நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையே ஹஜ் செய்துள்ளார்கள்.
“உங்களது ஹஜ்ஜை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறிய நபியவர்கள், ஹஜ்ஜின் முன்மாதிரியாகத் தன்னையே எடுத்துக்கொள்ள வேண்டுமெனப் பணித்துள்ளார்கள். இந்த வகையில் நபியவர்களின் ஹஜ்ஜைக் கண்ணால் கண்ட ஸஹாபாக்கள் வர்ணிக்கும் ஹதீஸைக் கீழே தருகின்றோம்.
முஹம்மத் பின் அலீ பின் அல் ஹுசைன் பின் அலீ பின் அபிதூலிப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது;
“ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரழி) அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஒன்பது” எனத் தனது விரலால் சைகை செய்து காட்டி விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்!”
“நபிகளாரின் ஹஜ் அறிவிப்பு:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச் சென்ற பின்) “ஒன்பது” ஆண்டுகள் ஹஜ் நிறைவேற்றாமலேயே தங்கியிருந்தார்கள். பத்தாவது ஆண்டில் மக்களிடையே “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (இந்த ஆண்டில்) ஹஜ் செய்யப் போகின்றார்கள்!” என அறிவிப்புச் செய்தார்கள்.
மக்கள் அணிதிரளல்:
உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே தாமும் (ஹஜ்) கிரியைகளைச் செய்யும் நோக்கத்துடன் ஏராளமான மக்கள் மதீனாவிற்கு(த் திரண்டு) வந்தனர்.
பிரசவ தீட்டும், இஹ்றாமும்
பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். துல்ஹுலைஃபா” எனும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது, (அபூபக்கர்(ரழி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களுக்கு முஹம்மத் பின் அபூபக்கர்(ரழி) பிறந்தார்கள். உடனே அஸ்மா(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்கர்(ரழி) அவர்களை) அனுப்பி “நான் எப்படி (இஹ்ராம்) கட்ட வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “நீ குளித்து விட்டு (பிரசவப் போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு இஹ்ராம் கட்டிக்கொள்!” என்று கூறி அனுப்பினார்கள்.
நபிவழி நடந்தோம்:
பின்னர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைபா) பள்ளிவாசலில் தொழுது விட்டு “கஸ்வா” எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைபாஃவிற்கு அருகிலுள்ள) “அல்பைதாஉ” எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரான போது நான் பார்த்தேன். எனது பார்வையெட்டும் தூரத்திற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னாலும், வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும், பின்னாலும் (ஏராளமான) மக்கள் வாகனங்களிலும், கால்நடையாகவும் வந்து குழுமியிருப்பதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு நடுவில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு குர்ஆன் வசனங்கள் இறங்கப் பெற்றன. அவற்றின் விளக்கத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாங்களும் அப்படியே செய்தோம்.
தல்பியாவை உரத்துக் கூறல்
அவர்கள்;
(இதோ, உன் அழைப்பேற்று வந்து விட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்து விட்டேன். உனக்கே நான் கீழ்படிகிறேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை) என்று ஏகத்துவ உறுதிமொழியுடன் தல்பியாச் சொன்னார்கள். மக்கள், தாம் கூறி வருகின்ற முறையில் (சற்றுக் கூடுதல்-குறைவு வாசகங்களுடன்) தல்பியாக் கூறினர். ஆனால், அதில் எதையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொடர்ந்து தமது தல்பியாவை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
தவாபின் போது உடலைக் குலுக்கியவாறு 3 சுற்றுகள்:
அப்போது ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் எண்ணியிருக்கவில்லை. (ஹஜ் காலத்தில் செய்யும்) அந்த உம்றாவை நாங்கள் அறிந்திருக்கவும் இல்லை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கஃபாவுக்கு வந்(து தவாஃப் செய்த) போது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கஃபாவில் “ஹஜறுல் அஸ்வத்” உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். (தம் தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாக 3 முறைகளும், (சாதாரணமாக) நடந்தவாறு 4 முறைகளும் சுற்றி வந்தார்கள்.
மகாமில் தொழுகை:
பிறகு மகாமு இப்றாஹீமை முன்னோக்கிச் சென்று “இப்றாஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்!” (2:125) எனும் வசனத்தை ஒதிக் காட்டினார்கள். அப்போது மகாமு இப்றாஹீம் தமக்கும், கஃபாவிற்குமிடையே இருக்குமாறு நின்று 2 றக்அத்கள் தொழுதார்கள். “குல் யா அய்யுஹல் காபிரூன்”, “குல் ஹுவல்லாஹு அஹத்” ஆகிய இரு அத்தியாயங்களையும் அவ்விரு றக்அத்களிலும் ஓதினார்கள்.
