ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர் – உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்)

ஜமால் கஷோக்ஜியின் படுகொலை விவகாரம் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம்கள் மத்தியிலும் கடந்த சில வாரங்களாக சலசலப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்துக்குள் அவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பரவலாக அறியப்பட்ட விடயமாகும். இது தொடர்பில் சில கருத்துக்களை இந்த இடத்தில் பதிவிடலாம் என எண்ணுகின்றேன்.

ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்காக அமெரிக்காவும் அழுகின்றது. ஐ.நா.வும் பதறுகின்றது. உண்மையில் கொலைக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் தார்மீக உரிமை இவர்களுக்கு உண்டா என்பது கேள்விக்குரியே!

ஈராக்கில் ஈவு இரக்கம் இல்லாமல் இரத்த ஆற்றை ஓட்டியவர்கள், ஆப்கானை அழித்தவர்கள், சிரியாவைச் சிதைத்தவர்கள், சிதைப்பதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பவர்கள். மியன்மார், காஷ்மீர் என்று படுகொலைகளைக் கண்டு கலங்காத கண்கள் கஷோக்ஜிக்காக கண்ணீர் சிந்தினால் அதை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியும்?

உண்மையில் கொலை அல்ல இங்கு பிரச்சினை. அதை யார் செய்தார்கள்? இதை வைத்து என்ன அரசியல் சதுரங்கம் ஆடலாம் என்பதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது. இங்கு மனிதாபிமானம், நீதி, நேர்மை, சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் வெறும் வெற்று வேதாந்தங்களே! சவூதி மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வே அனைத்துக்கும் அடிப்படையாகும்.

முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம் எழுத்தாளர்களும் சவூதி மீது கொண்ட காழ்ப்புணர்வுக்காகவே இப்பிரச்சினையைப் பேசுகின்றனரே தவிர கஷோக்ஜி மீது கொண்ட அன்பிலோ அல்லது கொலைக் குற்றச் செயல் மீது கொண்ட வெறுப்பிலோ அவர்கள் புழுங்கவில்லை. ஒரு வகையில் இவர்கள் கஷோக்ஜியை சவூதி கொன்றதற்காக (?) சந்தோஷப்படக் கூடிய மனநிலையில்தான் உள்ளனர். கஷோக்ஜி கொல்லப்பட்டார் என்ற கவலையை விட அவர் சவூதியால் கொல்லப்பட்டார் என்பதில் இவர்களுக்கு ஆனந்தமே அதிகமாகும்.

ஒரு இஸ்லாமிய நாடு இப்படிச் செய்துவிட்டதே! முஸ்லிம்களுக்கே இது பெருத்த அவமானம் என்றெல்லாம் அலறுபவர்கள் ஒன்றில் உலக அரசியலில் இப்படிப் போட்டுத்தள்ளும் நிழகழ்வுகள் பற்றி அறியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது இந்த ஒப்பாரி மூலம் சவூதி மீதான அதிருப்தியையும் தாம் தலைமையாக ஏற்ற நாடுகளை ஏற்றிப் போற்றுவதையும் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்.
நாம் இவ்வாறு கூறுவதன் மூலம் கொலைக்குற்றத்தை நியாயப்படுத்துவதாகவோ அதன் பாரதூரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவோ எண்ணிக் கொள்ளக் கூடாது!

இஸ்லாம் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றது. கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை விதித்துள்ளது. ஒரு மனிதனைக் கொல்வதை ஒட்டுமொத்த மனித இனத்தையே அழிப்பதற்கு ஈடாகப் பார்க்கின்றது.

