ஜமாஅத்தாகத் தொழும் போது இமாம் மற்றும் மஃமூம்கள் எந்த இடத்தில் எத்தகைய ஒழுங்கில் நிற்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
இமாமுடன் ஒருவர் மட்டும் தொழுதால்:
இருவர் ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். ஒருவர் இமாம் மற்றவர் மஃமூம். இந்த சந்தர்ப்பத்தில் பின்பற்றித் தொழுபவர் இமாமுக்குப் பின்னால் வரிசையில் நிற்பது போன்று தொழுகின்றனர். மற்றும் சிலர் இமாமுக்கு வலது பக்கத்தில் சற்று பின்னால் நின்று தொழுகின்றனர். மற்றும் சிலர் வரிசையில் நிற்பது போல் இமாமின் வலது பக்கத்தில் இமாமுக்கு நேராக நின்று தொழுகின்றனர். இதில் மூன்றாவது முறைதான் மிகச் சரியானதாகும்.
‘என்னுடைய சிறிய தாயாரும் நபி(ச) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்து அல் ஹாரிஸ் (ர) அவர்களின் வீட்டில் நபி(ச) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி(ச) அவர்கள் இஷா தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் தம் வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ‘பையன் தூங்கிவிட்டானோ?’ அல்லது அது போன்ற ஒரு வார்த்தை கூறி விசாரித்துவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களின் இடப் பக்கமாகச் சென்று நின்றேன். உடனே என்னை அவர்களின் வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரகஅத்துகளும், பின்னர் இரண்டு ரகஅத்துகளும் தொழுதுவிட்டு அவர்களின் குறட்டை யொலியை நான் கேட்குமளவுக்கு ஆழ்ந்து உறங்கினார் கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டார்கள.’
அறிவிப்பவர்: அப்பாஸ்(வ)
நூல்: புகாரி: 117, முஸ்லிம் 763-184
இந்நிகழ்ச்சியில் நபி(ச) அவர்கள் இப்னு அப்பாஸ்(ர) அவர்களைத் தனது வலது புறத்தில் நிறுத்தினார்கள் என்று வந்துள்ளது. இது வலது பக்கத்தில் சமமாக நிறுத்தியதைத்தான் குறிப்பிடுகின்றது. எனவே, தனியாக ஒருவர் மட்டும் இமாமுடன் தொழும் போது,
- அவரது வலது பக்கத்தில் நிற்க வேண்டும்.
- அவருக்கு சற்று பின்னால் இருக்க வேண்டியதில்லை நேராக அவருடன் இணைந்து நிற்க வேண்டும்.
- பின்னால் தனியாக நின்று தொழக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியமாகும்.
இரு மஃமூம்கள்:
ஒரு இமாமை இருவர் மட்டும் பின்பற்றித் தொழுதால் எப்படி நிற்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப்னு மஸ்ஊத்(ர) அவர்கள் மட்டும் இமாமுடன் இருவர் மட்டும் தொழுவதாக இருந்தால் ஒருவர் வலது பக்கமும் அடுத்தவர் இடது பக்கமும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்துள்ளார். ஆனால், ஏனைய அறிஞர்கள் நபித்தோழ்கள் அனைவரும் அந்த இருவரும் இமாமுக்குப் பின்னால் ‘ஸப்’பில் நின்று தொழுவது போன்ற தொழ வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர். இதுவே சரியானதாகும்.
‘எங்களின் வீட்டில் நபி(ச) அவர்களுக்கு பின் நின்று நானும் மற்றொரு (அநாதைச்) சிறுவரும் தொழுதோம். என் தாயார் உம்மு ஸுலைம்(ர) எங்களுக்குப் பின் நின்று தொழுதார்கள்.’
