இலங்கைத் திருநாட்டில் வாழும் சகல இனங்களும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். இன்று சில இனவாத சக்திகள் சமூக சமத்துவத்தின் சாவு மணி அடிக்கவெனத் துடிக்கின்றன. மக்களின் பக்கமும் அவர்கள் பக்கமே குவிந்துள்ளது.
முஸ்லிம் தேசத்திற்குள் ஏற்பட்டுவரும் ஒரு ஏற்றத் தாழ்வை சமூக சமத்துவமின்மையை இங்கே தொட்டுக் காட்டலாம் என நான் நினைக்கின்றேன். அண்மையில் ஒரு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கலந்து கொண்ட மாணவர்களில் சுமார் 60 மாணவியர்களும் 10 மாணவர்களும் இருந்தனர். பொதுவாக இலங்கைப் பல்கலைக்கழக நுழைவில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே உள்ளது. ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இதற்கொரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் முஸ்லிம் சமூகத்தில் பல்கலைக்கழக நுழைவில் ஆண்-பெண் வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்குமிடையிலான வித்தியாசமாக உருவெடுத்துள்ளது.
பெண்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டுகின்றனர் என்ற மகிழ்ச்சியை மழுங்கடிக்கச் செய்யும் அளவுக்கு ஆண்களது கற்கும் ஆர்வம் குன்றிக் குறைந்து போயுள்ளது. சாதாரண தரம் மற்றும் உயர் தரத்திலிருந்தே இந்த வேறுபாடு வெளிப்பட ஆரம்பிக்கின்றது.
மாணவர்கள் சாதாரண தரம், உயர் தரம் முடிந்ததும் உழைக்கும் மனநிலைக்குச் சென்றுவிடுகின்றனர். சிலரது குடும்ப நிலை அந்த நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அடுத்து முஸ்லிம்களில் அதிகமானவர்களிடம் உடனடியாக கையில் காசு புரள வேண்டும் எனன்ற எண்ணமே அதிகம் உள்ளது.
கற்றுத் தேறி ஒரு அரசாங்க உத்தியோகத்தைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதில்லை. 20, 25 சம்பளம் தருவார்கள். அதை விட வெளிநாடு சென்றால் இப்போதே அதைவிட அதிகமாக உழைத்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போடுகின்றனர். முஸ்லிம் சமூகம் குறித்த நல்லெண்ணத்தையும் உயர்ந்த எண்ணத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் எழவில்லை. காசுதான் அனைத்தையும் தீர்மாணிக்கும் என்று நினைக்கின்றனர்.
இந்த சிந்தனையின் விளைவால் 1300 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் ஒரு வர்த்தக சமூகமாகவே பார்க்கப்படுகின்றனர். வர்த்தகம் என்பது கேவலமானது அல்ல. இருப்பினும் எம்மை வர்த்தக சமூகம் என்ற இடத்திலிருந்து கல்விச் சமூகம் என்ற இடத்திற்கு நகர்த்த வேண்டியுள்ளது. இதை வளரும் இளம் சமூகம்தான் இலட்சியமாகவும், இலக்காகவும் கொண்டு எழுச்சியுடன் செயற்பட வேண்டும்.
இன்று எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஆண்-பெண் கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வு பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.
பெண்கள் பொதுவாக தம்மை விட அதிகம் படித்த ஆண்களை மணக்க விரும்புவர். ஆண்கள் தம்மை விட கொஞ்சம் குறைவாகப் படித்த பெண்ணைக் கரம் பிடிக்க விரும்பும்புவர். ஒரு சிலர் இதற்கு மாற்றமான மனநிலையில் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் மனநிலை இதுதான். எதிர்காலத்தில் படித்த முஸ்லிம் பெண்களுக்கு எமது சமூகத்தில் பொருத்தமான மாப்பிள்ளை இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.
இது போன்ற சூழ்நிலையில் மார்க்கப் பற்றும் ஈடுபாடும் இல்லாத முஸ்லிம் பெண்கள் சிலர் அந்நிய ஆண்களுடன் வாழ்க்கை நடாத்தும் நிலை ஏற்படலாம். இதனால் மார்க்கத்துடன் ஈடுபாடு இல்லாத ஒரு புதிய தலைமுறை உருவாகும் ஆபத்து உள்ளது.
மனைவி படித்தவளாகவும், கணவன் படிக்காதவனாகவும் இருக்கும் போது குடும்ப வாழ்வில் பலத்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனைவி சொல்லும் சில நல்ல அறிவுறைகளைக் கூட படித்தவள் என்ற திமிரில் பேசுகின்றாள் என கணவன் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படலாம்.
கணவன்-மனைவியருக்கிடையே தேவையற்ற “ஈகோ” பிரச்சினைகள் உருவாகவும், மனைவி சொல்லும் நல்ல விடயத்திற்குக் கட்டுப்பட்டால் கூட நான் என்னை முட்டாளாக எடுத்துக் கொண்டதாக ஆகிவிடுமோ என கணவன் அச்சப்படலாம்.
படிக்காத கணவன் பெண்ணின் தொழில் ரீதியான தொடர்புகள் விடயத்தில் சந்தேகப்படலாம். தேவையில்லாத மனக்கசப்புக்கள் அதிகரிக்கலாம்.
படித்திருக்கின்றேன், தொழிலும் இருக்கின்றது, படிக்காத கணவனுடன் வாழ்ந்து எதற்காக வதைப்பட வேண்டும்? தனித்திருப்போம் என்ற எண்ணம் பெண்ணிடம் மேலோங்கி நின்றால் தேவையற்ற விவாகரத்துக்கள் அதிகமாகலாம்.
மனைவி கணவனை விட அதிக சம்பளம் பெறுபவளாக மாறும் போது அது சில குடும்பங்களில் கௌரவப் பிரச்சினைகளை உருவாக்கி கணவன்-மனைவி உறவைக் கசக்க வைக்கும். இப்படி இதைச் சூழ எண்ணற்ற பிரச்சினைகள் தலைதூக்கும் ஆபத்து உள்ளது.
படித்தாளாவது பெருத்த சீதனம் இல்லாத மாப்பிள்ளை கிடைக்கலாம் என்ற எண்ணம் பெண் கல்வியல் வளர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. இந்த வளர்ச்சி வரவேற்கத்தக்கது என்றால் பெண்களுக்கு இணையாக ஆண்களும் கற்கும் போதுதான் அதன் உண்மையான பலாபலனை சமூகம் அடைய முடியும். அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று ஆரம்பத்தில் பெண்களின் கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தினர். இப்போது ஆட்டோ இருக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பிருக்க ஆணுக்கு எதற்குப் படிப்பு என்ற மனநிலை ஆண்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெருத்த தடையாக அமைந்துள்ளது. இந்த மனநிலை மாற வேண்டும். ஆண் பிள்ளைகளையும் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் பெற்றோருக்கு ஏற்பட வேண்டும்.
தொலைக்காட்சி, சினிமா, நாகரீக மோகம், கூடாத நட்பு என இன்னும் பல அம்சங்கள் ஆண்களின் கல்வில் வீழ்ச்சியை உண்டு பண்ணி வருகின்றது. இதற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும்.
ஏற்றத்தாழ்வு ஆண்-பெண் கல்வி விடயத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். இது குறித்து சிந்தித்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.