‘இதன் காரணமாகவே, ‘நிச்சயமாக எவன் கொலைக்குப் பகரமாகவோ அல்லது பூமியில் குழப்பம் விளைவித்ததற்காகவோ அன்றி மற்றொரு ஆன்மாவைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போன்றாவான்’ என்றும், ‘எவன் ஒருவன் அதை வாழவைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்’ என்றும் இஸ்ராஈலின் சந்ததிகள் மீது நாம் விதித்தோம். நிச்சயமாக அவர்களிடம் நமது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். பின்னர் நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் இதன் பின்பும் பூமியில் வரம்பு மீறுவோர்களாகவே உள்ளனர்.’ (5:32)

ஒரு முஃமினைக் கொல்வது நரகத்திற்குச் செல்ல வழிவகுக்கும் எனக் குர்ஆன் கூறுகின்றது.

‘நம்பிக்கையாளரான ஒருவரை யார் வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ அவனுக்குரிய கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனைச் சபித்தும் விட்டான். அவனுக்கு மகத்தான வேதனையையும் அவன் தயார் செய்து வைத்துள்ளான்.’ (4:93)

எனவே, கொலை என்பது இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்று. நிரந்தர நரகத்திற்குரியது என்ற கண்டிப்பு சாதாரணமானது அல்ல. ஜமால் கஷோக்கி அநியாயமாகக் கொல்லப்பட்டிருந்தால் அந்த அநியாயத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அனைவரும் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் குற்றவாளிகளே! அங்கு ஆட்சி அதிகாரமோ குடும்ப செல்வாக்கோ துணைக்கு வராது.

இதே வேளை ஜமால் கஷோக்கி தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு பகுதி உள்ளது. இவர் சவூதி அரசுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் சவூதி அரச சார்பாக இருக்கும். அதே நேரத்தில் அமெரிக்காவின் ஏஜென்டாகவும் செயற்பட்டவர். இவர் ஒரு ‘டபுல் ஏஜென்ட்’ என வர்ணிக்கப்படுகின்றார். இந்த நிலையும் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்டதாகும். இவர் இரட்டை முகத்துடன் செய்யப்பட்டுள்ளார்.

‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்’ என அபூ ஹுரைரா(ர) அறிவித்தார்.’ (புகாரி: 7179)

இவ்வாறு செயற்படுபவர்கள் எதிர் நடவடிக்கைகளை தவிர்க்க முடியாத நிலை உள்ளதை மறுக்க முடியாது!

கஷோக்கியின் கொலை பெரிய அளவில் அலையை ஏற்படுத்துவதற்கு அவர் ஒரு பிரபல ஊடகவியலாளர் என்பதும் முக்கியமான காரணமாகும். இன்றைய ஊடகவியலாளர்களில் கூலிப்படைகளும் உள்ளனர். பணத்திற்காகவும் பதவிக்காகவும் மக்கள் மனதில் மாற்றத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணக் கூடிய தகவல்களை உருவாக்கி பரப்புபவர்களும் உள்ளனர். சகல துறைகளிலும் மாபியாக்கள் இருப்பது போலவே ஊடகத் துறையிலும் மாபியாக்கள் உள்ளனர். இது குறித்தும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

