மஃஷர்
முஅத்தின் சுன்னத்துத் தொழச் சொல்லி மக்கள் எல்லாம் எழுந்து தொழுத பின்னர் முஅத்தின் அஸாவைப் பிடித்துக் கொண்டு அரபியிலும் தமிழிலும் ஒரு குட்டி குத்பா செய்வார். அதுதான் மஃஷர் ஓதுதல் என்று மக்களால் கூறப்படுகின்றது. அந்தக் குட்டிக் குத்பாவில் ‘யா மஃஷரில் முஸ்லிமீன்’ என அவர் ஆரம்பிப்பார். அதில் மஃஷரில்” என்று வருவதால் மக்கள் மஃஷர் ஓதுதல் என்று இதற்குக் கூறுகின்றனர்.
அதில் அவர் குத்பாவை காது தாழ்த்திக் கேட்க வேண்டும் என்றும் உன் தோழனைப் பார்த்து பேசாதே என்றால் கூட உனது குத்பாவின் பலனை இழந்து விடுவாய் என்றும் கூறுவார். சில வேளை, இதில் ஹதீஸில் இல்லாத சில செய்திகளும் சேர்த்துக் கூறப்படுவதுண்டு. இவ்வாறு கூறி முடிந்த பின்னர் இமாம் வருவார். முஅத்தின் அஸாவை அவரிடம் மிகப் பக்குவமாகவும், பக்தியோடும் கொடுப்பார். இந்த வழக்கம் ஒரு இபாதத்தாகவே நடைபெறுகின்றது. இது நபி(ச) அவர்கள் காலத்தில் இல்லாத பித்அத்தான வழிமுறையாகும்.
சிலர் இதை நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் செயலாகப் பார்க்கின்றனர். நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் செயல் என்றால் அதற்கென்று வார்த்தை வடிவங்கள், நடைமுறைகள் வித்தியாசப்பட்டிருக்கும். இது ஒரு தனி இபாதத்தாகக் கருதியே செய்யப்படுகின்றது. அரபியில் சொல்லப் படுகின்றது, தமிழிலும் சொல்லப்படுகின்றது. இது விடுபட்டால் மக்கள் ஒரு கடமையை அல்லது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தை விட்டது போல் எதிர்க்கின்றனர். எனவே, இது ஒரு இபாதத்தாகக் கருதியே செய்யப்படுகின்றது. நபி(ச) அவர்களது சுன்னாவில் இல்லாத இந்த வழிமுறை பித்அத்தாகும். இதை விட்டு விடுவதுதான் சரியானதாகும்.
மஃஷர் ஓதும் பள்ளிகளிலும் ஓதாத பள்ளிகளிலும் ஜும்ஆ குத்பாவுடைய நேரத்தில் கதைக்கும் பழக்கம் உள்ளது. இதை குத்பாவிலேயே இமாம் தெளிவுபடுத்தலாம். அத்துடன் குறித்த இந்த ஹதீஸை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மக்கள் பார்க்கும் வண்ணம் பள்ளியின் பல இடங்களிலும் தொங்கவிடலாம். இந்த மஃஷர் எனும் பித்அத்தைக் கைவிடுவதுதான் சரியானதாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் இது தொடர்பில் ஒரு பத்வாவை வெளியிட்டுள்ளது. அதனை அப்படியே உங்கள் பார்வைக்காகத் தருகின்றோம்.
ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு:
பிரசுரித்த திகதி : 03.08.2004
பதிவு இல. : 012/ACJU/F/2004
ஜும்ஆப் பிரசங்கத்தின் முன் நடைமுறையிலுள்ள மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை அறியும் நோக்கில் உங்களது கிளையின் மூலம் எமக்கு அனுப்பப்பட்ட 2003.08.28 திகதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப் படுகிறது.
மேற்படி விடயம் பற்றிய மார்க்கத் தீர்ப்பு பின்வருமாறு:
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஜும்;ஆப் பிரசங்கமும், அதன் தொழுகையும் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் உள்ளவையாகும். இவ்விரண்டையும் நபியவர்கள் நிறைவேற்றிய முறை பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது. நபியவர்கள் மிம்பரில் வந்து அமர்ந்த பின் ஜும்ஆவுக்காக அதான் சொல்லப்படும். அதன் பின் அவர்கள் பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டு ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவார்கள். மாறாக மஃஷர் ஓதுவது என்ற பெயரில் எம் மத்தியில் நடைமுறையில் உள்ளதைப் போன்று நபியவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மிம்பரை நோக்கி வருமுன், ஒருவர் சமுகமளித்திருப்பவர்களை நோக்கி சில ஆயத்கள், ஹதீஸ்கள் போன்றவற்றை ஓதிக் காட்டும் முறை அக்காலத்தில் அறவே இருந்ததில்லை. அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. பிரபலமான மத்ஹப்களின் இமாம்களும் இம்முறை நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலத்திலும், அதனை அண்மிய காலங்களிலும் நடைமுறையில் இருக்கவில்லை என்றே கூறியுள்ளார்கள். ஹிஜ்ரி 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷாபிஈ மத்ஹபின் பிரபல இமாம்களில் ஒருவராகிய இமாம் முஹம்மத் இப்னு ஷிஹாபித்தீன் அர்-ரமலீ (ரஹ்) அவர்கள் தமது ‘நிஹாயத்துல் முஹ்தாஜ்’ என்ற கிரந்தத்தில் நபியவர்களின் காலத்தில் ஜும்ஆ குத்பா நடைபெற்ற முறை பற்றியும், மஃஷர் பற்றிய தனது கருத்தையும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