தவாபின் பின் ஸஈ:
பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “ஹஜருல் அஸ்வத்” அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக “ஸஃபா” மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் “ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்” எனும் (2:158) வசனத்தை ஓதிக் காட்டி விட்டு, “அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட்ட இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்!” என்று சொன்னார்கள். அவ்வாறே முதலில் “ஸஃபா” மலைக் குன்றை நோக்கிச் சென்று அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு கஃபா தென்பட்டது. உடனே “லாஇலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை). அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன் என உறுதிமொழியும் தப்பீரும் சொன்னார்கள்.
மேலும்;
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையாக எவரும் இல்லை, அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன், அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்து விட்டான். தன்னந்தனியாக கூட்டணிக் குலங்கள் அனைத்தையும் தோற்கடித்து விட்டான்)” என்றும் கூறினார்கள்.
பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்து விட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள்.
ஸஈயில் குறிப்பிட்ட இடத்தில் ஓட்டம்:
பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்த போது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஒடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியதை தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.
தமத்துஃ செய்வதே சிறந்தது
மர்வாவில் அவர்கள் தமது இறுதிச் சுற்றை முடித்ததும், “நான் (ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்றாச் செய்யலாம் எனப்) பின்னர் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், நான் பலிப் பிராணிகளை என்னுடன் கொண்டு வந்திருக்க மாட்டேன். இதை உம்றாவாக மாற்றியிருப்பேன். எனவே, பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தமது இஹ்ராமை உம்றாவாக மாற்றிக்கொள்ளட்டும்!” என்று சொன்னார்கள்.
அப்போது சுரக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும்(ரழி) அவர்கள் எழுந்து (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! இ(ச்சலுகையான)து, இந்த ஆண்டிற்கு மட்டுமா? அல்லது என்றைக்குமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களில் ஒன்றை மற்றொன்றுடன் கோர்த்துக்கொண்டு, “ஹஜ்ஜுக்குள் உம்றா நுழைந்து கொண்டது!” என்று இரண்டு முறை கூறினார்கள். பிறகு (சுராக்கா(ரழி) அவர்களுக்கு), “இல்லை! என்றைக்கும்தான் (இச்சலுகை!) என்றைக்கும்தான் (இச்சலுகை!)” என்று விடையளித்தார்கள்.
இஹ்றாமிலிருந்து விடுபடல்:
(அந்த ஹஜ்ஜின் போது) அலி(ரழி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்காகக் குர்பானி ஒட்டகங்களுடன் வந்தார்கள். அப்போது (அலியின் துணைவியார்) ஃபாதிமா() அவர்கள், சாயமிடப்பட்ட ஆடையணிந்து, கண்களுக்கு அஞ்சனம் தீட்டி இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களில் ஒருவராகக் காட்சியளித்தார்கள். அதை அலி(ரழி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அப்போது ஃபாதிமா() அவர்கள், “என் தந்தை (நபி(ஸல்) அவர்கள்) தாம் இப்படிச் செய்யுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்!” என்றார்கள்.
அலி(ரழி) அவர்கள் இராக்கிலிருந்தபோது (இதைப் பின்வருமாறு) குறிப்பிட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஃபாதிமா செய்தது குறித்துப் புகார் செய்வதற்காகவும், ஃபாதிமா கூறிய படி “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தாம் அவ்வாறு செய்யச் சொன்னார்களா?” எனக் கேட்டு அறிவதற்காகவும் சென்றேன். ஃபாதிமா மீது ஆட்சேபம் செய்ததை, அவர்களிடம் தெரிவித்தேன்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (எனது குற்றச்சாட்டைக் கேட்டு விட்டு) “அவர் (ஃபாதிமா) சென்னது உண்மையே! அவர் சொன்னது உண்மையே!” என்றார்கள்.
பிறகு, “இஹ்ராம் கட்டி, ஹஜ் செய்ய முடிவு செய்த போது என்ன (தல்பியா) சொன்னீர்கள்?” என என்னிடம் கேட்டார்கள். அதற்கு அலி(ரழி) அவர்கள், “இறைவா! உன் தூதர் எதற்காக “இஹ்ராம்” கட்டினார்களோ அதற்காகவே நானும் “இஹ்ராம்” கட்டினேன் என்று (தல்பியாச்) சொன்னேன்!” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “என்னுடன் பலிப் பிராணிகள் உள்ளன. எனவே, (“என்னைப் போன்றே” எனக் கூறி நீரும் இஹ்ராம் கட்டியுள்ளதால்) நீர் இஹ்ராமிலிருந்து விடபட வேண்டாம்!” என்றார்கள்.
