அல்குர்ஆன் விளக்கவுரை:
“அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும் (இவரது) சந்ததிகளுக்கும் இறக்கப்பட்டவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் (மற்றும் ஏனைய) நபிமார்களுக்கும் அவர்களது இரட்சகனிடமிருந்து வழங்கப்பட்டவற்றையும் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் எவருக்கிடையிலும் நாம் வேற்றுமை பாராட்ட மாட்டோம், நாங்கள் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்று நீங்களும் கூறுங்கள்.” (2:136)
இதே கருத்து பின்வரும் வசனங்களிலும் கூறப்படுகின்றன.
“இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர். “அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட்டோம். நாம் செவியேற்றோம்ளூ கட்டுப்பட்டோம்ளூ எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது” என்றும் கூறுகின்றனர்.”
(2:285)
“(நபியே!) நாங்கள் அல்லாஹ்வையும், எங்கள் மீது இறக்கப்பட்டதையும், இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோர் மீதும் (இவருடைய) சந்ததிகள் மீதும் இறக்கப்பட்டவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் மற்றும் ஏனைய நபிமார்களுக்கும் அவர்களது இரட்சகனிடமிருந்து வழங்கப் பட்டவற்றையும் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் எவருக்கிடையிலும் நாம் வேற்றுமை காட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்றும் கூறுவீராக!”
(3:84)
முஸ்லிம்கள் நபி(ச) அவர்களைப் பின்பற்றுகின்ற காரணத்தினால் அவருக்கு முன்னர் அனுப்பப்பட்ட ஈஸா (இயேசு), மூஸா (மோஸஸ்) போன்ற எந்தவொரு இறைத் தூதர்களையும் நிராகரிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது. எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று போல் ஏற்று அவர்களுக்குரிய மரியாதையினை வழங்குவதோடு அவர்கள் மீது சுமத்தப்படும் களங்கங்களைக் களைவதும் முஸ்லிம்களின் கடமையாகும்.
அர்கானுல் ஈமான் எனும் ஈமானின் ஆறு அடிப்படைகளில் ரஸூல்மார்கள் பற்றிய நம்பிக்கையும் உள்ளடங்குகின்றது. இந்நம்பிக்கை எவ்வாறு அமைய வேண்டும்; இஸ்லாம் விரும்புகின்ற நடுநிலைத் தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்டதாக இந்நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பது பற்றிய தெளிவினை நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள சூறதுல் பகராவின் 2:136, 2:285 ஆகிய வசனங்கள் எமக்குத் தருகின்றன.
முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள், மூஸா நபி பிர்அவ்னின் பிடியில் இருந்து தப்பிய நாள். அவனும் அவனது அகங்காரமும் சரிந்த நாள் என்பதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமுகமாக இன்று வரை அந்நாளில் முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றனர். மூஸா நபியினை யூதர்களின் தீர்க்கதரிசி என்று முஸ்லிம்கள் பார்ப்பதில்லை. நபி(ச) அவர்கள் கூட நபிமார்களின் தாய்மார் வேறுபட்டிருந் தாலும் அவர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று கூறிளமைளால், இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்துத் தீர்க்கதரிசிகளையும் (இறைத்தூதர்களையும்) ஏற்றுக் கொள்வதுதான் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாட்டில் உள்ள “அல் ஈமானு பிர்ருஸுல்” பற்றிய சரியான நிலைப்பாடாக அமையும்.
“இத்தூதர்களில் சிலரை விட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, “ரூஹுல் குத்ஸ்” (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம்.” (2:253)
இந்த வசனத்தில் இறைத்தூதர்களில் சிலரை சில விடயங்களில் அல்லாஹ் சிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மூஸா நபியுடன் அல்லாஹ் நேரடியாகப் பேசியுள்ளான்; ஈஸா நபி தந்தை இல்லாமல் பிறந்துள்ளார்; இது அவர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சிறப்பம்சமாகும்.
சுலைமான் நபிக்கு யாருக்கும் வழங்காத ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. நபி(ச) அவர்கள் ஏனைய நபிமார்கள் போன்றல்லாது அகிலத்தார் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள். இவ்வாறு சில நபிமார்கள் சில விடயங்களில் அடுத்தவர்களை விடச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்புக்கள் விடயத்தில் அனைவரும் சமமானவர்கள் அல்லர்.