நபி(ச) அவர்களை கஃப் இப்னுல் அஷ்ரப் என்பவன் தன் வார்த்தைகளால் நோவினை செய்து வந்த போது நபி(ச) அவர்கள் அவரை ஆட்சியாளர் என்ற வகையில் கொலை செய்ய உத்தரவிட்டார்கள்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ர) அறிவித்தார்: ‘ஒரு முறை அல்லாஹ்வின் தூதர்(ச) அவர்கள், ‘கஃப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அவன் பொல்லாங்கு விளைவித்து (தொல்லை தந்து)விட்டான்’ என்று கூறினார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ர), ‘நான் தயாராக இருக்கிறேன்’ என்று கூறினார்கள். (பிறகு) அவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, ‘ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகள் (உணவுப் பொருளைக்) கடனாக எங்களுக்கு நீ தர வேண்டும் என்று விரும்புகிறோம்’ எனக் கூறினார். அதற்கு அவன், ‘உங்கள் பெண்களை என்னிடம் அடகு வையுங்கள்’ என்று கூறினான். அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ர), ‘நீயோ அரபிகளிலேயே அழகு மிக்கவன். உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை நாங்கள் அடகு வைக்க முடியும்?’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவன், ‘உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகு வையுங்கள்’ என்று கேட்டான். அதற்கு அவர், ‘நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகு வைக்க முடியும்? (அப்படி அடகு வைத்தல்) ‘ஓரிரண்டு வஸக்குகளுக்காக அடகு வைக்கப்பட்டவன் தானே இவன்’ என்று அவர்களை மற்றவர்கள் (இழிவாகப் பேசிப் பரிகாசம்) செய்வார்களே! இது எங்களுக்கு அவமானமல்லவா? ஆயினும், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகு வைக்கிறோம்’ என்று கூறினார்கள். (அவனும் அதற்குச் சம்மதிக்க) பின்னர் வருவதாக வாக்களித்துச் சென்றார்கள். (பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகு வைக்கிற சாக்கில்) அவனைக் கொன்றுவிட்டார்கள்| பிறகு, அவர்கள் நபி(ச) அவர்களிடம் (கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொலை செய்துவிட்ட) செய்தியைத் தெரிவித்தார்கள்.’ (புகாரி: 2510)

இவ்வாறு குழப்பம் விளைவிப்பவர்கள் அரச உத்தரவுப் பிரகாரம் கொல்லப்பட்டுள்ளனர். இன்றைய அரசுகளும் தமக்கு வேண்டாதவர்களை உளவுத் துறையின் இரகசியப் பிரிவுகள் ஊடாகப் போட்டுத்தள்ளும் வேலையைச் செய்து வருகின்றன. வசமாக மாட்டிக் கொள்ளும் தருணங்களில் சிலர் பழிக்கடாவாக்கப்படுவார்கள்.

அடுத்து, ஜனநாயகத்தின் தூணாக கருத்துச் சுதந்திரம் கருதப்படுகின்றது. கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் அடுத்தவர் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதையும் தனிநபர் விமர்சனத்தில் ஈடுபடுவதையும் மானத்தை விலை பேசுவதையும் மறைத்து வைக்க வேண்டிய விவகாரங்களை பகிரங்கப்படுத்துவதையும் சரி காண முடியாது! மேற்கு உருவாக்கிய போலியான இந்த கருத்துச் சுதந்திரமும் தகவல் அறியும் சுதந்திரமும் மறைமுகமாக பல ஊடகவியலாளர்களின் உயிருக்கு உலை வைத்துள்ளது.

கொல்லப்பட்ட கஷோக்கி சவூதியுடன் நெருக்கமாக இருந்து பின்னர் சவூதியின் மன்னர் குடும்பத்தை எதிர்த்து  The Washington Post போன்ற பிரபல பத்திரிகைகளில் விமர்சித்து எழுதி வந்தவர். ஒரு அரச குடும்பத்தை விமர்சிக்கும் போது விளைவுகள் இப்படி விபரீதமாகத்தான் அமையும். எனவே, போலி கருத்துச் சுதந்திரம் வரையறை செய்யப்பட வேண்டும்.

சவூதி ஒரு ஜனநாயக நாடல்ல. அது மன்னராட்சி மரபைக் கொண்டது. ஆளும் அரச குடும்பத்திற்கு எதிரான சிந்தனைகள் மக்கள் புரட்சியை உண்டுபண்ணும். மக்கள் புரட்சி வெடித்தால் ஆட்சியாளர்கள் தமது ஆட்சியைத் தக்க வைக்க அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்வார்கள். எனவேதான் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளை குர்ஆனும் சுன்னாவும் ஆதரிப்பது இல்லை. குர்ஆன் சுன்னா தெரியாத இஸ்லாமிய அமைப்புக்கள் இஸ்ரேல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான நாடுகளின் சதிவலையில் விழுந்து ஏற்படுத்திய அரபு வசந்தம் எனும் சதி வலையின் விளைவுகளையும் நேரடியாகக் கண்டோம், கண்டும் வருகின்றோம். இந்த வகையில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில்தான் இஸ்லாம் ‘குழப்பம் கொலையை விட கொடியது’ (2:121) என்று கூறுகின்றது.

