் காக்கும் நோக்குடன் இடம்பெயர்ந்தனர். இவர்களே மூன்றாம் ஈழப் போர் ஏற்படுத்திய முதல் அகதிகளாவர்.
மக்களைக் கேடயமாகப் பாவிக்கும் நோக்குடனும், இல்மனைட் சுத்திகரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டு அதனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் பிற்பகுதியில் அரச படையில் முஸ்லிம்களின் வெளியேற்றம் தடுக்கப்பட்டது. எனினும் அங்குள்ள முஸ்லிம்கள் புலி, படைத்தரப்பு என்ற இரு பக்க நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இராணுவத்தினரின் அராஜகப் போக்கால் படைத்தரப்பு பற்றிய அச்ச உணர்வு அப்பகுதி மக்களிடம் மேலோங்கியுள்ளது.
புலிகளால் தாக்கப்பட்டு ஐந்து இராணுவத்தினர் இறந்ததையடுத்து வெறிகொண்ட இராணுவ வீரர் இருவர் வீட்டிற்குள் புகுந்து ஐந்து முஸ்லிம்களைக் கொன்று குவித்து தமது வெறியைத் தணித்துக் கொண்டனர். இவ்வொறியாட்டத்திற்குப் பலியான ஐவரில் 70 வயது மூதாட்டியும் 3 வயதுக் குழந்தையும் உள்ளடங்குவர்.
மேற்படி வெறியாட்டத்தால் 24 வயதுடைய ஏழு மாதக் கர்ப்பிணி, 9 மாதக் குழந்தை உட்பட இரு இளைஞர்கள் என்போர் காயப்பட்டுள்ளனர். இதே பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்த 55 வயதுடைய முதியவர் இருவரையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இவ்வாறாக இப்பகுதியில் நடைபெற்ற தொடர்ந்தேர்ச்சியான இராணுவ அத்து மீறல்கள் முஸ்லிம்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற சூழ்நிலையையும், இராணுவத்தினர் பற்றிய அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள், உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளானவர்கள் என இராணுவத் தரப்பில் சாட்டு சொல்லப்பட்டாலும் நடந்த அநியாத்தை முஸ்லிம்களாலும் மனிதாபிமானமுள்ள மற்றவர்களாலும் இலகுவில் மறந்துவிட முடியாது. (புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலர் இன்னும் புதிய அகதிகள் என்ற முத்திரையுடன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்)
காக்கிச் சட்டைக்குள் காம வெறி
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் இராணுவ அரண் ஒன்றில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியொருவர் அதற்கு அருகில் உள்ள ஆண் துணையற்ற பெண்ணிடம் அடிக்கடி வாலாட்டிப் பார்த்துள்ளார். அது பலிக்காததால் கற்பழிப்புத் திட்டம் தீட்டினார். அப்பெண் வீட்டில் இல்லாத வேளையில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு மேற்படி அதிகாரியும், இன்னும் இரு பொலிஸாரும் வீட்டில் மறைந்திருந்துள்ளனர்.
26.06.1995 சம்பவ தினத்தன்று பஸீரா (24) என்ற மேற்படி பெண்ணும் அப்பெண்ணின் பெறா மகனான றிஸ்;வி (9)யும், அப்பெண்ணின் இரண்டு வயது பெண் குழந்தையும் மாலை நேரத்தில் வீட்டிற்குள் வந்து மின்சாரம் இல்லாததால் நேரத்துடன் உறங்கச் சென்றுள்ளனர். அவ்வேளையில் பஸீரா என்ற பெண் மூன்று பொலீஸாரினாலும் மிருகத்தனமாகக் கற்பழிக்கப்பட்டாள். உண்மை வெளியே தெரியக் கூடாது என்பதற்காக பஸீராவையும், றிஸ்வியையும் கோரமான முறையில் கொலை செய்திருந்தனர். இருப்பினும் இரு வயதுக் குழந்தையின் செய்கைகள், சமிக்ஞைகள் மூலம் பொலிஸாரின் குட்டு அம்பலமானது.
