அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது.
இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் ஆரம்ப காலத்தில் தமிழ் பேசும் தௌஹீத் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்ட கருத்தாகும். இருப்பினும் இந்த சரியான கருத்திலிருந்து சிலர் தடம் புரண்டதால் ஹதீஸ்களை அவரவர் தமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நான் தமிழகம் சென்றிருந்த போது ஒரு பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பயானின் இறுதியில் ஒரு அமைப்பைச் சேர்ந்த பலர் ஒன்றினைந்து திட்டமிட்டு வந்து கேள்விகளைத் தொடுத்தனர். அதில் ஒருவர் ஆயிஷா(ரழி) அவர்களை நபி(ச) அவர்கள் ஆறு (6) வயதில் மணந்ததாகவும், ஒன்பது (9) வயதில் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டதாகவும் புஹாரியில் ஹதீஸ் வருகின்றது. இதையும் ஏற்பீர்களா? எனக் கோட்டார். குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ள தௌஹீத் அமைப்பைச் சேர்ந்தவர் அவர். எனவே, இது எந்த குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகின்றது என நான் அவரிடம் கேட்டேன். இதை மனசாட்சி ஏற்குதா? நீங்கள் இந்த அடிப்படையில் செயற்படுவீர்களா? என அவர் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார். இடையில் மறித்த நான் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டும் நிராகரிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்த நீங்கள் இப்போது மனசாட்சிக்கு முரண்படும் ஹதீஸ்களையும் மறுக்க வேண்டும் என்கின்றீர்களா? நபி(ச) அவர்கள் 9 வயது ஆயஷா(ரழி) அவர்களுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை என் மனசாட்சி மறுக்கவே இல்லை. எனது தாய் திருமணம் முடிக்கும் போது அவருக்கு 14 வயது. அவரின் தாய் மணக்கும் போது அவருக்கு 12 வயது. இப்படி இருக்கும் போது 1400 வருடங்களுக்கு முன்னர் 9 வயதுப் பெண்ணுடன் இல்லறம் நடத்துவது என்பது மனசாட்சி ஏற்க முடியாத கருத்து அல்ல எனக் கூறி மற்றும் சில நடைமுறை உதாரணங்களையும் கூறினேன்.
மக்களை எந்த மனநிலைக்கு இந்த கொள்கை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.
هل النساء أكثر أهل النار
என்ற பெயரில் ஒருவர் ஒரு நூலை எழுதுகின்றார். பெண்கள் அதிகமாக நரகத்தில் இருப்பார்களா? என்பது இதன் அர்த்தமாகும். ஒரு பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ஸல்) அவர்கள் பெண்களை நரகில் அதிகமாகக் கண்டதாக கூறினார்கள். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும். பெண்ணிலைவாத சிந்தனையுடைய இந்த நூலாசிரியர் இந்த ஹதீஸை மறுக்கின்றார். அதற்கு அவர் வாதங்களை முன்வைக்கும் போது பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அந்த நல்ல சந்தர்ப்பத்தில் நீங்கள் அதிகமாக நரகத்தில் இருப்பீர்கள் என்ற மோசமான விடயத்தைக் கூறுவார்களா? இதை மனசாட்சி ஏற்குமா? அது வாழ்த்துக் கூறும் நேரமல்லவா? நல்ல பண்புள்ள நாகரீகமான நடத்தையுள்ள நபி(ஸல்) அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு செய்தியைக் கூறி இருப்பார்களா? எனக் கேள்வி கேட்டு ஹதீஸை மறுக்கிறார்.
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முனைந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையில் இருந்து இறங்கி வந்து அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என பல காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுக்கும் நிலை தோன்றிவிடும். எனவே, குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஆபத்தானது அதே வேளை வழிகேடர்களின் கொள்கையாகத் திகழ்ந்துள்ளது. அந்த வழியில் போனால் எத்தகைய விபரீதமான கருத்துக்கள் ஏற்படும் என்பதை இந்தக் கட்டுரையூடாக விபரிக்க முனைகின்றேன்.
