ஜும்ஆவின் முன் சுன்னத்து
முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது.
சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) இருவர் காலத்திலும் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த அதான் இமாம் வந்து மிம்பரில் அமர்ந்த பின்னர் கூறப்பட்டது என்பது குறித்து நாம் பார்த்தோம். இமாம் மிம்பரில் அமர்ந்த பின் அதான் கூறப்படும். அதான் முடிந்ததும் இமாம் குத்பா ஓத ஆரம்பித்துவிடுவார்.
எனவே, ஜும்ஆவுக்கு முன் சுன்னத்து கிடையாது. பின்னால் சுன்னத்து உள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் இல்லாத முன் சுன்னத்தைத் தொழுமாறு கூறப்படுகின்றது. பள்ளியில் இருக்கும் அனைவரும் எழுந்து தொழுகின்றனர். இருக்கின்ற பின் சுன்னத்தைத் தொழுவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
ஜும்ஆவுக்கு முன்னரோ, இமாம் குத்பா ஓத ஆரம்பித்த பின்னரோ எப்போது பள்ளிக்கு வந்தாலும் தஹிய்யதுல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். ஜும்ஆவுக்கு முன் சுன்னத் இல்லை. சிலர் ஒரு அதான் கூறும் பள்ளியில் தொழ நேரிட்டாலும் பள்ளியில் வந்து அமர்ந்திருக்கின்றனர். இமாம் குத்பா ஓத ஆரம்பித்ததும் எழுந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றனர். இல்லாத சுன்னத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பது புரியவில்லை. இமாம் குத்பா ஓத ஆரம்பித்தால் மலக்குகளும் குத்பாவை செவிமடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். என ஹதீஸ்கள் கூறும் போது இல்லாத சுன்னத்தைத் தொழுவதற்காக குத்பா நேரத்திலும் எழுந்து தொழுவது வியப்பாக இல்லையா? இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது,
‘ஜும்ஆ தினத்தில் அதான் கூறப்பட்ட பின்னர் நபி(ச) அவர்கள் எதையும் தொழுததில்லை. அவரைத் தொட்டும் இது குறித்து எவரும் எதையும் அறிவித்ததும் இல்லை. நபி(ச) அவர்கள் காலத்தில் அவர்கள் மிம்பரில் அமர்ந்த பின்னர்தான் அதான் கூறப்பட்டது. பிலால்(வ) அதான் கூறுவார். நபி(ச) அவர்கள் இரண்டு குத்பாக்களை ஓதுவார்கள். பின்னர் பிலால்(வ) இகாமத் கூறுவார் நபி(ச) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடாத்துவார்கள். எனவே, நபி(ச) அவர்களோ அவர்களுடன் தொழுத ஸஹாபாக்களோ (ஜும்ஆவின்) அதானுக்குப் பின் தொழுததற்கான வாய்ப்பே இல்லை” என்று கூறுகின்றார்.
சில வேளை, அதான் கூறிய பின்னர் எல்லோரும் எழுந்து தொழுதிருக்கலாம்தானே என்று கூட சிலருக்கு எண்ணத் தோன்றலாம். இது குறித்து இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறும் போது,
‘பிலால் அதான் கூறி முடித்துவிட்டால் நபி(ச) அவர்கள் குத்பா ஓத ஆரம்பித்துவிடுவார்கள். யாரும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுததில்லை. (நபி காலத்தில்) ஒரு அதான் மட்டுமே இருந்தது. ஜும்ஆத் தொழுகை என்பது பெருநாள் தொழுகை போன்றது, அதற்கு முன் சுன்னத்து இல்லை என்பதை இது உணர்த்துகின்றது. இதுதான் அறிஞர்களின் கூற்றுக்களில் மிகச் சரியானதாகும். சுன்னாவும் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. நபி(ச) அவர்கள் வீட்டில் இருந்து வருவார்கள். அவர் மிம்பரில் ஏறிவிட்டால் பிலால் ஜும்ஆவின் அதானைக் கூறுவார். அவர் அதனை முடித்ததும் எந்தவித இடைவெளியும் இல்லாமல் நபி(ச) அவர்கள் குத்பா ஓத ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறுதான் நடந்து வந்தது. இவ்வாறு இருக்கும் போது எப்போது சுன்னத்து தொழுதார்கள்?
பிலால்(வ) அவர்கள் அதான் கூறி பின்னர் எல்லோரும் எழுந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுததாக யார் நினைக்கின்றாரோ அவர் மனிதர்களிலேயே சுன்னாவை அறியாதவராவார்.
ஜும்ஆவுக்கு முன் சுன்னத்து இல்லை என்று நாம் கூறிய கருத்தைத்தான் மாலிக் மற்றும் ஹன்பலி மத்ஹபுகள் கொண்டுள்ளன. ஷாபி மத்ஹபுடையோரில் சிலரின் நிலைப்பாடாகவும் இது உள்ளது. (மேலதிக விளக்கத்திற்கு ‘ஸாதுல் மஆத் 1:417 ஐப் பார்க்கவும்)
ஜும்ஆவுக்கு முன் சுன்னத்து இல்லை. ஆனால், இமாம் மிம்பருக்கு ஏற முன்னர், வந்தவர் எத்தனை ரக்அத்துக்கள் வேண்டுமாலும் நபிலாகத் தொழலாம். இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் வந்தவர் தஹிய்யதுல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு குத்பாவை செவிமடுக்க வேண்டும். ஏற்கனவே தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுது பள்ளியில் அமர்ந்திருப்பவர் இமாம் மிம்பரில் ஏறி குத்பாவை ஆரம்பிக்கும் போது ஜும்ஆவின் சுன்னத்து என எழுந்து தொழுவது முட்டாள்தனமாகும். ஜும்ஆவுக்கு முன்னர் சுன்னத்துத் தொழுமாறு முஅத்தின் மக்களுக்கு ஏவும் வழக்கம் பித்அத்தானதாகும்.