لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.’ (2:284)
இந்த வசனம் அல்லாஹ்வின் அறிவைப் பற்றிப் பேசுகின்றது. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். இரகசியம், பரகசியம் இரண்டும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றே என்று கூறுகின்றது. அவன் உள்ளங்களில் உள்ளவற்றையும் அறிந்தவன்.
قُلْ إِن تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللَّـهُ ۗ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
‘நீங்கள், உங்கள் உள்ளங்களில் உள்ளதை மறைத்தாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிவான். மேலும், வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என (நபியே!) நீர் கூறுவீராக!’ (3:29)
وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى
‘வார்த்தையை நீர் சப்தமிட்டுச் சொன்னாலும், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மறைவானதையும் நன்கறிவான்.’ (20:7)
இந்தக் கருத்தில் ஏராளமான வசனங்கள் உள்ளன. அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன். அது குறித்து அவன் உங்களை விசாரிப்பான். நாடியவர்களை அவன் மன்னிப்பான். நாடியவர்களைத் தண்டிப்பான் என்று கூறுகின்றது. உள்ளத்தில் உதிக்கும் தப்பான, தவறான எண்ணங்களுக்கும் விசாரனைகள் உண்டு என்பது நபித்தோழர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது. உள்ளத்தில் எந்தக் கெட்ட எண்ணங்களும் எழாவண்ணம் வாழ்வது கஷ்டமே! என அவர்கள் பயந்தனர். எனவே, இது குறித்து நபி(ச) அவர்களிடம் முறையிட்டார்கள். இது பற்றி இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.
‘இந்த வசனம் அருளப்பட்ட போது அது நபித்தோழர்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்தது. எனவே, அவர்கள் நபி(ச) (அவர்களிடம் வந்து முழங்காலில் விழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே! தொழுகை, நோன்பு, ஜிஹாத், ஸதகா என எமது சக்திக்குட்பட்ட அமல்களைச் செய்யுமாறு நாம் பணிக்கப்பட்டோம். அவற்றை நாம் செய்கின்றோம். இதோ இப்போது இந்த ஆயத்து உங்களுக்கு அருளப்பட்டுள்ளது. இதைச் செய்ய நாம் சக்தி பெற மாட்டோமே என தமது கவலையை வெளியிட்டனர். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் செவியேற்றோம், மாறு செய்தோம் என்று கூறியது போல் நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? கூடாது! நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம். இதில் நாம் தவறு விட்டால்) எங்கள் இறைவனே மன்னித்து உன்னிடமே மீள வேண்டியுள்ளது என்று நீங்கள் கூறுங்கள் என்று கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் செவியேற்றோம், கட்டுப்பட்டோம் எங்கள் இறைவனே! மன்னித்துவிடு. உன் பக்கமே மீள வேண்டியுள்ளது எனக் கூறினார்கள். அவர்கள் இதை ஏற்று வாயால் சொன்ன போது அதை ஒட்டி (2:285) வசனம் அருளப்பட்டது.
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّـهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
‘இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட்டோம். நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம், எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.’ .(2:285)
நபியுடைய ஏவலை அவர்கள் செய்த போது, 2:283 வசனத்தை அல்லாஹ் மாற்றி,
لَا يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
‘எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். அது சம்பாதித்ததன் நன்மை அதற்குரியதே. அது சம்பாதித்ததன் தீமையும் அதற்குரியதே! ‘எங்கள் இரட்சகனே! நாம் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எம்மைக் குற்றம் பிடித்து விடாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! எமக்கு முன் சென்றோர் மீது சுமத்தியது போன்ற சிரமத்தை எம்மீது நீ சுமத்தி விடாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! எதில் எமக்கு சக்தி இல்லையோ அதை எம்மீது சுமத்தி விடாதிருப்பாயாக! எம்மை மன்னித்து விடுவாயாக! எங்கள் பாவங்களை அழித்து விடுவாயாக! மேலும், எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். எனவே, நிராகரிப்பாளர்களான கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி புரிவாயாக!’ (2:286) என்ற வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
ஆதாரம்: முஸ்லிம் 125-199
இந்த நிகழ்ச்சி நபித்தோழர்களின் ஈமானிய உணர்வைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அதே வேளை, அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் சட்டங்கள் கட்டளைகள் எதுவாக இருந்தாலும் பூரண மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொள்ளத் தயங்கக்கூடாது. ‘உள்ளம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது இறை செய்தியாக இருக்காது’ என ஹதீஸ்களை மறுப்பவர்கள் கூறுவது தவறு என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
நபித்தோழர்களின் ஈமான்:
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّـهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
‘இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட்டோம். நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம், எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.’ (2:285)
இந்த வசனத்தில் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதை இறைத்தூதரும் ஈமான் கொண்டார். முஃமின்களும் அதாவது நபித்தோழர்களும் ஈமான் கொண்டார்கள் என்று கூறப்படுகின்றது. அத்துடன் அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், தூதர்களையும் அவர்கள் ஈமான் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அல்லாஹ்வையும் மலக்குகளையும், வேதங்களையும், தூதர்களையும் நபித்தோழர்கள் ஈமான் கொண்ட முறை சரியாக இல்லாவிட்டால் அல்லாஹ் இப்படிக் கூறியிருக்கமாட்டான்.