தலைமுடி களைதல்:
முஹம்மத் பின் அலி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;
அலி(ரழி) அவர்கள் யமனிலிருந்து கொண்டு வந்த பலிப் பிராணிகளையும் நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) கொண்டு வந்த பலிப் பிராணிகளையும் சேர்த்து மொத்தம் நூறு பலிப் பிராணிகள் சேர்ந்தன.
பிறகு மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தலைமுடியைக் குறைத்துக்கொண்டனர். நபி(ஸல்) அவர்களையும், தம்முடன் பலிப் பிராணிகளைக் கொண்டு வந்திருந்த மக்களையும் தவிர.
மினாவுக்குச் செல்லல்
துல்ஹஜ் எட்டாவது நாள் வந்த போது, மக்கள் மினாவை நோக்கிச் சென்றனர். அப்போது ஹஜஜுக்காக (இஹ்ராம் கட்டித்) “தல்பியா” கூறினர்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) ளுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். பஜ்ர் தொழுது விட்டு சூரியன் உதயமாகும் வரை சிறிது அங்கே தங்கினார்கள்.
9 ஆம் நாள் அறஃபா செல்லல்:
பிரகு (அரஃபா அருகிலுள்ள) “நமிரா” எனுமிடத்தில் தமக்காக முடியினாலான கூடாரம் ஒன்று அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் (முஸ்தலிபாவிலுள்ள) “மஷ்அருல் ஹராம்” எனும் மேட்டுக்கு அருகில் தங்குவார்கள் எனக் குறைஷியர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்தனர். அறியாமைக் காலத்தில் குறைஷியர் அங்கு தங்குவது வழக்கம். ஆனால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதைக் கடந்து அரஃபாவிற்குச் சென்று விட்டார்கள். அங்கு “நமிரா”வில் தமக்காக அமைக்கப் பெற்றிருந்த கூடாரத்தைக் கண்டு அங்கு இறங்கித் தங்கினார்கள்.
அறஃபா உரை:
சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா” எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப் பெற்றதும் (“உரனா”) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
உங்களது புனிதமிக்க இந்நகரத்தில், உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்தளவுக்கு புனிதமானதோ, அந்தளவிற்கு உங்கள் உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்கு கீழே புதைக்கப்பட்டு விட்டன. அறியாமைக் காலத்தில் நிகழ்ந்து விட்ட உயிர்க் கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) முதற்கட்டமாக, நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பலிவாங்கலை நான் தள்ளுபடி செய்கின்றேன். அவன் பனு சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்து வந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்று விட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்கு கீழே புதைக்கப்படுகின்றது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கின்றேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றது. பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்)பிடித்துள்ளீர்கள்! அல்லாஹ்வின் கட்டளையில் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள்! அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால் நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்கள் வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் எற்படாத வகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில், முறையான உணவும், உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.
உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்ற விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொள்ளுங்கள்! நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்!” என்று கூறி விட்டு, “(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் (இறைச் செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்! (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்! (சமுதாயத்தார் மீது) அக்கறையுடன் நடந்து கொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்!” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்திச் சைகை செய்து விட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, “இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்ற மூனறு முறை கூறினார்கள்.
பிறகு தொழுகை அறிவிப்பும், இகாமத்தும் சொல்லச் செய்து, ளுஹர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து அஸர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறதுவும் அவர்கள் தொழவில்லை.
அறஃபாவில் தனித் தனியாக துஆ:
பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்” மலை அடிவாரத்தில்) பாறைகள் மீது தமது “கஸ்வா” எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக வந்த மக்கள் திரளை தம் முன் நிறுத்தி, கிப்லாவை முன்னோக்கிச் சூரியன் மறையத் தொடங்கும் வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
முஸ்தலிஃபாவில் மஃரிப்-இஷா (ஜம்உ):
சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து அதன் தலைப் பகுதி மறைந்து விட்ட பிறகு உஸாமா(ரழி) அவர்களைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். “கஸ்வா” எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும் போது) கால்வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து “மக்களே! நிதானம்! நிதானம்! (மெதுவாகச் செல்லுங்கள்!)” என்றார்கள். ஒவ்வொரு மணல் மேட்டையும் அடையும் போது, ஒட்டகம் மேட்டில் ஏறும் வரை கடிவாளத்தை சற்று தளர்த்தினார்கள். இவ்வாறு முஸ்தலிபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு தொழுகை அறிவிப்பும், இகாமத்தும் சொல்லி மஃரிபையும், இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.