பொலிஸ்துறை அதிகாரியிடம் இது பற்றி ஊர் மக்கள் முறைப்பாட்டை முன்வைத்த போது அவர் அதை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. “புலிகள் செய்திருப்பார்கள்” என்று சமாதானம் வேறு கூறினார். அத்தோடு அப்துர் ரஹ்மான் எனும் நிரபராதி ஒருவர் மீது பழியைப் போடும் சதியும் பொலிஸ் தரப்பால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அநியாயத்திற்கு எதிராக ஏறாவூரைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட இளைஞர்களால் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. நியாயமான இந்த ஆர்ப்பாட்டததை வெறித்தனமாக அடக்க முயன்ற படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் அப்துல் காதர் (34) என்ற இளைஞர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போனார். மேலும், 9 பேர் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கற்பழிப்பு, கொலை, பொய்க் குற்றச்சாட்டு, மீண்டும் கொலை எனப் படிப்படியாக பல தவறுகள் அரங்கேற்றப் பட்டும் கூட நீதித்துறை செத்துவிட்டதோ என ஐயப்படும் அளவுக்கு இது பற்றிய பேச்சையே காணோம். ஏறாவூர் பொலிஸ் அதிகாரி மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரியாக இடம் மாற்றப்பட்டுள்ளாராம். நியாயமான தண்டனை தான் பாருங்கோ!
இதன் பின் கூட ஏறாவூர் இளைஞர்கள் அநியாயமாக பொலிஸாரால் தாக்கப்பட்டும் கூட தமிழ் அரசியல்வாதிகளால் இது பற்றி எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. குறைந்தபட்சம் இந்தக் கொடுமைகயைக் கண்டிக்கவும் இல்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளும் இது விடயத்தில் கூடிய கரிசனை காட்டவில்லை.
களுத்துறை படுகொலைகள்:
களுத்துறையில் (1995 ஜூலை 17 இல்) பொலிஸ்காரர்களால் நியாயமற்ற முறையில் நான்கு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். களுத்துறை கலீல் பிரதேச இறுதியில் உள்ள மைதானத்தில் விளையாடுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சிரிய வாய்த்தர்க்கம் எழுந்துள்ளது.
அன்று மாலையில் முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்படவே வீட்டில் இருந்தோர் வேலிக் கம்புகள், கற்கள் என்பவற்றைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு வந்துள்ளனர். முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்தனர் என்பது பொய் என்பதை எஸ்.எஸ்.பி. திரு சந்திரா பெரேரா என்பவரின் வாக்கு மூலம் உறுதி செய்கிறது.
வீதியில் கூடி நின்ற முஸ்லிம்களுடன் எவ்வித ஆயுதமும் இல்லாமல் சாதாரணமாக எஸ்.எஸ்.பி. திரு சந்திரா பெரேரா அவர்கள் சுடாதீர்கள் எனத் தடுத்தும் நான்கு உயிர்கள் பலியாக்கப்பட்டன. அவர் தடுக்காவிட்டால் பொலிஸ் வெறிக்கு இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கலாம்.
மரணித்தவர்களிலும், காயப்பட்டவர் களிலும் பலர் பிரச்சினையுடன் சம்பந்தமற்ற வர்கள். 11ஆம் வருட மாணவன் முஹமட் பாரிஸ் என்பவனும், அவ்வழியாகத் தொழில் புரிந்து விட்டு வீடு வந்த எம்.சீ. பிர்தௌஸ் (21) என்பவரும் கூட கொல்லப்பட்டனர். சம்பவம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன் பத்திரிகை நிரூபர் அத்தாஸ் ரூமி என்பவரும் சூட்டுக் காயத்திற்கு உள்ளானார்கள்.
சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய பொலிஸார் சமாதானத்தை ஏற்படுத்துவதை விட்டு விட்டு இன வெறியுடன் செயற்பட்டுள்ளனர். எவ்விதக் குழப்பமுமின்றி முஸ்லிம்கள் பொலிஸ் அதிகாரியுடன் நிலவரம் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போதே சுடப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையால் சிங்கள சகோதரர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரின் முட்டாள்தனமான வெறியுணர்வு மக்களிடம் பரவிவிட்டதால் இரு பக்கப் பெரியவர்களும் ஒன்றிணைந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு நிலைமையை சீர் செய்தமை வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாகும்.
