‘நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களது சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.’ (2:224)
நல்ல விடயங்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பது கூடாது. உதாரணமாக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்தப் பள்ளிக்கு எந்த உதவியும் நான் செய்ய மாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு பின்னர் உதவி செய்ய வேண்டிய தேவை வரும் போது சத்தியம் செய்துவிட்டேன் அதனால் தர முடியாது என்று கூறி நல்ல காரியத்திற்கு அல்லாஹ்வைத் தடையாக ஆக்கக் கூடாது. தான் ஒரு சத்தியம் செய்து அந்த சத்தியத்தை முறிப்பதுதான் நல்லது என்று கண்டால் அதை முறித்துவிட்டு பரிகாரம் காண வேண்டும். சத்தியத்தைக் காரணம் காட்டி நன்மைகள் செய்வதைத் தவிர்த்து வருவதைத் தவிர்க்க வேண்டும். ஆயிஷா(ரழி) அவர்கள் மீது அவதூறு சொன்ன நபித்தோழருக்கு இனி எதையும் கொடுக்கமாட்டேன் என அபூபக்கர்(வ) அவர்கள் கூறினார்கள். பின்னர் 2:22 என்ற வசனம் அருளப்பட்ட போது தனது மனநிலையை மாற்றிக் கொண்டார்கள்.
வீணான சத்தியம்:
‘உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்கு அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் (சத்தியம் செய்யும் நோக்கத்துடன்) செய்பவற்றிற்காக அவன் உங்களைக் குற்றம் பிடிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ சகிப்புத்தன்மை உடையவன்.’ (2:225)
சத்தியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சும்மா பேச்சு வழக்கில் வல்லாஹி – அல்லாஹ் மீது சத்தியமாக- என்று கூறும் பழக்கம் சிலரிடம் இருக்கலாம். தான் சொல்லும் செய்தியை உண்மைப்படுத்து வதற்காக அல்லது உறுதிப்படுத்துவதற்காகவே சத்தியம் செய்யப்படுகின்றது. இஸ்லாத்தின் பார்வையில் பொய்ச்சத்தியம் செய்வதும், சத்தியத்தை முறிப்பதும் பெரும் குற்றமாகும். ஆனால், சத்தியம் செய்யும் எண்ணம் இல்லாமல் சும்மா பேச்சு வழக்கில் ஒருவர் சத்தியத்திற்குரிய வாசகத்தைப் பாவித்து விட்டால், அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார் என இந்த வசனம் கூறுகின்றது. எனினும், சத்தியம் செய்யும் எண்ணத்துடன் அல்லாஹ் மீது ஆணையாக என்ற வார்த்தையைப் பயன்படுத்திவிட்டால் அந்த சத்தியத்தை நிறைவேற்றுவதை சத்தியம் செய்தவர் தன்மீது கடமையாக்கிக் கொண்டார். அதை அவர் முறித்தால் அதற்காக,
1. தனது குடும்பத்திற்கு அளிக்கும் உணவைப் போன்று நடுத்தரமான உணவை பத்து ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
2. அல்லது பத்து ஏழைகளுக்கு ஆடை அளிக்க வேண்டும்.
3. அல்லது, ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
இதில் எதையும் செய்ய முடியாதவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என அல்லாஹ் கூறுகின்றான்.
‘உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான். எனினும், நீங்கள் உறுதியாகச் செய்த சத்தியங்களுக்காக அவன் உங்களைக் குற்றம் பிடிப்பான். எனவே, (சத்தியத்தை முறித்தால்) அதற்கான பரிகாரம், நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு வழங்கும் உணவில் நடுத்தரமானதை பத்து ஏழைகளுக்கு வழங்குவதாகும். அல்லது அவர்களுக்கு ஆடை வழங்குவதாகும். அல்லது ஒர் அடிமையை விடுதலை செய்வதாகும். யார் (இவற்றில் எதையும்) பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்கட்டும். நீங்கள் சத்தியம் செய்து (முறித்து) விட்டால், இதுதான் உங்கள் சத்தியங்களுக்கான பரிகாரமாகும். எனினும், உங்கள் சத்தியங்களை நீங்கள் பேணிக்கொள்ளுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறு தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’ (5:89)
எனவே, சத்தியம் செய்யும் முன்னர் நிதானமாக சத்தியம் செய்ய வேண்டும். சத்தியத்தைப் பேணும் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.