ஒரு சமூகம் குறித்து பிற சமூக மக்களிடம் உயர்வான எண்ணங்கள் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல சமூகம் என்ற மதிப்பும் மரியாதையும் இருந்தால் அந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் நோக்கப்படுவான். இல்லாத போது கீழ்த்தரமான, தப்பான பார்வையைத் தவிர்க்க முடியாது. இந்த அடிப்படையில் சமுதாய மரியாதையைச் சிதைப்பது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதாகவும் அழித்துக் கொள்வதாகவும் அமையலாம்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் குறித்து உயர்வான எண்ணம் இந்த நாட்டில் நிலவி வந்தது. நாணயமானவர்கள், நம்பிக்கையானவர்கள், நல்லவர்கள், ஒற்றுமையானவர்கள்….. இவ்வாறான உயர்வான எண்ணங்கள்தான் கடந்த கால முஸ்லிம்களை இந்த நாட்டில் கௌரவப் பிரஜைகளாக நோக்க வைத்தன.
ஆனால், அண்மைக் கால நிகழ்வுகள் முஸ்லிம் சமூகம் குறித்து கீழ்த்தரமான மனப்பதிவை இந்நாட்டு மக்கள் மனங்களில் பதிய வைத்து வருகின்றது. குறிப்பாக பேருவலை, மககொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிக்குள் முஸ்லிம்களை முஸ்லிம்களே கொலை செய்தது மஸ்ஜிதில் நிகழ்த்திய கொடூர நிகழ்வுகள் ஏனைய சமூக மக்களின் கவனத்தை முஸ்லிம்கள் பக்கம் ஈர்த்தது. ஒற்றுமையான சமூகத்திற்குள் இப்படியொரு பகையும், வெறியும் மறைந்திருக்கின்றதா என்று சிந்திக்க வைத்தது. முஸ்லிம்களுக்கு மத்தியில் என்ன பிரச்சினை இருந்தாலும் தொழுகைக்காக ஒரே அணியில் நிற்பார்கள். ஒரு தட்டில் ஒன்றாக உண்பார்கள் என்று விளங்கி வைத்திருந்த பிற சமூக மக்கள் மாதம்பைப் பிரச்சினை, அதையொட்டி நடைபெற்ற பெண்கள் ஆர்ப்பாட்டங்கள் என்பன வித்தியாசமான எண்ணப் பதிவை ஏற்படுத்தின.
அண்மைக் காலமாக முஸ்லிம் சமூகத்தில் இடம் பெற்று வரும் சமூகக் கொடுமைகள் பல ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. உற்ற நண்பனைப் பணத்துக்காக ஆள் வைத்துக் கொலை செய்த, மார்க்கத்தில் ஈடுபாடுள்ள ஒரு முஸ்லிமின் கொடூரச் செயல் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்ற எண்ணப் பதிவை ஏற்படுத்தக் கூடியதாகும்.
அண்மையில், பிரபலமான சமூக அங்கீகாரம் பெற்ற ஆலிம் ஒருவர் பலகோடி ஊழலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டுள்ளமையும் இது போன்ற கீழ்த்தரமான பார்வையை உண்டாக்கக் கூடியதாகும்.
பள்ளியில் நாட்டுப்புற அரபி சிறுநீர் கழித்த போது அவரிடம் அன்பாக உண்மையை உரைத்து வழிகாட்டிய உத்தம நபியைப் பின்பற்றும் சமூகத்தில் வீட்டில் சிறுநீர் கழித்த குற்றத்திற்காக தாயால் தாக்கப்பட்டு ஒரு சிறுமி மரணித்துள்ளார்.
பெற்றோர்கள் இளையவளுடன் மட்டுமே அன்பாக உள்ளார்கள். தன்னைப் புறக்கணிக்கின்றார்கள் என எண்ணிய மூத்தவள் இளையவளைக் கொலை செய்த கொடூரமும் முஸ்லிம் சமூகத்தில் நடந்துள்ளது. பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டக் கூடாது எனப் போதித்த உத்தம நபியைப் பின்பற்றும் சமூகத்தில் இது நிகழ்ந்துள்ளது.
காத்தான்குடி இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் கூடிய இறுக்கத்துடன் இருக்கும் கிராமமாகப் பார்க்கப்படுகின்றது. கடினமான இஸ்லாமிய வரையறைகளைப் பேணும் மக்களாகப் பார்க்கப்பட்ட சமூகத்தில் ஒன்பது வயதுச் சிறுமி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி இப்போது பரபரப்பாகியுள்ளது.
எமது சமூகத்தில் ஒற்றுமை இல்லாத போக்கால் எமது எல்லா உள் விவகாரங்களிலும் அடுத்தவர்கள் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கி வருகின்றோம்.
நீண்ட நெடு நாளாக ஹஜ் விவகாரத்தில் எமது அமைச்சர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன. இம்முறை இம்முரண்பாடு வலுப்பெற்று ஹஜ் முகவர்கள் சிலர் எமது சமூக சமயத் துரோகிகளிடம் சென்று முறையிடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இப்போது ஹஜ் விவகாரங்கள் கூட அடுத்தவர் கைகளுக்குப் போகும் நிலை உருவாகி வருகின்றது. எமது சமூகத்தில் நாமே கரியைப் பூசிக் கொள்ளும் நிகழ்வாக இது அமைந்துள்ளது.