எது எப்படியாயினும் இந்த உயிர்களை மீட்கவோ, பொலிஸ் படையின் இன வெறியாட்டத்தையும், அநியாயத்தையும் மறக்கவோ முடியாதல்லவா?
இவ்வாறு தொடர்ச்சியாக இடம் பெற்ற அசம்பாவிதங்கள் முஸ்லிம்களின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார நிலவரங்களை நெருக்கடியாக்கியுள்ளது. முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வு ஆயுதப் படையினரிடம் பரவியிருக்கலாமோ என்ற அச்சமும் இனங்களுக்கிடையே பிரிவினை உண்டு பண்ணும் சூழ்ச்சி நடக்கின்றதோ என்ற ஐயமும் விரவிக் காணப்படுகின்றது.
எனவே,
விழித்திருங்கள்! பொறுத்திருங்கள்!
இன ஒற்றுமையைப் பேணுங்கள்!
வேற்றுமையை வளர்க்கும் சக்தி எதுவென்றாலும் அதற்குத் துணை போகாதீர்கள்!
என்று வேண்டுவதுடன், ஒரு முஸ்லிமின் ஆத்திரம் அது நியாயமாக இருந்தாலும் முழு சமூகத்தையுமே பாதிக்கும் சாத்தியமுள்ளது என்று எச்சரிக்கையும் செய்கின்றோம்.
(இக்கட்டுரை எழுதப்பட்டு பல தினங்கள் கடந்துவிட்டன. அதனால் அண்மைக் காலத்தில் நடந்த அத்துமீறல்கள், கெடுபிடிகள் பற்றி இங்கே நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.
(ஆ-ர்)
(உண்மை உதயம்: ஒக்டோபர்-டிசம்பர் 1995,
உண்மை: 8, இதழ்: 29)
இந்தக் கட்டுரையை சில நோக்கங்களுக்காவே நாம் மீள் பிரசுரம் செய்தோம்
1. 1995 இல் இனவாத வெறியாட்டத்துக்கு இரையான உயிர்கள், கற்பிழப்புக்கள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறைகள் சிலவற்றை இக் கட்டுரை தொட்டுக்காட்டுகின்றது. இது பற்றி எழுதிய எனக்கே இவை மறந்துவிட்டன. பழைய இதழ்களைப் பார்க்கும் போது கண்களில் பட்டதை உங்கள் பார்வைக்கு முன்வைத்துள்ளேன். நமது வரலாற்றைத்தான் நாம் முறையாகப் பதிவு செய்யவில்லை. எமக்கு ஏற்பட்ட அவலங்கையாவது நாம் முறையாக ஆவணப்படுத்தக் கூடாதா? பொதுபலசேனாவினால் தொடர்ந்து நடாத்தப்படும் வரம்பு மீறல்கள் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட வேண்டும். நடந்த பல நிகழ்ச்சிகளை இப்போதே நாம் மறக்க ஆரம்பித்து விட்டோம். எனவே, திகதிவாரியாக இவர்களது வரம்பு மீறல்கள் வரலாற்றுப் பதிவாக வேண்டும்.
2. 1995 நிலவரத்தோடு ஒப்பிடும் போது தற்போது இருக்கும் நிலை பரவாயில்லை என்று கூறலாம். அப்போது அரச படைகளே இனவாதத்தைக் கக்கின. இப்போது சிங்கள மதகுருக்கள் அதைச் செய்கின்றார்கள். ஆனால், முறைப்பாடுகள் செய்யப்பட்ட இடங்களில் காவல் துறையினர் உடனடி நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
மக்களது மனதுக்கு அமைதியையும் ஆறுதலையும் அளிப்பதற்காகவே இதைக் கூறுகின்றோம்.
3. அன்று எம்மை நோக்கிக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வெறியில் இருந்து எம்மை அல்லாஹ் பாதுகாத்தான். இன்றைய நிலையில் இருந்தும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பான் என நம்பிக்கை வைப்போமாக!