இஸ்லாம் சிலை வணக்கத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும், எதையும் வழிப்படக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இஸ்லாம் சிலை வணக்கத்தைக் கண்டிக்கின்றது என்பதனால் பிற சமூக மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்கலாமா என்றால் கூடாது என்பது இஸ்லாத்தின் பதிலாக இருக்கும்.
நபி(ச) அவர்கள் மக்காவில் 13 வருடங்கள் சிலை வணக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நபி(ச) அவர்களும் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்தார்கள், கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சிலை வணக்கத்திற்கு எதிராகப் போராடி நபித்தோழர்கள் பயங்கரமான பாதிப்புக்களை சந்தித்தும் கூட கஃபாவில் இருந்த எந்த சிலையும் எவராலும் தாக்கப்படவில்லை. அப்படியென்றால் நபி (ச) அவர்கள் சிலை வணங்காதீர்கள் என்று கூறியுள்ளார்களே தவிர, மாறாக உடையுங்கள் என்று கூறவில்லை என்பதைப் புரியலாம்.
இன்று உலகம் பூராகவும் சிலை வணக்கம் பரவியுள்ளது. இந்த சிலை வணக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யலாம்| செய்ய வேண்டும். ஆனால், அதனை உடைப்பதற்கான அதிகாரம் எம்மிடம் இல்லையென்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இஸ்லாம் மது பாவனையைக் கடுமையாக எதிர்க்கின்றது. இலங்கை அரசு மது வியாபாரத்திற்கு அனுமதியளித்து அந்த அனுமதியைப் பெற்று மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. நாம் மதுபான வியாபாரத்திற்கும் பாவனைக்கும் எதிராகப் பிரச்சாரம் செய்யலாம். அல்லது ஒரு பிரதேசத்தில் மதுபானக் கடை திறக்கப்பட்டால் அதை மூடுவதற்கு அல்லது அகற்றுவதற்கு கோரிக்கை விடுக்கலாம்| போராட்டம் நடாத்தலாம். இவை சராசரியாக கருத்துரிமையாகப் பார்க்கப்படும். ஆனால், அந்த மதுபான சாலையை அடித்து உடைப்பதற்கு எமக்கு அனுமதியோ அதிகாரமோ இல்லை. அப்படிச் செய்தால் அது தீவிரவாதமாகவே பார்க்கப்படும். சிலை உடைப்பும் இப்படியே கருத்துத் தீவிரவாத மாகவும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கையாகவுமே பார்க்கப்படும்.
‘கஃபா’ அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடுவதற்காக முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயமாகும். அதிலே 360 சிலைகள் இருந்தும் மக்காவுடைய சூழலில் அதை நபியோ, நபித்தோழர் களோ உடைக்க முயற்சிக்கவில்லை எனும் போது முஸ்லிம் ஒருவர் தன்னிச்சையாக பிற சமூக மக்களால் வழிபடும் சிலையை உடைக்க முற்படுவது என்பது மார்க்க அறிவீனமாகும்.
நபி(ச) அவர்கள் மக்காவை கைப்பற்றி அதன் அதிகாரம் தம்வசம் வந்த போது, உடைத்தால் மீண்டும் கட்ட முடியாது என்கின்ற நிலையில், உடைத்தால் அதனால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்கின்ற நிலையில் பகிரங்கமாக உடைத்தார்கள். எந்த அதிகாரமும் இல்லாமல் சிலைகள் மீதோ அல்லது உடைக்க ஏவப்பட்ட, கட்டப்பட்ட கப்ருகள் மீதோ கை வைப்பது இருப்பதை இன்னும் பெரிதாகக் கட்டுவதற்கு துணை செய்வதாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்குக் கடந்த கால சம்பவங்கள் சான்றாக உள்ளன.
எதிர் விளைவு:
ஒரு விடயத்தை செய்யும் போது அதன் எதிர் விளைவு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சிலையை உடைத்தால் சிலை வழிபாடு நிற்குமா? நீங்குமா? என்றால் நிற்கவும் மாட்டாது, நீங்கவும் மாட்டாது. உடைக்கப்பட்ட சிலையை விட பெரிய சிலை கட்டப்படும். கவனிப்பாரற்று இருந்த சிலைகள் கூடுதல் கவனிப்புக்குள்ளாகும்.
ஒரு தீமையைத் தடுக்கும் போது அத்தீமை நீங்க வேண்டும் அல்லது குறைய வேண்டும். தீமையைத் தடுப்பதால் தீமை குறையாது| கூடும் என்றிருந்தால் அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் தீமையைக் குறைக்காது கூட்டும் வழிமுறையில் தீமையைத் தடுக்க முற்படுவது ஹராமாகும்.
அடுத்து, ஒரு தீமையைத் தடுப்பதால் அதைவிடப் பெரிய தீமை ஏற்படாமல் இருக்க வேண்டும். சிலைகளை உடைத்தால் பள்ளிகள் உடைபடலாம், எமது வழிபாட்டு உரிமையில் பாதிப்பு ஏற்படலாம், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்றிருந்தால் அதுவும் ஹராமாகும்.
“அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் அறியாமையினால் வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் செயல்களை நாம் அலங்கரித்துக் காட்டியுள்ளோம். பின்னர் அவர்களது இரட்சகனிடமே அவர்களது மீளுதல் உள்ளது. அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.” (6:108)
பிற மக்கள் வழிபடும் போலி தெய்வங் களைத் திட்டாதீர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. நாம் அவர்கள் வணங்கும் போலி கடவுள்களைத் திட்டினால் அவர்கள் உண்மையான இரட்சகனாகிய அல்லாஹ்வைத் திட்டுவார்கள். அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவதற்குக் காரணமாக அமைந்த குற்றம் எம்மையே சாரும்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ர) அறிவித்தார்: “‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ச) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’” என்றார்கள்.”
(புகாரி: 5973)
அடுத்தவரது தாய்-தந்தையைத் திட்டி நாம் பேசினால் அவன் எமது தாய், தந்தையை இழுத்துப் பேசுவான். இப்படி நாம் நடந்து கொண்டால் நாமே நமது தாய், தந்தையைத் திட்டியதாகவே கருதப்படும். பிற மக்கள் வழிப்படும் போலிக் கடவுள்களை நாம் திட்டி அதனால் அவர்கள் அல்லாஹ்வைத் திட்டினால் நாமே அல்லாஹ்வைத் திட்டியதாகவே கருதப்படும். எனவே, எச்சந்தரப்பத்திலும் விளைவு களைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறு இஸ்லாம் கூறுகின்றது.
அதேவேளை, அவரவருக்கு அவரவர் வழிபாடுகள் அழகாகக் காட்டப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான். சிலை வழிபாடு தவறு என்றாலும் அவர்களுக்கு அது அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது. நாம் அது தவறு என்று பிரச்சாரம் செய்யலாமே தவிர, அதில் உரிய வரம்புகளைப் பேணாது நடக்க எமக்கு எந்த அனுமதியும் இல்லை| அதிகாரமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தின் நோக்கம்:
இஸ்லாம் சிலை வணக்கத்தையும் அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படுவதையும் எதிர்க்கின்றது. ஆனால், பிற ஆலயங்கள் உடைக்கப்பட வேண்டும் என்பது அதன் நோக்கமல்ல.
போர் செய்வதை அனுமதிக்கும் வசனத்திலேயே அல்லாஹ் இதையும் கூறுகின்றான்.
“போர் தொடுக்கப்பட்டோர் நிச்சயமாக அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற காரணத்தினால் (எதிர்த்துப் போராட) அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி புரிய பேராற்றல் உடையவன்.
‘எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக எவ்வித நியாயமுமின்றி அவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் சிலரை மற்றும் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்காதிருந்திருப்பின் ஆச்சிரமங்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், யூதர்களின் கோயில்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகம் நினைவு கூரப்படும் மஸ்ஜிதுகளும் தகர்க்கப்பட்டிருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்பவருக்கு நிச்சயமாக உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன்| யாவற்றையும் மிகைத்தவன்.” (22:39-40)
இந்த வசனம்தான் முதன் முதலில் போர் செய்வதை அனுமதித்த வசனமாகும். பள்ளிகளோ, பிற மக்கள் வழிப்படும் ஆலயங்களோ உடைக்கப் பட வேண்டியவை அல்ல என்பதையே இந்த வசனம் கூறுகின்றது.
இப்றாஹீம் நபியும் சிலை வணக்கமும்:
இப்றாஹீம் நபி சிலைகளை உடைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் நாமும் பிற மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்கலாம் அல்லவா என்ற சந்தேகம் எழலாம். இந்த நிகழ்வை நாம் பல கோணங்களில் பார்க்க வேண்டியுள்ளது.
மக்காவில் 13 வருடங்கள் நபியவர்கள் சிலை வணக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தும் கஃபாவில் ஒரு சிலை கூட சேதப்படுத்தப்பட வில்லை என்பதை ஏற்கனவே நாம் பார்த்தோம். அதுதான் எமக்குரிய வழிகாட்டலாகும்.
இப்றாஹீம் நபி உடைத்தது நபி என்ற வகையில் அவர்களுக்குரிய கட்டளையாக இருக்கலாம்.
இப்றாஹீம் நபி ஒரு சிலை வணங்கும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது சமூகம் வழிப்பட்டு வந்த சிலை வணக்கம் கூடாது என்று அவரே உடைத்த நிகழ்வு அது. மாறாக அது இரு சமூகம் சம்பந்தப்பட்ட நிகழ்வன்று. ஒரு இந்துவோ, பௌத்தரோ சிலை வணக்கம் தப்பானது என்பதை உணர்ந்து தனது சமூகம் வழிப்படும் சிலையை தாமே உடைப்பது போன்ற நிகழ்வாக இதை நாம் பார்க்க முடியும்.
