ஊடகம்தான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில் இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால் சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.
“தெரிவிப்பது நாங்கள்; தீர்மானிப்பது நீங்கள்” என ஊடகங்கள் கூறினாலும் மக்கள் எப்படித் தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றார்களோ அதற்கு ஏற்பவே செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. தமது எண்ணத்துக்கு மாற்றமாக இருக்கும் செய்திகள், கருத்துக்கு முரணாக இருக்கும் செய்திகள் தவிர்க்கப்படுகின்றன; தணிக்கைக்குள்ளாகின்றன.
இந்த நிலையில், சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் தப்பும் தவறுமாகச் சித்தரிக்கக் கூடிய செய்திகள்தான் ஊடகங்களினூடாக மக்கள் மன்றத்திற்கு வருகின்றன.
முஸ்லிம்கள் தீவிரவாதிகள்; பயங்கரவாதிகள்; பண்பாடு அற்றவர்கள்; இஸ்லாம் பிற்போக்குத்தனமானது என்ற அடிப்படையில்தான் கருத்துக்கள் வலம் வருகின்றன.
தற்போது அச்சு ஊடகங்களின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்துவிட்டன. இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தவரையில் தனி நபர்களாலும், சிறு சிறு குழுக்களாலும் எவ்வித முதலீடும், கட்டுப்பாடுகளும் இன்றி நடத்தப்படுவதால் உண்மையான செய்திகளையும் உலகுக்கு வழங்க வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பு முஸ்லிம் சகோதர, சகோதரி களால் ஓரளவு பயன்படுத்தப் படுவது மகிழ்ச்சியானதே!
இருப்பினும், இலத்திரனியல் ஊடகங்களின் நம்பகத் தன்மை உறுதியற்றதாகவும், கட்டுப் பாடுகள், தணிக்கைகள் இல்லாமையால் நாகரீகம், பண்பாடு பேணப்படாமையும் முக்கிய குறைபாடுகளாகத் தெரிகின்றன.
இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான ஒரு ஊடகம் இல்லாத குறை பரவலாகப் பலராலும் உணரப்பட்டு வருகின்றது. எமக்கான ஊடகம் இல்லாததன் பாதிப்புக்களைப் பலமுறை நாம் அனுபவித்துள்ளோம். இதே வேளை, முஸ்லிம்களின் ஊடகத் தாகத்தை உணர்ந்து கொண்ட மாற்று ஊடகங்கள் அந்தத் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் செயற்பட்டு வருகின்றன. அவை வர்த்தக நோக்கத்தில் செய்யப்பட்டாலும் அதைக் குறை கூற முடியாது.
வீரகேசரியினால் முஸ்லிம்களைக் கவனத்திற் கொண்டு “விடிவெள்ளி” வாரப் பத்திரிகை வெளியிடப்படுகின்றது. இவ்வாறே சுடர்ஒளி மூலம் “முஸ்லிம் முரசு” வெளிவருகின்றது. நாட்டு முஸ்லிம்களின் நிலையை, முஸ்லிம் உலகு குறித்த செய்திகளை இவற்றின் மூலம் ஓரளவு அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டியுள்ளது.
ஆனால், இதனால் பெரியதொரு நஷ்டத்தையும் நாம் அடைந்து வருகின்றோம். விடிவெள்ளி வெளிவர முன்னர் முஸ்லிம்களின் சில செய்திகளை வீரகேசரி தாங்கி வந்தது. இதனால் முஸ்லிம்களின் சில பிரச்சினைகளை வீரகேசரி வாசகர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது விடிவெள்ளி, முஸ்லிம் முரசு போன்ற பத்திரிகைகளை முஸ்லிம்களே வாங்கி வாசித்து வருவதால் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை ஏனைய சகோதரர்கள் அறியக் கூடிய வாய்ப்பு அருகிவிட்டது. இது எமக்கு ஏற்பட்ட பாரிய நஷ்டமாகும்.
முஸ்லிம்களுக்கென ஊடகம் தேவையென்றால் முஸ்லிம்களது பிரச்சினைகளை முஸ்லிம்களுக்குச் சொல்வதற்கான ஊடகமாக மட்டும் அது இருக்கக் கூடாது.
இஸ்லாமிய சிந்தனையுடன் உலக நிகழ்ச்சிகளை நோக்கி, தேசிய சர்வதேசப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கக்கூடிய ஊடகமாக இஸ்லாமிய ஊடகம் இருக்க வேண்டும். அது முஸ்லிம்கள் மட்டும் பயன் படுத்தும் ஊடகமாக இல்லாமல் மாற்று சமூகங்களும் பயன்படுத்தும் ஊடகமாக இருக்க வேண்டும். இதன் மூலம் இஸ்லாம் இன்றைய காலத்துக்கும் உகந்தது; இன்று உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில்தான் தீர்வு இருக்கின்றது என்ற உண்மை எல்லா மக்களின் உள்ளங்களிலும் ஊன்றப்பட வேண்டும். இதுதான் இஸ்லாமிய ஊடகத்தின் இலட்சியமாக இருக்க வேண்டும்.
இத்தகைய இலட்சியம் கொண்ட அந்த ஊடகம் ஒன்றை முஸ்லிம்கள் உருவாக்குவதற்கு முன்னரே அச்சு ஊடகங்கள் மங்கி மறைந்துவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.
அச்சு ஊடகம் எனும் போது பெருத்த முதலீடு, கூடிய உழைப்பு, தொழிலாளர்கள், ஊழியர்கள் என பெரும் பிரச்சினைகள் இருப்பது குறித்து சிந்தித்து நாட்களை நகர்த்துவதை விட ஜனரஞ்சகமான, அனைத்து மக்களையும் சென்றடையக்கூடிய இலத்திரனியல் ஊடகமூடாக களத்தில் கால் பதித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகர்வது நல்லது என்பது எமது அபிப்பிராயமாகும்.