அறிவிப்பவர்: அனஸ்(வ)
நூல்: புகாரி 727
இந்த அறிவிப்பில் அனஸ்(ர) அவர்களும் அநாதைச் சிறுவனும் பின்னால் நின்று தொழுதுள்ளனர். அவர்களுக்குப் பின்னால் உம்மு சுலைம் (ர) அவர்கள் நின்றுள்ளார்கள். இந்த ஹதீஸின் அடிப்படையில் இருவர் மஃமூமாக நின்று தொழுவதாக இருந்தால் தனியாக பின்னால் ஸப்பில் நின்று தொழ வேண்டும்.
இமாமுடன் ஒருவர் தனியாக இமாமுக்குப் பக்கத்தில் நின்று தொழுது கொண்டிருக்கும் போது இன்னொருவர் ஜமாஅத்துடன் இணைந்து கொண்டால் அவர்கள் இருவரும் பின்னால் நகர்ந்து ‘ஸப்’ -வரிசை- அமைத்துத் தொழ வேண்டும்.
இடம் இல்லாத போது இமாமுக்கு அருகில் நிற்றல்.
சில போது பள்ளியில் இடம் போதாமையால் இமாமுக்குப் பின்னால் தனியாக அணியாக நிற்க முடியாத நிலை இருந்தால் இமாமுடன் சேர்ந்ததாக ஸப்பை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறே ஒருவர் ஜமாஅத்து நடைபெறும் இடத்திற்கு வருகின்றார். தொழுமிடம் நிறைந்துள்ளது. இந்நிலையில் அவர் இமாமுக்குப் பக்கத்தில் வந்து நின்று தொழ முடியுமாக இருந்தால் தொழலாம்.
‘நபி(ச) அவர்கள் தங்களின் நோயின்போது அபூபக்ர்(ர) அவர்களை, தொழுகை நடத்தக் கட்டளையிட்டார்கள். அபூபக்ர்(ர) சில நாள்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ச) அவர்கள் தங்களின் நோய் சற்றுக் குறைந்ததை உணர்ந்து வெளியே வந்தார்கள். அப்போது அபூபக்ர்(ர) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ச) அவர்களை அபூபக்ர்(ர) பார்த்ததும் பின்வாங்கலானார்கள். ‘அப்படியே இருங்கள்’ என்று நபி(ச) அவர்கள் சைகை செய்தார்கள். நபி(ச) அவர்கள் அபூ பக்ர்(வ) உடைய விலாப் புறத்தை ஒட்டி அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ர) நபி(ச) அவர்களையும் மக்கள் அபூ பக்ர்(ர) அவர்களையும் பின்பற்றித் தொழுதனர்.’
அறிவிப்பவர்: ஆயிஷா(ர)
நூல்: புகாரி: 683, முஸ்லிம்: 418-97
இந்த ஹதீஸை எமது மேற்படி கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால், எந்த நிலையிலும் மஃமூம் இமாமுக்கு முன்னால் நின்று தொழக் கூடாது. மதீனா மஸ்ஜிதுன் நபவி மற்றும் கீழ் மாடியில் இமாம் தொழுவிக்கும் போது மேல்மாடியில் தொழுபவர்கள், அதே போன்று பெண்கள் பகுதியில் தொழுபவர்கள் அவசியம் இதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இமாமுக்கு முன்னால் நின்று தொழுதால் தொழுகை செல்லாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் அபிப்பிராயமாகும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.
பெண்ணின் ஸப்:
ஒரு பெண் இமாமைப் பின்பற்றித் தொழும் போது ஆண்களின் அணிக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும். ஒரு ஜமாஅத்தில் ஒரேயொரு பெண் மட்டும் இருந்தால் கூட ஸப்பில் தனியாகத்தான் இருக்க வேண்டும்.
‘நபி(ச) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ச) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்னால் பெண்கள் திரும்பிச் செல்வதற்காகவே இப்படி நபி(ச) செய்திருக்கிறார்கள்’ என்று கருதுகின் றேன் என ஸுஹ்ரி கூறுகிறார்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ர)
நூல்: புகாரி: 870
பெண்கள் ஆண்களின் ஸப்புக்குப் பின்னால் இருப்பார்கள். நபி(ச) அவர்கள் தொழுது முடிந்ததும் அந்த இடத்தில் சிறிது தாமதிப்பார்கள்.