இருப்பினும், ஒரு நபியை விட இன்னொரு நபி என்று இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் அன்று தொட்டே பகை நீடித்து வருகின்றது. இருப்பினும் யூதர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸா நபியை விட, எமக்கு அனுப்பப்பட்ட முஹம்மது நபி சிறந்தவர் என்று கூறுவதை இஸ்லாம் தடுக்கின்றது.
இந்நிலைப்பாடு இஸ்லாம் கொண்டிருக்கின்ற மத சகிப்புத் தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. உலகில் உள்ள எந்தக் கொள்கையிலோ, மதத்திலோ இவ்வாறான தோர் நடுநிலைப்போக்கை (யேவரசயட றயல)க் காண முடியாது என்றால் பிழையாகாது.
அபூ ஹுரைரா(வ) அறிவிக்கிறார்கள். “ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ச) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டுக் (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி(ச) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர) வையெல்லாம் தெரிவித்தார். நபி(ச) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ச) அவர்கள், மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(ர), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து எழுந்திருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். (புஹாரி: 2411)
இஸ்லாத்தின் இந்த நடுநிலையான, நிதானமான போக்கு இஸ்லாத்தின் தாராளத் தன்மையையும் உண்மையை நேசிக்கும் போக்கையும் எடுத்துக்காட்டுகின்றது. எல்லாத் தூதர்களும் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள்; அவர்கள் அனைவரும் போதித்தது ஒரே அடிப்படையைத்தான் எனும் போது அதில் ஒருவரை நிராகரித்தாலும் நபிமார்கள் அனைவரையும் நிராகரிப்பதற்குச் சமமானதாகும். யூத, கிறிஸ்தவ சகோதரர்கள் தமது இறைத்தூதர்களைப் போற்றும் அதே வேளை, அடுத்த இறைத்தூதர்களைத் தூற்றுகின்றனர். இது கொள்கை அடிப்படையில் முரண்பாடானதும் குறுகிய பார்வை கொண்டதுமாகும்.
நபித்தோழர்களை ஈமான் கொள்வோம்:
“(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் எவற்றைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ, அதே போன்று அவர்களும் நம்பிக்கை கொண்டால், நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவர். அவர்கள் புறக்கணித்தால், அவர்கள் முரண்பாட்டிலேயே இருப்பர். எனவே, அவர்கள் விடயத்தில் உமக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.” (2:137)
முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டது போல் யூத, கிறிஸ்தவர்களும் நம்பிக்கை கொண்டால் அவர்கள் நேர்வழியைப் பெறுவார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. இந்த வசனத்தை நுணுக்கமாக நோக்கினால் அல்லாஹ், வானவர்கள், இறைத்தூதர்கள், இறை வேதங்கள், மறுமை, கழாகத்ர், சுவர்க்கம் மற்றும் நரகம் போன்ற நம்பிக்கையுடன் தொடர்புபட்ட அம்சங்களை எப்படி நம்புவது என்பதற்கு நபித்தோழர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
“நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால்….” என்று அல்லாஹ் கூறுகின்றான். இங்கே “நீங்கள்” என விழித்துக் கூறப்பட்டவர்கள் நபித்தோழர் களாகும். நபித்தோழர்கள் ஈமான் கொண்டது போல் யூத கிறிஸ்தவர்கள் ஈமான் கொண்டால் நேர்வழி பெறுவர் என்றால், நபித்தோழர்கள் ஈமான் கொண்டது போல் நாமும் ஈமான் கொண்டால் வெற்றி பெறுவோம் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமானது அல்ல.
“இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர். “அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட்டோம். நாம் செவியேற்றோம்ளூ கட்டுப்பட்டோம். எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது” என்றும் கூறுகின்றனர்.”
(2:285)
இந்த வசனத்திலும் நபி(ச) அவர்களது ஈமானையும் அன்றிருந்த முஃமின்களான நபித்தோழர்களது ஈமானையும் அங்கீகரித்து அல்லாஹ் பேசுகின்றான். எனவே, இஸ்லாமிய கொள்கை சார்ந்த விடயங்களில் நபித்தோழர்களின் போக்கை விளங்கி ஏற்றுக் கொள்வதென்பது மிகமிக அவசியமானதும் ஆரோக்கியமானதுமான வழிமுறையாகும்.