எனவே, அவர்களின் ஈமான் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைகின்றது. அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும், வேதங்களை, தூதர்களை, மலக்குகளை எப்படி நம்ப வேண்டும் என்பதற்கான சரியான முன்மாதிரியை நாம் நபித்தோழர்களிடம் இருந்து பெறலாம் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைகின்றது.
எனவே, அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும் என்பதற்கு பின்வந்தவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றாமல் நபித்தோழர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதே சரியான முறையாகும் என்பதை இந்த வசனத்திலிருந்து புரியலாம்.
அல்லாஹ் கற்றுத்தரும் துஆ:
لَا يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
‘எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். அது சம்பாதித்ததன் நன்மை அதற்குரியதே. அது சம்பாதித்ததன் தீமையும் அதற்குரியதே! ‘எங்கள் இரட்சகனே! நாம் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எம்மைக் குற்றம் பிடித்து விடாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! எமக்கு முன் சென்றோர் மீது சுமத்தியது போன்ற சிரமத்தை எம்மீது நீ சுமத்தி விடாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! எதில் எமக்கு சக்தி இல்லையோ அதை எம்மீது சுமத்தி விடாதிருப்பாயாக! எம்மை மன்னித்து விடுவாயாக! எங்கள் பாவங்களை அழித்து விடுவாயாக! மேலும், எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். எனவே, நிராகரிப்பாளர்களான கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி புரிவாயாக!’ (2:286)
இது அல்லாஹ் முஃமின்களுக்குக் கற்றுக் கொடுத்த அழகிய பிரார்த்தனையாகும். மறதி, தவறுதல் போன்றவற்றுக்கு மன்னிப்பு வேண்டப்படுகின்றது. அத்துடன் சக்திக்கு மீறிய கடமைகள் சுமத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பும் வேண்டப்படுகின்றது.
எங்கள் இரட்சகனே! நாம் மறந்து விட்டாலோ, தவறிழைத்துவிட்டாலோ எம்மைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! என்று இங்கு கேட்கப்படுகின்றது.
‘நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்.) அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.’ (33:5)
இந்த வசனம் தவறுதலாக நடக்கும் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டு என்கின்றது.
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
‘நமது வசனங்கள் குறித்து (குதர்க்கத்தில்) மூழ்கியிருப்போரை நீர் கண்டால் அவர்கள் வேறு பேச்சில் மூழ்கும் வரை (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கச் செய்துவிட்டால் ஞாபகம் வந்ததன் பின் அநியாயக்காரர்களான அக்கூட்டத்தாருடன் நீர் அமர்ந்துவிட வேண்டாம்.’ (6:68)
இந்த வசனத்தின் மூலம் மறதிக்கு மன்னிப்பு உண்டு என்பதை அறியலாம்.
நபியவர்கள் இந்த ஆயத்தை ஓதிய போது அல்லாஹ் ‘ஆம்’ அதாவது, மறதிக்கும் தவறுக்கும் மன்னிப்பு உண்டு என்றான் என ஹதீஸ்கள் கூறுகின்றன. (முஸ்லிம்: 125-199)
முன்னைய சமூகங்கள் மீது சுமத்தப்பட்டது போன்ற பாரத்தை எம்மீது சுமத்தாதிருப்பாயாக! என்ற பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் குர்ஆனைப் படிக்கும் போது புரியலாம். மார்க்கம் கஷ்டமாக மாறாது என்பதையும் புரியலாம்.
இந்த இரண்டு ஆயத்துக்களும் அல்லாஹ் எமக்குக் கற்றுத்தரும் அற்புத துஆவாகும். இதை இரவில் தூங்கும் பொது ஓதிக் கொண்டு உறங்குவது சிறப்பாகும்.