முஸ்லிஃபாவில் தங்குதல்
பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருக்களித்துப் படுத்து விட்டு, ஃபஜ்ர் உதயமானதும் அதானும், இகாமத்தும் சொல்லி ஃபஜ்ர் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. பிறகு “கஸ்வா” ஒட்டகத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு (“குஸஹ்” மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ் மிகப் பெரியவன்!” என்று (தக்பீரு)ம், “லா இலாஹ இல்லல்லாஹ்!” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று(தஹ்லீலு)ம், “அவன் தனித்தவன்!” என்று (உறுதிமொழி)ம் கூறினார்கள். நன்கு விடியும் வரை அங்கேயே தங்கினார்கள்.
மினாவுக்குச் செல்லல்
பிறகு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து புறப்பட்டார்கள். அப்போது ஃபள்ல் பின் அப்பாஸ்(ரழி) அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு சென்றார்கள். ஃபள்ல் பின் அப்பாஸ்(ரழி) அவர்கள் அழகிய முடியும், தோற்றமும், வெள்ளை நிறமும் உடைய வசீகரமான ஆண்மகனாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்ட போது, அவர்களைக் கடந்து சில பெண்கள் சென்றனர். ஃபள்ல் பின் அப்பாஸ்(ரழி) அவர்கள் அப்பெண்களை கூர்ந்து பார்க்கலானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஃபள்ல்(ரழி) அவர்களின் முகத்தின் மீது கையை வைத்(து மறை)தார்கள். உடனே ஃபள்ல்(ரழி) அவர்கள் வேறு பக்கம் திருப்பி (அப்பெண்களை)ப் பார்க்கலானார்கள். மீண்டும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது கையை மறுபக்கமும் கொண்டு சென்று ஃபள்ல்(ரழி) அவர்களின் முகத்தின் மீது வைத்து அப்பெண்களைப் பார்க்க விடாமல் திருப்பினார்கள்.
ஜம்றதில் கல்லெறிதல்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்தலிபாவிற்கும், மினாவிற்கும் இடையிலுள்ள) “பத்னு முஹஸ்ஸிர்” எனும் இடத்துக்கு வந்த போது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாக செலுத்தினார்கள். பின்னர், “ஜம்ரதுல் அகபா” செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்து, அந்த மரத்திற்கு அருகிலுள்ள “ஜம்ரதுல் அகபா”விற்குச் சென்று சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறினார்கள். அந்தப் பள்ளத்தாக்கின் நடுவே நின்று கற்களை எறிந்தார்கள்.
பலியைத் தன் கையாலும், பிறர் மூலமும் நிறைவேற்றல்:
பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலி(ரழி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலி(ரழி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள்.
குர்பானியை அறுத்தவரும் உண்ணலாம்:
பின்னர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் ஓர் இறைச்சித் துண்டு கொண்டு வரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அலி(ரழி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள்.
தவாபுல் இஃபாழாச் செய்தல்:
பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறி, (“தவாஃபுல் இஃபாளா” செய்வதற்காகக்) கஃபாவை நோக்கிச் சென்றார்கள். மக்காவிலே ளுஹர் தொழுது விட்டு, அப்துல் முத்தலிபின் புதல்வர்களிடம் வந்தார்கள். அவர்கள் “ஸம்ஸம்” கிணற்றிலிருந்து நீரிறைத்து விநியோகித்துக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “அப்துல் முத்தலிபின் மக்களே! நீரிறைத்து விநியோகியுங்கள்! “ஸம்ஸம்” கிணற்றில் நீரிறை(த்து விநியோகிக்கும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்து விடுவார்கள் என்று (அச்சம்) இல்லாவிட்டால் உங்களுடன் நானும் நீரிறைப்பேன்!” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள்.”
(முஸ்லிம் 23334)
குறிப்பு:-ஹஜ்ஜாஜிகளே!ஹஜ்ஜுடன் தொடர்புடைய விடயங்கள் இவை தாம். மேலதிகமாக அலட்டிக்கொண்டு கடமையைக் கஷ்டமாக்கிக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்!