01. மீன் சாப்பிடலாமா?
இறந்தவைகள் உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது என குர்ஆன் கூறுகின்றது.
“தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடுத்துள்ளான்.. .. .. .. .” (2:173) (பார்க்க: 5:3, 16:115)
மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் இறந்த பின்னரும் அவற்றை நாம் சாப்பிடுகின்றோம். நேரடியாகப் பார்த்தால் அது இந்த குர்ஆன் வசனத்திற்கு முரணானதாகும். எனினும் மீன், வெட்டுக்கிளி இரண்டும் இறந்த பின்னரும் சாப்பிடத்தக்கவை என ஹதீஸ் கூறுகின்றது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் மீன்கள் இறந்த பின்னரும் முஸ்லிம்களால் சாப்பிடப்பட்டு வருகின்றது.
அல்லாஹ் குர்ஆனில் இறந்தவை ஹராம் என பல இடங்களில் கூறியிருக்கும் போது இறந்து போன மீன்களை உண்ணலாம் என ஹதீஸில் எப்படி வரமுடியும்? இது குர்ஆனின் கருத்துக்கு முரணாக இருக்கிறதே என யாரும் வாதிடுவதில்லை. குர்ஆன் பொதுவாக ஹராம் எனக் கூறியிருந்தாலும் ஹதீஸும் வஹிதான். குர்ஆனில் பொதுவாகக் கூறப்பட்ட சட்டத்தில் விதிவிலக்களிக்கும் அதிகாரம் அல்லாஹ்வினாலே நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது குர்ஆனுக்கு முரண் அல்ல. குர்ஆன் கூறும் பொதுச் சட்டத்திலிருந்து ஹதீஸ் மீனுக்கு விதிவிலக்களித்திருக்கிறது என்றுதான் அனைத்து முஸ்லிம்களும் விளங்கிக் கொள்கின்றனர். இவ்வாறுதான் ஏனைய ஹதீஸ்களையும் விளங்க வேண்டும்.
02. தவறான பாலியல் உறவு:
“உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள்.” (2:223)
மனைவியர் விளை நிலம் என்றும், நீங்கள் விரும்பிய விதத்தில் அவர்களிடம் செல்லுங்கள் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. எப்படி வேண்டுமானாலும் மனைவியுடன் இன்பம் அனுபவிக்கலாம் என இந்த வசனம் கூறுகின்றது. எனினும் மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்வது ஹதீஸ்களில் தடுக்கப்பட்டுள்ளது. எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுவதற்கு இது முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுப்பதா அல்லது எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் என்ற குர்ஆன் வசனத்தை இந்த ஹதீஸ்கள் முறையாக விளக்குகின்றன என்று எடுத்துக் கொள்வதா?
03. காபிரான சந்ததிக்கும் சொத்துரிமை
“இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11)
என அல்லாஹ் கூறுகின்றான். “அல் அவ்லாத்” என்றால் காபிரான பிள்ளைகளையும் குறிக்கும். இந்த அர்த்தத்தில்தான் குர்ஆனில் அவ்லாத் என்ற பதம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பெற்ற பிள்ளை குப்ரில் இருந்தால் தாய்-தந்தையின் சொத்திலிருந்து அந்தப் பிள்ளைக்கு வாரிசுரிமைச் சொத்து வழங்கப்படப் கூடாது. இவ்வாறே பிள்ளை முஸ்லிமாக இருந்து தந்தை காபிரா இருந்தால் பிள்ளையின் சொத்தில் தந்தைக்கும் பங்கு சேராது என ஸதீஸ் கூறுகின்றது. இது குர்ஆனுக்கு முரண்படுகின்றது. காபிராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் பிள்ளை பிள்ளைதான். மகன் காபிராகிவிட்டால் அவன் மகன் இல்லையென்றாகிவிடுமா? இந்த அடிப்படையில் காபிரான பிள்ளைக்கு சொத்தில் பங்கு இல்லை என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அறிவுக்கும், மனசாட்சிக்கும் முரண்படுகின்றது எனக் கூறி மறுக்க முடியுமா? அல்லது பிள்ளைகளுக்கு சொத்தில் பங்குள்ளது என்ற குர்ஆனின் சட்டத்திலிருந்து சொத்துக்காக கொலை செய்த வாரிசு, காபிரான வாரிசு போன்றவர்களுக்கு வாரிசுரிமையில் பங்கு இல்லை எனக் கூறி அவர்களை பொதுச் சட்டத்திலிருந்து ஹதீஸ் விதிவிலக்களிக்கின்றது என்று எடுத்துக் கொள்வதா?