‘எங்களின் வீட்டில் நபி(ச) அவர்களுக்குப் பின் நின்று நானும் மற்றொரு (அநாதை) சிறுவரும் தொழுதோம். என் தாயார் உம்மு ஸுலைம்(ர) எங்களுக்குப் பின் நின்று தொழுதார்கள்.’
அறிவிப்பவர்: அனஸ்(வ)
நூல்: புகாரி: 727
இந்த நபிமொழியில் உம்மு சுலைம்(ர) அவர்களை நபி(ச) அவர்கள் தனியாக பின்னால் நின்று தொழவைத்துள்ளார்கள். அவர்களுடைய மகனுடன் கூட ஸப்பில் சேர்க்கவில்லை என்பதை அறியலாம். எனவே, பெண்கள் ஆண்கள் வரிசைக்குப் பின்னால் நின்றே தொழ வேண்டும்.
தற்போது பள்ளியில் ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒரு பகுதியிலும் சமமான அணிகளாகத் தொழுகின்றனர். சில போது நிர்ப்பந்த சூழ்நிலைகளில் மக்கா போன்ற இடங்களில் ஆண்களுக்கு முன் நின்று தொழும் நிலை ஏற்படுகின்றது. நிர்ப்பந்த நிலையில் இது குற்றமாகாது! ஆனால், வரிசையாக நிற்கும் போது பெண்கள் ஆண்களுக்கு முன்னால் நிற்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண் இமாமாக இருந்தால்:
பெண்களுக்குப் பெண் இமாமத் செய்வதாக இருந்தால் ஸப்பின் நடுவில் நின்று தொழுவிக்க வேண்டும். தனியாக முன்னால் நிற்பதில்லை. இது குறித்து முன்னரே பேசப்பட்டுள்ளது.
சிறுவர்கள் எங்கே நிற்பது?:
பள்ளியில் சிறுவர்கள் தொழுகைக்கு முன்னால் வரும் போது பின்னால் போங்கள் என சிலர் விரட்டுவதுண்டு. சிறுவர்கள் பெரியவர்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வந்துள்ள அறிவிப்பே இதற்குக் காரணமாகும்.
நபி(ச) அவர்கள் தொழுகைக்கான அணியில் சிறுவர்களுக்கு முன்னால் பெரியவர்களை நிறுத்துவார்கள். சிறுவர்களுக்குப் பின்னால் பெண்கள் இருப்பார்கள் என்ற கருத்தில் அஹ்மத், அபூதாவூதில் வரும் அறிவிப்பு பலவீனமானது என ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள். இதல்லாமல் சிறுவர்கள் பெரியவர்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேறு ஹதீஸ் இல்லாததனாலும் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட அனஸ்(ர) அவர்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்பில் அனஸ்(ர) அவர்களுடன் அநாதைச் சிறுவர் ஸப்பில் ஒன்றாக நின்றதாக ஹதீஸ் வந்திருப்பதாலும், பெரியவர்களுடன் சேர்ந்து சிறுவர்களும் நிற்பதில் தப்பில்லை.
சிறுவர்கள் அனைவரையும் ஒன்றாக ஒரே ஸப்பில் நிறுத்தும் போது அவர்கள் தொழுகையில் விளையாடவும், பிழையாகத் தொழவும் வாய்ப்புக்கள் அதிகம். இதனால் முறையாகத் தொழுகையை அவர்கள் கற்றுக் கொள்ள முடியாது போகும் நிலை ஏற்படலாம். எனவே, சிறுவர்கள் கலந்திருக்கலாம். அப்படி இருப்பது சிறுவர்களுக்கு நன்மை பயக்கும்.
தொடரும்…
இன்ஷா அல்லாஹ்