நபித்தோழர்களில் சிலர் போர் செய்வது தடுக்கப்பட்ட மாதத்தில் கொலை செய்த போது கொலை கொடியதுதான் ஆனால், காபிர்கள் செய்த செயற்பாடு, அவர்கள் செய்த அநியாயங்களைப் பார்க்கும் போது அந்த கொலையின் விபரீதம் குறைக்கப்படுகின்றது. பித்னா கொலையை விடக் கொடியது (2:217) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
எனவே, இங்கு கொலையின் கொடூரம் பற்றிப் பேசும் அதே நேரம் பணத்திற்காகவும் பதவிக்காகவும் ஒரு நாட்டுக்குள் குழப்பத்தையும் பிரச்சினையையும் உருவாக்கும் செயற்திட்டங்களில் ஈடுபடுதல் குறித்தும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அடுத்து, ஒரு முஸ்லிம் நாடு தவறு செய்யும் போது அந்த நாடு எந்த சிந்தனையைக் கொண்டுள்ளதோ அந்த சிந்தனைக்கு எதிரானவர்கள் அதை ஊதிப் பெருப்பிக்கும் பழக்கம் முஸ்லிம் பொதுமக்களிடமும் இயக்கங்களிடமும் காணப்படுகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், இதே போன்ற தவறுகளை தாம் சார்ந்த சிந்தனை முகாமுடையவர்களும் செய்யலாம். அப்போது அடுத்த தரப்பு அதை ஊதிப் பெருப்பிக்கும் போது நாம் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இந்த இடத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் ஒரு விடயத்தில் தெளிவைப் பெற வேண்டும். ஸலபி சிந்தனையுடைய அறிஞர்கள் ஸலபி சிந்தனைசார்பாக எழுதுங்கள், பேசுங்கள். அதன் பக்கம் நின்று வாதாடுங்கள். ஆனால், ஸலபிகள் சார்பாக நின்று வாதிட முற்படாதீர்கள். சரியான கொள்கையில் இருக்கின்ற அனைவரினதும் அனைத்து செயற்பாடுகளும் சரியாக இருக்காது. பிழையான கொள்கையை விமர்சியுங்கள். பிழையான கொள்கையில் இருக்கின்ற அனைவரினதும் செயற்பாடுகளும் முற்றிலும் பிழையானதாகவே இருக்கவும் மாட்டாது.

இவ்வாறே இஹ்வானிய சிந்தனையுடையவர்கள் அந்த சிந்தனைதான் சரியெனக் கண்டால் அதற்கு சார்பாக எழுதுங்கள், பேசுங்கள். இஹ்வான்கள் செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தி வாதிட முற்படாதீர்கள். இதனால் தஃவாக் களத்தில் ஒருவரையொருவர் தரக்குறைவாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. நாம் இஸ்லாத்தின் தூய்மையைப் பேசலாம். முஸ்லிம்களின் தூய்மை பற்றி பேசப் போனால் அசிங்கப்பட நேரிடலாம். சவூதியோ, துருக்கியோ ஒன்றும் மனிதப் புனிதர்கள் அல்ல. அவர்களுக்கென ஒரு கொள்கை இருக்கலாம். ஆனால், அவர்களது செயற்பாடுகள் எல்லாம் அந்தக் கொள்கைப்படி அமைந்தவை அல்ல. ஒவ்வொரு நாட்டின் அரசியலுக்குப் பின்னாலும் ஆயிரம் மர்ம முடிச்சுக்கள் இருக்கலாம். அவை அவிழ்க்கப்படாதவரைதான் அவர்கள் பரிசுத்தவாதிகள். சாதாரண ஒரு பதவிக்காகவே ஆயிரம் தில்லுமுல்லுகள் நடக்கும் போது ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாக்க அவர்கள் செய்யாமல் இருக்க மாட்டார்கள்| இருக்கவும் முடியாது!