04. ஒரு பெண்ணையும் அவள் சாச்சியையும் ஒரே நேரத்தில் முடிக்கலாமா?
ஒரு பெண்ணையும், அவளது தாயின் சகோதரிகளையும் (சாச்சி, பெரியம்மா) தந்தையின் சகோதரி (மாமி)யையும் ஒரே நேரத்தில் ஒருவர் மணமுடிப்பது இஸ்லாத்தில தடைசெய்யப்பட்டதாகும். எனினும் அல் குர்ஆன் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடுகின்றது. அதில் இந்தத் தரப்பினர் இடம்பெறவில்லை. அந்த வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது.
“…. இவர்களைத் தவிர ஏனையோரை நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடாதவர்களாகவும், கற்பொழுக்கம் உடையவர்களாகவும், உங்கள் செல்வங்களை (மஹராக)க் கொடுத்து அடைந்து கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது…..” (4:24)
என்று முடிக்கின்றான். இதற்குப் பின்னால் உள்ள உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளனர். எனக் குர்ஆன் கூறிய பின்னர் ஹதீஸ் வேறு சிலரையும் சில சந்தர்ப்பத்தில் திருமணம் முடிக்கத் தாகாகவர்கள் எனக் கூறுகின்றது. இப்போது குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி இத்தகைய ஹதீஸ்களை மறுப்பதா? அல்லது ஹதீஸும் சட்ட ஆதாரம்தான் குர்ஆனின் சட்டத்தையும், ஹதீஸின் சட்டத்தையும் இணைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதா? எது நேர்வழி, எது வழிகேடு என்று சிந்தித்துப் பாருங்கள். குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றை மோத விடாமல் இரண்டையும் இணைத்து பொருள் கொள்வதுதானே நியாயமான நிலை? நேர்மையான விடை? இதை விட்டும் விலகிச் செல்வது நபி(ச) அவர்களின் தூதுத்துவத்தை முழுமையாக ஏற்காத குற்றத்தில் அல்லவா நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும்?
05. இந்த ஹதீஸ்களையும் மறுக்கலாமா?
சமீபத்தில அல்லாஹ்வுக்கும் உருவம் இருக்கின்றதா? என்றொரு வாதம் நடந்தது. அந்த விவாதத்தில் மறுமையில் மக்கள் நரகத்தில் போடப்பட்ட பின்னர் நரகம் “இன்னும் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அல்லாஹ் தன் காலை நரகத்தில் வைத்து நரகத்தை நிரப்புவான் என்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் தௌஹீத் தரப்பால் முன்வைக்கப்பட்டது. இந்த ஹதீஸை வழிகேடர்கள் சிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஏற்கனவே மறுத்துள்ளனர்.
“இதிலிருந்து இழிவுபடுத்தப்பட்டவனாகவும் சபிக்கப்பட்டவனாகவும் நீ வெளியேறி விடு! அவர்களில் எவரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்கள் அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்.” (7:18)
ஷைத்தானைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக அல்லாஹ் கூறுகின்றான்.