இப்றாஹீம் நபி சிலைகளை உடைத்துவிட்டு ஒளிந்து ஓடும் மனநிலையில் அதைச் செய்யவில்லை. சிலைகளை உடைத்து விட்டு பெரிய சிலையை மட்டும் விட்டு விட்டு அதன் மூலம் சிலை வணக்கம் தவறானது என்பதை நடைமுறை மூலம் அந்த மக்களுக்கு உணர்த்தவே அவர் அப்படிச் செய்தார்.
இப்றாஹீம் நபி சிலையை உடைத்துவிட்டு ஓடி ஒளிய முற்படவில்லை. அதனால் வரும் பிரச்சினைக்கு தானே நேரடியாக முகம் கொடுக்கும் துணிச்சலில் செய்தார்கள். தான் செய்து விட்டு ஓடி ஒளிந்து அடுத்தவர்கள் பாதிப்பை சுமக்கும் நிலைக்கு பிற மக்களை அவர் தள்ளவில்லை.
இப்றாஹீம் நபி சிலை உடைத்த போது சிலை வணங்கிகள் ஆத்திரப்பட்டால் பாதிப்பு இப்றாஹீம் நபிக்கு மட்டுமே ஏற்படும் என்ற நிலை இருந்தது. குறைந்த பட்சம் அவரது குடும்பத்திற்குக் கூட அதனால் பாதிப்பு ஏற்படாது. தந்தை கூட மறுபக்கமே இருந்தார். இப்படியிருக்க ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வண்ணம் இப்படியொரு செயற்பாட்டை இன்று நாம் செய்ய முடியாது.
அடுத்து, இப்றாஹீம் நபி சிலையை உடைத்தார். அவர்கள் ஆத்திரப்பட்டால் இப்றாஹீம் நபிக்குத்தான் சேதத்தை உண்டுபண்ணுவர். இப்றாஹீம் நபி சார்ந்த மக்களுக்கோ அல்லது அவர்களது பொருளாதாரத்திற்கோ அல்லது பள்ளிகளுக்கோ பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. ஏனெனில், அப்படி ஒன்றும் அப்போது இருக்க வில்லை. ஆனால், இன்று அப்படியெல்லாம் இருக்கிறது.
எனவே, இப்றாஹீம் நபி சார்ந்த சம்பவத்தை இந்தக் கோணத்தில் பார்ப்பது அறிவீனமும் அபத்தமுமாகும்.
வரம்பு மீறுவது:
குர்ஆன் சுன்னா வழிகாட்டாத விதத்தில் பிற சமூக மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்க முற்படுவது வரம்பு மீறுவதாகும். ‘அல் குலுவ்’ எனப்படும் மார்க்க விடயத்தில் வரம்பு மீறி செயற்படுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
அழிந்து போவார்கள்:
மார்க்கம் கூறாத விதத்தில் இவ்வாறு நடந்து கொள்வது இஸ்லாத்தின் பார்வையில் மதத் தீவிரவாதமாகும். இவர்கள் எந்த சமூகத்தில் இருந்தாலும் தமது மதத்தையும் தான் சார்ந்த சமூகத்தையும் அழிவுப் பாதையிலேயே இட்டுச் செல்வார்கள்.
“தீவிரவாதிகள் அழிந்து போவார்கள்| தீவிரவாதிகள் அழிந்து போவார்கள்| தீவிரவாதிகள் அழிந்து போவார்கள்” என நபியவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(வ)
நூல்: முஸ்லிம்: 2670-7, அபூதாவூத்: 4608
எனவே, இது போன்ற தீவிரவாதப் போக்கு சமூகத்திற்கு அழிவையே ஏற்படுத்தும். என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மாவனல்லை சிலை சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்குப் பின்னால் சில முஸ்லிம் இளைஞர்கள் இருப்பதாக இப்போது சந்தேகம் வலுத்து வந்துள்ளது. இதே வேளை, சிலைகளை உடைத்து விட்டு முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்துவதற்காக சதிகளும் நடந்து வந்துள்ளன. இந்த சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் இப்படிச் செய்திருந்தால், அது இலங்கை சட்ட ரீதியாகவும் இஸ்லாமிய வழிகாட்டல் ரீதியாகவும் கண்டிக்கத் தக்கதாகும்.
கடந்த பல வருடங்களாக முஸ்லிம்களின் பள்ளிகள், கடைகள், வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மத நிந்தனைக்கு உள்ளாக்கப்பட்டமை போன்ற நிகழ்வுகளால் மார்க்கம் அறியாத சில இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டோ அல்லது உணர்ச்சியூட்டப்பட்டோ இவ்வாறு செய்திருந்தால் அது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. அதே வேளை, இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முறுகலை உண்டாக்கும் செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டின் அமைதி, முன்னேற்றம், நற்பெயர் அனைத்திலும் நாம் சரிவைச் சந்திக்க நேரிடும்.
எனவே, இன, மத, பேதம் பாராது இன, மத, முறுகலை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால்தான் நாட்டில் இன நல்லுறவு மேலோங்கும். நாடு அமைதிப் பாதையில் முன்னேற்றம் காண முடியும். இதை ஆளும் வர்க்கம் கவனத்திற் கொள்வது அனைவருக்கும் ஆரோக்கியமாக அமையும்.