இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா?
இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.
இது போன்ற சந்தர்ப்பங்களில் தனியாகத் தொழாமல் அல்லது வேறு ஜமாஅத் நடாத்தாமல் தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதே சிறந்ததாகும். இமாமினதும், மஃமூமினதும் நிய்யத்து ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுருக்கித் தொழும் இமாமைப் பின்பற்றி பூரணமாகத் தொழுபவர்கள் தொழுகின்றனர். இங்கு இமாமின் நிய்யத்தும் மஃமூமின் நிய்யத்தும் முரண்படுகின்றனவே! இதில் பிரச்சினை இல்லை.
முஆத்(வ) அவர்கள் நபி(ச) அவர்களுக்குப் பின்னால் நின்று இஷாவைத் தொழுதுவிட்டு பின்னர் தனது பகுதிக்குச் சென்று அதே தொழுகையை மக்களுக்குத் தொழுவிப்பார்கள். (புஹாரி, முஸ்லிம்) இதை நபி(ச) அவர்கள் தடுக்கவில்லை.
முஆத்(வ) அவர்கள் முதலில் தொழுத இஷா கடமையாகவும் பின்னர் தொழுதது ஸுன்னத்தாகவும் கொள்ளப்படும். அவரைப் பின்பற்றி அவரது பகுதி மக்கள் தொழுதுள்ளனர். அதை நபி(ச) அவர்கள் தடுக்கவில்லை. எனவே, தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றி இஷாவைத் தொழுவது ஆகுமானதாகும்.