கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்

பிக்ஹுல் இஸ்லாம் – 12

சுன்னத்தான தொழுகைகள் – 4

 

கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்:

இரவுத் தொழுகைக்காக தயாரானதும் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது சிறந்ததாகும்.

 

‘உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக்காக எழுந்தால் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தனது தொழுகையை ஆரம்பிக்கட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”

அறிவிப்பவர்     : அபூஹுரைரா(வ)

நூல் : முஸ்லிம் (768-198),

இப்னு குஸைமா 1150

 

‘நபி(ச) அவர்கள் இரவில் தொழ எழுந்தால் இலேசான இரண்டு ரக்அத்துக்கள் மூலம் தனது தொழுகையை ஆரம்பிப்பார்கள்” என ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: முஸ்லிம்- 767-197

 

பின்னால் தொழப்படும் தொழுகைக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக முதல் இரு ரக்அத்துக்களையும் தொழுவார்கள் என இதற்கு காரணம் கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் இரவுத் தொழுகையை இலகுவான இந்த இரண்டு ரக்அத்துக்கள் மூலம் ஆரம்பிப்பது சிறந்ததாகும். இதற்கு மாற்றமாக நீண்ட ரக்அத்துக்களையே ஒருவர் முதலில் தொழுதாலும் குற்றமில்லை.

 

நபி(ச) அவர்கள் சில நேரங்களில் அப்படியும் செய்துள்ளார்கள். ஹுதைபா(வ) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் இதனை உணர்த்துகின்றது.

 

‘நான் ஒரு நாள் இரவு நபி(ச) அவர்களுடன் தொழுதேன். முதலாவது, சூறதுல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறாவது வசனத்தில் ருகூஃ செய்வார்கள் என (மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன். தொடர்ந்து ஓதிக் கொண்டே சென்றார்கள். பகரா சூறாவை ஓதி ரக்அத்தை நிறைவு செய்வார்கள் என எண்ணினேன். அதன் பின் சூறா ஆல இம்றானையும் ஓதினார்கள்…..”

நூல்: முஸ்லிம் (772-203), நஸாஈ (1664)

 

எனவே, இலேசான இரண்டு ரக்அத்துக்கள் இல்லாமல் கூட நேரடியாகவே கியாமுல் லைல் – நீண்ட இரவுத் தொழுகையை ஆரம்பிக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

 

தக்பீரின் பின்னர்:

 

தொழுகைக்காக தக்பீர் கட்டியதன் பின்னர் வழமையாக ஓதும் துஆவையும் ஓதலாம். பின்வரும் துஆக்களை ஓதிக் கொள்வது சிறந்ததாகும்.

 

 

 


اللَّهُمَ لَكَ الحَمْدُ أَنْتَ قَيْمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الحَمْدُ لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الحَمْدُ أنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأرْضِ وَلَكَ الحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَوَاتِ وَالأرْضِ وَلَكَ الحَمْدُ أنْتَ الحَقُّ وَوَعْدُكَ الحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَالجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالنَّبِيُّونَ حَقٌّ وَمُحَمَّدٌ صَلى الله عَليهِ وَسَلم حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ لا إلَهَ إلاَّ أنْتَ

 

இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் அறிவித்தார்கள். ‘நபி(ச) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும்:

 

‘இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை” என்று கூறினார்கள். ”

நூல்: புஹாரி- 1120

 

இவ்வாறே பின்வரும் துஆவையும் ஓதியுள்ளார்கள்.

 

'நபி(ச) அவர்கள் இரவில் தொழ எழுந்தால் நபி(ச) அவர்கள் தமது இரவுத் தொழுகையை எதைக் கொண்டு ஆரம்பிப்பார்கள் என ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்,

اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ. فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ. عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ. أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ. اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

 

அறிவிப்பவர்     : அபூஸலமதிப்னு அப்துர் ரஹ்மான்(வ)

நூல்       : நஸாஈ- 1625, அபூதாவூத்- 767, இப்னு ஹிப்பான்- 2600

 

இஃதல்லாத வேறு சில துஆக்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஓதி தொழுகையை ஆரம்பிக்கலாம்.

 

தொழுகையை நீட்டுவது:

 

இரவுத் தொழுகையை விரைவாகத் தொழாமல் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

 

‘நீண்ட நேரம் நின்று தொழக்கூடிய தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர்(வ)

நூல்       : முஸ்லிம்- (756-164), இப்னு குஸைமா- 1155, இப்னுமாஜா- 1421, நஸாஈ- 2526

 

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அதிகமான ருகூஃ, சுஜூத் வருவதற்காக கூடிய ரக்அத்துக்கள் தொழுவதை விட நீண்ட நிலையில் இருந்து தொழப்படும் குறைந்த எண்ணிக்கையில் தொழப்படும் தொழுகை சிறந்ததாகும் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். அதிகமான ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்பதற்காக வெகு வேகமாக தராவீஹ் தொழும் மக்கள் இதனைக் கவனத்திற் கொள்வது சிறந்ததாகும்.