“….ஜின்கள், மனிதர்கள் அனைவரிலிருந்தும் நான் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இரட்சகனின் வாக்கு பூர்த்தியாகி விட்டது.” (11:119)
மனிதர்கள், ஜின்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக இந்த வசனம் கூறுகின்றது. இதே கருத்தை 32:13 ஆம் வசனம் கூறுகின்றது.
“உன்னாலும், அவர்களில் உன்னைப் பின்பற்றும் அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன் (என்றும் கூறினான்.)” (38:85)
ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றியவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் அந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் கடைசியில் அல்லாஹ்வின் கால் மூலம் தான் நரகம் நிரப்பப்படுவதாகக் கூறுகின்றது. எனவே, இந்த ஹதீஸ் மேற்குறிப்பிட்ட அத்தனை ஆயத்துக்களுக்கும் முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுத்தனர். இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் இந்த ஹதீஸை எப்படி எடுத்து வைக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரைப் பொருத்தவரையில் குர்ஆனில் மூடலாக சொல்லப்பட்டதை ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது என்றுதான் எடுத்துக் கொள்வர். மாற்றமாக குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் பேசுவதாக அவர்கள் கருதுவதில்லை.
06. இந்த வாதத்தை முன்வைப்போர் மற்றும் பல ஹதீஸ்களையும் நிராகரிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படும்.
இறந்த ஒருவருக்காக உயிருடன் இருக்கும் ஒருவர் சில நிபந்தனைகளுடன் நோன்பு நோற்பது, ஸதகா கொடுப்பது, ஹஜ் செய்வது போன்ற கிரியைகளைச் செய்தால் அவை இறந்தவருக்கு சேரும் என்பது ஹதீஸ்கள் தரும் தகவலாகும். ஆனால் குர்ஆனில் மறுமை நாள் பற்றிக் கூறும் போது
“ஒவ்வொரு ஆத்தமாவுக்கும் அது சம்பாதித்தவற்றுக்கான கூலி…” (20:15)
வழங்குவதற்கான நாளாகக் கூறுகின்றது. அந்தந்த ஆத்மா சம்பாதித்தவைக்குத்தான் கூலி கொடுக்கப்படும் என குர்ஆன் கூறுகின்றது.
“மேலும், நிச்சயமாக அவனது முயற்சி விரைவில் அவனுக்குக் காண்பிக்கப்படும்.” (53:40)
“நிச்சயமாக இது உங்களுக்குரிய கூலியாக இருக்கிறது. மேலும், உங்களது முயற்சி நன்றி பாராட்டத்தக்கது (என்றும் கூறப்படும்.)” (76:22)“(அவை) தமது முயற்சி குறித்து திருப்தியுடனிருக்கும்.” (88:9)
“எனவே, எவர் நம்பிக்கை கொண்டவராக நல்லறங்கள் புரிகின்றாரோ அவரது முயற்சி நிராகரிக்கப்பட மாட்டாது. நிச்சயமாக நாம் (அதை) அவருக்காகப் பதியக் கூடியவர்களாக இருக்கின்றோம்.” (21:94)
“மேலும், மனிதனுக்கு அவன் முயற்சித்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை.” (53:39)
மேற்படி வசனங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்ததிற்குத்தான் கூலி வழங்கப்படும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது.
எனினும் ஹதீஸ்கள் நோன்பு, ஹஜ், ஸதகா என்பன சேரும் என்று கூறுகின்றன. இந்த ஹதீஸ்களையும் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுக்க நேரிடும். எனினும் சரியான பாதையில் உள்ளோர் இவற்றை முரண்பாடாக அல்லாமல் விதிவிலக்காக எடுத்துக் கொள்வர்.
07. இவ்வாறே அல் குர்ஆனின் பல வசனங்கள் ஒருவருடைய பாவச் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் எனக் கூறுகின்றது.