எந்த சமூகத்திலும் இது போன்ற குற்றச் செயல்கள் முழுமையாக இல்லாமல் போய்விடாது. இருப்பினும், தொடராக நடைபெறும் இது போன்ற செயல்கள் ஊடகங்களில் ஊதிப் பெருப்பிக்கப்படும் போது முஸ்லிம் சமூகம் மோசமான சமூகம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். இவர்கள் நாட்டுக்கு வேண்டத்தகாதவர்கள்; பிரச்சினைக்குரிய சமூகம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அதன் பின்னர் ஒவ்வொரு முஸ்லிமும் பண மோகம் கொண்டவனாக, ஆபாசம் மிக்கவனாக, கொடூர குணம் கொண்டவனாக நோக்கப்படுவான். அதன் பின் நாம் செய்யும் நல்ல செயல்கள் கூட தப்பாகப் பார்க்கப்படும். நாம் பிற சமூகங்களை விட்டு;ம் ஓரங்கட்டப்படுவோம்.
எனவே, ‘சிறந்த சமூகம்’ என அல்லாஹ் சூட்டிய அழகுப் பெயரின் அந்தஸ்த்தை இழந்துவிடுவோம். இது எம்மை நாமே அழித்துக் கொள்வதாக அமையும். எனவே, எமது சமூக அந்தஸ்த்தை அழிக்கக் கூடிய இத்தகைய இழி செயல்களை ஒழிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமையாகும்.
‘(மனிதனாகிய) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய(வான)வர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைப் பாதுகாக்கின்றனர். எந்த ஒரு சமூகமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடமுள்ளதை மாற்றமாட்டான். அல்லாஹ் ஒரு சமூகத்துக்குத் தீமையை நாடி விட்டால் அதனை யாராலும் தடுக்கமுடியாது. அவனையன்றி அவர்களுக்கு எந்தப் பாதுகாவலனும் இல்லை.’ (13:11)
இந்த வசனத்தைக் கவனத்திற் கொண்டு எம்மை நாமே மாற்றிக் கொள்ள முனைய வேண்டும்.
அடுத்து, இலங்கையில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையில் பரஸ்பரம் புரிந்துணர்வும், சமரசமும் வளர வேண்டும். எண்ணம் ஏற்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையிலும் சிலர் உள்வீட்டுப் பிரச்சினைகளை இனவாதிகளிடம் எடுத்துச் சொல்கின்றனர். தமக்குப் பிடிக்காத ஜமாஅத்தின் பள்ளியைத் தடை செய்வதற்காக இனவாதிகளிடம் சென்று இந்தப் பள்ளி சட்டபூர்வமற்றது, இவர்கள் அடிப்படைவாதிகள் எனப் போட்டுக் கொடுத்து தமது அரிப்பைத் தீர்த்துக் கொள்ள முற்படுகின்றனர்.
ஒரு ஜமாஅத்தின் மாநாடு நடந்தால் மற்ற ஜமாஅத்தினர் பிடித்தால் கலந்து கொள்ளலாம். இல்லையென்றால் ஒதுங்கியிருக்கலாம். ஆனால், அதை விட்டு விட்டு அந்தந்தப் பகுதி இனவாத, மதவாதத் தலைவர்களிடம் சென்று இந்த மாநாடு உங்களுக்கு எதிரானது; இவர்கள்தான் குழப்பக்காரர்கள் என்று கூறி மாநாட்டைத் தடுக்க முற்படுகின்றனர்.
இதன் மூலம் முஸ்லிம்களுக்குள் உங்களை எதிர்ப்பவர்கள் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுடன் தமது துரோகச் செயல்கள் மூலம் முஸ்லிம்கள் துரோகிகள் என்பதையும் அவர்களுக்கு உணர்த்திவிடுகின்றனர். இப்படி இனத் துரோகிகளாக நடந்து கொள்ளும் முனாபிக்குகள்தான் சமூக விரோதிகளாவார்கள். அத்தோடு இவர்களால் ஏற்படும் பின்விளைவுகள் இவர்களையும் சேர்த்தே அழிக்கப் போகின்றது என்ற அறிவு கூட இல்லாத அறிவிலிகளாக இவர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு ஜமாஅத்திலும் தவறான நடத்தைகள், தவறான போக்குகள் இருக்கலாம். இதை எந்த ஜமாஅத்தும் மறுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. ஒவ்வொரு ஜமாஅத்தும் அடுத்த ஜமாஅத்தின் குறைகளைப் பேசியும் தமது குறைகளை மறைத்தும் வருகின்றனர். எல்லா ஜமாஅத்துக்களும் தம்மிடம் உள்ள குறைகள், தவறான சிந்தனைப் போக்குகள் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய முற்பட்டால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
எமது ஜமாஅத்தில் உள்ள தவறுகள், தப்பான அணுகுமுறைகள், பிழையான பார்வைகள் எவை? எந்தெந்த விடயங்களில் நாம் நபிவழிக்கு மாற்றமாக உள்ளோம்? எந்த விடயங்களால் தீவிரமான – மிதவாதமான நிலைப்பாட்டில் உள்ளோம் என்பவற்றைக் கண்டறிந்து ஒவ்வொரு அமைப்பும் தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும்.
அடுத்து, எம்மை நோக்கி ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாள் வந்து கொண்டிருக்கின்றது. இத்திருநாளில் நாம் நமது உழ்ஹிய்யாக் கடமைகளை மிகவும் சாதுர்யமாகவும் சாணாக்கியமாகவும், பிற சமூக மக்களின் உணர்வுகள் புன்படாத விதத்திலும் இனவாதிகளுக்கு இடம் கொடுக்காத விதத்திலும் அரச சட்டங்களை மதிக்கும் விதத்திலும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். இது தொடர்பில் மார்க்க அறிஞர்களும், சமூக அமைப்புக்களும் காட்டியுள்ள நல்ல அணுகுமுறைகளைக் கைக் கொள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.