 

‘நபி(ச) அவர்கள் தமது பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள்” என ஆயிஷா(Ë) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புஹாரி- 1130

 

ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹூதைபா (வ) அவர்களது செய்தியும் ஒரே ரக்அத்தில் பகரா, நிஸா, ஆலஇம்றான் ஆகிய சூறாக்களை நபி(ச) அவர்கள் ஓதியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

இரவுத் தொழுகையை நீட்டித் தொழுவதென்றால் நீண்ட சூறாக்களை ஓதுவதை மட்டும் அது குறிக்காது. நீளமான சுஜூது, ருகூஃகளை செய்யலாம், நடு இருப்புக்களைக் கூட நீளமானதாக அமைத்துக் கொள்ளலாம்.

ஹுதைபா(வ) அவர்களது அறிவிப்பில் நிலையில் நின்றதைப் போல் நீண்ட நேரம் ருகூஃ செய்தார்கள். அவர்களது சுஜூதும், கியாம் நிலையும் நெருக்கமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றார்கள்.

 

எனவே, நீண்ட ருகூஃ, நீண்ட சுஜூதுகளைச் செய்து தொழ முடியும். ஒருவர் நீண்ட நேரம் எடுத்துத் தொழாவிட்டாலும் கியாமுல் லைல் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். தொழுகை எவ்வளவு நீளமாக இருக்குமோ அவ்வளவுக்கு அது ஏற்றம் பெற்றதாக அமையும் என்பதை கவனத்திற் கொள்ளவும்.

 

நீளமாகத் தொழ வேண்டும் என்பதற்காக அவரவர் தமது சக்திக்கு மீறி தம்மை வருத்திக் கொள்ளக் கூடாது.

 

சோர்வோ, தூக்கமோ மிகைத்தால் தொழுவதை நிறுத்திவிட வேண்டும்:

 

‘நபி(ச) அவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையும் போது இரு தூண்களுக்கிடையில் கயறு கட்டப் பட்டிருப்பதைக் கவனித்தார்கள். ‘இது என்ன?” எனக் கேட்ட போது, ‘இது ஸைனப்(Ë) அவர்கள் தொழுவதற்காகக் கட்டப்பட்டது.. அவர்கள் தொழும் போது சோர்வுற்றால் அல்லது கால்கள் வீக்கமுற்றால் இதனைப் பிடித்துக் கொள்வார்கள்.” என்று கூறப்பட்டது. அதற்கு நபியவர்கள், ‘அதை அவிழ்த்துவிடுங்கள்! உங்களில் ஒருவர் அவரது உற்சாகத்திற்கேற்ப தொழட்டும். சோர்வு ஏற்பட்டால் அவர் அமர்ந்து கொள்ளட்டும் என்றார்கள்.”

அறிவிப்பவர்     : அனஸ்(வ)

நூல்: இப்னு குஸைமா- 1180, அபூதாவூத்-312, முஸ்லிம்- (784-219), இப்னுமாஜா- 1371

 

எனவே, தூக்க மயக்கத்தில் தொழுவதைத் தவிர்க்க வேண்டும்.

 

நின்றவாறும், அமர்ந்தவாறும் தொழலாம்:

கியாமுல் லைல் தொழுகையை அமர்ந்து கொண்டும் தொழலாம்.

நபி(ச) அவர்கள் இறுதிக் கால கட்டத்தில் அவர்களுக்கு உடம்பும் போட்டுவிட்டது. இக்காலப் பகுதியில் அதிகமாக அமர்ந்த நிலையில் தொழுதுள்ளார்கள். பின்வருமாறு இதனை சுருக்கமாகக் கூறலாம்.

 

;               நின்று தொழுதல்: அதிகமாக இப்படித்தான் செய்துள்ளார்கள்.

 

;               இருந்து தொழுதல்: இறுதிக் காலப் பகுதியில் அதிகம் இப்படித்தான் தொழுதுள்ளார்கள்.

 

‘நபி(ச) அவர்கள் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள், நீண்ட நேரம் அமர்ந்தும் தொழுவார்கள். நின்று தொழுதால் நின்றவாறு ருகூஃ செய்வார்கள். அமர்ந்து தொழுதால் அமர்ந்தவாறு ருகூஃ செய்வார்கள்.”

அறிவிப்பவர்: ஆயி‘h(Ë)

நூல் : முஸ்லிம்- 106, இப்னுமாஜா- 1228,

இப்னு குஸைமா- 1246

 

நின்றும் இருந்தும் தொழுவது:

 

இருந்தவாறு தொழுவார்கள். குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதற்கு சற்று முன்னர் எழுந்து நின்று கொண்டு ஓதிவிட்டு பின்னர் நின்ற நிலையில் ருகூஃ செய்வார்கள். இது பற்றி ஆயி‘h(Ë) அவர்கள் அறிவிக்கும் போது,

 

‘நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.”

அறிவிப்பவர்     : ஆயி‘h(வ)

நூல்       : புஹாரி- 1119,

 

இந்த மூன்று அடிப்படையிலும் தொழுதுகொள்ளலாம்.

தொடரும்….

இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.