” (நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொரு ஆன்மாவும் (தீமையை) தனக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கின்றது. எந்த ஓர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது.” (6:164)
“எவர் நேர்வழியில் செல்கிறாரோ அவர் தனக்காகவே நேர்வழியில் செல்கிறார். யார் வழிகேட்டில் செல்கிறானோ அவன் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறான். எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. மேலும் நாம், எந்த ஒரு தூதரையும் அனுப்பாது (எவரையும்) வேதனை செய்வோராக இருந்ததில்லை.” (17:15)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. (பாவச்) சுமை கனத்த ஆன்மா அதைச் சுமப்பதற்கு (எவரையேனும்) அழைத்த போதிலும், (அழைக் கப்பட்டவன்) உறவினராக இருந்த போதிலும் அதிலிருந்து எதையும் அவன்மீது சுமத்தப்பட மாட்டாது.” (35:18)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. பின்பு உங்கள் அனைவரின் மீளுதலும் உங்கள் இரட்சகன் பாலே உள்ளது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.” (39:7)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது.” (53:38)
இத்தனை வசனங்களும் இந்தக் கருத்தைக் கூறுகின்றன. எனினும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் உலகில் ஒருவர் பிறருக்கு அநீதமிழைத்தால் அநீதமிழைத்தவரின் நன்மைகள் பாதிக்கப் பட்டவனுக்கு வழங்கப்படும். அவனது நன்மைகள் முடிந்துவிட்டால் பாதிக்கப்பட்டவனின் பாவத்தை அநீதமிழைக்கப்பட்டவன் சுமக்க நேரிடும் என வந்துள்ளது. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வோர் இந்த ஹதீஸ்களையும் தமது உரைகளிலும், எழுத்துக்களிலும் பயன்படுத்துகின்றனர். இது எப்படி என்றுதான் புரியவில்லை.
ஒருவர் பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது எனப் பல வசனங்கள் கூறுகின்றன. இதே வேளை,
“நிச்சயமாக அவர்கள் தமது (பாவச்) சுமைகளையும், அத்துடன் (தாம் வழி கெடுத்தோரின் பாவச்) சுமைகளைத் தமது சுமைகளுடன் சுமப்பர். மறுமை நாளில் அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவர்.” (29:13)
இந்த வசனம் சிலர் சிலரின் பாவத்தை சுமப்பர் என்று வருகின்றது. குர்ஆன் ஆயத்துக்களின் வெளிப்படையான அர்த்தம் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாகத் தென்படுகின்றது. இது போன்ற சந்தர்ப்பங்களில் இரண்டு ஆயத்துக்களையும் நிராகரிப்பதா? அல்லது ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பதா? அல்லது இரண்டையும் முரண்படாமல் விளங்கி இரண்டையும் ஏற்பதா? எனக் கோட்டால் மூன்றாவது முடிவைத்தான் ஒரு உண்மை முஸ்லிம் எடுப்பான். அந்த அடிப்படையில்தான் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் விடயத்திலும் செயற்பட வேண்டும். ஹதீஸும் வஹீ என்பதால் ஒன்றுடன் ஒன்று முரண்படுவது போல் தோன்றினாலும் ஆழமாக அவதானித்தால் ஏதேனும் ஒரு உடன்பாடு இருக்கும். அந்த உடன்பாட்டைக் கண்டுபிடித்து இரண்டையும் இணைத்து விளக்கம் சொல்ல வேண்டும்;. உடன்பாட்டைக் காணமுடியாவிட்டால் நான் புரிந்த கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது எனக் கருதி அந்த ஹதீஸ் குறித்து மௌனம் காக்க வேண்டும்.
எனவே, குர்ஆனை ஏற்று ஹதீஸை மறுக்கும் வழிகேட்டிலிருந்த விடுபட்டு இரண்டையும் இணைத்து விளக்கம் கொள்ளும் நேரான பாதையில் பயணிப்போமாக!..