‘பிரசங்கம் நிகழ்த்துபவரு(கத்தீபு)க்கு முன் ஒருவர் வந்து إن الله وملائكته … என்ற ஆயத்தையும், குறிப்பிட்ட ஒரு ஹதீஸையும் ஓதும் தற்காலத்திலுள்ள இவ்வழமைக்கு சுன்னாவில் (நபி வழியில்) எவ்வித அடிப்படையும் கிடையாது. இவ்வாறே எமது தந்தையும் (ரஹ்) தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இப்படி நபியவர்களின் முன்னிலையில் செய்யப்படவில்லை. மாறாக, மக்கள் ஒன்று சேரும் வரை வெள்ளிக்கிழமையில் நபி;யவர்;கள் தாமதிப்பவர்களாக இருந்தார்கள். மக்கள் ஒன்று கூடியதும் மக்களை நோக்கி தனியாகவே வருவார்கள். அவர்களுக்கு முன்னால் சப்தமிட்டுக்கொண்டு வரும் படைக்கலச் சேவிதர் எவரும் இருக்கவில்லை. (முற்காலத்தில் பெரும்பாலும் ஆட்சியாளர்களே ஜும்ஆவை நடத்துவதால் நூலாசிரியரின் காலத்தில் இப்படியொரு வழமை இருந்திருக்கலாம்). பள்ளிக்குள் நுழைந்ததும் மக்களுக்கு சலாம் கூறுவார்கள். பின்னர் மிம்பரில் ஏறி மக்;களை முன்னோக்கி சலாம் சொல்வார்கள். அதன் பின் அவர்கள் அமர பிலால் (வ) அவர்கள் அதான் சொல்;ல ஆரம்பிப்பார்கள். அவர்கள் அதான் சொல்லி முடிந்ததும் அதானுக்கும், குத்பாவுக்குமிடையில் வேறு எந்தப் பேச்சுக்களிலும் ஈடுபடாமல் நபியவர்கள் பிரசங்கம் நிகழ்த்தவாரம்பிப்பார்கள். இவ்வாறே அவர்களின் பின் வந்த மூன்று கலீபாக்களும் செய்து வந்தனர். எனவே, இது (மஃஷர் ஓதும் வழமை) ‘அழகான பித்அத்’ எனத் தெரிகின்றது.’
(பாகம் : 2 பக்கம் : 325)
மேலும், ஜும்ஆவிற்கு சமுகளிப்பவர்கள் அமைதியாக இருந்து குத்பாவைக் காதுதாழ்த்திக் கேட்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பல நபி மொழிகளை நாம் காணலாம். இதனை ஞாபகமூட்டும் நோக்கில் மஃஷர் ஓதப்பட்டாலும் தற்போது ஜும்ஆவில் சிறு தொகையினரே குத்பா தொடங்கப்படும்போது சமுகமளிப்பதால் அந்நோக்கம் பெரும்பாலும் அடையப்படாமலிருப்பதும் கண்கூடு. குத்பாவின் இடை நடுவிலும், அதன் இறுதிப் பகுதியிலும் பள்ளிக்கு வரும் பெரும் பகுதியினர் வீண் பேச்சுக்களில் ஈடுபட்டு. சப்தமிட்டுக் கொண்டிருப்பதை நாம் பரவலாகக் காண்கின்றோம். எனவே, ஜும்ஆப் பிரசங்கத்தை அமைதியாக செவிமடுக்கத் தூண்டும் ஆதாரபூர்வமான சில ஹதீஸ்களை தெளிவாக எழுதி பள்ளியின் நுழைவாயிலிலும், அறிவித்தல் பலகையிலும் தொங்க விடுவது இந்நோக்கத்தை அடைவதற்கு மிகவும் பொருத்தமான பயனுள்ள வழியாகத் தென்படுகிறது. கீழ்க்காணும் ஹதீஸ்களை இந்நோக்கத்துக்குப் பயன்படுத்தலாம்:
“வெள்ளிக்கிழமை இமாம் பிரசங்கம் (குத்பா) நிகழ்த்தும் போது நீர் உமது தோழனைப் பார்த்து காதுதாழ்த்திக் கேள் என்று சொன்னாலும் நீர் வீண் வேலை செய்து விட்டீர்.”
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (வ)
நூல் : ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.
“யார் குளித்து பிறகு ஜும்ஆவிற்கு சமுகமளித்து அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டதை தொழுது விட்டு பின்னர் அவர் (இமாம்) பிரசங்கத்தை (குத்பாவை) முடித்து பின் அவருடன் தொழும் வரை காதுதாழ்த்தி இருப்பாரோ, அன்றைய வெள்ளிக் கிழமைக்கும், அடுத்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப் பட்டதும் மேலும் மூன்று நாட்களுக்கும் அவருக்கு மன்னிக்கப்படும்.”
(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (வ)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)
வணக்க வழிபாடுகளில் நபிவழியைப் பேணுவது கடமையாகும். இதற்காக வீண் சர்ச்சைகளை ஏற்படுத்துவதும், குதர்க்க வாதங்களில் ஈடுபடுவதும் எமக்கு ஏற்ற செயல்கள் அல்ல. நபிவழியைப் பேணி சமூக ஒற்றுமையைப் பாதிக்காமல் காரியமாற்றுவது அதி முக்கியமானது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.