இஸ்லாமிய உலகை இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறுபோட்டு கருவறுக்கும் இக்காலகட்டத்தில் சவூதி-துருக்கி மோதல் என்பது ஆரோக்கியமானதல்ல. ஆபத்தானதாகும். முஸ்லிம் நாடுகளில் சவூதி முக்கியமானதாகும். மக்கா, மதீனாவின் புனிதம் காக்க சவூதியின் இஸ்தீரத் தன்மை அத்தியவசியமானதாகும். துருக்கியும் ஒரு முக்கிய நாடாகும். முஸ்லிம் உலகில் கிலாபத்தின் தலைமையகமாகத் திகழ்ந்த பூமி. துருக்கியின் தற்போதைய அரசு பொருளாதார ரீதியில் துருக்கியைத் தூக்கி நிறுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த சூழலில் எதிரிகளின் அரசியல் சதுரங்க சதிவலையில் மாட்டிக் கொள்ளாமல் சவூதியும், துருக்கியும் மோதல் போக்கைத் தவிர்த்து சமரசம் காண்பதுதான் இஸ்லாமிய உலகுக்கும் இஸ்லாமிய உம்மத்தின் எழுச்சிக்கும் வழிவகுக்கும். முஸ்லிம் நாடுகளின் முரண்பாடுகள் முஸ்லிம் உலகின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். எமது தலைவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்தான் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இதற்காகப் பிரார்த்திக்கும் கடமை நமக்குண்டு. எனவே, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதை நிறுத்துவோம்!

அவர்களின் செயல்களை அவர்களிடமும் அல்லாஹ்விடமும் விட்டு விடுவோம். நாம் சரி கண்ட கொள்கைக்காகப் பேசுவோம். இதுதான் ஆரோக்கியமானதாக அமையும்.

5 comments

  1. மீரான்

    முழுக்க முழுக்க இந்த கட்டுரை சவுதி அரசாங்க த்திற்கு சார்பாக எழுதப்பட்டது” மக்கா மதீனாவுடைய ஸ்திரத்தன்மையை காப்பதில் மாற்றுக்கருத்து இல்லை, நிச்சயம் இறைவன் காப்பான்” ஆனால் இதையே காரணம் காட்டி சவுதி அரசை நியாயப்படுத்த முடியாது. தற்போதைய சவுதி அரசாங்கம் இஸ்லாத்திற்கு விரோதமாக சினிமா மது மஸாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நிச்சயம் இது விமர்சனங்கள் ‌‌‌வைக்க பட வேண்டியதே” இதற்காக ஒரு உயிர் கொல்லபட்டிருக்கிறது இதை எப்படி உங்கள் பார்வையில் குழப்பம் ” என்கிறீர்கள்.

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:”ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்கார அரசன் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்”.

  2. முழுக்க முழுக்க இந்த கட்டுரை சவுதி அரசாங்க த்திற்கு சார்பாக எழுதப்பட்டது” மக்கா மதீனாவுடைய ஸ்திரத்தன்மையை காப்பதில் மாற்றுக்கருத்து இல்லை, நிச்சயம் இறைவன் காப்பான்” ஆனால் இதையே காரணம் காட்டி சவுதி அரசை நியாயப்படுத்த முடியாது. தற்போதைய சவுதி அரசாங்கம் இஸ்லாத்திற்கு விரோதமாக சினிமா மது மஸாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நிச்சயம் இது விமர்சனங்கள் ‌‌‌வைக்க பட வேண்டியதே” இதற்காக ஒரு உயிர் கொல்லபட்டிருக்கிறது இதை எப்படி உங்கள் பார்வையில் குழப்பம் ” என்கிறீர்கள்.

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:”ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்கார அரசன் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்”.

  3. apo turkey dhan sariya irukunu sola varinga adhane

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.